நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 17, 2022

மாசி மகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி மாதத்தின்
ஐந்தாம் நாள்..
வியாழக் கிழமை..
மக நட்சத்திரம் கூடிய
நன்னாள்..
மாசி மகம் எனப்படும்
பொன்னாள்..


திருக்கயிலாய மாமலை!..

அதன் அடிவாரத்தில், அன்ன வாகனத்தில் - வந்து இறங்கினார் நான்முகன்..

ஆங்கே கம்பீரமாக சேவை சாதித்துக் கொண்டிருந்தார் அதிகார நந்தி..

முதல் தரிசனம்!..

நந்தியம்பெருமானைச் சேவித்துக் கொண்டார்..

" நந்திகேசன் வாழ்க!.. அனைவரும் நலந்தானே!.. "

நந்தியம்பெருமானை வாழ்த்தி வணங்கினார் நான்முகன்..

" அண்டசராசங்களின் சகல உயிர்களையும் படைத்தருளும் பிரம்மதேவராகிய தாங்கள் இருக்கையில் நலங்களுக்குக் குறைவு தான் ஏது!.. அன்னை கலைவாணியின் அன்பு மணாளனாகிய தங்கள் மலரடிகளுக்கு எளியேனின் வணக்கம்!.. "
- என்றபடி, நந்தியம்பெருமானும் வணக்கம் தெரிவித்தார்..

" நந்திகேசா!.. அம்மையப்பனைத் தரிசிக்க வந்துள்ளேன்.. ஆதரவான சமயம் எது என்று  - அதிகார மூர்த்தியாகிய தாம் அறிவிக்க வேண்டும்!.. "

நான்முகன் விண்ணப்பம் செய்து கொண்டார்..

" மும்மூர்த்திகளுள் முதல் மூர்த்தியாகிய  தங்களுக்குத் தடையும் உண்டா!.. "

" ஆனாலும், ஒவ்வொரு சமயம் நான் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்கிறேன். இத்தனை தவம் இருந்தும் என்ன புண்ணியம்?.. இன்னும் கோஷ்டத்தில் தான் குடியிருப்பு!.. என் பிழையினால் - எனக்கென்று ஒரு கோயில் கூட இல்லாமல் போனது!..''

நான்முகப் ப்ரம்மனின் நாலிரண்டு விழிகளும் - கலங்கின..

தர்மத்தின் தலைவன் ஆகிய நந்தியம் பெருமான் நான்முகனைத் தேற்றினார்.

" ஸ்வாமி!.. கலங்க வேண்டாம். மாற்றத்திற்கான வேளை வந்துவிட்டது.   தங்களுக்காக ஐயனும் அம்பிகையும் காத்துக் கொண்டிருக்கின்றனர்!.. ' - என, ஆறுதல் கூறி மீண்டும் நான்முகனை வணங்கினார் நந்தியம்பெருமான்..

" நல்லது நந்தி!. உன் வாக்கு மெய்யாகட்டும்!.. " - என்றபடி திருமாமணி மண்டபம் சென்று, அம்மையப்பனை வலம் செய்து வணங்கி நின்றார் நான்முகன்.

அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு மனம் நிறைவாக இருந்தது.

மாமயில்கள் மகிழ்ச்சியுடன் தோகை விரித்து ஆடுதற்கு ஏற்றாற்போல
குயில்களும் கிளிகளும் பண்பாடிக் கொண்டிருந்தன..

" வடமொழியும் தென்தமிழும் ஆயினான் காண்!.. "

- என, மாமுனிவர்கள் எழுவரும் தமிழிசை மலர் கொண்டு  ஈசனைப் போற்றி இசைத்தனர்..

கந்தர்வர்கள்,  வித்யாதரர்கள், கின்னரர்கள், நாகர்கள், யட்சர்கள் - அனைவரும் பஞ்ச வாத்யங்களை இசைத்துக் கொண்டிருந்தனர்..

அழகிற் சிறந்த தேவகன்னியர்கள் அனைவரும் - ஆடவல்லான் திருச்சந்நிதி முன்பாக நடனம் பயின்று கொண்டிருந்தனர்..   

ஆடல் பாடல் கோலாகலங்களுடன் - கலைமகளின் திருக்கரங்களில் திகழ்ந்த கச்சபி எனும் வீணையிலிருந்து நாதமும் தவழ்ந்து கொண்டிருந்தது..

நான்முகன் விழிகளாலேயே நாமகளை நலம் விசாரித்துக் கொண்டார்..

அவ்வேளையில் -
ஸ்ரீ ஹரிபரந்தாமனும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் - திருக்கயிலாய மாமலைக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார்..

மங்கலம் பொலிந்து விளங்கிய வேளையில் -

" நான்முகனே!.. நீரால் உலகம் நிலைப்பட இருக்கின்றது. இவ்வேளையில், அனைத்துக்கும் ஆதாரமாக மண் கொண்டு ஒரு கும்பம் அமைப்பாயாக!.. "

- என, அடுத்து ஆகவேண்டியவற்றை விவரித்தருளினார் -  எம்பெருமான்..

அதன்படியே இமைப்பொழுதில் கும்பம் தயாரானது. அதனுள், ஐயனும் அம்பிகையும் வேதமந்த்ர கோஷங்கள் முழங்க அமிர்தத்தை நிரப்பினர்..

திருக்கயிலாய மாமலையே
யாக சாலை ஆனது!..

அக்னி தானாகவே மூண்டெழுந்து வளர்ந்தது..

வைர வைடூர்யங்களும், தங்கம் வெள்ளி நவதான்யங்களும் -
தாமாகவே சென்று அமிர்தத்துடன் கலந்தன.

கும்பத்தில் நூல் சுற்றி தர்ப்பை, மாவிலைகளைச் செருகி சிகரமாக தேங்காய் வைத்தார் நான்முகன்..

" எல்லாம் சரி.. பிள்ளையார் எங்கே!?.. " - அனைவரும் தேடினர்..

அங்கும் இங்குமாக திருக்குமரனுடன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார் பிள்ளையார்..

அவரைப் பிடித்து ஓரிடத்தில் அமர வைத்து அவர் முன்பாக கும்பத்தினை வைத்து,

" அப்போதைக்கு இப்போதே!.."  - என, வணங்கிக் கொண்டார் நான்முகன்..

மந்த்ரம், கிரியை, த்யானம் - என்பனவற்றுடன் யாகத்தீயின் சுடர் வலஞ்சுழித்து எழுந்தது..

வேத ஆகம பாராயண ஒலிகளுடன்  - அங்கே கூடிய முப்பத்து முக்கோடி தேவர்களுடைய நல் எண்ணங்களும் கும்பத்தினுள் ஐக்கியமாகின..

அம்மையப்பன் திருமேனியில் இருந்து அருட் பெருஞ் ஜோதியாக - திருவருள் வெளிப்பட்டு கும்பத்தில் நிலைத்தது..

கோடி சூர்ய ப்ரகாசத்துடன் சிவஸ்வரூபமாகத் திகழ்ந்தது - கும்பம்..

" ஹரஹர மகாதேவ!.. "

அங்கிருந்த அனைவரும் கும்பத்தின் முன் விழுந்து வணங்கினர்..

" நான்முகனே!.. கும்பத்தினை மேருமலையின் உச்சியில் நிறுவுக!.. ஊழிப் பிரளயத்தின் போது - நீரில் மிதக்கும் கும்பம் எங்கே கரை சேர்கின்றதோ அங்கே தவம் மேற்கொள்வாயாக!.. "

- ஈசன் எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்..

" உத்தரவு!.." 

நான்முகன் பணிவுடன் கும்பத்தை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டார்..

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்..

சிவ கணங்கள் வெண்கொற்றக் குடையை விரித்துப் பிடித்தன.. வெண் சாமரம் கொண்டு வீசின.. வெண்சங்கினை விளித்துப் பஞ்ச வாத்யங்களை முழக்கின..

வாயு நறுந்தென்றலாக வீசிட - வருணன் எங்கும் பன்னீர் தெளித்து நின்றான்..

சூரியனும் சந்திரனும் அக்னியும் சுடர் ஏந்தி முன் செல்ல -
அரம்பையர் ஆடியும் பாடியும் கொண்டாடிக் களித்தனர்..

" ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!.. "

ஐந்தெழுத்து மந்த்ர கோஷத்துடன் மேருமலையின் உச்சியில் கும்பம் நிறுவப்பட்டது..

அனைத்தும் நலமாய் நடந்தன..

அடுத்த சில விநாடிகளில் ஊழிப் பிரளயம்..

அண்டப் பெருவெளி எங்கும் நீர்..

பூவுலகம் நீரால் சுத்திகரிக்கப்பட்டது.. பொங்கிப் பெருகிய நீர் மேருமலையின் உச்சியைத் தொட,  அங்கே நிறுவப் பட்டிருந்த அமுத கும்பம் மிதந்தது..

அப்படி மிதந்த கும்பம் தென் திசையை அடைவதற்கும் வெள்ளம் வடிவதற்கும் சரியாக இருந்தது..

ஊழிப் பெருவெள்ளம் பெருகி ஓடிப் பிரவகித்த வேளையில் -
எல்லா உயிர்களும் ஈசனின் திருமேனியில் ஒன்றி உடனாகின..
கங்காள மூர்த்தியாய் நல்வீணை வாசித்துக் கொண்டிருந்தார் எம்பெருமான்..
அவரது காலடியில் நந்திகேசன்..

ஏகாந்தமான அவ்வேளையில்,
ஈசன் திருமேனியில் இருந்து அமுத கலைகளுடன் அம்பிகை வெளிப்பட்டாள்..

எம்பெருமானை வலம் செய்து வணங்கினாள்.. ஐயனை ஆரத்தழுவி ஒன்றி உடனானாள்..

ஈசனின் திருவடியில் காத்திருந்த நந்தியம்பெருமான் அம்மையப்பனைத் தாங்கிக் கொண்டு இன்புற்றார்..


அம்மையும் அப்பனும் ஆடிக் களித்தனர்..
" அண்டமெல்லாம் வாழ்க!.."  - எனக் கூடிக் களித்தனர்..

ஊழியில் ஒடுங்கி  - இறைவனுள் ஒன்றியிருந்த எல்லாமும் மீண்டும் புதிதாய் தோற்றுவிக்கப்பட்டன..

ஈசனின் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட நான்முகன் அம்மையப்பனை வலஞ் செய்து வணங்கினார்..

ஸ்ருஷ்டியைத் தொடங்க உத்தரவு பெற்றுக் கொண்டு - பூர்வ நினைவுடன் தென் திசையினை நோக்கி விரைந்து அங்கே கும்பத்தைக் கண்டு தொழுதார்..

அங்கே - அவருக்கு முன் விநாயகப்பெருமான் தியானத்தில் வீற்றிருந்தார்..

அமைதி.. எங்கும் பேரமைதி..

அவ்வேளையில் -
அம்மையும் அப்பனும் வேடுவராக வடிவங் கொண்டு ஆங்கே எழுந்தருளினர்..


பினாகம் எனும் தன்னுடைய வில்லில்  கணை தொடுத்து  எய்தார் - ஈசன்..


விவரிக்க இயலாத படிக்கு பெருஞ்சத்தம்...

பிரபஞ்சம் எங்கும் பேரொளிப் பிழம்பு.. 

ஈசனின் பாணத்தினால் தாக்குண்ட கும்பம் சிதைந்தது..

கும்பத்தின் பவித்ர நூல், சந்தனம், வில்வம், மலர்ச்சரம், மாவிலை, தேங்காய் - என, பொருட்கள் அனைத்தும் நாலாபுறமும் சிதறின..

கும்பம் சிதறியதால் அதிலிருந்த அமுதம் வழிந்தது..

வழிந்து பரவிய அமுதம் ஓரிடத்தில் தேங்கி நின்றது..

வேடுவத் திருக் கோலத்தில் இருந்த எம்பெருமான் -
அமுதம் கலந்து இருந்த மண்ணைத் தாமே -
தன் திருக்கரத்தினால் குழைத்தார்..

அது - உருவமா அருவமா!.. 

சிவசக்திக்கு அன்றி, விண்ணவர் மண்ணவர் - என, எவராலும் விவரிக்க இயலாத ஒன்றாக விளங்கியது!..


இறைவனும் இறைவியும் ஜோதியாய் அதனுட் கலந்தனர்..

பின்னும் அம்பிகை தான் மட்டும் அதனுள்ளிருந்து வெளிப்பட்டாள்..


கிழக்கு முகமாக - சர்வ மங்கலங்களுக்கும் ஆதாரமாக நின்றாள்..

அப்போது - அவள் திருமேனியிலிருந்து 36,000 கோடி வேதமந்த்ரங்கள் வெளிப்பட்டன..

அதனை உணர்ந்து கொண்ட மாமுனிவர்கள்,

ஓம் மந்த்ரபீடேஸ்வர்யை போற்றி!..
ஓம் மங்களேஸ்வர்யை போற்றி!..
ஓம் மங்களநாயகியே போற்றி!..
ஓம் மங்களாம்பிகையே போற்றி.. போற்றி!..
- என, அம்பிகையைப் போற்றித் துதித்தனர்..


நான்முகனே!.. இனி, நீ ஸ்ருஷ்டியைத் தொடங்கலாம்!.. - என அம்மையும் அப்பனும் அருளாசி வழங்கினர்..

அம்மையப்பனின் நல்லாசிகளைத் தலை மேற்கொண்டு  - 

நீண்டு உயர்ந்து  நெடும் பாணத்துடன் ஜோதி மயமாக நின்ற சிவலிங்கத்தை -
ஸ்வர்ண புஷ்பங்களால் அர்ச்சித்தார் பிரம்மன்..

ஓம் கும்பேஸ்வராய நம:
ஓம் மங்களாம்பிகாயை நம:

நான்முகன் செய்த அர்ச்சனை நாதம் எட்டுத் திக்கிலும் பரவியது..

அன்று தொட்டு அந்த அர்ச்சனை - இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது..


இறைவன்
ஸ்ரீ கும்பேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை

தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - மகாமகத் திருக்குளம்..
***

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் - திருக்குடமூக்கு, குடந்தைக் காரோணம் எனப் புகழ்கின்றனர்..

திருமங்கையாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் - திருக்குடந்தை எனப் போற்றுகின்றனர்..

இன்றுவரை மங்காப் புகழுடன் விளங்குவது - திருக்குடந்தை..

திருக்குடந்தையைச் சூழ்ந்து - சகல தேவ சந்நிதானங்கள் விளங்குகின்றன..

அன்று - நந்தியம்பெருமான் கூறியபடி, நான்முக பிரம்மனுக்கு திருக்கோயில் விளங்குவதும் - திருக்குடந்தையில் தான்!..

இங்கு பல திருக் கோயில்கள் விளங்கினாலும் ஸ்ரீகும்பேஸ்வரர் தான் பிரதான மூர்த்தி!..

இதில் அமுதம் திரண்டு நின்ற மகாமகத் திருக்குளத்தில் - நதி மங்கையர் ஒன்பது பேரும் நீராடி புனிதம் பெற்றதாக - புராணம்.

உலகோர் விடுத்த பாவங்களைச் சுமந்து களைத்த, நதிக் கன்னியரின் வேதனைகள் தீர - காசியிலிருந்து விஸ்வநாதப் பெருமானே அவர்களை அழைத்து வந்து, மகாமக தீர்த்தத்தில் நீராடச் செய்தார் என்பது ஐதீகம்.

அந்த நாளே பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் - சூரியன் கும்பராசியிலும் தேவகுருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் விளங்க மக நட்சத்திரமும்  நிறைநிலவும் கூடிய மகாமகம் எனப்படும் நன்நாள்..

பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் கடந்த மன்மத வருடம் மாசி மாதம் பத்தாம் நாள் திங்கட் கிழமையன்று (22/2/2016)  நிகழ்ந்தது..

திருக்குடந்தை இன்று வரை சிறப்புடன் திகழ்கின்றது.. 
இனியும் திகழும்..

நீரினால் சிறப்புற்றது சோழ மண்டலம்..
இந்த சோழ மண்டலத்தினுள் 
நீர் கொண்டு நிகழும் பெருவிழா - மகாமகம்!..

நில்லாது ஓடும் நீர் போன்றது - வாழ்க்கை!..
இவ்வுலக வாழ்வில் நமது வாழ்க்கை
அகம் புறம் எனப் பேசப்படுகின்றது..

புறந்தூய்மை நீரால் அமைவதைப்போல - 
அகந்தூய்மையும் நீரால் அமையட்டும்!.. 

தமிழகத்தின் தீர்த்தங்கள் எல்லாம் இன்றைய நாளில்
மாசிமகத் தீர்த்தம் தான்..

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே!.. - என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு..

தீர்த்தங்களில் புனித நீராடிக் கரையேறுவோம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

15 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு. அழகிய பிரமிக்க வைக்கும் வர்ணனைகள். என் அக்கா மக நட்சத்திரம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சிறப்பான பதிவு. மக நக்ஷத்திரத்தின் அருமை, பெருமைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. மகா மகம் பற்றியும் கொடுத்திருக்கும் தகவல்கள் பயனுள்ளது. அழகான தமிழில் இனிமையான நடை. அனைவருக்கும் நலமே விளையட்டும். கும்பகோணத்தின் வரலாறு ஏற்கெனவே அறிந்திருந்தாலும் தங்கள் தமிழ் நடையில் படிக்கக் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியக்கா..

      நீக்கு
  3. நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு. மாசி மகம் பற்றிய எனானுடைய பதிவின் சுட்டி http://thambattam.blogspot.com/2018/02/blog-post_52.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான பதிவு. மாசி மகம் குறித்த தகவல்கள் நன்று. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      எங்கும் நல்லதே நடக்கட்டும்.
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. தகவல்கள் நன்று ஜி வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  6. உங்களின் அழகான விவரிப்பில் சிறப்பான தகவல்களுடனான பதிவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  7. பிரமன் கோயில் தொடர்பாக ஒரு செய்தி : இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலும், தமிழகத்தில் கும்பகோணத்திலும் பிரம்மனுக்கு கோயில் உள்ளதாகக் கூறுவர். கும்பகோணத்தில் உள்ள முக்கியமான வைணவக் கோயில்களில் பிரமன் கோயில் என்றழைக்கப்படும் வேதநாராயணப்பெருமாள் கோயிலும் ஒன்றாகும்.இக்கோயிலில் உள்ள மூலவர் வேதநாராயணப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். பிரகாரத்தில் வேதவல்லி தாயார் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் வலப்புறம் உள்ள சன்னதியில் பிரம்மா உள்ளார்.///இக்கோயிலைப் பற்றி கும்பகோணம் பிரம்மன் கோயில் என்ற தலைப்பில் விக்கிப்பீடியாவில் 2014இல் ஒரு கட்டுரை ஆரம்பித்து, அதில் நான் எடுத்த கோயிலின் நுழைவாயில் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    கும்பகோணம் ஸ்ரீ பிரம்மன் கோயில் பற்றிய விரிவான செய்திகளை அறிந்தேன்.. வாய்ப்பு கிடைக்கும் போது தரிசிக்க வேண்டும்..

    மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..