நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஸ்ரீவீரபத்ரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீவீரபத்ரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

ஸ்ரீ பத்ரகாளி

தட்சனின் யாக சலையில் அலட்சியம் செய்யப்பட்ட அம்பிகையின் திரு மேனியிலிருந்து வெளிப்பட்ட கோபக்கனலின் திரு உருவம்  - ஸ்ரீ பத்ரகாளி. 


இவள் ஆங்காரத்துடன்  - யக்ஞ சாலையை அழித்ததுடன் விருந்து உண்ண வந்திருந்த தேவர்களையும் ஏனையோர்களையும்  ஸ்ரீவீரபத்ரர்  தண்டித்த வேளையில் பெரும் பங்காற்றியவள். 

ஆணவங் கொண்டு அடாத செயல் செய்த தட்சனின் தலை அறுபட்டு - பின் ஆட்டுத் தலையுடன் அடங்கி ஒடுங்கி நின்ற வேளையில் - வந்த வேலை முடிந்தது என - ஸ்ரீ வீரபத்ரருடன் கூடி, சாந்தம் கொண்டவள்.

பின்னும் - சண்டன் முண்டன் எனும் அரக்கர்களை அழிப்பதற்காக, அம்பிகையின் அம்சத்தில் உதித்த சக்தியினால் தான் அசுரர்களை வீழ்த்த முடியும் என்ற சூழ்நிலையில்  - 

அம்பிகையின் திருமேனியில் இருந்து -  ப்ராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்த்ராணி, சாமுண்டி - என, ஏழு கன்னியர்கள் தோன்றினர்.  எனினும் - அசுரர்களை வேரோடு சாய்க்க முடியவில்லை. 

அப்போது சிவபெருமான் - தாம் வீரபத்ரர் என - திருக்கோலங் கொண்ட வேளையில்  தன்னுடன் ஒன்றிய,  பத்ரகாளியினை நெற்றிக்கண் வழியாகத் தோற்றுவித்தார். 


ஆங்காரத்துடன் வெளிப்பட்ட பத்ரகாளி - சாமுண்டி தேவியுடன் கலந்தாள். சண்டமுண்டர்களின் சரித்திரம் அத்தோடு முடிவடைந்தது. 

ஆனால், அன்னை பத்ரகாளியின் அரும் செயல்கள் தொடர்ந்தன. பின்னும்  - 

தனது கொடுஞ் செயல்களால்,  மண்ணுக்கும் விண்ணுக்கும் இன்னல்களைச் செய்த தாரகன் எனும் அசுரனை அழிப்பதற்கு என - சிவபெருமான் ஸ்ரீ பத்ர காளியினை மீண்டும் தோற்றுவித்தார் என்பது ஐதீகம்.


மதுரையில் - வஞ்சனையால் கோவலன் கொல்லப்பட்டான்.   இதை அறிந்து சீற்றத்துடன் பாண்டியனின் அரசவைக்கு வந்த, கற்புக்கரசி கண்ணகியை  - 

''தாருகன் பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்!..'' - என இளங்கோவடிகள் வர்ணிக்கின்றார் எனில் -  ஸ்ரீ பத்ரகாளியின் பெருஞ்சிறப்பினைப் பேசவும் வேண்டுமோ!...

ஸ்ரீ பத்ரகாளி அம்மையின் பெருஞ்சிறப்பினையும் பெருஞ்சீற்றத்தினையும் - தேவாரத்தில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சுந்தரரும் - பாடிப் பரவுகின்றனர். 

மாணிக்கவாசகரும் - ஸ்ரீ காளியினை வியந்து போற்றுகின்றார். 

திருமந்திரத்தில் திருமூலரும் ஸ்ரீ காளியின் அம்சத்தினை அகங்குழைந்து பாடுகின்றார் எனில் - ஸ்ரீ பத்ரகாளியின் பெருமைகளைச் சொல்வதற்கு ஒரு ஜன்மமும் போதுமோ? 

தாரகனின் உடல் கிழித்து அவன் குருதியினைக் குடித்த காளி ஒரு கட்டத்தில்  உக்ரமாகி விட்டாள். அவளைக் கண்டு விண்ணும் மண்ணும் நடுங்கி - அவள் ஆடிய ஆட்டத்தால் நிலைகுலைந்தன. அவளை ஆற்றுவார் யாருமின்றி அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன. 

 சர்வலோகமும் சர்வேஸ்வரனாகிய எம்பெருமானைச் சரணடைந்தன.

புன்னகையுடன் எழுந்த பெருமான் -  உக்ரத்துடன் காளி ஆடி வரும் வழியில் நின்று  - நடனப்போர் செய்து காளியின் சீற்றத்தினை அடக்கினார் என்று  தேவாரத் திருப்பதிகங்கள் பரவுகின்றன.


நதியதன் அயலே நகுதலைமாலை நாண்மதி சடைமிசை யணிந்து கதியதுவாகக் காளிமுன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர் (1/45/5) 
 - என்பது திருஞானசம்பந்தரின் திருவாக்கு.

பைதற்பிணக் குழைக்காளி வெங்கோபம் பங்கப்படுப்பான் 
செய்தற்கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன் (4/100/2) 
- என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு.

கொதியினால் வருகாளிதன் கோபங் 
குறைய ஆடிய கூத்துடையானே(7/70/4)
- என்பது சுந்தரரின் திருவாக்கு.

புலியூர்ப் பொதுவினில் நடநவில் 
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு 
அருளிய திருமுகத்தழகுறு சிறு நகை இறைவன்
- என்பது மாணிக்கவாசகப்பெருமானின் மணி வாக்கு.

காளியோடாடிக்  கனகாசலத்தாடிக் 
கூளியோடாடி குவலயத்தே ஆடி 
நீடிய நீர் தீக்கால் நீள்வானிடையாடி 
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே!.. 
- என்பது திருமூலரின் திருமந்திரம்.

இந்த நடனம்  - திருஆலங்காட்டில் ரத்ன சபையில் காளியுடன் போட்டியிட்டு ஆடிய ஊர்த்துவ தாண்டவமாகும்.

ஐயன் காலைத் தூக்கி ஆட, அன்னை  - அவ்வாறு நடமிட  இயலாத வண்ணம் நாணி நின்றனள் என்பது திருக்குறிப்பு. எனினும் -

இந்த வைபவம், சாக்த வழிபாட்டில் -  வேறு விதமாகப் புகழப்படுகின்றது.

தாரகனின் உடல் கிழித்து அவன் குருதியினைக் குடித்து  உக்ரமாகிய காளி -  ஆடிய ஆட்டத்தால் விண்ணும் மண்ணும் நடுங்கி - நிலை குலைந்தன. அவளை ஆற்றுவார் யாருமின்றி அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன. சர்வலோகமும் சர்வேஸ்வரனாகிய எம்பெருமானைச் சரணடைந்தன.

புன்னகையுடன் எழுந்த பெருமான் -  காளி உக்ரத்துடன்  ஆடி வரும் வழியில் அசைவற்றுக் கிடந்தார். அதற்கு மேல் நிகழ்ந்த நாடகம் என்னவென்று சொல்வது!.. 


அன்னையின்  திருப்பாதத்தின் அணுவளவு  - ஐயனின் மீது பட்டது தான் தாமதம்!... அன்னை அதிர்ந்தாள்!... 

''..ஐயனே!..'' - என ஆரவாரித்து, குனிந்து நோக்கினாள்.


பாருக்கெல்லாம் படியளக்கும் பரமன் பச்சிளங்குழந்தையாக உருமாற, பால் வடியும் முகம் கண்டு அன்னை பரிதவித்தாள். அவளுள் பாசம் பொங்கியது. ஆதுரத்துடன் வாரியணைத்துக் கொண்டாள்.

தாரகனின் உயிர் குடித்து உக்ர தாண்டவமாடிய தயாபரி - தாய்மை பெருகிட நின்றாள். மழலையாய்க் கிடந்த பெருமானை மார்புறத் தழுவிக் கொண்டாள்.  


அந்த அளவில் திருத்தன பாரங்களின் வழி  - தாரகனின் செங்குருதியினால் கெட்டிருந்த குருதி -  பால் என வழிந்திட, அன்னையின் ஆவேசம் அடங்கியது. 

நாணித் தலை கவிழ்ந்து நின்றனள் அன்னை. வழக்கம் போலவே - ''எல்லாம் எமது திருவிளையாடல்களுள் ஒன்று!..'' - என, ஈசனின் திருமுகத்தில் புன்னகை தவழ்ந்தது.
 
ஈரேழுலகும் ஆனந்த மயமாகி அம்மையப்பனைப் போற்றித் துதித்தன.

தீயவர்க்கு கொடும் கோர வடிவங்கொண்டு நிற்கும் அவள் - அன்பர்களுக்கு  ஆனந்தமாக அருள்கின்றனள். பத்ரகாளியின் வழிபாடு ஆனந்த மயமானது. 

ஆனால் நாளடைவில் அறியா மாந்தர்களால்  - அச்சமூட்டக் கூடியதாக மாறி விட்டது. காளிதேவிக்கு உயிர்களைப் பலியிடும் வழக்கம் உள்ளது. அது - நம்முள் மண்டிக் கிடக்கும் காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யம் - எனும் குணங்களைப் பலியிடும் குறிப்பு என்பர் பெரியோர். 


இவள் சினம் கொண்டால் மக்களுக்குள் கலகம் ஏற்படும். தேவிக்கு தயிர் அபிஷேகம் செய்வித்து தயிர் பள்ளயம், அவல் சர்க்கரை - நிவேதனம் செய்தால் அன்னை சாந்தம் அடைவாள். தேவியின் திருவருள் கிட்டும்.

பல்வேறு குறிப்புகளின்படி -  நான்கு, எட்டு, பத்து, பதினாறு - என திருக் கரங்களுடன் சித்தரிக்கப்படுகின்றாள். 

நல்லவர்க்கு ''அஞ்சாதே!'' என அபயம் அளிப்பதுடன் தீயவர்களைத் தண்டிக்கத் தயங்குவதில்லை என்பதே அவளது திருத்தோற்றத்தின் திருக்குறிப்பு.

அன்னை திக்குகளையே ஆடையாக அணிந்து முண்டமாலையைச் சூடியவள்.  திருமுகங்களில்  நெற்றிக்கண் உடையவள். கோர செளந்தர்யம் உடையவள்.

மகாகவி காளிதாசன், சத்ரபதி சிவாஜி, தெனாலி ராமன், கவி காளமேகம், அபிராமி பட்டர், ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, விவேகானந்தர், மகாகவி பாரதியார் - இவர்கள் எல்லாம் அம்பிகையை காளி வடிவாகக் கண்டு கை தொழுதவர்கள். 

இன்னும் - கோடானு கோடி இதயங்கள் அன்னையின் இருப்பிடம்.


''சக்தியும் சிவமும் - பாலும் சுவையும் போல அக்னியும் உஷ்ணமும் போல ஒன்றேயாகும். ஒன்றில்லாமல் ஒன்றை நினைக்கவும் முடியாது!..'' என்பது,  ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் அருள் வாக்கு.

ஸ்ரீபத்ரகாளி வழிபாடு மிகத் தொன்மையானது. மிகப் பிரசித்தமானது. 

தமிழகத்தில் - திருஆலங்காடு, தில்லை, திருவெண்காடு, திருவக்கரை, அம்பகரத்தூர், கொல்லங்குடி, தஞ்சாவூர், உறையூர், மயிலை, பெரம்பூர் - என பற்பல திருத்தலங்கள்.

அன்பர்களுக்கு அருள் புரிவதில் அவளுக்கு நிகர் அவளேதான். அவளைப் பற்றி சிறு குறிப்புகளை மட்டுமே தேடினேன். வெள்ளம் போல விஷயங்களைத் தந்திருக்கின்றாள் - என் அன்னை.

அன்னையின் திருவருள் கொண்டு, அவற்றை மீண்டும் சிந்திப்போம்.

அன்னையின் காயத்ரி 

ஓம் பிசாச த்வஜாயை வித்மஹே; 
சூலஹஸ்தாய தீமஹி -  தந்நோ காளீ ப்ரசோதயாத்:
* * *

செவ்வாய், ஜூலை 30, 2013

ஸ்ரீ வீரபத்ரர் - 01

தட்சன் வெகுகாலம் தவம் செய்து, நிறைவாக - பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். அது மூலப்பரம்பொருளாகிய சிவபெருமானைக் குறித்து.


வேள்வியின் உக்ரம் கண்டு மனம் குளிர்ந்த சிவபெருமான் தட்சனின் முன் தோன்றினர். அவரைப் போற்றிப் பணிந்த தட்சன் ஒரே ஒரு வரம் கேட்டான். 

''..அம்பிகை எனக்கு மகளாக வேண்டும். தாட்சாயணி என - என் அன்பில் வளர்ந்த மகளை, எம்பெருமான் மணம்கொண்டு அருள் புரியவேண்டும்!..''

வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும்  ஈசன் அவ்வாறே அருள் புரிந்தார்.

காலங்கள் வேகமாக ஓடின. தாட்சாயணி மணக்கோலங்கொள்ளும் காலமும் நெருங்கிற்று.

அம்பிகையைத் திருமணங்கொண்டு, திருக்காட்சி  நல்கும்படி   - தேவர்களும் முனிவர்களும் - ஐயனை வேண்டிக் கொண்டனர். 

ஐயனும் அடுத்த காட்சியினை இயக்க வேண்டி - அன்புடன் இசைந்தார்.

ஆயிற்று. மணமகன் சார்பாக தவத்தில் பழுத்த மகாமுனிவர்கள் திரண்டு பெண் கேட்டுச் சென்றனர் தட்சனின் அரண்மனைக்கு. அவனோ -  

அரண்மனையின் உச்சியில் அல்ல! -  ஆணவத்தின் உச்சியில் நின்றான்!.. 

பெரியோர்கள் முறைப்படி பெண் கேட்டனர்.

தட்சன் - '' ..எதற்கு?.. '' என்றான்.

''.. எல்லாம் அறிந்த நீ - இப்படிக் கேட்கலாமா!.. சக்தி சிவத்துடன் கூடினால் தானே பிரபஞ்ச இயக்கம்  நிகழ்வுறும். உன் தவத்தின்படி கேட்டுப் பெற்ற - பெரியநாயகியை, பிரியமுடன் பெருமானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்து பெருவாழ்வினை அடைவாய்!..''

''.. அப்படியானால் சக்தியற்ற சிவன் சாதாரணன்!.. உங்கள் கூற்றுப்படி நானே பெரியவன் ஆகின்றேன்!... அல்லவா!.. அப்படியானால் இனி எனக்கே சகல லோகங்களிலும் முதல் - இல்லை.. இல்லை.. எல்லா மரியாதைகளும் செய்யப்பட வேண்டும்!.. அந்தச் சிவனே என்னிடம் வந்து வணங்கிப் பெண் கேட்க வேண்டும்!..'' 

தட்சன் கொக்கரித்தான். அடியவனாக இருந்தவன் கொடியவன் ஆனான்.

யாரும் போய்ச் சொல்ல வேண்டிய அவசியம் இன்றி ஈசனுக்கு - அங்கே நடந்த விஷயம் விளங்கிற்று.  புன்னகைத்தார். 

அரண்மனையில் - அம்பிகையின்  சிவபூஜையினைத் தடை செய்தான் தட்சன். அம்பிகை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஸ்தூல வழிபாட்டினை சூட்சும நிலைக்கு உயர்த்துகின்றார் தந்தை - என்று அகமகிழ்ந்து லிங்கத் திருமேனியினைத் தன் இதயத்தாமரையில் பிரதிஷ்டை செய்து கொண்டாள். 


அப்புறம் என்ன!.. சக்தியுடன் சிவம் கலந்ததா!.. சிவத்துடன் சக்தி கலந்ததா!.

ஆனந்தக் கூத்தாடி அகமகிந்த ஐயன் அம்பிகையின் வளைக்கரம் பற்றினார். 

சகல உயிர்களும் மகிழ்வெய்தின - தட்சன் ஒருவனைத் தவிர!..

''..அன்று, வரம் கேட்டபொழுது -  என் அன்பில் வளர்ந்தவளை, எம்பெருமான் மணங்கொண்டு அருளவேண்டும்!. - என்று தானே கேட்டேன். நான் மணம் முடித்துத் தரவேண்டும் - எனக்கேட்டேனா? இல்லையே! பிறகு ஏன் புகைச்சல்  - எனக்குள்?..''

''..சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு,  நடுச்சாமத்தில் பேய்களுடன் கூடி - கூத்தாடிக் களிக்கும் சிவனா என் அன்பு மகளின் மனங் கவர்ந்தான்!.  என்னால் நம்ப முடியவில்லையே!..''

''..அட!.. அப்படியே மனங் கவர்ந்திருந்தாலும் என் அன்பு மகளுக்காக எதையும் செய்வேனே!.. அந்த சுடுகாட்டுப் பித்தன் என்னிடம் வந்து வணங்கி நின்று கேட்டிருந்தால்!.. ''

''.. நான்  வளர்த்தவனாயிற்றே!.. சிவன் - என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லையே!. கண் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - திடு.. திடு.. என்று ஆடிக் கொண்டு வந்தான்!... வாஞ்சையுடன் வளர்த்த மகளை வாரி அணைத்து - ஒரு முரட்டுக் காளையில் ஏற்றிக் கொண்டு போய்விட்டான்!..''

''.. தாட்சாயணி - என் செல்லமகள்!.. தங்கக் குதிரையில் ஆரோகணித்தவள் ஆயிற்றே!. யானை மீது வைர அம்பாரியில் வையகத்தை வலஞ்செய்தவள் ஆயிற்றே!. எப்படி.. எப்படி.. இதனைப் பொறுப்பேன்!..''

''.. இனி அவனை  - அவனென்ன அவன் - அவளையும் சேர்த்து மறப்பேன்!.. அடியோடு வெறுப்பேன்!..''

தட்சன் கொதித்தான்.. குமுறினான்!..

இருப்பினும் - அனைவரும்  எடுத்துக் கூறினர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு கயிலை நோக்கிச் சென்றான்!.. மகளையும் மருகனையும் கண்டு வருவோம் - என!..

ஆனால் அங்கே சுற்றிக் கொண்டிருந்த குள்ள பூதங்கள் எள்ளி நகையாடி -

''..சிவ நிந்தனை செய்தவனுக்கு இங்கே இடமில்லை!..'' - என்று, கயிலையின் அருகில் கூட அனுமதிக்காமல் விரட்டி விட்டன.

கொதித்த உள்ளத்துடன் - அரண்மனைக்குத் திரும்பிய தட்சன்  - 

''.. யாரடா அங்கே!..'' - கர்ஜித்தான். ஓடிவந்து நின்றவர்களிடம் உத்தரவுகளைப் பிறப்பித்தான். மளமள என்று காரியங்கள் நடந்தேறின.

மூவுலகில் இருந்த - எல்லாரும் திரண்டு வந்தனர்.

''..மஹாயக்ஞம்!.. தட்சன் நடத்துகின்றான் எனில் கேட்க வேண்டுமா!.  தன் தவ வலிமையால் - அம்பிகையை - மகளாகப் பெற்றவன் ஆயிற்றே!..''

- என்று புகழ்ந்து பேசிக் கொண்டு வந்த அனைவரும் ஆசனங்களில் அமர்ந்த பின் தான் புரிந்தது இந்த யாகத்தை - தன் மருகனாகிய இறைவனைச் சிறுமைப் படுத்துவதற்காக நடத்தப்படுவது என்று!..

''.. இத்தகைய யாகம் செய்வது தகாது!..'' - என ததீசி முனிவர் எடுத்துரைத்தும் தட்சன் கேட்காததால் - ததீசி முனிவர்  கோபமுற்றுச் சென்று விட்டார் என்று - பிறகுதான் தெரிந்தது!.

''.. அப்படியே எழுந்து ஓடிவிடலாம்!..'' - என்று வாசல் பக்கம் பார்த்தால் - யம தூதர்களைப் போல  - காவலர்கள்.

அடிவயிற்றைக் கலக்கினாலும், ''..அழைத்தவன் அவன். அழைப்பை மறுத்தால் மித்ரதோஷம் வராதா!.. நட்பை நாடி அழைத்தான். நாமும் அதையே நாடி வந்துள்ளோம்!..'' - என, தமக்குத் தாமே ஆறுதல் கொண்டார்கள்.

இதற்கிடையே - திருக்கயிலாய மலையில் -

ஐயனின்  - சொல்லை மீறி, அம்பிகை  யக்ஞத்துக்கு - புறப்படுவதைக் கண்டு மனங்கலங்கி நின்றார் நந்தியம்பெருமான்.

சற்று முன் பெரும் வாக்குவாதம்!..  யாருக்கு வெற்றி என்று சொல்லத் தெரிய வில்லை!.. ஏதும் சொல்ல மொழியின்றி கை கட்டி நின்றார்.


தனித்திருந்த சிவம் தவத்தில் ஆழ்ந்தது. ஐயனின் முகம் நோக்கியவாறு முன் அமர்ந்தார் - நந்தியம்பெருமான்.

சிறு பொழுது கூட ஆகவில்லை!.. கண் விழித்தது சிவம். திருமேனி எங்கும் தீப்பிழம்புகளாக கோபக்கனல். திடுக்கிட்டார் நந்தி.

மகளென்றும் பாராமல் - சொல்லம்புகளை வீசி - அம்பிகையை தட்சன் அவமதித்த விஷயம் புரிந்தது. வியர்த்து வழிந்தது - நந்திக்கு!..

''..என்ன நடக்கப் போகின்றதோ!..''

அதோ அம்பிகையும் சீறிச் சினந்த முகத்தினளாக ஓடி வந்து ஈசனைப் பணிந்து பரிதவிக்கின்றாள். இப்படியோர் அவமானம் நிகழ்ந்ததே - என்று!..

ஈசனின் கோபம் - அவர் தம், நெற்றிக்கண்ணில் இருந்து  - ஆயிரம் முகங்கள்  இரண்டாயிரம் திருக்கரங்கள் கொண்டு,  அக்னிப் பிழம்பென - வெளிப்பட்டது.


அண்ட பகிரண்டம் முழுதும், ''வீரபத்ரன்!.. வீரபத்ரன்!..'' எனும் திருநாமம் எதிரொலித்தது!..


அதே சமயம் - அம்பிகையின் திருமேனியிலிருந்து - அவள் கொண்ட கோபம் - ஸ்ரீபத்ரகாளி - என வெளிப்பட்டது!..

ஸ்ரீவீரபத்ரருக்கும் ஸ்ரீபத்ரகாளிக்கும் இலக்கு - தட்சனின் யாகசாலை!..

தட்சன் ஆடிய ஆட்டத்திற்கு எதிர் ஆட்டமாக -  ஸ்ரீவீரபத்ரரும், ஸ்ரீபத்ரகாளியும் - ஆடிய ஆட்டம், தட்சனின் தலை அறுபட்டு யாகத்தீயில் விழுந்ததோடு முடிவடைந்தது!..

தடம் மாறிச் சென்றதனால் - தலையற்ற தட்சன் - தனியே நின்று தடுமாறிக் கொண்டிருந்தான்.

அம்பிகையை வளர்த்த புண்ணியம் - அவன் உயிரைக் காத்து நின்றது!.

சப்தரிஷிகள் கூடி நின்று- ஈசனையும் இறைவியையும் போற்றினர். அவர்கள் முன் விடை வாகனத்தில் தோன்றிய எம்பெருமான் - அழிக்கப்பட்ட வேள்விக் களத்தில் குற்றுயிராய்க் கிடந்த அனைவரையும் உயிர்ப்பித்தார்.


தட்சனின் தலை அக்னிக்கு இரையாகிப் போனதால், புதிதாக ஆட்டின் தலை பொருத்தப்பட்டது. மறுவாழ்வு பெற்ற தட்சன் - தான் செய்த பிழையினைப் பொறுத்தருள வேண்டி நின்றான்.

அங்கே நடந்தது  ஈசனின் அட்ட வீரட்டங்களுள் ஒன்றெனப் புகழப்பட்டது.

இதுவே பின்னர் - அம்பிகை பர்வத ராஜ - குமாரியாகத் தோன்றுவதற்கு தொடக்கம். சூரபத்மனால் தேவர்கள் சிறைப்படவும்  - தாமரைத் தடாகத்தில் , சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் முருகப் பெருமான் உதித்து எழவும்  - தட்ச யக்ஞமே காரணம்.

அந்திவான் பெருமேனியன் கறைமிடற்றணிந்த
எந்தை தன் வடிவாய் அவன் நுதல்விழியிடை
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ
முந்து வீரபத்ரன் எனும் திறலுடை முதல்வன்!.

என்று  - ஸ்ரீவீரபத்ரரின் திருத்தோற்றத்தினை - கச்சியப்பர் கந்தபுராணத்தில் விவரிக்கின்றார்.

தட்சனின் யாகத்தைச் சிதைத்த ஸ்ரீவீரபத்ரரின் அருஞ்செயல் - சைவ திருமுறைகள் பலவற்றிலும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.

மயிலாடுதுறை - செம்பொன்னார்கோயில் அருகே கீழப்பரசலூர் என தற்போது வழங்கப்படும் திருப்பறியலூர் திருத்தலம் தான் - தட்சன் தலையைப் பறித்த வீரட்டானத் திருத்தலம்.

ஸ்ரீ வீரட்டேஸ்வரர்
ஈசன் வீரட்டேஸ்வரர் எனவும் அம்பிகை இளங்கொம்பனையாள் எனவும் விளங்குகின்றனர்.  சிவகங்கை தீர்த்தம். பலா தல விருட்சம்.

நவக்கிரகங்களில் சூரியனைத் தவிர வேறு எவரும் - இங்கே கிடையாது.  எனவே வினையின் வேர் அறுபடும் தலம்.

ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற தலம்.

ஸ்ரீ வீரபத்ரரை வழிபடுவதற்கு - உகந்த நாள் செவ்வாய். ஸ்ரீ வீரபத்ரர் - கூடிக் கெடுக்கும் எதிரிகளின் தொல்லைகளை அகற்றி வீண் பயத்தினை ஒழிப்பார். 

காரணம் இன்றி உடலில் தோன்றும் நடுக்கம் வீரபத்ரர் வழிபாட்டினால் தீரும். வெற்றிலை மாலை சாற்றி - நெய் விளக்கேற்றி வழிபட நலங்கள் விளையும்.

ஸ்ரீ வீரபத்ர வழிபாடு பாரதத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று.

தஞ்சையில் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகில் ஸ்ரீவீரபத்ரர் கோயில் உள்ளது. தெற்கு ராஜவீதியில் - கோட்டை ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில் வீரபத்ரர் - பத்ரகாளி எழுந்தருள்கின்றனர்.

குடந்தையில் மகாமக குளக்கரையிலும், திருஆனைக்காவிலும் -  ஸ்ரீவீரபத்ரர் கோயில் கொண்டுள்ளார்.

ஸ்ரீவீரபத்ரரைப் போற்றி தக்க யாகப் பரணி பாடியவர்,  தமிழ்ப் பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். இவருடைய பக்திக்கு இணங்கி -  பத்ரகாளியுடன் தரிசனம் தந்தருளினார் ஸ்ரீவீரபத்ரர்.

மேலும்,  குடந்தையை அடுத்த தாராசுரத்தில் வீரபத்ரருக்கு கோயில் எழுப்பிய ஒட்டக்கூத்தர் - இந்தக் கோயிலிலேயே - ஜீவசமாதி எய்தினார்.

ஞானசம்பந்தப் பெருமான் தம் திருவாக்கினால் (3/51/3) அருளியபடி -

வீண்பழி, வன்பகை, கொடும் பிணி - இவையெல்லாம் தொலையும் வண்ணம் ஐயன் ஸ்ரீ வீரபத்ரரையும் ஸ்ரீ பத்ரகாளியையும் ஆடிச் செவ்வாய் அன்று போற்றி வணங்குவோம்!..

தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்கனே அஞ்சல் என்றருள் செய் எனை..

சிவாய திருச்சிற்றம்பலம்!..