நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 25, 2015

திருமறைக்காடு

வேதங்கள் அனைத்தும் நிழல் தரும் மரங்களாக விளங்கிய -
அந்த வனத்தினுள் - மூலப்பரம்பொருள் லிங்க ரூபமாக முளைத்தெழுந்தது..

மேலும், ஆங்கே - மங்கலம் கூடிடும் வண்ணம் - அம்பிகையும்,
வேத நாயகியாகத் தோன்றினாள்..

சிவ சாந்நித்யத்தில் இந்திராதி தேவர்களும் கூடிநின்று வழிபாடு செய்த வேளையில் - 

நான்முகனின் தேவியாகிய நற்றமிழ்க் கலைவாணி, 
தன் திருக்கரங்களினால் - கச்சபி எனும் வீணையை மீட்டினாள்..

அதிலிருந்து எழுந்த இனிய நாதத்தைச் செவியுற்ற அம்பிகையின் -
செவ்விதழ்க் கடையில் புன்னகை தோன்றியது..

அவ்வளவு தான்!.. அவ்வளவே தான்!..

கலைவாணி தன் கரங்களில் இருந்த வீணையைக் கீழே வைத்து விட்டாள்..

யாழைப் பழித்த மொழி உமையாள்!.. - எனத் திருப்பெயர் மலர்ந்தது..

இதனையே - 

பண்ணின் நேர் மொழி உமையாள்!.. - என அப்பர் ஸ்வாமிகள் போற்றுகின்றார். 


திருமறைக்காடு என்று புகழப்பெற்ற இத்தலத்தின் திருக்கோயிலினுள் -
எலி ஒன்று சுற்றித் திரிந்திருந்தது. ..

வேறெதுவும் வேலையில்லாத அந்த எலிக்கு விருப்பமானது -
சிவாலயத்தின் திருவிளக்குகளில் ஊறிக் கிடக்கும் நெய்யினைச் சுவைப்பது தான்!..

ஒரு நாள் இரவு. அர்த்த ஜாமம் முடிந்து - திருநடை அடைக்கப்பட்டு விட்டது..

யாருமற்ற அந்தப் பொழுதில் வழக்கம் போல எலி கருவறையுள் நுழைந்தது..

திருவிளக்கில் நிறைய நெய் இருந்தாலும் - தூண்டுவாரில்லாததால் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது..

நிறைந்திருந்த நெய்யைக் கண்டதும் எலிக்குக் கொள்ளை ஆனந்தம்..

அவசரமாக நாவினை நீட்டி சுவைக்க முற்பட்டபோது - எதிர்பாராத விதமாக தீபச்சுடரில் மூக்கினைச் சுட்டுக் கொண்டது..

மூக்கின் நுனியில் - சுரீர்!.. - எனச் சுட்டதும் பதறித் துடித்தது.

அந்த வேளையில் நிகழ்ந்த பதற்றத்தால் - கருகிக்கொண்டிருந்த சுடர் தூண்டப் பெற்றது. மூலத்தானத்தினுள் ஒளி பரவியது..

அதே வேளையில் பஞ்ச வாத்யங்களின் ஒலி கேட்ட எலி அதிர்ந்து நின்றது..

தான் காண்பது கனவா.. நனவா!.. என்று.. தன்னையே நம்பமுடியவில்லை!..

இப்படியெல்லாம் நடக்குமோ!?.. - தன்னைத் தானே கிள்ளிக் கொண்டது.

நிஜம் தான்!.. தன் எதிரில் காட்சியளிப்பது  - ஸ்ரீபரமேஸ்வர சிவம் தான்!..

கண்ணீர் பெருக , இறைவனை வலம் வந்து  - வணங்கி நின்றது!..

திருக்கோயிலின் தீபத்தினைத் தூண்டிவிட்ட புண்ணியத்திற்காக - ஈசன் - அந்த எலியினை வாழ்த்தி மறைந்தார். 

ஈசன் விதித்தபடி - தன்னுடலை நீத்தது - எலி.. 

அசுர குலத்தில் ஸ்ரீபக்த ப்ரகலாதனின் வழித்தோன்றலாகப் பிறந்தது..

இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , திருநாவுக்கரசர் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - பாடி மகிழ்கின்றார்.

இப்படி - சிற்றுயிராகிய எலி சிவபுண்ணியம் பெற்ற திருமறைக்காடு எனும் திருத்தலமே -  இன்றைக்கு வேதாரண்யம் என வழங்கப்படுகின்றது..


இத்திருக்கோயில் பல ஆண்டுகளுக்குப் பின் நாளை திருக்குடமுழுக்கு நடைபெறுகின்றது..

எண்ணிலாப் பெருமைகளை உடையது - திருமறைக்காடு..

முசுகுந்தச் சக்ரவர்த்தி - தமக்குச் செய்த பேருதவியில் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் - தான் வழிபட்டு வந்த விடங்கத் திருமேனியுடன் மேலும் ஆறு திருமேனிகளை மனமுவந்து அளித்தான்..

முசுகுந்த சக்ரவர்த்தியும் அமரலோகத்திலிருந்து - தான் கொணர்ந்த ஏழு விடங்க மூர்த்தங்களில் முதலாவதானதை திரு ஆரூர் முதற்கொண்டு ஏழு திருத்தலங்களில் நிலைப்படுத்தினார்..

அத்திருத்தலங்கள் ஏழும்  - சப்த விடங்கத் திருத்தலங்கள் எனப்படுகின்றன..

சப்த விடங்கத் திருத்தலங்களுள் இரண்டாவதாகத் திகழ்வது திருமறைக்காடு..

தியாகேசரின் சப்த விடங்கத் திருமேனிகளுள் இங்கு  - புவன விடங்கர்..
திருநடனம் - ஹம்ச நடனம்..

காலை மாலை இருவேளைகளிலும் தியாகேசர் சந்நிதியில் பேழையின் உள்ளிருக்கும் மரகத லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன..

ஸ்ரீ ராமபிரான் - சீதையைத் தேடித் திரிந்த வேளையில் திருமறைக்காட்டில் சிவபூஜை செய்ததாக ஐதீகம்..

எனவே - ஆதி சேது எனவும் வழங்கப்பெறும்..

இத்திருத்தலத்தில் அகத்திய மாமுனிவருக்கு - ஈசன் எம்பெருமானின் திருமணத் திருக்காட்சி அருளப்பெற்றது..

எனவே, திருமூலத்தானத்தினுள் - சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் ஈசனும் அம்பிகையும் திருமணக்கோலங்கொண்டு திகழ்கின்றனர்..

வேதங்களால் தாழிடப் பெற்ற திருக்கதவுகள்  -
திறப்பதற்கு அப்பர் பெருமானும்
மூடுவதற்கு ஞானசம்பந்தப்பெருமானும் - திருப்பதிகம் பாடியருளினர்..

அப்பர் பெருமானும் ஞானசம்பந்தப் பெருமானும் - திருமடம் கொண்டு தங்கி இருந்த திருத்தலங்களுள் - திருமறைக்காடும் ஒன்று..

அப்பர் பெருமானும் ஞானசம்பந்தப் பெருமானும் இங்கே தங்கியிருந்த சமயத்தில் தான் - மதுரையிலிருந்து ஓலை வந்தது..

சைவத்தை மீட்டெடுக்க பாண்டிய நாட்டிற்கு வாருங்கள்!.. - என்று..

அவ்வேளையில் நாளுங்கோளும் சரியில்லாததை உணர்ந்த அப்பர் பெருமான் - ஞானசம்பந்தரிடமும் அதைக் கூறினார்..

அதற்கு மறுமொழியாகவே -
திருஞானசம்பந்தரின் திருவாக்கிலிருந்து கோளறு பதிகம் பிறந்தது..

பின்னாளில் - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும்
அருணகிரி நாதரும் இங்கு தரிசனம் செய்துள்ளனர்..

பெரும் சிறப்புகளை உடைய இத்திருத்தலத்தில் தான் -
திருவிளையாடற்புராணம் இயற்றிய பரஞ்சாதி முனிவரும்
மகாஞானியாகிய தாயுமானவ ஸ்வாமிகளும் பிறந்தருளினர்..

அஞ்ஞானத்தின் அடையாளமாகக் குறிக்கப்படும் எலி, நற்கதி பெற்ற திருத்தலத்தை - திருக்குடமுழுக்கு நாளில் சிந்தித்திருப்போம்!..

திருக்கோயிலின் விழாக்கோலக் காட்சிகளை - திரு. வேங்கட சுப்ரமணியன், திரு. திவாகர் தங்கதுரை, திரு. வசந்தகுமார்.. - Facebook - வழியாக வழங்கினர்..

அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும் உரியது..மணிகர்ணிகை தீர்த்தம்

இறைவன்
திருமறைக்காடர், மறைக்காட்டு மணாளர், வேதாரண்யேஸ்வரர்..
அம்பிகை
பண்ணின் நேர்மொழியாள், யாழைப் பழித்த மொழி உமையாள், வேதநாயகி
தல மரம்
வன்னி..
தீர்த்தம்
மணிகர்ணிகை, வேத தீர்த்தம் - வங்கக் கடல்..

பண்ணின் நேர்மொழியாளுமை பங்கரோ
மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணிலால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே!.. (5/1)
அப்பர் பெருமான்

நுண்ணி யதாய்வெளிதாகி நூல்கிடந்திலங்கு பொன்மார்பில்
பண்ணி யாழெனமுரலும் பணிமொழி உமையொரு பாகன்
தண்ணி தாயவெள்ளருவி சலசல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமோர் பிறையார் கலிமறைக் காடமர்ந்தாரே!.. (2/91)
திருஞான சம்பந்தர்

யாழைப் பழித்தன்ன மொழி மங்கையொரு பங்கன்
பேழைச் சடை முடிமேற்பிறை வைத்தானிடம் பேணில்
தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக் கனிகூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே!.. (7/71)
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்

நாளுங்கோளும் நன்மை அருள
நம சிவாய.. சிவாய நம..

வாழ்க நலம்..
* * *

16 கருத்துகள்:

 1. திருமறைக்காடு திருத்தலத்தின் மகிமையை இந்தப் பகிர்வின் மூலம் அறிய முடிந்தது ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. பலமுறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளோம். தங்களால் இன்று ஒரு முறை. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. திருமறைக்காடு சிவபெருமானைத் தரிசித்த நாட்களை 1967 ம் வருடம், நினைவு படுத்தினமைக்கு நன்றி.  எனது துணைவியார் அங்கு 1964 முதல் 68 வரை ஆசிரியராக அந்த கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தில் பணி புரிந்திருக்கிறார்.


  நிற்க. அந்த கோவிலில் நாத ஒலிகள் எழுப்பும் இசைத் தூண் ஒன்று உண்டு. ஏழு ஸ்வரங்களையும் கல்லிலே கொண்டு வந்த அந்த சிற்பி எத்துனை வரம் பெற்று இருப்பாரோ !!


  பதிவுக்கு மெத்த நன்றி.


  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   பதிவின் நீளம் கருதி - சுருக்கமான செய்திகள்..

   வேதாரண்யத்தின் மகத்தான அடையாளங்களுள் - கன்யா குருகுலமும் ஒன்று..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பல முறை வேதாரண்யம் சென்றும் இக்கோயிலைக் காணாததில் வருத்தமே ஐயா
  இன்று இந்த வருத்தம் தங்களால் தீர்ந்தது
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. திருமறைகாடு திருத்தலத்திற்கு நான் சிறுவயதில்தான் சென்றிருக்கேன்! படங்களும் தகவல்களும் அருமை அய்யா! தங்களால் இன்று முழுதாக அறிந்ததில் மகிழ்ச்சி! நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அன்பின் ஜி வழக்கம்போல் நிறைய விடயங்கள் அறியத்தந்தீர்கள் நன்றி இதன் முந்தைய சதய விழா பதிவையும் இப்பொழுதுதான் படித்தேன் தாமத வருகைக்கு மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தாமதம் ஆனாலும் -
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. எனக்கு என்னவோ வேதாரண்யம் என்றவுடன் தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாக்கிரகமே நினைவுக்கு வருகிறது. நீங்கள் கதைகள் சொல்லுவதில் வல்லவர் என்பது தெரிகிறது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   வேதாரண்யத்தில் நடந்த சத்யாக்கிரகம் புகழ்பெற்றது..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. நான் இதுவரை இங்கு சென்றதில்லை, தங்கள் பதிவின் மூலம் கண்டுகளித்தேன். இதேப்போல் தாங்கள் முன்பும் ஒரு பதிவு எழுதயதாக நினைவு,,,,,
  அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   முன்பு - வேதாரண்யத்தின் தலவரலாற்றை எழுதியிருந்தேன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. திருமறைக்காடு பற்றிய அருமையான தகவல்களையும் காட்சிகளையும் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..