நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 23, 2015

ஒற்றியூர் குடமுழுக்கு

திருஒற்றியூர்.

எல்லாம் வல்ல ஈசன் ஸ்ரீமாணிக்கத் தியாகேசனாக விளங்கும் திருத்தலம்.

இறைவனுக்கு - புற்றிடங்கொண்டார் என்பதும் திருப்பெயர்.


புற்று வடிவாகிய சிவலிங்கத் திருமேனி.

சுயம்பு மூர்த்தி.

சிவலிங்கமும் ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன.
பெட்டி போன்ற சதுர வடிவ கவசம் ஸ்வாமிக்குச் சார்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதப் பௌர்ணமி அன்று - இக்கவசம் அகற்றப்பட்டு - புனுகு, ஜவ்வாது, சாம்பிராணித் தைலம் பூசப்படும்.

பௌர்ணமி முதல் - மூன்று நாட்களுக்கு மட்டுமே - கவசம் இல்லாமல் ஸ்வாமியை தரிசிக்க இயலும்.

அதன்பின் மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டு - ஆண்டு முழுதும் ஸ்வாமி கவசத்துடனேயே தரிசனம் அளிக்கின்றார்.

அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகின்றது.

மாணிக்கத்தை முன் வைத்து - வாசுகி சிவபூஜை செய்த திருத்தலம்.

வாசுகியை - தன் மேனியுடன் இணைத்துக் கொண்டதால் - படம்பக்க நாதர் எனவும் திருப்பெயர்.

கருவறை - கஜபிருஷ்ட அமைப்பு.

இத்திருத்தலத்தில் நின்று தொழுவோர் - இதய நோய்களில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.

தலவிருட்சம் - மகிழ மரம். தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்.

ஆலயத்தில் திருவிளக்கு ஏற்றுவதையே திருப்பணியாகக் கொண்டவர் - கலியன்.

அந்த நற்காரியத்திற்கு - வறுமையால் தடை ஏற்பட்டபோது, தன்னையே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.

இச்சம்பவம் நிகழ்ந்தது - திருஒற்றியூரில்!..

அவரது அன்பினுக்காக மீண்டும் பொன்னும் பொருளும் என - இறைவன் வாரி வழங்கி வறுமையை நீக்கியதாக வரலாறு.

திருவிளக்கேற்றிய கல்லியன் - கலிய நாயனார் என புகழப்பட்டார்.

சுந்தரர் - பரவை நாச்சியார் திருமணம் நிகழ்ந்த திருத்தலம் இதுவே!..

மகிழ மரத்தின் கீழ் செய்து கொடுத்த உறுதிமொழியை மீறி - இங்கிருந்து திருஆரூருக்குப் புறப்பட்டதால் - சுந்தரர் இருவிழிகளிலும் பார்வை இழந்தார்.

முற்றும் துறந்த பட்டினத்தடிகளின் கையிலிருந்த பேய்க்கரும்பு இங்குதான் இனித்தது.

பட்டினத்தார் முக்தி எய்திய திருத்தலம் - திருஒற்றியூர்.

ஸ்ரீ மாணிக்கத் தியாகேசர்
அம்பிகை - ஸ்ரீ வடிவுடை நாயகி.

எண்ணிலாப் புகழ் கொண்டவள்.

வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகளுக்கு - அவர் தம் அண்ணியார் வடிவில் வந்து அடிக்கடி அன்னம் பாலித்து ஆதரித்தவள் - இவளே!..

தாயேமிக வும்தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே!.. (80)

வடிவுடை மாணிக்க மாலை என நூற்றிரண்டு பாடல்களைக் கொண்டு,
அன்னம் பாலித்த அம்பிகையைப் பாடித் தொழுதார் வள்ளலார் ஸ்வாமிகள்.

அப்பர், ஞான சம்பந்தர், சுந்தரர் - என அருளாளர் மூவரும் திருப்பதிகம் பாடிப் பரவிய திருத்தலம்.

தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் - 32.

இவற்றுள் - சென்னை எனும் பெருநகரப் பரப்பினுள் அமைந்திருப்பவை - ஆறு.

அவை - திருஒற்றியூர், திருவலிதாயம், திருவேற்காடு, திருமுல்லைவாயில், திருமயிலை, திருவான்மியூர் - என்பன.

கடற்கரையில் அமையப்பெற்ற திருத்தலங்களுள் திருஒற்றியூரும் ஒன்று.

ஸ்வாமிக்கும் அம்பிகைக்கும் இரண்டு மூலத்தானங்கள் விளங்குகின்றன.

திருக்கோயிலில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி மிகவும் சிறப்புடையது.

எண்ணரிய சிறப்புகளுடன் விளங்கும் திருஒற்றியூர் திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

60 குண்டங்கள், 36 வேதிகைகள் அமைக்கப் பெற்று - யாக சாலை வேள்விகள் கடந்த வெள்ளியன்று தொடங்கின.

ஞாயிறு காலையில் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

305 விக்ரக பீடங்களில் அஷ்ட பந்தனமும் ஸ்ரீ வடிவுடைய அம்பிகையின் பீடத்தில் ஸ்வர்ண பந்தனமும் சார்த்தப்பட்டது.

நான்காம் கால யாக சாலை பூஜைகள் ஞாயிறு அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கி - காலையில் பூர்ணாஹுதி மகாதீபாராதனை நடந்தது.

அதன்பின் - யாகசாலையிலிருந்து 420 புனித நீர்க்கலசங்கள் புறப்பட்டன.

அறுபது சிவாச்சார்யர்கள் பங்கேற்று - வேத, தேவார திருவாசக திருமுறை பாராயணங்களுடன் கருவறை விமான மற்றும் ராஜ கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு வைபவத்தினை சிறப்பாக நடாத்தியிருக்கின்றனர்.

ஞாயிறு (22/2) காலை 7.32 மணியளவில் -
இருநூறு சங்குகள் முழங்க திருக்குடமுழுக்கு நடைபெற்றது. 

லட்சக்கணக்கான இறையன்பர்கள் - கண்டு கை தொழுது சிவதரிசனம் பெற்று மகிழ்ந்திருக்கின்றனர்.

அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேக காட்சிகள் - Fb-ல் கிடைக்கப் பெற்றவை.

பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் வழங்கிய படங்களை - தளத்தில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.வைபவத்தின் வண்ணமிகு படங்களை வலையேற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றியூரே!.. (7/91)
சுந்தரர்.

விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி
அளிதரு பேரருளான் அரனாகிய ஆதி மூர்த்தி
களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே!.. (3/57)
ஞான சம்பந்தர்.

அப்பர் பெருமான் திருமயிலையில் சிவதரிசனம் செய்தபோது -

அவருக்கு - தம்பதியராக எதிர் வந்து தரிசனம் நல்கினார் சிவபெருமான்!..

ஆடல் பாடலோடு ஆனந்தமாக வந்த - அத் தம்பதியினரைப் பார்த்து,

''..ஊர் எதுவோ.. கூறும்!..'' - என்று அப்பர் சுவாமிகள் வினவினார்.

''..ஒத்தமைந்த உத்திர நாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர்!..'' - என விடை கூறி தன்னுரு கரந்தனன் எம்பெருமான்.

அதன்பின் - அப்பர் சுவாமிகள் திருஒற்றியூருக்கு வந்து சிவதரிசனம் செய்து இன்புற்றனர்.

இதனை, அப்பர் சுவாமிகள் - தமது திருப்பதிகத்தில் (6/45) கூறி மகிழ்கின்றார்.

ஸ்ரீ வடிவுடை நாயகியும் வள்ளல் மாணிக்கத் தியாகேசரும்
நிறை மங்கலங்களைத் தந்தருள்வாராக!..

மனமெனுந் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச்
சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும்போது
மதனெனும் பாறைதாக்கி மறியும்போது அறியஒண்ணா
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூருடைய கோவே!.. (4/46)
அப்பர் பெருமான்.

சிவாய திருச்சிற்றம்பலம் 
* * *

16 கருத்துகள்:

 1. தாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றிகள். திருஒற்றியூர் பெருமைகளை அறிந்துகொண்டோம். மகாகும்பாபிஷேக காட்சிகளின் புகைப்படங்கள் அத்துனையும் அருமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வளமுடன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. குடமுழுக்கு விழா புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. குவைத்தில் இருந்தபோதும்
  மனம் எப்பொழுதும் தமிழ்நாட்டில்தான்
  புகைப்படங்கள் அழகோ அழகு ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 4. எத்தனை எத்தனை செய்திகள், எவை நினைவில் தங்கும் எவை மறதியில்மூழ்கிவிடும் தெரியவில்லை. திருவொற்றியூர் கோவிலுக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன். வடிவுடை நாயகி உட்பட மூன்று தேவியர்களை ஒரே நாளில் தரிசனம் செய்வது நன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   ஸ்ரீதிருவுடைநாயகி, ஸ்ரீவடிவுடைநாயகி, ஸ்ரீகொடியிடைநாயகி - என மூன்று அம்மன் சந்நிதிகளை ஒரே நாளில் தரிசனம் செய்வது நல்லது என்கின்றனர்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.
   கூடுதல் தகவல் அளித்த கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. வடிவுடை அம்மன் காணக் கண் கோடி வேண்டும். மரச் சட்டத்திற்குள் இருக்கும் சிவனின் லீலை நடந்த இடம் . குடமுழுக்கு வைபவங்கள் படங்களின் தொகுப்பு மிக அருமை. நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் புதிய தகவலுடன் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. இதுவரை சென்றதில்லை ஐயா... நன்றி... படங்களும் தகவல்களும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 7. நான் பார்க்காத கோயில். விரைவில் செல்வேன். நன்னாளின் நிகழ்வினை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் விருப்பம் பலிக்க வேண்டுகின்றேன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. திருஒற்றியூர் குடமுழுக்கு கண்டு களித்தேன்.
  இரண்டு,, மூன்று முறை பார்த்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் இனிய கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு