நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 21, 2015

அமுதே.. தமிழே!..

இன்று உலக தாய்மொழி தினம்.

தாயின் கருவறையே - சர்வ கலாசாலை!..


இங்கிருந்தே - இளங்குழந்தை அனைத்தையும் உணர்ந்து கொள்கின்றது அறிந்து கொள்கின்றது.


மனிதனின் முதல் அடையாளம் அவனது மொழி என்கின்றனர் அறிஞர்கள்..

மொழி அழிந்தால் அந்த இனம் அழிகின்றது.

அதைத்தான் மெக்காலே என்பவன் கண்டறிந்து - இனிய பாரததத்தின் மொழிகளை அழிக்கும் வேலையில் இறங்கி வெற்றியும் கண்டான்!..


ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது அவரது தாய் மொழி அல்லாத வேற்று மொழியான ஆங்கிலத்தில் பேசிக் கொள்ளும் அவலம் நிகழ்வது -

தமிழ் நாட்டில்!..

இங்குதானே - தமிழில் ஒரு எழுத்தைக்கூட அறியாமல் - தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை - கற்று பொருளீட்ட முடிகின்றது!..

ஆனாலும் -

இந்தத் தமிழுக்குத் தான் எத்தனையெத்தனை அருமை பெருமைகள்!..


அத்தனையையும் அறிந்து மகிழ்தற்கு இந்த ஒரு பிறவி போதுமோ?!.. - என்றிருக்கின்றது.

ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் (2/76) -  என்று தம்மைக் குறித்துக் கொள்வதில் மிக மகிழும் ஞானசம்பந்தப் பெருமான் -

அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம்
மந்தம்வந் துலவு சீர்மா மழபாடியே!.. (3/28)

- என்று திருமழபாடியில் ஒலித்த செந்தமிழைக் குறிக்கின்றார்.

செந்தமிழும் வடமொழியும் ஆயினான் கண்டாய்!..

மொழி என்பதே இறைவன் தான்!. எனப் புகழ்ந்துரைக்கும் திருநாவுக்கரசர்

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்!.. - என்று வணங்குகின்றார்.

பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்திடை சுவை ஒப்பாய்!..

- என்று போற்றுகின்றார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!..

- என்பது திருமூலரின் திருமந்திரம்.

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்!..

- என்று பெருமையுடன் மகிழ்பவர் அருணகிரிநாதர்.


எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே..
உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!..

- என்று மனோன்மணியத்தில் வாழ்த்துபவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள். 

தமிழ் மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்!.. - என்றார், தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர்.

தமிழ் உயர்தனிச் செம்மொழி!.. - என்று முழங்கினார் பரிதிமாற்கலைஞர்.

யாமறிந்த மொழிகளைலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்!
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்!..

- என்றார் மகாகவி பாரதியார்.

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!..

- என்று முழங்கினார் பாவேந்தர்.

இத்தகைய தமிழ் எப்படிப் பட்டது!.. எத்தன்மையது!..

கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்துஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததாய் எண்ணவும் படுமோ!..

- என்று தொழுதார் திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர்.

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் அனையது
தன்னேரிலாத தமிழ்!..

- என்று புகழ்ந்தது தண்டியலங்காரம்.

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரியில் - நான் பயின்ற போது எங்கள் தமிழ் ஆசான் அவர்கள் - வகுப்பறையில் நுழைந்ததும்,

தான் கொண்டு வரும் திருக்குறள் நூலை - மாணவரிடம் கொடுத்து அதிலிருந்து ஒரு அதிகாரத்தை வாசிக்கச் சொல்வார். அதன்பின்,

இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் எனினும் வேண்டேன்!..

- என்று வணங்கி விட்டுத் தான் - வகுப்பைத் தொடங்கி நடத்துவார்.


தாய் மொழிக்கு ஒரு நாள் எனக் கொண்டாடும் வழக்கம் எப்படி ஏற்பட்டது!?..

அகண்ட பாரதத்தின் ஒரு அங்கமாகிய வங்காளத்தை - 1905 அக்டோபர் 16 அன்று இரண்டாகப் பிரித்தான் - ஆங்கிலேயக் கவர்னர் கர்சன் (George Curzon).

முஸ்லீம்கள் அதிகமாக இருந்த பகுதி கிழக்கு வங்காளம் எனவும் இந்துக்கள் இருந்த பகுதி மேற்கு வங்காளம் எனவும் பிரிக்கப்பட்டது.

பின்னர் நாடு சுதந்திரம் அடைந்தவேளையில் - உருவான பாகிஸ்தானுக்கு கிழக்கு வங்காளம் தாரை வார்க்கப்பட்டது.

மேற்கே உருது பேசும் மக்களும் கிழக்கே வங்க மொழி பேசும் மக்களும்!..

மொழிப் பிரச்னை உருவானது.

மேற்கே இருந்த மக்கள் உருது மொழி ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினர்.

அதைக் கேட்டு கிழக்கே கிளர்ந்தெழுந்தது பிரச்னை.

டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் - தமது ஆருயிர் மொழியைக் காக்க போராட்டத்தில் குதித்தனர்.

துப்பாக்கியைக் கையில் எடுத்தே பழக்கப்பட்டிருந்த (துப்)பாக்கிஸ்தானிய அரசு தனது வழக்கமான வேலையில் இறங்கியது. 

1952 பிப்ரவரி 21 அன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததையும் மீறி - தங்கள் தாய் மொழியாம் வங்க மொழி காக்க வீறுநடை போட்ட மாணவரைத் தோட்டாக்களினால் துளைத்துக் கொன்று போட்டது!..

மூண்டெழுந்த கலவரம் இரும்புக் கரங்கொண்டு அடக்கப்பட்டது.

எனினும் -

அங்கே முஜிபுர் ரஹ்மான் தலைமையில் முக்தி வாகினி எனும் அமைப்பு உருவானதற்கும்,

கடும் போராட்டங்களுக்குப் பின் - பெரும் போர் மூள்வதற்கும்,

கிழக்கு பாகிஸ்தான் ஒழிந்து - வங்க தேசம் (Bangladesh)  என்ற ஒரு சுதந்திர நாடு உதிப்பதற்கும்,

21/2/1952 அன்று நடந்த போராட்டமே காரணம்.

பின்னாளில் உலக மொழிகளைக் காப்பதற்கு யுனெஸ்கோ - 1999ல் முயன்று முன் நடந்த வேளையில் - அந்நாளே சிறப்பு நாளாகக் குறிக்கப்பட்டது.

மொழிக்காக முன்நடந்து தன்னுயிர் ஈந்த 
தியாக சீலர்களை இந்நாளில் சிந்தையில் கொள்வோம்!..


போற்றுதலுக்குரிய தமிழ் - நாம் வாழுங்காலத்தில் -
கவிஞர்கள் பலராலும் பற்பல விதமாகப் புகழப்பட்டிருக்கின்றது.

அனைத்தையும் பகிர்வது - இயலாத காரியம்.

எனினும், இங்கே - இரண்டு காணொளிகளை இணைத்துள்ளேன்.
கண்டும் கேட்டும் மகிழ்க!..

தாய்க்கும் தமிழுக்கும் தாய் நாட்டிற்கும் பழி நேர்ந்த போதெல்லாம் - 

வீரமிகுந் தோளுடை இளைஞர் மட்டுமன்றி - தள்ளாத வயதினரும் பொல்லாத புலியாகச் சீறி எழுந்து பகை முடித்த வரலாறு நம்முடையது..

அத்தகைய தருணங்களில் இறைவனும் முன்வந்திருக்கின்றான்!..  - என்பது பெருமைக்குரிய விஷயம்.

அதன் பொருட்டுத்தான் -    

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ..
அன்னைத் தமிழுக்குப் பிழை நேர்ந்தால் உனக்கில்லையோ!..

- என கவியரசர் கண்ணதாசனும் தமிழை முன் வைத்து இறைவனை அழைத்தார்.

தமிழின் அருமை பெருமைகள் ஆயிரங்கோடியும் அதற்கு மேலும்..
ஆவலுடன் அத்தனையையும் கேட்பதென்றால் - காலம் போதாது!..

வாழ்க தமிழ்!..
வளர்க தமிழ்!..
* * *

20 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள்.
  அற்புதமான
  இது போல் ஒரு பதிவு எத்தனை முறை வேண்டுமானாலும்
  படிக்கலாம். படித்துக்கொண்டே இருக்கலாம்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா.. வணக்கம்.

   தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சி..
   வேலை முடித்து மிகுந்த களைப்பானது.
   இணையமும் இன்று இழுவையானது.
   எனவே தான் இந்தப் பதிவு சற்று தாமதம்.

   அன்பின் நல்வாழ்த்துகளுக்கு நன்றி..

   நீக்கு
 2. Mc Caulayஇன் கடித்ஹத்தைப் படிக்கும் போது உயர்ந்த கலாசாரமும், மொழிகளையும் கொண்டிருந்திருக்கிறோம் நாம் என்று பெருமையாக இருக்கிறது. ஆனால் திட்டம் போட்டு நம்மை சோர்வடைய வைத்து விட்டார்களே அன்னியர்கள். இனியாவது உணர்வோம் நம்மை. அருமையான பதிவு. சுப்பு சார் சொல்வது போல் எத்தனை முறை வேண்டுமானாலும் படித்துக் கொண்டேயிருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையினால் மகிழ்ச்சி..

   பாருங்களேன்.. 1835க்கு முன்னால் இந்த பாரத நாட்டில் பிச்சைக் காரர்களும் திருடர்களும் இல்லையென்பதில் அவர்களுக்குத் தான் எத்தனை வயிற்றெரிச்சல் என்று!..

   வெள்ளையர்களால் செயற்கையான பஞ்சம் நம் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட செய்திகளும் காணக்கிடைக்கின்றன.

   தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 3. அருமையான பகிர்வு ஐயா...
  பிச்சைக்காரர்களே இல்லை என்றதால்தான் பிச்சைக்காரர்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
  காணொளி இரண்டும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   பிச்சைக்காரர்களை மட்டுமா உருவாக்கினான் வெள்ளையன்!..

   கையூட்டு எனும் லஞ்சத்தை, ஊழலை உருவாக்கியவன் - ராபர்ட் கிளைவ்.

   தங்கள் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் பாலமகி!..
   தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

   நீக்கு
 5. அறிய பெரும் விடயங்களை அறியத்தந்தீர் நண்பரே நன்றி நன்றி நன்றி
  தமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்!..

   நீக்கு
 6. தமிழுக்குத் தாங்கள் சூட்டியுள்ள புகழாரம் படிக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழ் நம் தாய்மொழி என்பதில் பெருமையடைவோம். முடிந்தவரை பேச்சில், எழுத்தில், செயலில் தமிழைப் பயன்படுத்துவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   சிந்தையும் செயலும் தமிழே!..
   தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. மிகவும் சிறப்பான தொகுப்பு... அற்புதம் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அருமையான தொகுப்பு ஐயா
  படித்துப் படித்து மகிழ்ந்தேன்
  உலக தாய் மொழி தின நல் வாழ்த்துக்கள் ஐயா
  தமிழ் தழைக்கட்டும், செழிக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. அருமையான தொகுப்பு.....

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. அந்நிய நாட்டில் இருந்தாலும் தமிழ் படிக்க வேண்டும், வீட்டில் தமிழில் பேச வேண்டும் என்பதில் பேரனை பழக்கி இருக்கிறார் மகன், மருமகள்.
  சனிக்கிழமை தமிழ் படிக்கிறான் பேரன்.


  உங்கள் தொகுப்பு மிக அருமை. பாட்ல்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   வீட்டில் தமிழில் தான் பேசவேண்டும் என்று - தங்கள் மகனும் மருமகளும் பழக்கி இருப்பது - மிகவும் பாராட்டிற்குரிய விஷயம்..

   தமிழ் படிக்கும் தங்கள் பேரனுக்கு நல்வாழ்த்துக்கள்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு