நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 10, 2024

நறுமணக் குடிநீர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 28
திங்கட்கிழமை


நன்னாரி..

கிருஷ்ணவல்லி, நறு நெட்டி - என, வேறு பெயர்கள் விக்கியில் காணக் கிடைக்கின்றன..


கிருஷ்ணவல்லி எனும் நன்னாரியை தியாக வல்லி என்றாலும் தகும்.. 

நலம் தரும் இதர விருட்சங்களைப் போல தன்னையே நமக்களிக்கின்றது -
நமக்காக..

பாரதத்தின் பாரம்பரிய மூலிகை நன்னாரி..
இது கொடி இனத் தாவரம்.. சூழ்நிலையைப் பொறுத்து தரையிலோ  கொம்பிலோ படர்கின்ற இயல்புடையது.. இதன் வேர் நறுமணம் உடையது..

நன்னாரி நமது குருதியைத் தூய்மைப்படுத்துவதாக விக்கி புகல்கின்றது..

நன்னாரி நறுமணக் குடிநீர்..
நன்னாரி ஷர்பத் என்பது வழக்கம்..
ஷர்பத் என்பது அரபுச் சொல் ..

நன்னாரி ஊறிய தண்ணீர், பனை வெல்லம், எலுமிச்சைச் சாறு,  ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படுவதே ' நன்னாரி ஷர்பத் '..

இந்த  நன்னாரி ஷர்பத்திற்கு மெருகு சேர்ப்பது -  சிவதுளசி எனும் திருநீற்றுப் பச்சிலையின் (Basil) விதைகள்..

சிவதுளசி விதைகள்

நன்னாரி நறுமணக் குடிநீர், திருநீற்றுப் பச்சிலை விதை - ஆகிய இவற்றை நம்மிடமிருந்து  பாரசீக மருத்துவம் ஏற்றுக் கொண்டு நமக்கே திருப்பி வழங்கியதால் - சப்ஜா என்றும் ஷர்பத் என்றும் சொல் வழக்கத்தில் மாறி விட்டன..

திருநீற்றுப் பச்சிலை பித்தத்தைத் தணித்து உடல் சூட்டைக் குறைக்கின்றது.. 

நீர்க்கடுப்பினைத் தணிப்பதிலும், வயிற்றுப் புண்களை ஆற்றுவதிலும் சிறப்புடையது.

நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றது..


திருநீற்றுப் பச்சிலை விதைகளை நீரில் ஊற வைத்தால் நீரை உறிஞ்சிக் கொண்டு வழவழப்பாக மாறுகின்ற தன்மை உடையவை..

ஒரு தேக்கரண்டி உலர்ந்த திருநீற்றுப் பச்சிலை விதைகளை நீரில் ஊற வைத்து, நன்னாரி நறுமணக் குடிநீருடன் சேர்த்து வெயில் நேரங்களில் அருந்தினால் ஆரோக்கியம் நம் கையில்..

நன்னாரி நறுமணக் குடிநீரில் வெள்ளைச் சீனியைப் பயன்படுத்துவது சரியல்ல. பாரம்பரிய பனங்கற்கண்டு ஒன்றே நல்லது - என்றொரு கருத்தும் இருக்கின்றது.

நன்னாரி சர்பத் என்ற பெயரில் சாலையோரத்தில் பற்பல வண்ணங்களில் விற்கப்படுகின்ற எதுவும் நம்பிக்கைக்கு உரியவை அல்ல.. தரமானவை அல்ல... உடல் நலனுக்கும் பணத்திற்கும் கேடானவை..  

சுத்தம் சுகாதாரம் இவற்றின் அடிப்படையில்  வீட்டிலேயே நன்னாரியின் பெருமையும் நறுமணக் குடிநீர் செய்து கொள்ளும் முறையும் இப்பதிவின் வாயிலாக பேசப்படுகின்றது..

உடலில் திசுக்களின் வளர்ச்சியை (Increases epithelisation) நன்னாரி தூண்டுவதாகக் குறிக்கப்படுகின்றது.. வயிற்றுப் புண் அழற்சி இவைகளை சரிசெய்வது நன்னாரியின் குணம் என்கின்றது சித்த மருத்துவம்..

பல்வேறு காரணங்களால் கல்லீரலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைத் தடுக்கும் வல்லமை நன்னாரிக்கு இருக்கின்றது..

நன்னாரியின் வேரை பெருவிரல் அளவுக்கு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, இரவு முழுக்க புத்தம் புதிய மண் பானைத் தண்ணீரில் போட்டு வைத்து, காலையில் வடிகட்டி அதனுடன் சிறிது கருப்பட்டி சேர்த்துப் பருகினால் உடலின் அதிகப்படியான  உஷ்ணம் குறையும்..

வெயிலில் அலைந்து திரிவோர்க்கு சிறுநீர் எரிச்சல் (நீர்க்கடுப்பு) ஏற்படலாம்.. இதற்கு உடனடி நிவாரணம் - நன்னாரி வேர்ப் பொடியுடன் பனை வெல்லம் கரைத்த நீர்..

நன்னாரி வேரை வெயிலில் உலர்த்தி  இடித்து வைத்துக் கொள்வதும் பொடி செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.. அவ்வப்போது நாமே நமக்காக நன்னாரிக் குடிநீர்  தயாரித்துக் கொள்ளலாம்..
நன்னாரி நறுமணக் குடிநீரில்
எலுமிச்சையுடன் -  
நாளுக்கொன்றாக நாரத்தை, சாத்துக்குடி, ஆரஞ்சு பழச் சாறுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.. எலுமிச்சைச் சாற்றினை அதிகமாகப் பருகுவது இளைஞர்களுக்கு நல்லதல்ல..

உடலின் உஷ்ணத்தை சமப்படுத்தினாலே நோய்கள் குறைந்து விடும்.. நோய் இன்றி  வாழ்வதற்கு நன்னாரி நறுமணக் குடிநீர் அவசியமானது..

இப்போது வெயில் காலம் ஆனதால் பலரும் சர்பத் கடைகளை நாடுகின்றனர்..  

செயற்கை வண்ணங்கள், சுவையூட்டிகள் - உடலுக்குக் கேடானவை என்று நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கின்றன..

இவ்வேளையில், நமக்கு நாமே  நல்லனவற்றைத் தேடிக் கொள்ள வேண்டும்.. சிரமம் தான்.. 
ஆனாலும்,
முயற்சி திருவினை ஆக்கும்..

நமது நலம் நமது கையில்..

இயற்கையை நாம் வாழ வைப்போம்..
இயற்கை நம்மை வாழ வைக்கும்..

இறைவனே இயற்கை
இயற்கையே இறைவன்..
***

3 கருத்துகள்:

 1. சிறு வயதில் எங்கள் வீட்டில் விளாமிச்சை வேர் போட்டு தண்ணீர் வைத்து குடித்திருக்கிறேன்.  அப்புறம் பல வருடங்களுக்கு பிறகு, விளாமிச்சையும் மற்றும் இன்னொன்றின் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை, அதுவும் போட்டு அலுவலகத்தில் பானைத்தண்ணீர் வைத்திருந்தேன்.  இப்போதெல்லாம் போச்!

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு துரை அண்ணா. நம்ம வீட்டில் செய்வதுண்டு இன்று எபியில் இந்தச் செய்முறைக் குறிப்புதானே!!..

  நன்னாரியும், மாகாளிக் கிழங்கும் ஒரே மணமுடையவை. ஆனால் வேறு வேறு குடும்பம் என்றும் சிலர் ஒரே குடும்பம்தான் என்றும் . மாகாளியை பெருநன்னாரி என்றும் சொல்வதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. நன்னாரி நறுமணவேரின் பயன்பாடு, நன்மைகள் விவரம் அருமை.
  முன்பு மண்பானையில் நன்னாரி வேர் போட்டு குடி நீர் குடிப்பது உண்டு, இப்போது இல்லை. குளிர்ந்த பானம் குடிப்பது இல்லை.
  நல்லனவற்றை தேடி நமக்கு ஒத்துக் கொள்வதை வீட்டில் தயாரித்து குடிப்பது நல்லதுதான்.
  செயற்கை வண்ணங்கள், சுவையூட்டிகள் உடலுக்கு கேடுதரும் தான்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..