நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 28, 2013

அம்மன் தரிசனம் - 02

வெற்றி!.. எங்கும் வெற்றி!.. எதிலும் வெற்றி!..

வெற்றி வேல்!.. வீர வேல்!..


செந்திற் கடற்கரையில் எழுந்த ஜயகோஷம் அண்ட பகிரண்டம் முழுதும் எதிரொலித்தது.!..

மூம்மூர்த்திகளும் கூடி நின்று  பூமாரி பொழிந்தனர்!..

சூரன் வீழ்ந்தான்.. அவனுடைய ஆணவம் அழிந்து அடங்கி ஒடுங்கி, 

''..முருகா சரணம்!. முதல்வா சரணம்!.'' - என - 

 தன் காலடியில் கிடந்த சூரபத்மனைப் பரிவுடன் நோக்கிய கந்தப் பெருமான், - ''..இனி எமது மயில் வாகனத்துள் இன்புற்றிருப்பாயாக!..'' - என தீந்தமிழால் மொழிந்தான். 

அவ்வண்ணமே - ஆகி - பெருவாழ்வு பெற்ற சூரன், இப்படியும் அப்படியுமாக நடை பழகி - தன் பசுந்தோகையை விரித்து ஆடியபடி - ஆறுமுகப்பெருமானை வலம் வந்து வணங்கினான்.

மயில் வாகனனாக ஆரோகணித்த எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினர் - மறுவாழ்வு பெற்ற தேவர்கள்.


சர்வம் சுப மங்களம்  - என்றிருந்தது பிரபஞ்சம் முழுதும். 

அந்த வேளையில், ஏகாந்தமாக இருந்த எம்பெருமான் - தனக்குள் சிந்தித்தான்.

சிவபக்தனாக தவமிருந்த சூரன் - சிந்தை கெட்டதால் சீரழிந்தான்!.. தந்தையின் ஆணைப்படி - அவன் கொண்ட ஆணவத்தை அழித்தாயிற்று!.. 

ஆயினும் ... ஆயினும் ...

மயிலோனின் மனம் அமைதி கொள்ளவில்லை. 

அம்மையப்பனைத் தரிசித்து, வலம் வந்து வணங்கி நின்றான். மகனின் உள்ளக் கிடக்கையைத் தெரிந்து கொண்ட சிவப்பரம் பொருள் - புன்னகை பூத்தது.

இது நிகழ்ந்தது - திருக்கயிலை மாமலையில் என்றால் -  அங்கே திருப்பாற் கடலில் அரவணையில் தூங்காமல் தூங்கிக் கிடக்கும் திருத்துழாய் மார்பன் - தானும் புன்னகை பூத்தான்!..

தம்பியர் எண்மருடன் வீரபாகு உடன் வர -  பூதப்படையும் சூழ்ந்து வர  , 

பூவுலகம் வந்தடைந்த முருகனை - வரவேற்பது போல பிரம்மாண்டமாகத் தழைத்து நின்றது - இலந்தை மரம்.

தல விருட்சம் - இலந்தை
இது வடக்கே, சத்ய யுகத்தில் நிகழ்ந்ததன் - பின் விளைவு!.. 

ஆதியில், இமாலயத்தில் கந்தமாதன பர்வதத்தின் அடிவாரத்தில் -  உயிர்கள் கடைத்தேறும் பொருட்டு ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளி ''ஓம் நமோ நாராயணாய!..'' எனும் திருமந்திரத்தை, மனுக்குலத்திற்கு உபதேசித்த போது  - அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி - இலந்தை மரமாகத் தோன்றி தழைத்துப் படர்ந்து நிழல் கொடுத்தாள்.

மஹாலக்ஷ்மியின் அம்சமே - முருகனின் - முன்நின்ற இலந்தை மரம்!..

நவ வீரர்களும் சூழ்ந்து நின்றனர். பூதப்படை அவர்களுக்கு அரணாக நின்றன. முருகன் தன் வேலினைக் கொண்டு ஒரு தடாகத்தை உண்டாக்கினான். சரவணப்பொய்கை எனப்பட்ட தீர்த்தத்தில் அனைவரும் நீராடினார்கள்.

ஒன்றிய மனத்துடன் கரங்குவித்து நின்ற செல்வக்குமரனின் முன் சுயம்பு லிங்கம் எழுந்தது. தாழ்ந்து பணிந்து வணங்கிய வள்ளல் பெருமான்  - தான் எண்ணி வந்த காரியத்தை ஈடேற்றத் தொடங்கினான்.


சில விநாடிகள் தான்!.. அங்கே நிலவிய அமைதி கெடும்படியாக - 

பெரும் ஓலத்துடன் ஆயிரம் ஆயிரமாக - அன்று போரில் மாண்டு அழிந்த அசுரர்களின் ஆவிகள் - முருகப் பெருமானைச் சூழ்ந்து கொண்டன. 

இதனை முன்பே உணர்ந்திருந்த வீரபாகு - பூதங்களுடன்  கூடி, ஆவிகளை எதிர்த்துப் போரிட்டார். அசுரர் - பாவிகளாக இருந்தபோதும் தொல்லை!.. ஆவிகளாக ஆன பின்னும் தொல்லை!..

சங்கல்பத்துடன்  - சிவபூஜையில் அமர்ந்திருந்த முருகன் தவித்தான். 

சிவபூஜையின் முதற்பொருளாக அமர்ந்திருந்த விநாயகர்  - வழிபாட்டினைத் தொடரும்படி அருளினார். இக்கட்டான சூழ்நிலை. நேரம் ஆக, ஆக - அசுர ஆவிகள் வெறிகொண்டு கொக்கரித்தன. கொட்டம் அடங்காமல் குதுகலித்தன.

செவ்வேள் முருகன் சிந்தித்தான். ''அன்னையே சரணம்!..'' - என வந்தித்தான்!.. 

இதைத்தானே - அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி எதிர்பார்த்திருந்தாள்...

வெகு நாளாயிற்று அவளும்  - இப்படி ஒரு வீர ஆவேசம் கொண்டு!... 

அண்ட பகிரண்டமும் அதிரும்படி ஆக்ரோஷமாக எழுந்தாள்!.. 

இட்ட அடியில் இடிபட்டு, எடுத்த அடியில் இற்று விழுந்தன தீவினைகள்!.. 

நாற்றிசையிலும் சதுரங்க தாண்டவமாடிய தயாபரி  - அந்த ஆகாயத்திலும் வியாபித்து நின்றாள். தப்பிப் பிழைக்க வழியின்றித் தவித்த - ஆவிகள் அன்னையின் அடித்தாமரையின் கீழ் சிக்கி அழிந்தொழிந்தன!..

அதன்பின், சிவபூஜையினை சிறப்புடன் நிறைவேற்றிய சிவகுமரனும் - சர்வ லோகங்களும்  வாழும் பொருட்டு தீர்த்தமும் திருநீறும் கொடுத்தான்.

ஆனந்தம் பாடி நின்றது - வானமும் வையமும்!..

சூரனுடன் பொருதுவதற்கு முன், புள்ளிருக்கு வேளூரில் சிவபூஜை புரிந்தான் செல்வமுத்துக் குமரன்.

சூரன் வீழ்ந்ததும்,  செந்தூரில் - சிவபூஜை புரிந்தான் சிவசக்தி புதல்வன்.

பின்னும் தன்னைச் சுற்றி நின்று தொல்லை கொடுத்த பிரம்மஹத்தி அகலவும் - அழியவும் - சிவகுருநாதன் சிவபூஜை புரிந்த திருத்தலம் தான் - 

கீழ் வேளூர்!.. 


இன்று கீவளூர் என்று மருவி வழங்கப்படுகின்றது. சாலை மற்றும் ரயில் வசதி அமையப் பெற்ற  கீவளூர் -  திருஆரூருக்கும் நாகைக்கும் இடையில் உள்ளது. 

இத்திருத்தலத்தில் - தம்பிக்குத் துணையிருந்த பிள்ளையார் - பத்ரி விநாயகர் என விளங்குகின்றார்.

அருள்தரும் கேடிலியப்பர்
ஈசனின் திருப்பெயர்- கேடிலியப்பர். எம்பெருமானை வணங்கி நிற்க -

நமக்கு - எந்தக் கேடுகளும் இல்லை!.. இல்லை!.. இல்லவே இல்லை!..

உடனமர்ந்து அருளும் அம்பிகையின் திருப்பெயர் - வனமுலைநாயகி.

சுவாமி - அக்ஷயலிங்கேஸ்வரர் எனவும் வழங்கப்படுகின்றார். க்ஷயம்  - என்றால் தேய்வு, அழிவு எனும் அர்த்தம். அக்ஷயம் - எனில் அழிவிலாதது. ஆக, அடைக்கலம் என அண்டி நின்றவர் தேய்தல் இன்றி - தினமும் வளர் நிலவென வாழ்ந்து வளம் பெறுவர் என்பது - திருக்குறிப்பு.

ஒரு ரகசியம் சொல்லவா - உங்களுக்கு!.. 

கேடிலியப்பர் சந்நிதியில் சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தால் - உங்களின் முற்பிறவி உங்களுக்கு உணர்த்தப்படும்!..

அடியேன்,  அவ்வண்ணம் - உணர்ந்துள்ளேன்!..

வனமுலை நாயகி  - சுந்தரகுஜாம்பிகை எனும் திவ்யநாமத்துடன் திருவருள் பொழியும் திருத்தலம்.

சிவபூஜை செய்த தலம் ஆதலின், இங்கே முருகன் -  தேவியர் இன்றி தவக் கோலத்தில் வடக்கு நோக்கி விளங்குகின்றான்.

மஹாலக்ஷ்மி  - இங்கு இலந்தை மரமாக விளங்குவதனால் - வடதிசைக்கு அதிபதியான குபேரன் இத்தலத்திலேயே நித்ய வாசம் செய்கின்றான்!.. (அது போதாதா... நமக்கு!..)

அகத்தியர் வழிபட்டு எம்பெருமானின் திருநடனங்கண்டு ஆனந்தித்து - பெருமானின் வலது பாத தரிசனம் பெற்ற திருத்தலம்.

நான்முகனும் சூரியனும் சந்திரனும் அக்னியும் ஆதிசேஷனும் வணங்கி இன்புற்ற திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் - என சிறப்புற்ற திருத்தலம்.


திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப் பெருமானும் - திருப்பதிகம் பாடி வழிபட்ட திருத்தலம். திருக்கோயில் கோச்செங்கணான் எழுப்பிய மாடக்கோயில்.

இத்தனை பெருமைகளுக்கும் சிகரம் வைத்தாற்போல - 

தன் செல்வ மகனின் வழிபாட்டினைக் காக்கும் பொருட்டு -  கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு எனும் நாற்புறத்துடன் ஆகாயம் என - ஐந்து புறத்திலும் வட்டமிட்டு ஆடி  - வன்பகையைக் கெடுத்தாளே!.. - அன்னை!.. பராசக்தி!..

அவள் தான் இங்கு பெருஞ்சிறப்பு!.. இத்தலத்தில் அவளுடைய திருப்பெயர் - 

அஞ்சுவட்டத்தம்மன்!.. 


அச்சம் தீர்ப்பவள்!.. ஆனந்தம் சேர்ப்பவள்!..
எச்சமயம் ஆயினும் இன்னலைத் தேய்ப்பவள்!..
அல்லலைத் தீய்ப்பவள்!.. வன்பகை மாய்ப்பவள்!..
சஞ்சலம் சாய்ப்பவள்!.. அருள் கொண்டு பார்ப்பவள்!..

அன்னையின் பெருமை அளவிடற்கரியது!.. ஆற்றாது அழுத, கண்ணீரைத் துடைக்கும் அன்பு வடிவினளாக திருக்கோலம் கொண்டு, திருக்கோயிலின் வெளித் திருச்சுற்றில், வடக்கு நோக்கி சந்நிதி கொண்டு விளங்குகின்றனள்.

சிந்திப்போர் மனதில் சீர் கொண்டு விளங்குவாள்!.. 
வந்திப்போர் மனதில் வான் சுடராய் துலங்குவாள்!..

ஊன்றிய திரிசூலம் - உளங்கெட்ட வீணருக்கே!.. விழிகளில் -
தெறிக்கும் தீக்கனல் குணங்கெட்ட ஈனருக்கே!..

தாயே!.. சரணம்!.. - எனத் தாள் பணியும் 
அன்பருக்குத் தண்ணிலவு அவள்!..
துணை வேண்டும் தூயவர்க்குத் துணையாகி
வழிகாட்டும் வெண்ணிலவு அவள்!..

அவளைப் பணிமின் கண்டீர்!.. 
அமராவதி ஆளுகைக்கே!..

10 கருத்துகள்:

  1. இந்தக் கோவில் நான் கேள்விப்பட்டது இல்லை.
    நீங்கள் சொல்லியிருக்கும் ரகசியம் அங்கு போகஸ் சொல்லி தூண்டுகிறது.

    மாயப் பிறப்பறுக்கும் கோவில் பற்றியும் எழுதுங்கள் .
    அதை முதலில் தரிசிக்க வேண்டும்.

    நல்ல தொரு பகிர்விற்கு வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் .. சகோதரி!.. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!..காலம் நேரம் கூடி வரும் போது நீங்கள் அங்கே கண்டிப்பாக செல்வீர்கள்!..உண்மை அறிவீர்கள்!..

      நீக்கு
  2. தாயின் பெருமை,தந்தையின் பெருமை,தனயன் பெருமை ,தலத்தின் தல வ்ருக்ஷத்தின் மகிமை

    தாக்ஷாயினியின் தரிசனம் கண் முன்னே --தங்கள் எழுத்தின் வண்ணம்.மயிலின் ஆட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!. வணக்கம்.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. அம்மன் தரிசனத்தைக் கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள் அய்யா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. ஜெயக்குமார் அவர்களுக்கு, தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் என் நன்றிகள்!..

      நீக்கு
  4. ரகசியம் அறிந்து கொள்ள உட்பட சிறப்பான கோவிலுக்கு செல்ல வேண்டும்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் திரு. தனபாலன் அவர்களுக்கு என் நன்றிகள் என்றென்றும் உரியன!..

      நீக்கு

  5. என் பூவையின் எண்ணங்கள் தளத்துக்கு முதன் முறையாக வந்து கருத்திட்டதற்கு நன்றி. உங்களைத் தேடி இத்தளம் வந்தேன்.தஞ்சை கும்பகோணம் சுற்று வட்டத்தில் இருக்கும் பல கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டுமாலயப் பயணம் மேற்கொள்ளும்போதும் இதுவரைக் காணாத கோயில்களுக்குச் சென்று தரிசிப்பது வழக்கம். இந்த முறை திட்டக்குடி வசிஷ்டேஸ்வரர் ஆலயம் சென்றோம். கீவளூர் கேடிலியப்பர் இதுவரை தரிசிக்கவில்லை. பிராப்தம் இருந்தால் அடுத்த ஆண்டு தரிசிப்போம். முற்பிறவி உணர்த்தப்படும் எனும் ரகசியம் வெளியிட்டு இருக்கிறீர்கள். தெரிந்து என்ன பயன் என்று எண்ணத் தோன்றுகிறது. என்னுடைய இன்னொரு தளத்தில்தான் நான் ரெகுலராக எழுதி வருகிறேன். நேரம் இருந்தால் வருகை தாருங்கள்.gmbat1649.blogspot.in உங்கள் பதிவுகள் எல்லாமே ஆன்மீகப் பதிவுகளா. ?என் பதிவுகள் சிலவற்றைத் தருகிறேன் நீங்கள் ரசிக்கலாம்
    “ எனக்கென்ன செய்தாய்” gmbat1649.blogspot.in/2012/02/blog-post_03.html
    " முருகா, எனக்கு உன்னை பிடிக்கும்” gmbat1649.blogspot.in/2011/03/blog-post_14.html நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. எனைத் தேடி வந்தேன் என்று சொல்லும் போது மனம் நெகிழ்கின்றது. தங்களை நெஞ்சார வணங்கி வரவேற்கின்றேன்!..திரு.ஹரணி அவர்கள் தனது வலைப்பதிவில் தங்களுடைய தஞ்சை வருகையினைப் பற்றி எழுதியிருந்தார். அப்போதுதான் தங்களைப் பற்றி அறிந்தேன். இப்போது நமது வலைத்தளத்திலும் வந்து கருத்துரை வழங்கியமை என்னைப் பெருமைப் படுத்துகின்றது. முற்பிறவி உணர்த்தப்படுவதனால் நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம். இது எனது தாழ்மையான எண்ணம் . அதுவும் தவமுடையார்க்கே ஆகும்!. ஐயா!..தாங்கள் மீண்டும் மீண்டும் வருகை தந்து எம்மை வழி நடத்தவேண்டும்.. நன்றி ஐயா!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..