நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 28, 2022

தரிசனம் 9

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

பாடகச்சேரி சுவாமிகள்..

மனிதர்கள் மட்டுமன்றி சாதாரண விலங்குகளிடத்திலும் அன்பைக் காட்டியவர்.. அந்நாட்களில் சிதிலமுற்றிருந்த பல ஆலயங்களை திருப்பணி செய்து வைத்தவர்..
அப்படியானால் அவரிடத்தில் பெரும் பொருட் செல்வம் இருந்திருக்க வேண்டுமே!..

அப்படியெல்லாம் எதுவும் இல்லை..
திரு அருட் செல்வராகிய ஸ்வாமிகள் - தமது
கழுத்தில் பித்தளைச் செம்பினைக் கட்டிக் கொண்டு
தெருத் தெருவாகச் சென்று யாசகம் ஏற்று அதனைக் கொண்டு திருப்பணிகளை நடத்தியவர்.. தர்மம் செய்தோர் அனைவருக்கும் புண்ணியத்தை சேர்த்தவர்..

யோகங்கள் பலவற்றையும் கற்றவர்.  பலருடைய பிணிகளைத் துரத்தியவர்.. அகாலத்தில் இறந்தவர்களை உயிர்ப்பித்துக் கொடுத்தவர்..

ஸ்வாமிகளின் திரு அவதாரம் நிகழ்ந்தது 146 ஆண்டுகளுக்கு முன்.. யுவ/ தாது வருடம் (1876) என்று அறியப்படுகின்றது..
கொங்கு  மண்டலத்தின் மஞ்சப் பாளையம் கிராமத்தில் ஸ்வாமிகள் தோன்றினார்.. 
கந்தஸ்வாமி - அர்த்தநாரி அம்மையார் எனும் புண்ணியர்களே ஸ்வாமிகளின் அருட்தந்தை தாய் ஆவர்..

இளம் வயதிலேயே தாய் தந்தையர் இறைவனடி சேர்ந்து விட்டனர்.. சிறு வயதில் துறவறம் மேற்கொண்ட ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்தின் பாடகச்சேரி கிராமத்துக்கு வந்த போது அவருக்கு வயது பன்னிரண்டு.. அவ்வூர் நிலக்கிழாரிடம் மாடு மேய்க்கும் வேலையை ஏற்றுக் கொண்ட போது பற்பல சித்திகளை அடைந்தார்..

கர்நாடகத்தை சேர்ந்த 
மகாயோகி எரிதாதா சுவாமிகள் எனப்பட்ட மகான் தமது சீடராக இவரை அனுகிரகித்தார்.. நேபாள சுவாமிகள் என்றழைக்கப்பட்ட ராஜாராம் ஸ்வாமிகளிடமும் பக்தி கொண்டவர்.. இவ்வேளையில் அருட் பிரகாச வள்ளலார் ஸ்வாமிகள்  அருவமாக பாடகச்சேரிக்கு வந்து ஸ்வாமிகளை ஆட்கொண்டதாக வரலாறு..

அதன்பின்,
ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சியளிப்பது, தன் உடலை மறைத்து விட்டு ஆகாய வழியில் செல்வது, தன் உடலைத் தானே பிரித்துப் போடுவது ( நவ கண்டம்), தொடுவதினாலும் விபூதி கொடுப்பதினாலும் பிறரது நோயைத் தீர்ப்பது, அகாலத்தில் இறந்தோரை உயிர்ப்பிப்பது - என, பாடகச்சேரி ஸ்வாமிகளின் அருட்பணி தொடர்ந்தது..

பாடகச்சேரியில் பல காலம் இருந்த ஸ்வாமிகள் - தஞ்சை ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் மற்றும் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் களுக்குத் திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்து வைத்திருக்கின்றார்.. தஞ்சை கரந்தை வடவாற்றின் கரையில் அன்பர் ஒருவரது இல்லத்திலும் சில காலம் தங்கி அருள் செய்திருக்கின்றார்..

தஞ்சை
மாரியம்மன்கோயிலில்
தஞ்சை ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையார் மற்றும் புன்னை நல்லூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்களில் ஸ்வாமிகளின் சுதை திருமேனிகள் விளங்குகின்றன..
குடந்தை ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில் ராஜ கோபுரத் திருப்பணியும் (1920) ஸ்வாமிகளுடையதே.. ராஜ கோபுரத்தின் முதல் தளத்தின் மத்தியில் ஸ்வாமிகளின் சுதை திருமேனி திகழ்கின்றது..

ஸ்ரீ பைரவ உபாசனை என்று ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான நாய்களுக்கு அன்னம் அளிப்பது ஸ்வாமிகளின் சிறப்புகளில் ஒன்று..

இலைகளில் பல வகையான பதார்த்தங்களுடன் அன்னத்தை இட்டு - கை தட்டி அழைத்ததும் மின்னல் வேகத்தில் அத்தனை நாய்களும் அந்த இடத்தில் தோன்றி இலையின் முன் அமர்ந்து அமைதியாகச் சாப்பிட்டு விட்டு வந்த வேகத்தில்  மறைந்து விடும் என்கின்ற குறிப்புகளும் உள்ளன..

தவிரவும்,
சென்ற நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தாது (1936/37) வருடப் பஞ்சத்தின் போது இரண்டு முறை - ஒரே நாளில் இலட்சம் பேருக்கு மேல் அன்னதானம் செய்வித்திருக்கின்றார் ஸ்வாமிகள்..

கும்பகோணத்தில் முத்துப்பிள்ளை மண்டபம் என்னும் இடத்தில் திருமடம் ஒன்றை உருவாக்கி அங்கே ஏழைகளுக்காக கூழ்சாலை அமைத்து எளியவர்களின் பசிப்பிணி நீக்கியருளினார்..

விஷூ வருடம் (1942) ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தன்று திரு ஒற்றியூரில்  ஸ்வாமிகள் முக்தி எய்தினார்கள்..

ஆனாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தின் திருமடத்தில் ஸ்வாமிகள்  தாமே உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவனுடன் இருப்பதாக - ஸ்வாமிகளே அருளிச் செய்ததாக அன்பர்கள் நம்புகின்றனர்..

அன்பும் இரக்கமும் கொண்ட நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்..

பாடகச்சேரி கிராமம் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் ஆலங்குடிக்கு 2 கி.மீ முன்னதாக கிழக்காகப் பிரியும் சாலையில் உட்புறம் 2. கி.மீ தொலைவில் வெட்டாற்றின் கரையில் உள்ளது..

கடந்த 18/2 அன்று பாடகச்சேரி திருமடத்திற்குச் சென்றிருந்தேன்..  இருபது ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது..


அன்னதானக் கூடம்


திருமடத்தின் முகப்பு

திருமடத்தின் எதிரில் திருக்குளம்

வெட்டாறு

அங்கு சென்றதும் ஓடி வந்து நம்மை வரவேற்பவர்கள் ஸ்ரீ ஸ்வாமிகளின் அன்புக்குரிய செல்லக்குட்டிகள்.

ஓம் ஸ்ரீ பாடகச்சேரி மகான் திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான வரலாறு.  இவரைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   ஒருமுறை இங்கு வந்து தரிசனம் செய்யுங்கள்.

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அரிய மகானைப் பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நீக்கு
 3. பாடகச்சேரி சென்றதில்லை. முத்துப்பிள்ளை மண்டபம் சென்றுள்ளேன். அங்கு சென்றுவந்தபின் பாடகச்சேரி சுவாமிகள் என்ற தலைப்பில் 2014இல் ஒரு கட்டுரையினை விக்கிப்பீடியாவில் ஆரம்பித்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் பதிவினையும் அன்றைக்கு இணைய தேடலில் கண்டேன்.. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. துரை அண்ணா பாடகச்சேரி சுவாமிகள் பற்றி இப்போதுதான் அறிகிறேன். செல்லங்களை ரசித்தேன். சுவாமிகளின் அன்புக்குரிய செல்லங்கள் நம்மை வரவேற்பது ஆஹா!!

  தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோ..
   அன்றைக்கு திருமடத்துக்குச் சென்றிருந்த போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த செல்லங்கள் ஆர்வத்துடன் ஓடி வந்து சூழ்ந்து கொண்டன..

   இப்படியான திருமடங்களில் அமானுஷ்யங்களை உணரலாம் என்பது கூடுதல் செய்தி..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நீக்கு
 5. பாடகச்சேரி ஸ்வாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை விரிவாக இப்போது தான் அறிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. பாடகச்சேரி திருமடம் போன்ற இடங்கள் மனதிற்கு நிம்மதியை உணர முடியும்..

   வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. நாங்களும் பாடகச்சேரி போய் இருக்கிறோம்.

  நிறைய விவரங்கள் தெரிந்து கொண்டேன். நாங்கள் முன்பு போய் இருந்தபோது எடுத்த படங்களை தேட வேண்டும்.

  இப்போது திருமடத்தின் கட்டிடம் அழகாய் இருக்கிறது.
  பாடகச்சேரி ஸ்வாமிகளை நாம் பார்க்க வேண்டும் அவரிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் வழியில் ஏதாவது நாயை பார்த்தால் நாம் சொல்லலாம் அவை அவரை அழைத்து வரும் என்பார்கள்.

  அன்பு செல்லங்கள் அவர் இடத்தில் நிறைய நின்றன பிஸ்கட் கொடுத்தேன் சண்டை சச்சரவு இல்லாமல் அவை சாப்பிட்டது.

  சுவாமிகள் எத்தனை இலை போட்டு உணவு பரிமாறி இருப்பாரோ அததனை நாய்கள் வந்து உணவு உண்டு போகுமாம்.

  நிறைய கோயில் கும்பாபிஷேகம் செய்து இருக்கிறார். ஏதாவது கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடியவில்லை என்றால் அவரிடம் வேண்டிக் கொண்டால் உடனே தடை இல்லாமல் பொருள் கிடைத்து அந்த கோயில் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்குமாம்.

  பதிலளிநீக்கு
 7. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

  அரிய தகவல்கள்.. ஸ்வாமிகள் செல்லங்களுக்கு அன்னமிடும் விந்தையை அற்புதத்தை அறிந்திருக்கின்றேன்.. ஆனாலும் பதிவில் சொல்ல முடியவில்லை..

  மற்றபடி கும்பாபிஷேகத் தடை நிவர்த்திக்கான விளக்கம் சிறப்பு..

  எப்பேர்ப்பட்ட மகான்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை அறியும் போது நம்மையும் அறியாமல் கண்கள் கலங்குகின்றன...

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 8. அரிய தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..