மற்ற மதத்தினர் அவரவர் மத வழக்கங்களைப் பின்பற்றவும் திருமணம் முதலான நிகழ்வுகளை நடத்தவும் அனுமதியுண்டு.
ஈத்-உல்-ஃபிதர் எனும் ரமலான் (நோன்புப் பெருநாள்) ஈத்-உல்-அத்ஹா எனும் பக்ரீத் (தியாகப் பெருநாள்) ஆகியன பெருஞ்சிறப்புடன் அனுசரிக்கப்படுபவை.
அப்படி இப்படி என்று - குறிப்பாக சில தனியார் நிறுவனங்கள் - தொழிலாளர்களை நடத்துவதில் குற்றம் குறைகள் இருக்கின்றன.
இருந்தாலும் - சில விஷயங்களில் பாராட்டத்தக்க செயல்பாடுகள் நிறையவே உள்ளன.
பாலைவன நாடாகிய குவைத்தில் அரிய பொருள் - தண்ணீர்.
அதை - கடைக்கோடி குடிமகனுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குகின்றது குவைத்.
உணவுப் பொருட்களைக் கையாள்வதில் - எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி கடுமையான ஒழுங்கமைப்புகளுடன் - சுத்தம் சுகாதாரம் பேணப்படுகின்றது.
உணவு சம்பந்தப்பட்ட தொழிலாளர் அனைவருக்கும் - வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் உண்டு. அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
முடி திருத்துவோர், அழகு நிலைய பணியாளர், சலவைத் தொழிலாளர், மளிகைக் கடை நடத்துவோர் - என அனைவருக்கும் வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் உண்டு.
இந்த விஷயங்களை நம் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏக்கப் பெருமூச்சு தான் மிச்சம்!..
பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்ததில் இருந்தே - இந்திய நாணயங்கள் இங்கே புழக்கத்தில் இருந்துள்ளன. அந்த நாணயங்கள் இங்கே அரும்பொருள் காட்சியகத்தில் காணக் கிடைக்கின்றன.
பாரதம் சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்திய காசும் பணமும் குவைத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன.
 |
| குவைத்தில் புழங்கிய இந்திய நாணயங்கள் |
1961-ல் தனக்குத் தனியாக நாணயங்கள் தேவை என குவைத் அரசு முடிவு எடுத்ததன் பிறகு - இங்கிருந்து இந்திய காசும் பணமும் விலக்கிக் கொள்ளப் பட்டதாக அறியமுடிகின்றது.
இந்த முடிவு 1961 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட பிறகு - அடுத்து வந்த இரண்டு மாதங்களில் குவைத் நாட்டில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்ட இந்திய நாணயத்தின் மதிப்பு - 342 மில்லியன் IRs.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் -
இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட கோதுமை அரைக்கும் திருகை இயந்திரங்கள், ஜாடிகள், ஜாதிக்காய் மரப் பெட்டிகள், அஞ்சறைப் பெட்டிகள், சல்லடைகள் - என ஏகப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் காணலாம்.
இன்னும் கூட, அறுபது - எழுபது வயதைக் கடந்தவர்கள் - பாசத்துடனும் நேசத்துடனும் இந்தியாவை நினைவு கூர்கின்றனர்.
ஆனால் - இன்றைய இளந்தலைமுறையினருக்கு - நம்மவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும் - அவர்களை அங்கீகரிப்பதற்கு தயக்கமும் மயக்கமும் இருக்கின்றது.
நம்மை அவர்கள் ஏளனமாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் -
நம்முடைய அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சமும் ஊழலும், நிர்வாக சீர்கேடுகளும்!..
ஒருகாலத்தில் இந்தியாவின் உதவியை, குவைத் மட்டுமல்ல -
அனைத்து அரபு நாடுகளுமே எதிர் நோக்கி இருந்தன..
ஆனால், இன்றைக்கு!?.. நீங்களே அறிவீர்கள்..
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?..
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?..
- என்று காது கிழிபட அறைந்தாலும் - திண்ணையில் கிடக்கும் கிழவன் கூட,
எங்காவது வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடலாமா!..
- என்று ஏங்கும் வண்ணம் செய்வதிலேயே நமது அரசும் அரசு அலுவலர்களும் குறியாக இருக்கின்றார்கள்.
கைக்கு எட்டிய வேலை - 1972/73-ல் கையூட்டு கொடுக்க இயலாததால் கை நழுவிப் போனது.
திரும்பவும், 1980/81-ல் வழுக்கு மரத்தில் போராடி ஏறிய வேளையில் - நிர்வாக சீர்திருத்தம் என்ற பேரில் - காலைப் பிடித்து இழுத்து விட்டார்கள்..
TNPSC - தேர்வுகள் எழுதி தேறிய பின்னரும் -
மீண்டும் ஏற்றிவிட கேட்கப்பட்டது - கையூட்டு..
உன் பொங்கலும் வேண்டாம்!.. பூசாரித்தனமும் வேண்டாம்!.. - என்று பிழைக்க வழி தேடி - திசை மாறிய பறவையைப் போல் ஆனது வாழ்க்கை!.
அதன் பிறகுதான் - மலையும் கிணறும் காணாமல் போயின!..
எது எப்படியோ - நமக்கும் நம்மைப் போன்ற பலருக்கும் சோறும் தண்ணீரும் வெளிநாட்டில் என்றான பிறகு பழையனவற்றைக் கிளறுவதால் ஆகப் போவது யாதொன்றும் இல்லை.
வெளிநாட்டு வாழ்க்கை வரமா.. சாபமா.. தெரியவில்லை!..
எனது இன்ப துன்பங்களில் இணைந்து நிற்கின்றது குவைத்!..