நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 30, 2013

ஸ்ரீ வீரபத்ரர் - 01

தட்சன் வெகுகாலம் தவம் செய்து, நிறைவாக - பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். அது மூலப்பரம்பொருளாகிய சிவபெருமானைக் குறித்து.


வேள்வியின் உக்ரம் கண்டு மனம் குளிர்ந்த சிவபெருமான் தட்சனின் முன் தோன்றினர். அவரைப் போற்றிப் பணிந்த தட்சன் ஒரே ஒரு வரம் கேட்டான். 

''..அம்பிகை எனக்கு மகளாக வேண்டும். தாட்சாயணி என - என் அன்பில் வளர்ந்த மகளை, எம்பெருமான் மணம்கொண்டு அருள் புரியவேண்டும்!..''

வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும்  ஈசன் அவ்வாறே அருள் புரிந்தார்.

காலங்கள் வேகமாக ஓடின. தாட்சாயணி மணக்கோலங்கொள்ளும் காலமும் நெருங்கிற்று.

அம்பிகையைத் திருமணங்கொண்டு, திருக்காட்சி  நல்கும்படி   - தேவர்களும் முனிவர்களும் - ஐயனை வேண்டிக் கொண்டனர். 

ஐயனும் அடுத்த காட்சியினை இயக்க வேண்டி - அன்புடன் இசைந்தார்.

ஆயிற்று. மணமகன் சார்பாக தவத்தில் பழுத்த மகாமுனிவர்கள் திரண்டு பெண் கேட்டுச் சென்றனர் தட்சனின் அரண்மனைக்கு. அவனோ -  

அரண்மனையின் உச்சியில் அல்ல! -  ஆணவத்தின் உச்சியில் நின்றான்!.. 

பெரியோர்கள் முறைப்படி பெண் கேட்டனர்.

தட்சன் - '' ..எதற்கு?.. '' என்றான்.

''.. எல்லாம் அறிந்த நீ - இப்படிக் கேட்கலாமா!.. சக்தி சிவத்துடன் கூடினால் தானே பிரபஞ்ச இயக்கம்  நிகழ்வுறும். உன் தவத்தின்படி கேட்டுப் பெற்ற - பெரியநாயகியை, பிரியமுடன் பெருமானுக்கு கன்யாதானம் செய்து கொடுத்து பெருவாழ்வினை அடைவாய்!..''

''.. அப்படியானால் சக்தியற்ற சிவன் சாதாரணன்!.. உங்கள் கூற்றுப்படி நானே பெரியவன் ஆகின்றேன்!... அல்லவா!.. அப்படியானால் இனி எனக்கே சகல லோகங்களிலும் முதல் - இல்லை.. இல்லை.. எல்லா மரியாதைகளும் செய்யப்பட வேண்டும்!.. அந்தச் சிவனே என்னிடம் வந்து வணங்கிப் பெண் கேட்க வேண்டும்!..'' 

தட்சன் கொக்கரித்தான். அடியவனாக இருந்தவன் கொடியவன் ஆனான்.

யாரும் போய்ச் சொல்ல வேண்டிய அவசியம் இன்றி ஈசனுக்கு - அங்கே நடந்த விஷயம் விளங்கிற்று.  புன்னகைத்தார். 

அரண்மனையில் - அம்பிகையின்  சிவபூஜையினைத் தடை செய்தான் தட்சன். அம்பிகை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஸ்தூல வழிபாட்டினை சூட்சும நிலைக்கு உயர்த்துகின்றார் தந்தை - என்று அகமகிழ்ந்து லிங்கத் திருமேனியினைத் தன் இதயத்தாமரையில் பிரதிஷ்டை செய்து கொண்டாள். 


அப்புறம் என்ன!.. சக்தியுடன் சிவம் கலந்ததா!.. சிவத்துடன் சக்தி கலந்ததா!.

ஆனந்தக் கூத்தாடி அகமகிந்த ஐயன் அம்பிகையின் வளைக்கரம் பற்றினார். 

சகல உயிர்களும் மகிழ்வெய்தின - தட்சன் ஒருவனைத் தவிர!..

''..அன்று, வரம் கேட்டபொழுது -  என் அன்பில் வளர்ந்தவளை, எம்பெருமான் மணங்கொண்டு அருளவேண்டும்!. - என்று தானே கேட்டேன். நான் மணம் முடித்துத் தரவேண்டும் - எனக்கேட்டேனா? இல்லையே! பிறகு ஏன் புகைச்சல்  - எனக்குள்?..''

''..சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு,  நடுச்சாமத்தில் பேய்களுடன் கூடி - கூத்தாடிக் களிக்கும் சிவனா என் அன்பு மகளின் மனங் கவர்ந்தான்!.  என்னால் நம்ப முடியவில்லையே!..''

''..அட!.. அப்படியே மனங் கவர்ந்திருந்தாலும் என் அன்பு மகளுக்காக எதையும் செய்வேனே!.. அந்த சுடுகாட்டுப் பித்தன் என்னிடம் வந்து வணங்கி நின்று கேட்டிருந்தால்!.. ''

''.. நான்  வளர்த்தவனாயிற்றே!.. சிவன் - என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்க வில்லையே!. கண் பார்த்துக் கொண்டிருக்கும்போதே - திடு.. திடு.. என்று ஆடிக் கொண்டு வந்தான்!... வாஞ்சையுடன் வளர்த்த மகளை வாரி அணைத்து - ஒரு முரட்டுக் காளையில் ஏற்றிக் கொண்டு போய்விட்டான்!..''

''.. தாட்சாயணி - என் செல்லமகள்!.. தங்கக் குதிரையில் ஆரோகணித்தவள் ஆயிற்றே!. யானை மீது வைர அம்பாரியில் வையகத்தை வலஞ்செய்தவள் ஆயிற்றே!. எப்படி.. எப்படி.. இதனைப் பொறுப்பேன்!..''

''.. இனி அவனை  - அவனென்ன அவன் - அவளையும் சேர்த்து மறப்பேன்!.. அடியோடு வெறுப்பேன்!..''

தட்சன் கொதித்தான்.. குமுறினான்!..

இருப்பினும் - அனைவரும்  எடுத்துக் கூறினர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு கயிலை நோக்கிச் சென்றான்!.. மகளையும் மருகனையும் கண்டு வருவோம் - என!..

ஆனால் அங்கே சுற்றிக் கொண்டிருந்த குள்ள பூதங்கள் எள்ளி நகையாடி -

''..சிவ நிந்தனை செய்தவனுக்கு இங்கே இடமில்லை!..'' - என்று, கயிலையின் அருகில் கூட அனுமதிக்காமல் விரட்டி விட்டன.

கொதித்த உள்ளத்துடன் - அரண்மனைக்குத் திரும்பிய தட்சன்  - 

''.. யாரடா அங்கே!..'' - கர்ஜித்தான். ஓடிவந்து நின்றவர்களிடம் உத்தரவுகளைப் பிறப்பித்தான். மளமள என்று காரியங்கள் நடந்தேறின.

மூவுலகில் இருந்த - எல்லாரும் திரண்டு வந்தனர்.

''..மஹாயக்ஞம்!.. தட்சன் நடத்துகின்றான் எனில் கேட்க வேண்டுமா!.  தன் தவ வலிமையால் - அம்பிகையை - மகளாகப் பெற்றவன் ஆயிற்றே!..''

- என்று புகழ்ந்து பேசிக் கொண்டு வந்த அனைவரும் ஆசனங்களில் அமர்ந்த பின் தான் புரிந்தது இந்த யாகத்தை - தன் மருகனாகிய இறைவனைச் சிறுமைப் படுத்துவதற்காக நடத்தப்படுவது என்று!..

''.. இத்தகைய யாகம் செய்வது தகாது!..'' - என ததீசி முனிவர் எடுத்துரைத்தும் தட்சன் கேட்காததால் - ததீசி முனிவர்  கோபமுற்றுச் சென்று விட்டார் என்று - பிறகுதான் தெரிந்தது!.

''.. அப்படியே எழுந்து ஓடிவிடலாம்!..'' - என்று வாசல் பக்கம் பார்த்தால் - யம தூதர்களைப் போல  - காவலர்கள்.

அடிவயிற்றைக் கலக்கினாலும், ''..அழைத்தவன் அவன். அழைப்பை மறுத்தால் மித்ரதோஷம் வராதா!.. நட்பை நாடி அழைத்தான். நாமும் அதையே நாடி வந்துள்ளோம்!..'' - என, தமக்குத் தாமே ஆறுதல் கொண்டார்கள்.

இதற்கிடையே - திருக்கயிலாய மலையில் -

ஐயனின்  - சொல்லை மீறி, அம்பிகை  யக்ஞத்துக்கு - புறப்படுவதைக் கண்டு மனங்கலங்கி நின்றார் நந்தியம்பெருமான்.

சற்று முன் பெரும் வாக்குவாதம்!..  யாருக்கு வெற்றி என்று சொல்லத் தெரிய வில்லை!.. ஏதும் சொல்ல மொழியின்றி கை கட்டி நின்றார்.


தனித்திருந்த சிவம் தவத்தில் ஆழ்ந்தது. ஐயனின் முகம் நோக்கியவாறு முன் அமர்ந்தார் - நந்தியம்பெருமான்.

சிறு பொழுது கூட ஆகவில்லை!.. கண் விழித்தது சிவம். திருமேனி எங்கும் தீப்பிழம்புகளாக கோபக்கனல். திடுக்கிட்டார் நந்தி.

மகளென்றும் பாராமல் - சொல்லம்புகளை வீசி - அம்பிகையை தட்சன் அவமதித்த விஷயம் புரிந்தது. வியர்த்து வழிந்தது - நந்திக்கு!..

''..என்ன நடக்கப் போகின்றதோ!..''

அதோ அம்பிகையும் சீறிச் சினந்த முகத்தினளாக ஓடி வந்து ஈசனைப் பணிந்து பரிதவிக்கின்றாள். இப்படியோர் அவமானம் நிகழ்ந்ததே - என்று!..

ஈசனின் கோபம் - அவர் தம், நெற்றிக்கண்ணில் இருந்து  - ஆயிரம் முகங்கள்  இரண்டாயிரம் திருக்கரங்கள் கொண்டு,  அக்னிப் பிழம்பென - வெளிப்பட்டது.


அண்ட பகிரண்டம் முழுதும், ''வீரபத்ரன்!.. வீரபத்ரன்!..'' எனும் திருநாமம் எதிரொலித்தது!..


அதே சமயம் - அம்பிகையின் திருமேனியிலிருந்து - அவள் கொண்ட கோபம் - ஸ்ரீபத்ரகாளி - என வெளிப்பட்டது!..

ஸ்ரீவீரபத்ரருக்கும் ஸ்ரீபத்ரகாளிக்கும் இலக்கு - தட்சனின் யாகசாலை!..

தட்சன் ஆடிய ஆட்டத்திற்கு எதிர் ஆட்டமாக -  ஸ்ரீவீரபத்ரரும், ஸ்ரீபத்ரகாளியும் - ஆடிய ஆட்டம், தட்சனின் தலை அறுபட்டு யாகத்தீயில் விழுந்ததோடு முடிவடைந்தது!..

தடம் மாறிச் சென்றதனால் - தலையற்ற தட்சன் - தனியே நின்று தடுமாறிக் கொண்டிருந்தான்.

அம்பிகையை வளர்த்த புண்ணியம் - அவன் உயிரைக் காத்து நின்றது!.

சப்தரிஷிகள் கூடி நின்று- ஈசனையும் இறைவியையும் போற்றினர். அவர்கள் முன் விடை வாகனத்தில் தோன்றிய எம்பெருமான் - அழிக்கப்பட்ட வேள்விக் களத்தில் குற்றுயிராய்க் கிடந்த அனைவரையும் உயிர்ப்பித்தார்.


தட்சனின் தலை அக்னிக்கு இரையாகிப் போனதால், புதிதாக ஆட்டின் தலை பொருத்தப்பட்டது. மறுவாழ்வு பெற்ற தட்சன் - தான் செய்த பிழையினைப் பொறுத்தருள வேண்டி நின்றான்.

அங்கே நடந்தது  ஈசனின் அட்ட வீரட்டங்களுள் ஒன்றெனப் புகழப்பட்டது.

இதுவே பின்னர் - அம்பிகை பர்வத ராஜ - குமாரியாகத் தோன்றுவதற்கு தொடக்கம். சூரபத்மனால் தேவர்கள் சிறைப்படவும்  - தாமரைத் தடாகத்தில் , சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் முருகப் பெருமான் உதித்து எழவும்  - தட்ச யக்ஞமே காரணம்.

அந்திவான் பெருமேனியன் கறைமிடற்றணிந்த
எந்தை தன் வடிவாய் அவன் நுதல்விழியிடை
வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ
முந்து வீரபத்ரன் எனும் திறலுடை முதல்வன்!.

என்று  - ஸ்ரீவீரபத்ரரின் திருத்தோற்றத்தினை - கச்சியப்பர் கந்தபுராணத்தில் விவரிக்கின்றார்.

தட்சனின் யாகத்தைச் சிதைத்த ஸ்ரீவீரபத்ரரின் அருஞ்செயல் - சைவ திருமுறைகள் பலவற்றிலும் புகழ்ந்து போற்றப்படுகின்றது.

மயிலாடுதுறை - செம்பொன்னார்கோயில் அருகே கீழப்பரசலூர் என தற்போது வழங்கப்படும் திருப்பறியலூர் திருத்தலம் தான் - தட்சன் தலையைப் பறித்த வீரட்டானத் திருத்தலம்.

ஸ்ரீ வீரட்டேஸ்வரர்
ஈசன் வீரட்டேஸ்வரர் எனவும் அம்பிகை இளங்கொம்பனையாள் எனவும் விளங்குகின்றனர்.  சிவகங்கை தீர்த்தம். பலா தல விருட்சம்.

நவக்கிரகங்களில் சூரியனைத் தவிர வேறு எவரும் - இங்கே கிடையாது.  எனவே வினையின் வேர் அறுபடும் தலம்.

ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற தலம்.

ஸ்ரீ வீரபத்ரரை வழிபடுவதற்கு - உகந்த நாள் செவ்வாய். ஸ்ரீ வீரபத்ரர் - கூடிக் கெடுக்கும் எதிரிகளின் தொல்லைகளை அகற்றி வீண் பயத்தினை ஒழிப்பார். 

காரணம் இன்றி உடலில் தோன்றும் நடுக்கம் வீரபத்ரர் வழிபாட்டினால் தீரும். வெற்றிலை மாலை சாற்றி - நெய் விளக்கேற்றி வழிபட நலங்கள் விளையும்.

ஸ்ரீ வீரபத்ர வழிபாடு பாரதத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று.

தஞ்சையில் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையார் கோயில் அருகில் ஸ்ரீவீரபத்ரர் கோயில் உள்ளது. தெற்கு ராஜவீதியில் - கோட்டை ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில் வீரபத்ரர் - பத்ரகாளி எழுந்தருள்கின்றனர்.

குடந்தையில் மகாமக குளக்கரையிலும், திருஆனைக்காவிலும் -  ஸ்ரீவீரபத்ரர் கோயில் கொண்டுள்ளார்.

ஸ்ரீவீரபத்ரரைப் போற்றி தக்க யாகப் பரணி பாடியவர்,  தமிழ்ப் பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். இவருடைய பக்திக்கு இணங்கி -  பத்ரகாளியுடன் தரிசனம் தந்தருளினார் ஸ்ரீவீரபத்ரர்.

மேலும்,  குடந்தையை அடுத்த தாராசுரத்தில் வீரபத்ரருக்கு கோயில் எழுப்பிய ஒட்டக்கூத்தர் - இந்தக் கோயிலிலேயே - ஜீவசமாதி எய்தினார்.

ஞானசம்பந்தப் பெருமான் தம் திருவாக்கினால் (3/51/3) அருளியபடி -

வீண்பழி, வன்பகை, கொடும் பிணி - இவையெல்லாம் தொலையும் வண்ணம் ஐயன் ஸ்ரீ வீரபத்ரரையும் ஸ்ரீ பத்ரகாளியையும் ஆடிச் செவ்வாய் அன்று போற்றி வணங்குவோம்!..

தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்கனே அஞ்சல் என்றருள் செய் எனை..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

10 கருத்துகள்:

 1. வீர பத்திரர் கதையை இவ்வளவு விரிவாக கேட்டதில்லை. அறிந்து கொண்டேன். இந்த ஆட்டுத் தலையுடன் இருக்கும் தட்சனைத் தான் மகிஷாசுற மர்த்திநியாக அம்பிகை சம்ஹாரம் செய்கிறாளோ?

  அருமையாய் பதிவை கொண்டு செல்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!.. அம்பிகை சம்ஹாரம் செய்வது மகிஷன் எனும் அசுரனை!.. அவன் வேற்!.. ஆட்டுதலையுடன் தட்சன் மேலும் பல சிவதலங்கள வணங்கி நற்பேறு பெறுகின்றான்!..

   நீக்கு
 2. வீர பத்திரர் வரலாறு அறிந்து கொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!...

   நீக்கு
 3. ஆணவம் அழிவிற்கு காரணம் + வீர பத்திரர் வரலாறு மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆணவம் - அது ஒன்றினால் தான் மனித நேயம் அழிகின்றது!..தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு

 4. தெரிந்த கதையானாலும் சொல்லிச் செல்லும் விதம் அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. வணக்கம்!..தங்களது வருகையும் வாழ்த்துகளும் என்னை மகிழ்விக்கின்றன!..நன்றி ஐயா!..

   நீக்கு
 5. இதுவரை அறியப்படாத அருமையான தகவல்கள் நிறைந்த
  ஆன்மிகப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 6. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. என்றும் என் நன்றிகள் உரியன!..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..