நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 20, 2018

சில வார்த்தைகள்...

விடிந்து கொஞ்ச நேரம் ஆகியிருந்தது....

உங்களிடம் சில வார்த்தைகள்.. தொடர் பதிவு.. நாமும் போடவேண்டும்!..

எதையாவது தோண்டுவோம்... என்று கணினியைக் குடைந்த வேளையில்
கேலக்ஸி கிணுகிணுத்தது..

யார்... இந்த வேளையில்!?...

தொலைபேசியை உற்று நோக்கினால் - தூக்கி வாரிப் போட்டது..

இங்கே எப்போது வந்தார்?.. ஜொல்லவில்லையே!... - வியப்பு மேலிட்டது..

மப்ரூக்!..மப்ரூக்!.. எப்போ வந்தீங்க குவைத்துக்கு?..

கொஞ்சநேரத்துக்கு முன்னால தான் வந்தேன்... 
உங்களப் பார்க்கணும்.. எப்படி வர்றது உங்க எடத்துக்கு!..

சரி.. இப்போ எங்கேயிருக்கீங்க!..

ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில!..

சரி.. அங்கேயே ஒரு டாக்ஸி பிடிங்க.. பாஹேல் பீச் ரோட்ல.. மூனாவது குறுக்கு!..

இதோ வந்துடறேன்!..

சற்றைக்கெல்லாம் சிவப்பு நிற மாருதி சுசுகி அருகில் வந்து நிற்க -
அதனுள்ளிருந்து இறங்கினார் -

புன்னகை வேந்தர் கில்லர் ஜி!..


அன்புடன் கட்டியணைத்து வரவேற்றபோது கண்கள் கலங்கி நின்றன..

எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்...

வாங்க.. வாங்க...ஜி!.. நல்லாயிருக்கீங்களா?..
இது உங்க கார் ஆச்சே!.. இதிலேயா குவைத்துக்கு வந்தீங்க!..

ஆமாம்..ஜி!.. நீங்க எப்படியிருக்கீங்க?..

நல்லாருக்கேன் ஜி!... ஆனா -
குவைத்துக்கு இதுல... எப்படி!?... எனக்கு ஒன்னுமே புரியலையே!...

ஜி... நேத்து காலையில தேவகோட்டை ரஸ்தாவில நின்னுகிட்டு அடுத்த பதிவுல யார மடக்கலாம்..ன்னு தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப
ஒருத்தர் வந்து சீக்கிரமா குவைத்துக்குப் போகணும்...ன்னார்..

நமக்குத் தான் - முடியாது.. - ன்னு சொல்லி பழக்கமில்லையே..
தேடி வந்த பார்ட்டிய ஒரே அமுக்கா அமுக்கி 
குவைத்...ல கொண்டாந்து உட்டுட்டு உங்களுக்கு போன் போட்டேன்...

மனம் விட்டு சிரித்தார்...

ஆகா!.. வாங்க உள்ளே போய் பேசுவோம்...

அறைக்குள் நுழைந்ததும் -

ஜீ!.. நல்ல கதகதப்பா வெந்நீர் இருக்கு.. 
குளு..குளு..ன்னு ஒரு குளியலைப் போடுங்க.. 
இட்லி, தேங்காய் சட்னி, கேழ்வரகு புட்டு இருக்கு..
வயிறாரச் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்குங்க...
வழிப் பயண அலுப்பு தீர்ந்திருக்கும்..

மதியத்துக்கு வெஜிடபுள் புலாவ்.. தஞ்சாவூர் தாளிச்சா, 
கோபி மக்கான், ஈத்தம் பழ டோலி, தயிர் பச்சடி, 
கீரை வடை, காசி அல்வா, இஞ்சி டீ.. வேறென்ன வேணும்!..

இதுவே அதிகம்!..வயிறு கொள்ளாது!.. - சிரித்தார் கில்லர் ஜி....

சாயங்காலம் நாம போகப் போற இடம் ஹோட்டல் மிய்ய்...யாவ்!.. 
அங்கே River Thames Cuisine ... ல சூப்பர் டின்னர்.. ஓக்கே..வா!...

ஏ.. யப்பா.. ஓக்கே!..ஓக்கே!..


மதிய உணவு எல்லாம் நல்லபடியாக ஆயிற்று!..

மேல் தளத்தின் பின் கதவைத் திறந்து கொண்டு பால்கனிக்கு வந்தோம்..
வெளி நடையில் சிலுசிலு.. என்று குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது...

ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர்ந்ததும் கில்லர் ஜி அன்புடன் கேட்டார்..

சொல்லுங்கள் ஜி.. குவைத் வாழ்க்கை எப்படிப் போகுது!..

குவைத் ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு...
நம்ம வாழ்க்கை ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கு...

நல்லது சொல்றதுக்கோ செய்றதுக்கோ இது காலமில்லை!....
ஆனாலும், வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியலை...

ஆமா.. கேக்கணும் ..ன்னு நினைச்சேன்..ஜி!.. 
நீங்க ஏன் இன்னும் தொடர் பதிவுல ஒன்னும் போடலை..

வாழ்க்கையே ஒரு தொடர் பதிவு தானே ஜி!...

ஓகோ!.. - சிரித்தார் தேவகோட்டையார்...

எங்க அப்பாவைப் பார்த்து நான்.. என்னைப் பார்த்து என் பையன்..
இனி என்னோட பேரன்!.. நிச்சயம் எதிர்பார்க்கிற மாதிரி தான்...
விதை ஒன்னு போட சுரை ஒன்னு முளைக்காது....ன்னு சொல்வாங்க....

மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும்
போட்ட விதை என்ன என்று மரம் வளர்ந்து காட்டாதோ!..
- இது கவியரசர் கண்ணதாசன் அவர்களோட வரிகள்...

மண்ணுக்கும் பெண்ணுக்குமாக அற்புதமான வரிகள்!..
ஓடிக் கலக்க வேண்டியது உயிரணுக்களா!.. இல்லை!.... 
நன்னம்பிக்கை நல்லொழுக்கம்.. இதெல்லாம் தான்!..

இப்படியெல்லாம் இருந்தாத்தான் விளையும் பயிர் முளையிலே தெரியும்!..

தாயைத் தண்ணித் துறையில் பார்த்தால் 
பெண்ணை வீட்டில் பார்க்கணுமா!.. - ன்னு சொல்றது வழக்கம்!... 
இதுல எல்லாம் எத்தனை அர்த்தங்கள் இருக்கு!...

ஆனா - இன்னைக்கு பொண்ணுங்களே தண்ணியும் கையுமா இருக்குதுங்க!..

ஆமாம் ஜி.. அன்னைக்கு சின்னச் சின்ன வார்த்தைகள்..ல 
பெரிய பெரிய தத்துவங்களைச் சொல்லிட்டுப் போனாங்க.. 
எதுக்கு?.. வருங்கால சந்ததி நல்லா இருக்கணும்..ங்கறதுக்காக!..

ஆனா.. இன்னைக்கு நிலமை அப்படியே மாறிப் போச்சே!..

உண்மைதான் ஜி.. பார்த்துத் திருந்தணும்!.. 
இல்லேன்னா பட்டுத் திருந்தணும்!.. 
இன்னைக்கு ஏதாவது அந்த மாதிரி இருக்கா...

அப்பனுக்கும் மகனுக்கும் ஆகலை.. மாமியார் மருமகளுக்குப் பிடிக்கலை...
கூட்டுக் குடும்பம் ராசியில்லை.. எல்லாத்தையும் போட்டு உடைச்சாச்சு...

அப்போ எல்லாம்.. யாரோட கண்காணிப்பிலயாவது நாம இருப்போம்...

பக்கத்து ஊரு கீத்துக் கொட்டகையில சினிமா பார்க்கப் போனாலும் 
அங்கே ரெண்டு ஆளு - டே.. தம்பி!.. நீ.. துரையண்ணன் மகன் தானேடா.. - ந்னு
நிப்பாங்க... நம்மால ஒரு எல்லையத் தாண்ட முடியாது..

அந்தப் பொண்ணும் இந்தப் பையனும் நேருக்கு நேராப் பார்த்துக்கிட்டா
உச்சந்தலையில சுர்ர்ர்ர்.... ன்னு இருக்கும்.. அதே சமயம் -
தோலை உரிச்சுடுவாங்களோ..ன்னு அடிவயிறும் பிச்சுக்கிட்டு அடிக்கும்!..

ஏன்னா.. மூத்த புள்ளையா பொறந்ததுங்களுக்குன்னு 
தனிப்பட்ட பொறுப்பு இயற்கையாகவே வந்துருக்கும்...

எத்தனையோ அண்ணனுங்க விறகுக் கடையிலயும் 
மளிகைக் கடையிலயும் மாடா ஒழைச்சு ஓடாத் தேஞ்சு 
வாழ்க்கையைத் தொலைச்சிருக்கானுங்க...

எத்ததனையோ அக்காளுங்க தையல் மிஷினோட மிஷினா - 
உழைச்சி உருக்குலைஞ்சி உயிர விட்டுருக்காளுங்க...

இன்னைக்கு அப்படி யாரையாவது காட்ட முடியுமா?...

இப்போ பக்கத்து வீட்டுக்காரன் கூட யாரு..ன்னு தெரியலை...
வீட்டு..ல புத்தி சொன்னாலும் புடிக்கலை...
பள்ளிக் கூடத்து..ல நல்லது சொன்னாலும் புடிக்கலை...

என்னதான் செய்ய முடியும்... ஜி?..
ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. ந்னு பெத்துக்கிட்டு
அத நல்லபடியா வளர்க்கத் தெரியாம தடுமாறுறாங்க...
புள்ளைங்களும் நல்லபடியா வளரத் தெரியாம தடம் மாறுறாங்க!..

ஏன்டி.. என்னை உனக்குப் புடிக்கல்லே....ன்னு கேட்டு 
பொண்ணுங்க மேல ஆசிட் அடிக்கிறான்...

வன்புணர்வு பண்ணதும் இல்லாம 
கருவாசல்..ல கைய விட்டுக் குடைஞ்சி
இரும்புக் கம்பியால சிதைக்கிறான்...

அவனுக்கு என்ன கிடைக்குது.. 
கடுந்தண்டனையா?.. இல்லையே!.
ஆடு, மாடு, கைச் செலவுக்குப் பணம்!..

அப்புறம் எப்படி.. அவனுங்க திருந்துவானுங்க?...

ஆறு வயசுக் குழந்தையக் கெடுத்து தீய வெச்சிக் கொளுத்துறான்..
ஜாமீன்..ல வர்றான்.. பெத்தவ தலைய ரெண்டாப் பொளக்குறான்..

கோர்ட்டு சொல்லுது.. புள்ளைங்களுக்கு பதினெட்டு வயசு ஆயிடுச்சின்னா
பெத்தவங்க அவங்களோட கல்யாண விஷயத்துல தலையிடக் கூடாது...ன்னு...

அவங்களா வந்து சோறு ஊட்டி விட்டாங்க?..
அவங்களா வந்து மூக்கு தொடச்சு விட்டாங்க?... 
அவங்களா வந்து மூத்திரம் கழுவி விட்டாங்க?...

நல்லொழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்காட்டாலும் பரவாயில்லை..
இருக்கிறதக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கிற மாதிரியே எல்லாம் செய்றாங்க!..

ஒழுங்கா படிக்கலே..ன்னா கண்ணு ரெண்டையும் உட்டுட்டு
ஒடம்புத் தோலை உரிச்சுடுங்க!..

அந்தக் காலத்தில இந்த கோரிக்கை ரொம்பவே பிரசித்தம்...

வாத்தியார் இந்தப் பயலைப் போட்டு சாத்துற சாத்து... ல
அந்தப் பயலுக்கு ஒன்னுக்கு வந்திடும்!..  

பள்ளிக்கூடந் தான் பண்பாட்டுச் சின்னமா இருந்தது..

இன்னைக்கு பசங்க பள்ளிக்கூடத்துக்கு பட்டாக் கத்தியோட வர்றான்னுங்க!.. அதை வீடியோ எடுத்து நெட்டு..ல வேற போடுறானுங்க!..

இதுல அறிவுரை ஒன்னுதான் இவனுங்களுக்குக் கேடு.. 
அவனவன் கர்மத்தை அவனவன் அனுபவிச்சுத் தொலைக்கட்டும்!.. 

ரொம்பவும் பொங்கிட்டீங்களே..ஜீ!.. - தேவகோட்டையார் ஆதங்கப்பட்டார்..

எங்க சித்தப்பா என்ன செய்வார்...ன்னா சாலையில கிடக்கிற வாழப் பழத் தோலை எடுத்துட்டு வந்து மூனாவது வீட்டுல நிக்கிற ஆட்டுக் குட்டிக்குக் கொடுப்பார்.. 

அந்த ஆட்டுக் காரனுக்கும் சந்தோஷம்.. நமக்கு செலவு மிச்சம்..ன்னு..
ஒருநாள் இந்த ஆடு வயிறு வீங்கி செத்துப் போச்சு..

அடடே!..

ஆட்டுக்காரன் பஞ்சாயத்துக்குப் போய்ட்டான்.. இந்த ஆளுதான் எதையோ கொடுத்து ஆட்டைக் கொன்னுட்டான்... னு..

அடப்பாவமே...

அப்புறம் ஆட்டை அறுத்துப் பார்த்தால் - வெல்ல மண்டி சாக்கு, பனை ஓலை எல்லாம் வயித்துக்குள்ள இருக்கு... அந்த ஆடு மேய்ச்சல்...ல அதையெல்லாம் பொறுக்கித் தின்னுருக்கு!...

அதுக்கப்புறம் உங்க சித்தப்பா திருந்திட்டாரா?..

அதுதான் இல்லை.. நாம தப்பு செய்யாத வரைக்கும் தெய்வம் நம்ம கூட தான் இருக்கும்.. அப்படி..ன்னு சொல்லிட்டு அதே மாதிரி செஞ்சுக்கிட்டு தான் இருந்தார்... அவரால சுபாவத்தை மாத்திக்க முடியலை...

இந்த சித்தப்பா சொன்னது தான் ஒரு வார்த்தை..

டேய்.. அண்ணன் நெஞ்சு வலிக்காரன்..டா..
அண்ணன் மனசு நோகாம நடந்துக்க!...

என் தந்தைக்கு மனக் கஷ்டம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்!..
இது தான் பதின்ம வயதில் எனக்கு அறிவுரை..

இன்றைக்கு ஆச்சு வயசு அறுபதுக்கு மேலே..
என் தந்தையும் இல்லை.. அன்பு சித்தப்பாவும் இல்லை...
ஆனால் சொன்ன வார்த்தை காதுக்கு அருகிலேயே இருக்கிறது.. 

இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும் ஜி!..

இருந்தாலும் அந்தக் காலத்திலேயே தறுதலைகளும் இருந்தாங்க..
இந்தக் காலத்திலயும் நல்லவங்க இருக்கிறாங்க!..

தவமும் தவமுடையார்க்கே ஆகும்...ன்னு வள்ளுவர் சொன்ன மாதிரி
நல்லவனா வாழ்றதுக்கும் நல்லது செஞ்சிருக்கணும்!...

அறிவுரையைக் கேட்டுக்கிறதுக்கும் கொடுத்து வெச்சிருக்கணும்..

எவ்வளவோ பெரிய மகான்களும் ஞானிகளும் வாழ்ந்த நாடு இது..
அவங்க சொன்னதை எல்லாம் ஒழுங்கா கேட்டிருந்தா
நாம இப்படி தொடர் பதிவு போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது..

நல்லா சொன்னீங்க!..

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில கண்ணுக்குத் தெரியாத ஒரு வேலி இருக்கு..
நூல் மாதிரி தான் அந்த வேலி... அறுத்துக்கிட்டு அந்தப் பக்கம் போயிடலாம்..

ஆனா- திரும்பி உள்ள வர்றது தான் கஷ்டம்.. அபிமன்யு சக்ர வியூகத்தை உடைச்சிக்கிட்டு துரியோதனன் கிட்ட போன மாதிரி தான்..

ஆனாலும் நல்லது எது.. கெட்டது எது.. எதுவும் தெரியலே..
எல்லாமே மாறிப் போச்சு..

ஒரு காலத்து...ல குடிகாரப் பயலுங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்க...
இன்னைக்கு கல்யாண வீட்டுல..யே சாராய விருந்து நடக்குது.. மாப்பிள்ளையே போதையில வர்றான் மணவறைக்கு..

இன்னும் எவ்வளவோ இருக்கு காலக் கொடுமை எல்லாம்... 
ஏன் அதைய எல்லாம் பேசி நல்ல பொழுதைக் கெடுப்பானேன்!...

எப்படியோ ஓட்டைச் சட்டியிலயும் கொழுக்கட்டை வெந்துகிட்டு இருக்கு!...

ஆகட்டும் ஜி.. நான் புறப்படுகின்றேன்... - கில்லர் ஜி அவர்கள் புறப்பட முனைந்தார்..

ரெண்டு நாளைக்கு இங்கே இருக்கலாமே...

இல்லே.. இல்லே.. அங்கிட்டு நெறைய சோளி கெடக்கு...
ஆகா.. கேக்க மறந்துட்டேனே... என்னமோ இந்தப் பதிவில சொல்றேன்னு..

அதை.. ஏன் சொல்லிக்கிட்டு..

சொல்லுங்க... வெளியில சொன்னாத்தானே மனசு ஆறும்...

அது ஒன்னும் இல்லை.. ஜனவரி அன்னைக்கு இடப் பக்கம் முழுதும் கையிலயும் கால்..லயும் திடீர்..ன்னு வலி.. இயக்கம் குறைஞ்சு போச்சு..

என்ன ஜீ... இப்படிச் சொல்றீங்க!.. - அதிர்ந்தார் கில்லர் ஜி..

ரெண்டு நாள் ரொம்பவும் கஷ்டம்.. 

என்ன இது.. இவ்வளவு கவனக் குறைவா இருந்திருக்கீங்களே!.. 

மார்கழி கடைசி நாள் பதிவில இலை மறைவா இந்த சேதிய சொன்னதும் ஸ்ரீராம், கீதா, துளசிதரன், இளமதி, ஜம்புலிங்கம் ஐயா, தேன்மொழி கிரேஸ் - இவங்களோட நீங்களும் ஆறுதலா எழுதியிருந்தீங்க... 

என்னோட பிரச்னைகள் தீரணும்.. ன்னு நீங்கள்..லாம் 
வேண்டிக்கிட்டப்போ எனக்கு ஆனந்தக் கண்ணீர் தான் வந்தது..

இப்போ பரவாயில்லை... என்றாலும் இயல்பா தட்டச்சு செய்ய முடியலை.. தோள் வலியோட தான் பதிவுகளையும் கொடுத்துக்கிட்டு இருக்கிறேன்...

சரி.. கிளம்புங்க ஊருக்கு...

லீவு கேட்டிருக்கிறேன்.. 
அதெல்லாம் சரியாகிடும்.. கவலைய விடுங்க.. 
நல்ல நேரத்துல இதை பேசியிருக்கக் கூடாது...
சரி.. வாங்க காபி சாப்பிடலாம்!..

ரொம்ப மகிழ்ச்சி.. இருந்தாலும் 
உங்க சிரமத்தைப் பார்க்கிறப்போ மனதாரச் சொல்லமுடியலை..
உடம்பைப் பார்த்துக்குங்க.. அப்போ நான் புறப்படுகிறேன்...

ஆகட்டும் ஜி.. கவனம்!..

கில்லர் ஜி அவர்கள் விடை பெற்றுக் கொண்டார்..


சாலையில் விரைந்தோடிய சுசுகி - தொலை தூரத்தில் புள்ளியானது..
***

உங்களிடம் சில வார்த்தைகள்.. 

இதைப் பற்றி வெளியாகிய தொடர் பதிவுகள் அனைத்துமே 
அருமையாக இருந்தன... ஒவ்வொன்றும் சிறப்பு...

அவற்றின் சிறப்பை என்னுடைய பதிவும் எய்துமா!.. தெரியவில்லை..

நட்பு வளையத்தில் அனைவருக்குமே இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால்
இனி யாரை அழைப்பது!...

அனைவருக்கும் 
அன்பின் வணக்கமும் நன்றியும்!..

வாழ்க நலம்..
*** 

புதன், செப்டம்பர் 21, 2016

புது வீடு தேடி..

அன்புக்குரிய கில்லர்ஜி அவர்கள் சில தினங்களுக்கு முன்பாக
தமது தளத்தில் சிறுகதை ஒன்றினைப் பதிவிட்டிருந்தார்...

அதனை இந்த இணைப்பில் காணலாம்..

அந்த சிறுகதை வெகுவாக மனதைப் பாதித்தது...

அப்போதே சொல்லியிருந்தபடி, அதன் தொடர்ச்சி இதோ!..


தாத்தா.. தாத்தா.. எங்கேயும் போகாதீங்க.. இங்கே நிழலுக்கு வாங்க!.. இங்கேயே நில்லுங்க!..

யாரும்மா.. நீ!.. ஏன் எங்களை நிக்கச் சொல்றே?..

எங்க அப்பா தான் நிக்கச் சொன்னாங்க!..

என்னது அப்பாவா?.. யாரு பெத்த புள்ளையோ தெரியலையே!.. இம்புட்டுப் பிரியமா பேசுது.. யாரடி தங்கம் நீ?.. உம் பேரு என்னா?.. எந்த ஊரு நீ!..

எம் பேரு.. ரத்ன காமாட்சி...

என்னது?..

ரத்ன காமாட்சி!.. நானு.. எங்க அப்பா அம்மா.. எல்லாரும் கோயிலுக்குப் போய்ட்டு வர்றோம்.. இதோ எங்க அப்பாவே வந்துட்டாங்க!....

அம்மா.. காமாட்சியம்மா... வணக்கம்.. நல்லாயிருக்கீங்களா... ஐயா.. நீங்க எப்படியிருக்கீங்க?.. என்னது.. வெயில் நேரத்தில பஸ்டாண்டு மத்தியில தடுமாறிக்கிட்டு நிக்கிறீங்க?...

யாரப்பா.. நீ?.. நினைப்புல வரலையே!.. கோவிச்சுக்காதேப்பா!..

நாந்தாம்மா.. செந்தில்!.. செந்தில் குமார்.. உங்க வீட்டுல ரெண்டு வருஷம் இருந்தேனே.. ஞாபகம் வருதா!.. என் கல்யாணத்துக் கூட வந்தீங்களே!..

ஆ.. செந்திலா.. என் ராசா!.. எப்படிய்யா.. இருக்கே!.. பாவி மனசுல மறந்து போச்சேய்யா.. வயசாயிடிச்சு.. அதான்.. என்னங்க.. யாரு தெரியுதா?.. நம்ம செந்திலு!..

காதருகே - கையைக் குவித்து வைத்த சொல்லவும் - பெரியவர் ரத்தினத்தின் முகத்தில் மலர்ச்சி..

தட்டுத் தடுமாறி இந்தக் கையில இருந்த கழியை அந்தக் கைக்கு மாற்றிக் கொண்டு புருவத்தின் மேல் நிழல் கூட்டியபடி உற்றுப் பார்த்தார்..

காமாட்சியைப் பார்த்தார்.. கண்கள் கலங்கின..

அவருக்குப் புரிந்து விட்டது போலும்...

மெதுவாக கையை செந்தில் குமரனை நோக்கி நீட்டினார்...

பெரியவரின் கையைப் பற்றிக் கொண்டான் செந்தில்..



வெயில் நேரத்தில இங்க என்ன பண்றீங்க?.. அவன் .. கூட வரலையா?..

பெயரைக் கேட்டதும் சுளுக் .. என்று காமாட்சியம்மாவிடம் இருந்து விம்மல் வெளிப்பட்டது...

பதறிப் போனான் - செந்தில்..

என்னம்மா.. என்ன நடந்தது?..

அதெல்லாம் எதுக்கு ராசா.. நீ எப்படி இருக்கே.. உன் பொஞ்சாதி எங்கே?.. இவ உம்மகளா?..

ஆமா.. பேரு ரத்ன காமாட்சி!..

கேட்டதுக்கு சொன்னாளே!.. ராசாத்தி!..

ஐயா பேரையும் உங்க பேரையும் சேர்த்து வெச்சிருக்கேன்...

அப்போது தான் விளங்கியது காமாட்சியம்மாளுக்கு!..

விழிக்கடையில் நீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன...

சரி.. வாங்க போவோம்... அதோ.. நிக்கிது நம்ம கார்!.. கார்ல.. தான் உங்க மருமக சுந்தரி இருக்கா!..

செந்திலு.. நாங்க ரெண்டு பேரும் வெளியூருக்குப் போறோம்!...

அம்மா.. உங்களுக்குத் தான் பொய் பேசத் தெரியாதே!.. அப்புறம் எதுக்கு வீண் பேச்சு?.. எனக்கு எல்லாம் தெரியும்!...

ஆருமில்லாமப் போனோம்!.. - காமாட்சியம்மாளின் கண்கள் கலங்கின..

இருந்தாலும் ..

ஏன்.. நான் இல்லையா!... உரிமையா அங்கே வந்து இருக்க வேண்டியது தானே.. உங்களை நான் காப்பாத்த மாட்டேனா?.. என்னைய எப்படி அந்நியமா நெனைக்கலாம்?...


உனக்கு எதுக்கு செந்திலு கஷ்டம்?..

கஷ்டமா?.. அன்னைக்கு ஆஸ்ரமத்தில இருந்து வெளியே வந்து மறுபடியும் அனாதையா நின்னப்போ சோறு போட்டு வளர்த்தீங்களே!.. அதுக்குப் பேரு என்ன?.. 



முழுசா ரெண்டு வருஷம் உங்க ஆதரவுல வாழ்ந்திருக்கேன்.. இன்னைக்கு நான் நல்ல இருக்கேன்..அப்படின்னா.. அதுக்கு நீங்க காரணம் இல்லையா!.. என்னையும் அவனையும் தனித்தனியாகவா வளர்த்தீங்க?...

ஆனாலும்.. பாவி.. மகன் .. இந்த மாதிரி சொல்லுவான்..னு நெனைக்கலையே!.. 

அவனை படிக்க வெச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனை.... அன்னைக்கே சுண்ணாம்புக் காளவாய்.. ல வேலைக்கு சேர்த்து விட்டுருக்கலாம்...

பாசம்.. நேசம்..ன்னு பார்த்ததுக்கு இப்படிப் பாதகஞ் செஞ்சிட்டானே!..

உஸ்..உஸ்.. - என்று ரத்தினம் தடுத்தார்.. ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று அர்த்தம்...

யாருப்பா.. தாத்தாவும் ஆத்தாவுமா!.. - ரத்ன காமாட்சி வினவினாள்...

ஆமாண்டா.. செல்லம்.. இனிமே நம்ம வீட்டுல.. தான் இருக்கப் போறாங்க!..

இது வரைக்கும் எங்கே இருந்தாங்க?..

இங்கே ஒரு சித்தப்பா வீடு.. அங்கே இருந்தாங்க!..

அப்படிச் சொல்லாதே.. உன் வாயால இன்னொருக்க அவனை தம்பி..ன்னு சொல்லாதே...

இருக்கட்டும்... இந்நேரம் கோப தாபம் தீர்ந்திருக்கும்..ன்னா அவன் வீட்டுக்கே போவோம்.. நான் கொண்டு போய் விடுறேன்... கண்டிச்சு வைக்கிறேன்...

இல்ல செந்திலு... உங்க ஐயாவே மனசு வெறுத்துட்டாரு... அப்பன் ஆத்தாளையே பாரமா நெனைக்கிற காலமா போச்சு.. எங்காவது சத்திரம் சாவடி..ன்னு பார்த்து எங்கள அங்கே கொண்டு போய் சேர்த்து விடு..  ஒனக்குப் புண்ணியமாப் போகும்!..

மறுபடியும் அந்த பேச்சு எதுக்கு..ங்கறேன்... இதோட உங்க கஷ்டம் எல்லாம் தீர்ந்தது.. ன்னு நெனைச்சுக்குங்க... உங்க ஆயுசுக்கும் நான் காப்பாத்தறேன்..  சரி.. முதல்ல.. வயித்துக்கு ஏதாவது சாப்பிட்டுட்டு.. கிளம்புவோம்..

செந்திலும் ரத்ன காமாட்சியும் ஆளுக்கு ஒரு பக்கமாக கையைப் பிடித்துக் கொள்ள - அருகிருந்த உணவகத்தை நோக்கி நடந்தார்கள்..

***

எங்கிட்டு வெச்சிடா.. பேசிக்கிட்டு இருந்தாங்க?..

இங்ஙன.. தாண்டா!.. அந்த ஆளு நல்லா டிப் டாப்பா இருந்தான்!..

வா.. அந்த பழக்கடையில கேப்போம்... அண்ணாச்சி... இங்கால எங்க ஐயாவும் ஆத்தாவும் ஒரு ஆளுகூட பேசிக்கிட்டு இருந்தாங்களாமே.. நீங்க கண்டிங்களா?...

உங்க அப்பனும் ஆத்தாளுமா.. அப்படின்னு தெரியாது!.. ஆனா அவங்க ஒரு இன்னோவா... ல ஏறிப் போயி அரை மணிக் கூறாவுதே!..

எந்தப் பக்கம் போனாங்கன்னு... கோவிச்சுக்கிடாதீங்க.. வண்டி நம்பரு என்ன..னு பார்த்தீங்களா?..

இல்லையே.. தம்பீ!..

சரிங்க.. அண்ணாச்சி.. நாங்க.. வாறோம்!..

கார்ல கூட்டிட்டுப் போற அளவுக்கு யாராயிருக்கும்?.. ஒருவேளை கிட்னி திருடங்களா இருப்பானுங்களோ?.. டேய்.. போலீஸ்.. ல சொல்லுவோமாடா?...

வேண்டாம்... இருக்குற பிரச்னையே போதும்!.. என்ன.. வீட்டு வேலைக்கு ஒரு நல்ல ஆளாப் பார்க்கணும்!..

என்னடா.. இப்படி சொல்றே?.. பெத்தவங்க இல்லையா?.. இப்படியே விட்டுடுறதா?..

வா.. போகலாம்!.. எங்கேயாவது பிழைச்சிருந்தா நல்லா இருக்கட்டும்!.. நிம்மதியா இருக்கட்டும்!..

கண்களைத் துடைத்துக் கொண்டான்..

கடும் வெயில் மாறி - சட்டென.. மழை இறங்கியதில் புழுதி வாசம் கிளம்பியது..

***

மழையினூடாக விரைந்து கொண்டிருந்தது கார்..

பையினுள்ளிருந்து ஒரு சால்வையை எடுத்துக் கொடுத்தாள் சுந்தரி...

ஆதரவாக அதைப் போர்த்திக் கொண்டார் ரத்தினம்..

அப்போ.. இது வரைக்கும் அவனுக்கு உண்மை தெரியாது!.. இல்லையா?..

ஆமாம்!.. அவனுக்குத் தெரியாது!.. 

காமாட்சியம்மாளின் மடியில் செந்திலின் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள்..


என்னங்க.. தெரியாது!.. என்ன.. அது?.. - சுந்தரி ஆவலுடன் செந்திலைக் கேட்டாள்..

சாலையிலிருந்து கண்களை அகற்றாமலேயே - செந்தில் சொன்னான்..

அவன்.. இவங்களோட பிள்ளை இல்லை..ங்கறது!..

மழைத்துளிகள் - கண்ணாடியின் மீது விழுந்து -
அங்குமிங்குமாகத் தெறித்துக் கொண்டிருந்தன..

*** 

செவ்வாய், ஜனவரி 19, 2016

பயணங்கள் முடிவதில்லை

1981 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தின் ஒருநாள்..

சென்னை மீனம்பாக்கத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் முதன்முதலாக சிங்கப்பூருக்கு பயணம்..

அங்கு இருந்தபோது (50 + 50) 100 கி.மீ., கடலில் பயணம்..

மேலும், சந்தோஷா தீவுக்கு தொங்கு தொட்டிலில் (Cable Car) பயணம்..

வாழ்க்கையில் இன்று வரைக்கும் எத்தனையோ பயணங்கள் -

பெட்ரோல் டேங்கர், லாரி, பேருந்து, சிற்றுந்து, சைக்கிள், மாட்டு வண்டி!..

ரோடு ரோலரில் - கூட பயணித்திருக்கின்றேன்..

ஆனாலும் -

ரயில் பயணம் தான் எப்போதுமே மகிழ்ச்சியானது!..

அன்றைய நாட்களில், கரிப்புகையுடன் -

ஜிகு.. ஜிகு.. ஜிகு.. ஜிகு.. க்கூகூ.. ஊ!.. - என, ஓடிய புகை வண்டி தான் மனதில் நிறைந்து நிற்பது..

இடையில் ஆற்றுப் பாலங்களைக் கடக்கும்போது,
தடக்.. தடக்.. தடங்..தடங்!.. - என்று பேரிரைச்சல் வேறு..

அவ்வப்போது,  ....ப்ப்பூஸ்!.. - என்று நீராவியின் வெளியேற்றம்..

என்னதான் நவீன வசதிகளுடன் புதிய ரயில்கள் வந்தாலும் - மனதிற்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது - பழைய புகை வண்டிதான்!..


சில தினங்களுக்கு முன்னால் - 

மகிழ்நிறை தளத்தில் திருமிகு மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தொடர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்..

நம்மை யார் அழைக்கப் போகின்றார்களோ!..  - என, நினைத்துக் கொண்டேன்..

இரு பொழுதுகளுக்குள் - அபுதாபியிலிருந்து அழைப்பு..

தண்ணீர் நிற்பதற்குள் பிடித்துக் கொள்ள வேண்டும்!.. - என,
தெருக் குழாயடியில் குடங்கள் இடித்துக் கொள்வதைப் போல - 

இங்கே, இணைய இணைப்பு - மிகவும் இழுவையாக இருக்கின்றது..

இருந்தாலும், பற்பல இடையூறுகளுக்கு இடையில்,
பதிவுகளை வழங்குவது இனிமையாகவும் இருக்கின்றது...

தொடர் பதிவினை ஆரம்பித்து வைத்த -
திருமிகு மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும்

தொடர் பதிவினுக்கு அழைப்பு விடுத்த -
திருமிகு தேவகோட்டை கில்லர் ஜி அவர்களுக்கும்

பயணங்கள் முடிவதில்லை என,  என்னுடன் பயணித்து
(இனிய!) கருத்துரை வழங்கக் காத்திருக்கும் அனைவருக்கும்
உளமார்ந்த நன்றி..
* * *

1 உங்களது முதல் பயணம் எப்போது என நினைவில் இருக்கின்றதா?..

பரிசல்..

அதில் தான் முதல் பயணம்..

அந்தப் பயணம் ஐந்து வயதில்.. இன்றும் நினைவில் உள்ளது..

தஞ்சை அரியலூர் சாலையில் திருவையாற்றைக் கடந்ததும் கொள்ளிடம் ஆறு.. ஆற்றில் பாலம் கிடையாது..


அந்த காலகட்டத்தில் கொள்ளிடத்தைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டுமானால் பரிசல் ஒன்றே உற்றதுணை..

கொள்ளிடத்தின் தென்கரையில் விளாங்குடி - தஞ்சை மாவட்டம்..
வடகரையில் திருமானூர்.. தற்போது அரியலூர் மாவட்டம்..

நீர் வறண்டிருக்கும் காலத்தில் மாட்டு வண்டிகளில் ஆற்றைக் கடக்கலாம்.. சுமை ஏற்றப்பட்ட வண்டிகள் என்றால், பெருத்த சிரமம்..

தஞ்சையிலிருந்து அரியலூர் பெரம்பலூர் பகுதிகளுக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்பவர்கள் - விளாங்குடியில் மூட்டைகளை இறக்கி பரிசலுக்கு மாற்றி -  கொள்ளிடத்தைக் கடந்ததும் - திருமானூர் கரையில் பரிசலில் இருந்து மூட்டைகளை இறக்கி மீண்டும் வண்டியில் ஏற்றிச் செல்வார்களாம்..

2 மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?..

மணமகனாகச் சென்று மனைமங்கலம் கொண்டு -
இனியவளோடு இல்லந்திரும்பிய நாள்!..

வாழ்க்கைப் பயணம்!..
அன்றைய மகிழ்ச்சிக்கு ஈடு இணை - இப்புவியில் இனியும் உண்டோ!..

3  எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?..

அவ்வப்போது அமையும் சூழ்நிலைகள்.. இதுதான் என்றில்லை..

4  பயணத்தில் கேட்க விரும்பும் இசை?..

பின்னோக்கி ஓடும் இனிய காட்சிகளில் ஆழ்ந்திருப்பதே - சந்தோஷம்..

புறப்படும் இடம் பேருந்து நிலையம் எனில் -
பாட்டு போட்டு - மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் பேருந்துகளில் ஏறுவதில்லை..

5  விருப்பமான பயண நேரம்?..

இளந்தென்றல் தவழும் இனிய விடியற்காலை..


ஆனால்,
அடுத்தவர்களின் சூழ்நிலைகளை மனதில் கொள்ளாமல் -
விடியற்காலைப் பொழுதிலும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் செல்லும் -
ஈவு இரக்கமற்ற ஓட்டுநர்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்..

6  விருப்பமான பயணத் துணை?..

வேறு யார்!.. மனைமங்கலம் தான்!..

7  பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?..

பயணத்தின் போது புத்தகங்கள் வாசிப்பதில்லை...
கண்களைக் கருத்துடன் காக்க வேண்டாமா!..

8  விருப்பமான Ride அல்லது Drive ?..

என்றென்றும் விருப்பமானது - சைக்கிள்!..



ஆனால்,
சாலையில் நடந்து செல்வதே ஆபத்தாக இருக்கும் சூழல் இப்போது!..
எனவே - நெரிசலுக்கு இலகுவாக - TVS 50 XL Super..

சிற்றுந்து ஓட்டுதற்குத் தெரியும்.. வெகுதூரம் பயணித்ததில்லை..

9  பயணத்தின் போது முணுமுணுக்கும் பாடல்?..

சைக்கிள் பயணத்தின் போது - பாடலை முணுமுணுக்கும் வேலையெல்லாம் இல்லை..

கிராமத்தின் சாலைகள் தானே!..
மனம் மகிழ்ந்து - மடை திறந்தாற்போல பாடிக்கொண்டே செல்வேன்..

அப்படிப் பாடும் பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன..

ஆனாலும்,

ரத்தினம் - நவரத்தினம் போல சில வரிகள்..

இதோ உங்களுக்காக!..

பாடல்கள் - பயணக் காட்சிகளாக இருக்கும் என்பதை,
கனம் கோர்ட்டார் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன்!..

1)
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும்
உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும்
காரம் போகாது
பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு
பாழ்பட்டுப் போகாது
பாதை விட்டு விலகிய கால்கள்
ஊர்போய்ச் சேராது..

காற்றைக் கையால் பிடித்தவனில்லை
தூற்றித் தூற்றி வாழ்ந்தவனில்லை..

ஓஹோஹோ.. மனிதர்களே..
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்.. ஓஹோஹோ!..

2)_
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே..
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா..
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா..

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..



3)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே
குலமகளே வருக..
எங்கள் கோயிலில் வாழும் காவல் தெய்வம்
கண்ணகியே வருக..
மங்கலச் செல்வி அங்கயற்கண்ணி
திருமகளே வருக..
வாழும் நாடும் வளரும் வீடும்
வளம் பெறவே வருக..

ஒளிமயமான எதிர்காலம் 
என் உள்ளத்தில் தெரிகிறது..
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை
காதில் விழுகிறது..

4)
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே!..

வந்தநாள் முதல் இந்தநாள் வரை
வானம் மாறவில்லை வான்மதியும்
மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும்
கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை..

மனிதன் மாறிவிட்டான்..
மதத்தில் ஏறிவிட்டான்...


5)
கருவினில் வளரும் மழலையின் உயிரில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம்பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை..

அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உரிமையடா!..

6)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர் காற்று
எந்தன் இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்தில் சேரன் கொடிபறந்த
அந்தக் காலம் தெரிகிறது..
அந்தக் காலம் தெரிகிறது..

புதிய வானம்.. புதிய பூமி..
எங்கும் பனிமழை பொழிகிறது..
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது..

7)
காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே..
வானம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே..

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..

அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்..
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்...

8)
கொஞ்சநேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில்கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்...

ஒன்னா இருக்கக் கத்துக்கணும் -இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..
காக்கா கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக் 
கத்துக் கொடுத்தது யாருங்க?..

9)
காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதைக் கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன்..

ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி
சலசல எனச் சாலையிலே..
செல்செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே..


10 கனவுப் பயணம் ஏதாவது?..

உண்மையில் கனவுப் பயணம் என்றெல்லாம் ஏதும் இல்லை..
ஏனெனில், வாழ்க்கையே ஒரு பயணம் தான்!..


பயணங்கள் முடிவதில்லை..
முடிவதேயில்லை!..

வாழ்க நலம்.. 
***