நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

ஊர் சுற்றலாம்..

இன்று செப்டம்பர் 27..

உலக சுற்றுலா நாள்!..

வேலைகள் பல இருந்தாலும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு -
வாருங்கள்.. ஊர் சுற்றிப் பார்க்கலாம்!..

எந்த ஊருங்க!?..

எங்க ஊருங்க!..

ஓ!..


பிறந்த ஊரின் பெருமையைப் பேசுவதற்கு யாருக்குத் தான் ஆசையிருக்காது?..
கலை கலாச்சாரம் வரலாறு வாழ்வியல் அரசியல் ஆன்மீகம் - என, எல்லாம் ஒன்று சேர்ந்து விளங்கும் நகரங்களுள் தனிச்சிறப்புடன் திகழும் -

தஞ்சாவூர்!..

அதனால் தான் -
தென்னகத்தின் பண்பாட்டு மையம் இங்கே அமைக்கப்பட்டது..

நீண்ட நெடும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது தஞ்சை மாநகர்..

கி.பி. 850ல் முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழர் தஞ்சையை கைப்பற்றி புலிக்கொடியினை நாட்டினார்..

அதன்பின் அந்தப் புலிக் கொடியினை -
விண்ணுயரத்திற்கு ஏற்றைவைத்த பெருமைக்குரியவன் -
மாமன்னன் ராஜராஜ சோழன்!..

சோழப் பரம்பரையின் திலகமான ராஜராஜ சோழன் -
தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு - கடல் கடந்த நாடுகளான
முன்னீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரத்தையும் ஈழத்தையும் ஆட்சி செய்த பெருமைக்குரியவன்..


மாபெரும் சிவபக்தனான ராஜராஜ சோழன் -
தஞ்சை மாநகரில் எடுப்பித்த பெருங்கோயில் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு அவனது பெருமையைப் பேசிக்கொண்டிருக்கும்..

உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பெருமையைப் பேசி முடியாது..

மாபெரும் கலைச்சின்னம் - தஞ்சை பெரிய கோயில்..

உலக மக்களைக் கவர்ந்திருக்கும் இந்தத் திருக்கோயில்
ஏறத்தாழ - மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது..

பெரிய கோயிலின் எதிர்புறத்தில் தான் -
புகழ் பெற்ற ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை..

இந்த மருத்துவமனை - ராஜ ராஜ சோழனின் தமக்கையான குந்தவை பிராட்டியாரால் தொடங்கப்பட்டிருக்கும் - என்பது முக்கியமான குறிப்பு..

பெருமைக்குரிய சோழனின் அரச மாளிகை - தஞ்சையின் வடமேற்கில் களிமேடு பகுதியில் இருந்திருக்கக் கூடும் என்றும்

அதெல்லாம் இல்லை!.. இப்போதுள்ள நாயக்க - மராத்திய அரண்மனையின் அடித்தளமே சோழரின் அரண்மனை தான் என்றும் சொல்கின்றார்கள்..

எப்படியிருந்தாலும் - நாயக்கர்களின் அரண்மனை கி.பி. 1673ல் நடந்த போரில் சிதைவுற்றது..

அதன்பின் 1675ல் தஞ்சையை மராட்டியர்கள் கைப்பற்றினர்..

மீண்டும் பல நிலைகளில் - மாடமாளிகை கூட கோபுரம் - என அரண்மனை எழுந்தது..

மன்னர் சரபோஜியின் அரசவை, பெருமைமிகும் சரஸ்வதி மஹால் நூலகம், சங்கீத மஹால், மணி கோபுரம், காவற்கோபுரம், ஷார்ஜா எனும் ஏழடுக்கு மாடி- எனத் திகழ்கின்றது..

மணிக் கோபுரம்
காவல் கோபுரம்

ஷார்ஜா மாடி
இன்று காணும் அரண்மனையும் பல சிதைவுகளுடன் தான் விளங்குகின்றது..

எனினும் மிச்சம் மீதி என எஞ்சிய பகுதிகள் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன..

இன்றைய அரண்மனை வளாகம் சுற்றுலா பயணிகளுக்கு மாபெரும் விருந்து என்றால் மிகையில்லை..


உலகின் தொன்மையான நூலகம் சரஸ்வதி மஹால்..

பிற்காலச் சோழர்களால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி பண்டாரகம் என்பதே பின்னாளில் சரஸ்வதி மஹால் என்றானது - என்பது அறிஞர் தம் கூற்று..

இசை, நாட்டியம், சிற்பம், சமயம், தத்துவம், மருத்துவம் , அறிவியல் - என, பல்வேறு துறைகளிலும் சிறந்த நூல்கள் இங்கேயுள்ளன..

தொன்மையான ஓலைச்சுவடிகளும் பழைமையான அச்சுப் பிரதிகளும் இங்கே  பாதுகாக்கப்படுகின்றன..

தற்போது - சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஒலி ஒளிக் காட்சி தொடங்கப்பட்டுள்ளது.. 

இதற்கென - 156 இருக்கைகளுடன் முழுதும் குளிரூட்டப்பட்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.. 

தஞ்சையின் பாரம்பர்யம், சோழ மன்னர்களின் வரலாறு, தஞ்சையைச் சுற்றியுள்ள சிறப்பு மிகும் தலங்கள் - என, 

நமது பெருமையினை சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் - தமிழ், இந்தி, ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மொழிகளில் ஒலி ஒளிக் காட்சிகள் தினமும் நடைபெறுகின்றன..

அரண்மனை வளாகத்தினுள் மூன்று அருங்காட்சியகங்கள் விளங்குகின்றன..

கலைநயம் மிக்க ஐம்பொன் சிலைகளும் கல் படிமங்களும் மரச் சிற்பங்களும் போர்த் தளவாடங்களும் மற்றும் பல அரியவகைப் பொருட்களும் காணக் கிடைக்கின்றன..

தஞ்சை பீரங்கி
தஞ்சை அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே - கிழக்காக நடந்தால் கீழவாசல்...

கோட்டையின் கிழக்கு வாசல் இதுவே..

இங்கிருந்த மிகப் பெரிய நுழைவு வாயிலை பழுதாகி விட்டதெனக் கூறி
40 ஆண்டுகளுக்கு முன் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கி விட்டனர்..

சாலைத் திட்டுக்கு வடபுறமாக உயரமான மேட்டில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய பீரங்கி ஒன்றினைக் காணலாம்..

சுமார் முப்பதடி உயமுடைய இந்த இடத்திற்கு பீரங்கி மேடு என்றே பெயர்..

தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் (1600 - 1645) 1620ல் இந்த பீரங்கியை அமைத்தார்..

25 அடி நீளமுடைய இந்த பீரங்கி 22 டன் எடையுள்ளது..
இதன் வாய்ப்பகுதி இரண்டு அடி (25 அங்குலம்) அகலமுடையது..

400 ஆண்டுகளாக வெயிலில் காய்ந்து மழையில் நனைந்தாலும்
எள்ளளவு கூட - துரு பிடிக்காமல் கம்பீரமாக விளங்குன்றது...

ஆனாலும் - பீரங்கியின் இருபுறமும் இருந்த கனமான வளையங்களை
சமூக விரோதிகள் அறுத்தெடுத்து தங்கள் ஆளுமையைக் காட்டிவிட்டனர்..

இந்த பீரங்கி உலகின் பெரிய பீரங்கிகளுள் நான்காவதாகத் திகழ்கின்றது...

இந்த பீரங்கி மேட்டில் நின்றுகொண்டு மேற்குத் திசையில் நோக்கினால் - ஷார்ஜா மாடியும் அரண்மனை கோபுரங்களும் அழகாகத் தெரியும்..

ஆனால் - சரியான பராமரிப்பு இல்லாததால் சமுக விரோதிகளின் புகலிடமாக விளங்குவது வருத்தத்துக்குரியது..


முதல் உலகப் போர் நினைவு கல்வெட்டு
பழைய பேருந்து நிலையத்தின் தெற்குப் புறம் - அரசு மருத்துவமனைக்கு முன்பாக நீண்டுயர்ந்து விளங்குவது நூறாண்டுகளைக் கடந்த மணிக்கூண்டு..

1883ல் கட்டப்பட்ட இந்த மணிக் கூண்டிற்கு ராணி கோபுரம் என்று பெயர்..

இதன் கிழக்குப் புறம் - முதல் உலகப்போரில் சண்டையிட்டு உயிர் துறந்த நால்வரின் நினைவு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது..

எண்கோண அமைப்பில் எழுந்து நாற்பட்டையாக உயர்ந்து உச்சியில் கோபுர விமானம் போல விளங்கும் - இந்த மணிக்கூண்டு முறையான பராமரிப்பின்றி இருக்கின்றது..

நான்கு புறமும் இருக்கும் பார்வை மாடங்கள் சிதைந்து விட்டன..

அப்போதெல்லாம் - ஒன்று இரண்டு என,
ஊரெல்லாம் கேட்கும்படி மணியோசை முழங்கும்...

அந்த வாய்ப்பினை இன்றைய தலைமுறையினர் இழந்து விட்டனர்..


வெண்ணாறு, வடவாறு, புது ஆறு என
நீர் வளமும் நிலவளமும் ஒருங்கே அமையப் பெற்ற தஞ்சை -
சிறப்பான பேருந்து மற்றும் இருப்புப் பாதை வசதிகளையும் உடையது..

தமிழகத்தின் எல்லா நகரங்களுடனும் பேருந்து வசதியிருந்தாலும் -
இன்னும் மேம்படவேண்டும் என்பது ஆவல்..

புது ஆறு எனப்படும் கல்லணைக் கால்வாய்
தஞ்சையின் வடக்கு எல்லையில் அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயிலுக்குப் பின்புறம் ஒரு கி.மீ தொலைவில் வெண்ணாற்றுப் படுகையில் பழைமையான நீரேற்று நிலையம் உள்ளது.. 

1880 களில் அமைக்கப்பட்ட இந்நிலையம் இன்னும் சிறப்பாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது..

மேலும் கொள்ளிடத்திலிருந்தும் நீர் கொண்டு வரப்படுகின்றது.. 
தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லாத மாநகர் தஞ்சை..

மருத்துவக் கல்லூரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம்
Sukhoi SU30 - தஞ்சை விமான தளம்
மத்திய அரசின் பொலிவுறு நகர்களுள் தஞ்சை மாநகரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே -
அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய பெருமைக்குரியது சோழ மண்டலம்..

சிவகங்கைக் குளம்
அன்றைக்கே - நீர் மேலாண்மையில் சிறப்புற்றிருந்தனர்...

பெரிய கோயிலின் வடபுறமுள்ள சிவகங்கைக் குளத்தின் கீழ் -
ஜல சூத்திரம் எனும் அமைப்பில் நகரிலுள்ள கிணறுகளில்
நீர் நிறைந்திருக்கின்றது..

தஞ்சை நகரின் வடிகால் அமைப்பு சிறப்பானது.

தெருக்களின் இருபுறமும் அமைந்துள்ள - கழிவு நீர்த் தாரைகள்
ஆங்காங்கே பத்தடி ஆழத்தில் - வாரிகள் எனும் ஓடைகளில்
இணைக்கப்பட்டு வயற்புறங்களில் சேருமாறு அமைக்கப்பட்டிருக்கும்..

கால வெள்ளத்தில் மக்கள் அவற்றைச் சிதைத்துப் பாழ்படுத்தினர்..

தற்போது நகர் முழுதும் புதை சாக்கடைத் திட்டம் நடைமுறையில் இருந்தாலும் நான்கு ராஜவீதிகளிலும் பழைமையான நீர்த்தாரைகளை இன்னும் காணலாம்..

இருப்பினும்,

தங்கு தடையற்ற மின்சாரம், சூரிய ஒளியினால் மின்சக்தி, சிறப்பான கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், பத்திரமான சாலைகள், மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு, தூய்மையான கழிப்பறை மற்றும் வடிகால் வசதி, திடக்கழிவு மேலாண்மை ..

- என, பல்வேறு துறைகளில் மேம்படுத்தப்பட இருக்கின்றது - தஞ்சை மாநகர்..

தமிழ்ப் பல்கலைக்கழகம், தென்னக பண்பாட்டு மையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் கால்நடை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம், இந்திய பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம் (Indian Institute of Crop Processing Technology - IICPT)
இந்திய விமான படைத்தளம் - என மேன்மையுற்று விளங்கினாலும்

சிற்சில குறைகளும் ஆங்காங்கே இருக்கின்றன..

காலப்போக்கில் அவையெல்லாம் சரியாகும் என நம்புவோம்...


தென்னகத்தின் நெற்களஞ்சியமாகிய தஞ்சை மாநகரின் பெருமைகளில் இங்கே சொல்லியிருப்பது ஓரளவு தான்..

முழுதாகச் சொல்லுதற்கு இந்த ஒரு பதிவு போதாது - என்பதே உண்மை..

தஞ்சையைச் சுற்றி வந்து - நான் எடுத்து சேகரித்த படங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கின்றன - என்று தெரியவில்லை..

ஒரு சில படங்களைத் தவிர மற்றவை இணையத்தில் பெற்றவை..

தஞ்சை ஓவியங்கள்தஞ்சாவூர் வீணை மற்றும் இசைக் கருவிகள், தஞ்சை கலைத் தட்டு, தஞ்சை ஓவியங்கள், தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சை மரக்குதிரை..

தஞ்சாவூர் தாம்பூலம், தஞ்சாவூர் டிகிரி காபி, தஞ்சாவூர் நெய் புட்டு,
தஞ்சை அசோகா, தஞ்சை காரக்குழம்பு, தஞ்சை சந்திரகலா (இனிப்பு தாங்க!..)

- என, பற்பல சிறப்புகள்..

நாட்டியாஞ்சலி
தஞ்சையின் பரத நாட்டிய பாரம்பரியம் மட்டுமின்றி
தஞ்சை நால்வர் எனும் இசைச் சகோதரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..

தஞ்சையில் வசித்திருந்த - சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் -
அரச ஆரவாரங்களைக் கண்டு ஒதுங்கி திருவையாற்றுக்கு குடிபெயர்ந்தார்...

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள் வசித்ததும் தஞ்சையில் தான்..

தஞ்சை பொய்க்கால் குதிரை, கரக ஆட்டம், மயிலாட்டம், புலியாட்டம், உறுமி மேளம், தப்பாட்டம் - என்பன மண்ணின் பெயர் விளங்கச் செய்வன..


இன்னும் பேசுதற்கு நிறைய உள்ளன..
மீண்டும் ஒரு இனிய வேளையில் 
அவற்றையெல்லாம் பேசி மகிழ்வோம்!..

வாருங்கள் எங்கள் ஊருக்கு!..
கண்ணுக்கும் கருத்துக்கும்
பொன்னான நாடு!..

எங்கள் தஞ்சை வளநாடு!..

வாழ்க வளமுடன்!..
***

18 கருத்துகள்:

 1. சிறப்புப் பதிவு வெகு வெகு அற்புதம்
  தஞ்சை சுற்றுலா வருகிறவர்கள் எல்லாம்
  கோவில் தவிர வேறு எதையும் பார்க்காதே
  போய்விடுகின்றனர்,.
  தங்கள் பதிவு அருமையான
  வழிகாட்டிப் பதிவாக உள்ளது
  படங்களுடன் விவரித்துச் சொன்னவிதம்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   கூட்டத்தோடு கூட்டமாக சுற்றுலா வருபவர்களின் பாடு மிகவும் திண்டாட்டம்..

   அது தான் இது.. இது தான் அது.. என்று சொல்லி விட்டு, சுற்றுலா அமைப்பாளர்கள் - பயணிகளை அடுத்த இடத்திற்குக் கடத்திக் கொண்டு போய் விடுகின்றார்கள்..

   தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. விரிவான விபரங்கள் புகைப்படங்கள் அழகு வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 3. ஒரே பதிவினில் நம்தஞ்சையைச் சுற்றிக் காண்பித்துவிட்டீர்கள் ஐயா
  மகிழ்ந்தேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தொடர்ந்து வேறொரு பதிவும் தருவதற்கு ஆவல்
   தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 4. தஞ்சையைச் சுற்றி வந்தோம் உங்கள் தயவால். ராணி மணிக்கூண்டு (Rani's clock tower) அப்போது ரூ.19,000 செலவில் நகராட்சியால் கட்டப்பட்டதாம். இதில் ரூ.12,000க்குக் குறையாத தொகையும், அந்த இடமும் தஞ்சாவூர் ராணிகளால் அன்பளிப்பாகத் தரப்பட்டதாம். (ஆதாரம் : J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, Tamil University, Thanjavur, 1994, p.100)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   புதியதொரு தகவல்.. வியப்பு மேலிடுகின்றது..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 5. நாங்கள் தஞ்சையில் ஓரளவு நீங்கள் குறிப்பிட்ட இடங்களை எல்லாம் பார்த்து விட்டோம். குடும்பத்துடன் (மாமனார், மாமியார் என் கணவரின் அண்ணன் தம்பிகள் என்று கூட்டமாய் ) மன்னர் மாளிகை சென்று தற்போது மன்னருடன் மாலை தேநீர் அருந்தினோம். பலவருடங்களுக்கு முன். அடிக்கடி தஞ்சை பெரிய கோவில், புன்னைநல்லூர் மாரி அம்மன் கோவில் போய் வந்து இருக்கிறோம்.
  பொன்னான நாடு விபரங்கள் மிக அருமை. படங்கள் எல்லாம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னருடன் மாலைத் தேநீர்..

   கொடுத்து வைத்தவர் தாங்கள்..

   சில ஆண்டுகளுக்கு முன் - ஒரு கலை நிகழ்ச்சியின் போது
   நான் அவருடன் பேசியிருக்கின்றேன்...

   தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
 6. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல இடங்களைக் கண்டிருக்கிறேன் ஆனால் கண்டது கை மண்ணளவு என்றே தோன்றுகிறது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 7. பாரம்பரியம் பேசும் தஞ்சையைக் கண்டோம்! தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் பரதநாட்டியம், தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்பைகள் என்று ம், மாமன்னர் ராஜராஜ சோழனின் பெருமையும், தஞ்சைக் கோயில் என்றும் பெருமை பேசும் ஊரல்லவா!! புது ஆறு, சிவகங்கை குளம் அழகு! இப்போதும் இப்படித்தான் இருக்கின்றனவா? தஞ்சாவூர் அருகே கால்நடை மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டிருப்பதாக அறிந்தோம் ஐயா.

  பல இடங்கள் பார்த்தவை என்றாலும் அதுவும் பல வருடங்களுக்கு முன்னர். சமீபத்தில் இருவராலும் செல்ல முடியவில்லை. மிக்க நன்றி ஐயா பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..

   தாங்கள் தஞ்சையைப் பற்றி மீண்டும் குறிப்பிடும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது..

   புது ஆறு மக்களின் அறியாமையினாலும் சிவகங்கைக் குளம் நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் சற்றே மாசடைந்திருக்கின்றன..

   ஈச்சங்கோட்டை உயரின கால்நடைப் பண்ணையை மையமாகக் கொண்டு கால்நடை ஆராய்ச்சி மையம்.. தஞ்சை மண்ணியல் ஆராய்ச்சி மையம் ஒரத்தநாடு வேளாண் கல்லூரி - இவை ஒருங்கு கூடி - அடிக்கடி வேளாண் மற்றும் கால்நடை கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன..

   தங்களின் வருகையும் விரிவான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. இப்பதிவினை படித்து ரசித்தேன். மீண்டும் ஒரு முறை படித்து தஞ்சையின் பெருமைகளை அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. படங்களோடு தஞ்சையை சுற்றிக் காட்டீட்டிங்க ஐயா...
  அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..