நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 12, 2022

ஸ்ரீ கோதண்ட ராமர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


இன்று தை (30) சனிக் கிழமை.. வளர்பிறை ஏகாதசி நாள்.

இன்றைய பதிவில்
ஸ்ரீ கோதண்ட ராம தரிசனம்..

தஞ்சையிலிருந்து கிழக்காக - நாகை நெடுஞ்சாலையில் - 5 கி.மீ. தொலைவில்
மாபெரும் ஏரி உள்ளது....

மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏரிக்குப் பெயரே சமுத்திரம் என்பதாகும்..

நீண்டு விரிந்திருக்கும் சமுத்திரம் ஏரியின் கீழ்க்கரையில் தான் புன்னைநல்லூர் கிராமம்..

இந்த ஏரி , பத்து - இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை - பெயருக்கு ஏற்றபடி சமுத்திரம் போலவே அலை எறிந்தபடி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் . அந்த அழகைக் கண்ட கண்கள் புண்ணியம் செய்தவை. 

இன்று இந்த ஏரியின் நிலை சொல்லும் தரமன்று!.. இருப்பினும் சமுத்திரம் ஏரி இன்றும் பசுமையான வயல் வெளிக்குத் தாயாகத் தான் விளங்குகின்றது.  

தஞ்சை மாநகரைக் கடந்து கீழக்கு நோக்கிப் பயணிக்கும் போது சாலையின் வடபுறத்தில் ஏரிக்கரை..

15 வருடங்களுக்கு முன்பு வரை - சாலையின் இருமருங்கிலும் புளி, புங்கை - எனும் மரங்கள் நிழல் பரப்பிக் கொண்டிருந்தன..

இன்று ஒரு மரம் கூட நெடுஞ்சாலை ஓரத்தில் இல்லை.. எல்லாம் வெட்டி வீழ்த்தப்பட்டன - சாலை விரிவாக்கம் என்ற பெயரில்!.. 

இந்த நெடுஞ் சாலையின் ஓரத்தில் வெட்ட வெளியில் காட்சி தருவது - புகழ் பெற்ற பிரார்த்தனைத் தலமாகிய புன்னை நல்லூர்!.. 

ஆனாலும் வெகு காலமாகவே மாரியம்மன் கோயில் என்று தான் வழங்கப்படுகின்றது..

இவ்வூருக்கு சற்று முன்பாக - சாலையில் இருந்தபடியே - கிழக்கு நோக்கி விளங்கும் மூன்று திருக் கோயில்களைத் தரிசிக்கலாம்.. 

ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.. 

ஸ்ரீ கல்யாணசுந்தரி சமேத கைலாசநாதர் திருக்கோயில்..

ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில்..

இவற்றுள் -

நெடுஞ்சாலையின் வடபுறமாக - மாரியம்மன் திருக்கோயிலும் சிவாலயமும் அருகருகே அமைந்துள்ளன..

ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில் - மட்டும்,  மாரியம்மன் திருக்கோயிலுக்குப் பின்னால் சற்றே உட்புறமாக அமைந்துள்ளது..

சோழர்களின் ஆட்சி
முடிந்து வெகு காலத்துக்குப் பின்
நாயக்கர்களும் மராட்டியர்களும் தஞ்சையை ஆட்சி செய்திருக்கின்றனர்.. அவ்வண்ணமாக,

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த
பிரதாப சிம்மன்
(பொ: 1739 - 1763) என்ற மராட்டிய மன்னர் எழுப்பிய திருக்கோயில் தான் - ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்..

தஞ்சை மன்னர் பிரதாப சிம்மன் - பிள்ளைப்பேறு இன்றி வருந்தி பல்வேறு  வேள்விகளையும் நற்காரியங்களையும் தீர்த்த யாத்திரைகளையும் இயற்றினார்.. நல்ல நேரம் கூடி வந்த வேளையில் அவர் துயர் தீர்க்கும் முகமாக - தன் திருமுகம் காட்டி அருளினான் ஸ்ரீராமபிரான்.. 

மனம் மகிழ்ந்த மன்னர், தனக்கு - பிள்ளைப் பேற்றை அளித்த ராமபிரானுக்கு நன்றிக் கடனாக - திருக்கோயில் ஒன்றை எழுப்பும் திருப்பணியில் இருந்தார்.. 

அந்த வேளையில் - தஞ்சை மன்னரின் நண்பரான நேபாள அரசர் - கண்டகி எனும் புண்ணிய நதியில் கிடைத்த சாளக்ராமங்களைப் பரிசளிக்க,

அந்தப் புனித சாளக்ராமங்களைக் கொண்டு திருமேனிகள் உருவாக்கப்பட்டன.. 

சாளக்ராம மூர்த்திகள் -  திரு மூலஸ்தானத்தில் விளங்குவது - மிக அபூர்வம்!..

நில மட்டத்திலிருந்து சற்று உயரமாக,  ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் விளங்குகின்றது  திருக்கோயில்..


பன்னிரண்டு படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.. 

பன்னிரு படிகளும் பன்னிரு ராசிகளைக் குறிப்பன - என்றொரு சொல் வழக்கு..

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் தென்புறத்தில்  தும்பிக்கை ஆழ்வாராக - விநாயகப் பெருமான்!..


துவஜ ஸ்தம்பம்.. கொடி மரத்தை அடுத்து முன் மண்டபத்தில் கருடாழ்வார் சந்நிதி.  

எதிரே சௌந்தர்ய விமானம்.. மூலஸ்தானம்

திரு மூலஸ்தானத்தில் சாளக்ராம மூர்த்திகள்.  வலக்கையில் சரமும், இடக்கையில்  கோதண்டமும் கொண்டு - ஸ்ரீ ராமன்  விளங்குகின்றான்.. வலப்புறம் சீதா தேவியும், இடப்புறம் இளைய பெருமாளும் அருள் பாலிக்கின்றனர். 

மூவரும் நின்ற கோலத்தில் திருக்காட்சி.

திருவடியில் ஸ்ரீ சுக்ரீவன் அமர்ந்துள்ளார். 

ஸ்ரீ கோதண்டராமன் - புன்னைநல்லூர்

உற்சவ மூர்த்திகள் - கோதண்டராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேயர். 

அழகு எனில் அழகு.. பேரழகு!.. காணக் கண் கோடி வேண்டும்!..

எனினும் - ஐயனின் அருகில் - சுக்ரீவன்!.. 

நன்றியும் பக்தியும் கொண்டு எங்கும் இல்லாத அதிசயமாக இங்கே வணங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகின்றது..

அரசனுக்கே உரிய அலங்காரங்கள் தென்படுவதால் -  சுக்ரீவன் என - குறிக்கப்படுகின்றார் போலும்!.. 

கருவறையில்
சாளக்ராமத்தினால் வடிவமைக்கப்பட்ட
தெய்வத் திருமேனிகள்..

சிறியதொரு சாளக்ராமத்தினை வைத்து வழிபட்டாலே நிறைந்த புண்ணியம் என்பது சான்றோர் வாக்கு.. 

மேலும் - திவ்ய தேசத் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள  பெருமானுக்கு  சாளக்ராம மாலையை  அணிவித்தும் வழிபடுகின்றார்கள்..

அப்படியிருக்க -
மூல மூர்த்தியே சாளக்ராமம் எனும் போது  இத்திருத்தலத்தின் பெருமை அளவிடற்கரியது..



திருக்கோயிலின் - மூன்று புறமும் உள் மண்டபத்துடன் கூடிய திருச்சுற்று..

திருச்சுற்றின், தென்புறத்தில் - 
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் - 
ஸ்ரீ யோகநரசிம்மர் விளங்கும் வடக்கு நோக்கிய சந்நிதி!..

திருச்சுற்றின் மண்டபச் சுவர்கள் முழுவதும் வண்ண மயமான ராமாயணக் காட்சிகள்..















இத்திருக்கோயிலின்  தல விருட்சமான  புன்னை மரம் பரந்து விரிந்து நிழல் தருகின்றது..




புன்னை மரத்தினடியில் ஸ்ரீராமர் பாதம் எனும் திருவடி நிலை.. 

புன்னை மரத்தினை ஒட்டி உள்ள சந்நிதியில் தெற்கு முகமாக ஸ்ரீஜயவீர ஆஞ்சநேயர்.. 

நின்ற திருக்கோலம். கம்பீரமான தோற்றம்.  வலது கரத்தால் அபயம் அருளும்  ஆஞ்சநேயரின் இடது கரத்தில் தாமரை மலர். 

Thanks to Google

சீதையின் இருப்பிடம் கண்டு அந்த நல்ல செய்தியை ராமனுக்குச் சொல்ல, தாமரைப் பூவுடன் செல்வதாக ஐதீகம்.  ஆஞ்சநேயரின் மண்டப விதானத்தில் பன்னிரண்டு ராசிக் கட்டங்கள் உள்ளன. கீழே தளத்திலும் ராசிக் கட்டங்கள் உள்ளன..


பக்தர்கள் தங்கள் ராசிக்குக் கீழ் நின்றவாறு சொல்லின் செல்வனை வேண்டித் துதித்தால் - அல்லல்கள் அகலும் தொல்லைகள் தொலையும் என்ற நம்பிக்கை உள்ளது..


பெரிய தேர் இருந்ததற்கு சாட்சியாக திருக் கோயிலுக்கு வெளியே தேர் நிலை.. தேர் போய்ச் சேர்ந்த இடம் தெரிய வில்லை. தற்போது மண்டபத்தின் மேல் தளத்தில்  கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதியான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவருக்கு  தனி சந்நிதி அமைத்துள்ளனர். 

குழந்தைகளும், மாணவர்களும்  தேடி வந்து நல்லருள் பெற்றுச் செல்கின்றனர். வியாழக் கிழமைகளில் மிகச் சிறப்பாக ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன. 

ஸ்ரீ ராமநவமி, கருட சேவை,  வருடாந்திர உற்சவங்கள் எல்லாம் சிறப்புற நிகழ்கின்றன..

புன்னை நல்லூரில் 
ஸ்ரீ கோதண்டராமர் திருக் கோயிலை எழுப்பிய மன்னர் பிரதாப சிம்மன் - 

தஞ்சை மேலராஜ வீதியில் ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலையும்,  ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலையும்  (மூலை அனுமார் கோயில்) 
நீடாமங்கலத்தில்
ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி திருக்கோயிலையும் எழுப்பியுள்ளார்..

கோயிலில் நான் எடுத்த படங்களைத் தந்திருக்கின்றேன்..

திருக்கோயிலில்
அமைதி பொங்கித் ததும்புகின்றது.

ஸ்ரீ ராமனின் தரிசனத்தால் - குறைகள் அகலுகின்றன..
ஐயனின் திருவடிகள் - அடைக்கலம் அருள்கின்றன!.. 

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே

ரகுநாதாய நாதாய சீதாயா: பதயே நம:

இங்கு வந்து 
ஸ்ரீ ராமனைத் தரிசனம் செய்வதற்கு அனைவருக்கும் நல்வாய்ப்பு கிடைக்க வேண்டும் - என, பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்..
***

9 கருத்துகள்:

  1. புன்னைநல்லூர் தெரியும்.  இந்தக் கோவில் கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கிறது, இல்லை மாதிரியும் இருக்கிறது.  சாளக்கிராமத்தினால் செய்யப்பட மூலவர் என்பது சிறப்பு.

    தேர் என்ன ஆச்சோ...  விறகானதோ..  தேரோட்டம் நடந்த காலத்தில் அந்த இடம் எப்படி சிறப்பாக விளங்கி இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தேர் போய்ச் சேர்ந்த இடம் யாருக்கும் தெரியவில்லை..
      தாங்கள் சொல்வது போல தேரோட்டம் நடைபெறும் ஊர் என்றால் எப்படி இருந்திருக்கும்!..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ராம தரிசனம் நன்று ஜி.
    வளர்ச்சி என்ற பெயரில் கிராமங்கள் வீழ்ச்சி அடைந்ததே மிச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்கள் சொல்வது போல வளர்ச்சி என்ற பெயரில் வீழ்ச்சி தான்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. புன்னைநல்லூர் சென்றிருந்தாலும் இந்தக் கோவில் பார்த்ததில்லை. அடுத்த முறை இங்கே பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கோதண்டராமர் கோவிலுக்கும் சென்று வரவேண்டும் வாய்ப்பை ராமர் அளிக்கட்டும்..... தகவல்களும் படங்களும் பார்த்து ரசித்தேன். அங்கு இருக்கும் ஓவியங்களை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறது.

    தொடரட்டும் தங்களுடைய சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  4. புன்னை நல்லூர் மாரியம்மனைப் பார்த்திருக்கேன். மற்றக் கோயில்கள் பற்றி முக்கியமாய் கோதண்டராமர் கோயில் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன். விபரமான பகிர்வுக்கு மிக்க நன்றி. வாய்ப்புக் கிடைத்தால் சென்று வரலாம். கும்பகோணம் ராமசாமி கோயிலிலும் ராமாயணக் காட்சிகள் இம்மாதிரி ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கும்பகோணம்
      ஸ்ரீ ராமர் கோயிலிலும் இப்படித் தான் சுற்றுச் சுவர்களில் ராமாயண காட்சிகள் வரையப் பெற்றிருக்கும்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்
      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..