நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 26, 2013

ஆடி வெள்ளி - 02

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. ஆதி பராசக்தி. 

அஞ்சினார்க்கும் அல்லலுற்று ஆற்றாது அழுதார்க்கும் அரணாக நின்று அன்னையென - அரவணைத்துக் காத்தருளும் பரிபூரணி.  ஜகத் காரணி. 


அன்பரைக் காத்தருள்வதற்காக - அவள்  மேற்கொள்ளும் திருக்கோலங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றுள் -

அன்னையின் அன்புக்கும் அருளுக்கும் சான்றாக விளங்கும் ஒரு திருவடிவம் தான் சர்வலோக ரட்க்ஷகியான - ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் திருவடிவம். ஈவும் இரக்கமுங் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ துர்காம்பிகை. 

நல்லனவற்றுக்கு அரணாக விளங்கும் அதே வேளையில் அல்லாதனவற்றை அடியோடு சாய்ப்பவள் - அன்னை ஸ்ரீ துர்காம்பிகை!..


கர்ஜிக்கும் சிங்கத்தின் மீது ஆரோகணித்து - அசுரனுடன் போருக்கு ஆயத்த நிலையில் இருக்கும் வீரத்திருக்கோலமும் இவளுடையதே!.. 

போரில் ஜயங்கொண்டு மகிஷன் தலைமேல் - அந்தரி நீலி அழியாத கன்னிகை என  - நின்றருளிய திருக்கோலமும் இவளுடையதே!..

அழகிய சிவந்த பட்டாடை உடுத்தி  திருமேனியில் ரத்ன ஆபரணங்கள் ஒளி வீசிட சர்வலாங்காரங்களுடன் திகழ்பவள். 

பூரண சந்திரன் போன்று விளங்கும் எழில் முகத்தினள். பாதக்கமலங்களைப் பணிவோர் தம்,  பாதக மலங்களைத் தொலைப்பவள் ஸ்ரீ துர்க்கை!. 

பல்வேறு வகையான ஆயுதங்களுடன் விளங்கினாலும் அன்பர்களிடத்தில் தயவும் தாட்சண்யமும் கொண்டவள். தாய்மையின் பூரிப்பு பொலிந்து விளங்கிட - தாமரை போன்ற விழிகளால் அருள் பாலிப்பவள். 

தீமைகளை அழிக்கும் பொருட்டு - தீயவர்கள் நடுங்கும் வண்ணம் - சங்கு சக்கரம், வில் அம்பு, வாள் கேடயம், தாங்கி விளங்கினாலும் வரதமும்  அபயமும்  அருள்பவள். 


மகிஷாசுரனை வதைத்து மக்களுக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தவள். தன் பக்தர்களுக்கு  - தைரியம், நம்பிக்கை, சந்தோஷம் இவற்றோடு சகல செளபாக்கியங்களையும் அருள்பவள்.

அன்னை பராசக்தியின் ரூபலாவண்யங்கள் பலவற்றுள் ஒன்பது திருத் தோற்றங்கள் - நவசக்தி என புகழப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காத்யாயனி.

காத்யாயனர் என்ற முனிவர் - மேற்கொண்ட கடுந்தவத்திற்கு இரங்கி அவர் தம் செல்ல மகளாகத் தோன்றி வளர்ந்தனள் அம்பிகை. அதன் பொருட்டு எழுந்த -

காத்யாயனாய வித்மஹே 
கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்

- எனும் காயத்ரி,    மிக எளிதாக,  இனிதாக அன்னையின்  அருளைப் பெற்றுத் தரவல்லதாக விளங்குகின்றது.

தமிழகத்தில்  சங்க காலத்தில்,   கொற்றவை எனும் திருப்பெயரில் ஸ்ரீ துர்க்கை விளங்கியிருக்கின்றனள். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் தோற்றப் பொலிவு பலவிதமாக விவரிக்கப்படுகின்றது. 

நால்வகை நிலங்களுள் குறிஞ்சியும் முல்லையும் கொடும் வெயிலால் நிலை மாறி அடைந்த பாலை எனும் நிலத்தின் இறைவியாகப் போற்றப்படும் கொற்றவை  - பிறையினை அணிந்தவளாகவும் நெற்றிக் கண்ணை உடையவளாகவும் நஞ்சினை அருந்தியதால் கருநிறமான கழுத்தினை உடையவளாகவும் வில்லுடன் சூலத்தினை ஏந்தியவளாகவும் புலிப்பல் தாலியினை அணிந்தவளாகவும் மான் வாகனத்தினை உடையவளாகவும் குறிக்கப்படுகின்றாள்.

சோழ மன்னர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கியவள் ஸ்ரீதுர்கையே!..  

பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கை
கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக் கோயிலில் விளங்கும் ஸ்ரீ துர்கை - அருகில் உள்ள பழையாறையில் இருந்த சோழர் அரண்மனையில் திகழ்ந்தவள். 

மேலும் - கதிராமங்கலத்தில்  ஸ்ரீவனதுர்க்கையும், பட்டுக்கோட்டை பாலத்தளி ஸ்ரீ துர்க்கையும் , வேதாரண்யம்  ஸ்ரீ துர்க்கையும், திருஆரூர் திருக்கோயிலில் விளங்கும் எரிசினக்கொற்றவை எனும் ஸ்ரீ துர்க்கையும் சோழ மண்டலத்தில் பிரசித்தியான திருக்கோலங்கள்.


தஞ்சை மாநகரில்  - ஐயன் குளம்  எனப்படும் கமல புஷ்கரணிக் கரையில் கன்னியாகத் தோன்றி, ஈசனைக் குறித்து அம்பிகை தவம் இருந்த வேளையில் அவளுக்குக் காவலாக ஸ்ரீ துர்க்கையும் ஸ்ரீகாளியும் இருந்ததாக திருக்குறிப்பு உள்ளது. 

எனவே தான் மூன்று அம்சங்களுடன் அம்பிகை விளங்கிய தஞ்சையம்பதியில் கொங்கண சித்தர் சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். சித்தர் வழிபட்ட ஸ்ரீகொங்கணேஸ்வரர் திருக்கோயில்  மேலராஜவீதியில் உள்ளது.

மகிஷாசுரன் - நான்முகனிடமிருந்த வேத மந்திரங்களைத் தன் தவ வலிமையினால் கவர்ந்து கொண்டான். பின்,  ஸ்ரீதுர்கா -  மகிஷனுடன் போரிடுங்கால் -  அவனிடமிருந்த  வேதமந்திரங்களை முதலில் மீட்டு,   சர்வ மந்த்ர ஸ்வரூபினி எனும் திருப்பெயர் கொண்டாள். 


ஸ்ரீ துர்கா - ராகுவின் அதி தேவதை. ஆதலால் ஸ்ரீதுர்க்கையின் சந்நிதியில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் கன்னியர்கள் தீபமேற்றி வழிபடுவது விசேஷம். 

அம்பிகையிம் அருள் வடிவங்களைக் குறித்து அறிவதற்குத் தவமிருந்த மார்க்கண்டேய மகரிஷிக்கு - ஷைலபுத்ரி, ப்ரம்மசாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரி, மஹாகெளரி, ஸித்திப்ரதா - எனும் ஒன்பது திருவடிவங்களை, நான்முகன் -  விளக்கியதாக ஸ்ரீதேவி மகாத்மியம் புகல்கின்றது.

திருநாவுக்கரசர், திருநாகேஸ்வரம் (4/66) திருப்பதிகத்தில் ஸ்ரீ துர்க்கையை - மோடி எனப் பரவுகின்றார். 

திருஞானசம்பந்தப்பெருமான் (2/85) கோளறு திருப்பதிகத்தில் கலையதூர்தி என ஸ்ரீ துர்க்கையை குறிக்கின்றார்.
 

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துர பரிபுரை நாரணியாம்- என்பது திருமந்திரம் அருளிய திருமூலரின்  திருவாக்கு.

அருணகிரி நாதர் - திருப்புகழில் பல விதமாக ஸ்ரீ துர்கையைப் புகழ்கின்றார். முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் - மூலத்தானத்தினுள் திருமணக்கோலங் கொண்டு விளங்கும் திருமுருகனின் அருகில் விளங்குபவள் ஸ்ரீ துர்கையே!..

''..வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்  திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!..'' - என்று அபிராமிபட்டர் பரவுவது ஸ்ரீதுர்க்கையின் திருப்பாதங்களைத் தான்!...

இந்திரன் உள்ளிட்ட தேவர்குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!..

 தனக்கு, தான் விரும்பியபடி ஸ்ரீ கிருஷ்ணனுடன் திருமணம் நிகழும் போது, அந்தரி எனும் ஸ்ரீ துர்கை - கூறைப்புடவை அணிவித்து, மணமாலையைச் சூட்டினாள் - என்று  சூடிக் கொடுத்த சுடர்க்கொடி கோதை - விவரிக்கின்றாள். 

இன்றும்,  திருமணங்களில் மாப்பிள்ளையின் சகோதரி தானே - கூறைப் புடவையினை மணமகள் உடுத்தச் செய்து, மணமாலையினை அணிவித்து மணமேடைக்கு கூட்டி வருகின்றாள்.  


அந்த வகையில் - கண்ணனின் சகோதரி ஸ்ரீதுர்கையை , ஆண்டாள் நினைவு  கூர்கின்றாள். எனவே தான் -

''..செங்கண்மால் திருத்தங்கச்சியே!..''- என அபிராமி பட்டர் விளிக்கின்றார். அதனால் தான் -  

அண்ணன் தந்த சீதனமாக - அந்தரியின் திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் திகழ்கின்றன!.. 

சுந்தரி எந்தை துணைவி என்பாசத்தொடரை எல்லாம் 
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என்கருத்தனவே!..
                                                                    - அபிராமி அந்தாதி - 8

ஜய ஜய பாலா சாமுண்டீஸ்வரி!.. ஜய ஜய ஸ்ரீதேவி!..
ஜய ஜய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி!.. ஜயஜய ஸ்ரீ தேவி!..
ஜய ஜய ஜயந்தி மங்கல காளி!.. ஜயஜய ஸ்ரீதேவி!..
ஜய ஜய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி ஸ்ரீதுர்க்கா!..  

11 கருத்துகள்:

 1. அபிராமி அந்தாதி சிறப்பு பாடலுடன், ஸ்ரீதுர்கையின் சிறப்புகள் அனைத்தும் அருமை... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திரு. தனபாலன்!.. ஸ்ரீ துர்கை - இந்த புனிதமான நாளில் நம் எல்லாருக்கும் நல்லருள் பொழிவாளாக!..

   நீக்கு
 2. ஸ்ரீ துர்க்கையின் பெருமைகளை அழகாய் படம் பிடித்துக் காட்டி விட்டீர்களே!
  அபிராமி அந்தாதியுன் அழகிய பாடலுடன் நிறைவு சித பதிவு மனம் கவர்ந்தது.

  நன்றி பகிர்விற்கு,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி!.. ஸ்ரீ துர்கை - இந்த நல்ல நாளில் நம் எல்லாருக்கும் நல்லருள் பொழிவாளாக!...தாயே சரணம்!..

   நீக்கு
 3. அழகு என்பது எது என்பதற்கு நிலைத்திருப்பது எதுவோ அதுவே என்றான் ஆங்கில கவி கீட்ஸ்.

  அன்னை ஆதிபராசக்தி எனவும் துர்கை எனவும் பல் வேறு நாமங்களில் போற்றி மகிழும் அன்னையின் பால் நாம் கொண்ட பக்தி ஒன்றே
  நிரந்தரமாம்.

  அவ்வகையில் இறை பக்தி தனை முன்னிறுத்தி இடப்பட்ட
  இப்பதிவு மிகவும் சிறப்புடைத்து.


  சுப்பு தாத்தா.
  www.menakasury.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்..ஐயா!..தங்களின் மேலான வருகையும் அன்பான கருத்துரையும் என்னை உற்சாகப்படுத்துகின்றன!..பெரியோர் வாக்கு பெருமாள் வாக்கு!..தங்களின் ஆசிகள் என்னை மேம்படுத்தும்!..

  பதிலளிநீக்கு
 5. Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_27.html

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திரு. தனபாலன் அவர்களுக்கு என் நன்றிகள்!...

   நீக்கு
  2. அன்புடைய திரு.தனபாலன் அவர்களுக்கு என் நன்றிகள் என்றும் உரியன!.. மதிப்புக்குரிய அம்பாள் அடியாள் - எனது எழுத்துக்களைப் பார்க்கும் போது தோழி இராஜராஜேஸ்வரி அவர்களுடைய வலைத் தளம் நினைவிற்கு வருவதாக குறிப்பிட்டு அறிமுகம் செய்துள்ளார்கள்.. அதற்கேற்ப என் பொறுப்பு இன்னும் கூடுவதாக உணர்கின்றேன்.. வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பினையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!..

   நீக்கு
 6. வணக்கம் ஐயா .தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
  வைத்துள்ளேன் .முடிந்தால் வருகை தாருங்கள் .மிக்க நன்றி !
  http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_27.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. என்னையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் பொறுப்புகள் கூடுவதாக உணர்கின்றேன். எல்லாம் வல்ல சிவம் எல்லாருடனும் என்னையும் வழி நடத்துவதாக!...

   நீக்கு