நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 01, 2022

வழி நடை 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 15
வியாழக்கிழமை


இருமுடியைத் தலையில் தாங்கியடி - சாமியே சரணம் ஐயப்பா!.. என்று உயிரின் ஆழத்தில் இருந்து குரல் எழுப்பிக் கொண்டு சபரி மலையை நோக்கி நடப்பதற்கு
பெரும்பாலான  பக்தர்களின் முதல் தேர்வு பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியே.. 

வண்டிப் பெரியாறு வழி, மற்றும் சாலக்காயம் வழி - என வேறு இரண்டு வழித்தடங்கள் இருந்தாலும்

இந்த வனத்தின் வழியாகத் தான் ஐயப்பனாகிய மணிகண்டன் நடந்து சென்றான்.. எனவே இவ்வழியே செல்வது தான் யாத்திரை - என்று பலரும் கூறுவர்..

பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறுவது மட்டுமே கணக்கில் சொல்லப்பட்ட காலமும் இருந்திருக்கின்றது.. 

மணிகண்டன் தனது அவதார காலத்தில் பரிவார கணங்களுடன்  தங்கிச் சென்ற பாதை இது. ஆதலால், பெரிய பாதையில் மிக்க மகத்துவம் உண்டு. 

அந்த நாட்களில்  பெரிய பாதையின்  முக்கியமான இடங்களில் இருமுடிகளை இறக்கி வைத்து, அங்கு சாந்நித்யமாகியுள்ள தேவதைகளுக்கும்
பூத கணங்களுக்கும் பூஜைகள் நடத்திய பிறகு புறப்படுவது வழக்கமாம்.. 

இப்போதும் அந்த பூஜை நடைமுறைகள் வழக்கத்தில் இருக்கின்றன..

வனத்தினுள் ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை எனப்படுகிறது. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு தேவதை  காவல்  பொறுப்பில் இருக்கிறது. 

இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும் என்பது.. 

தேவதைகளின் காவலை மீறிச் சென்றால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே அன்றைய குருசாமிகள் இரவு நேரத்தில் மலை ஏறுவதை  அனுமதிப்பதில்லை. இப்போதும் இரவில் பயணம் செய்வது தகாது..

எருமேலியில் இருந்து சந்நிதானம் வரையான வன வழி 48 கி.மீ என்று சொல்கின்றனர்..

1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6. கல்லிடுங்குன்னு
7. இஞ்சிப்பாற – உடும்பாறக் கோட்டை
8. முக்குழி
9. கரிவலந்தோடு
10. கரிமலை
11. வலியான வட்டம்
12. சிறியான வட்டம்
13. பம்பா நதி
14. நீலிமலை
15. அப்பாச்சி மேடு
16. சரங்குத்தி
17. சபரி பீடம்
18. சந்நிதானம்

எருமேலி:

எருமேலி ஸ்ரீ சாஸ்தா கோயில்
அத்தனை பக்தர்களும் கூடும் இடம். முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்குவர். ஐயப்பன் வனம் புகுந்ததை நினைவு படுத்தும் விதமாக பேட்டை துள்ளல் நடைபெறுகிறது..

அம்பலப்புழா சங்கம்  ஆலங்காட்டுச் சங்கம் ஆகியன எருமேலி பேட்டை துள்ளலில் பங்கெடுக்கும்  முக்கிய குழுக்கள்..

ஸ்வாமியின் வாள்
மணிகண்டன் பயன்படுத்திய வாள் எருமேலியில் புத்தன் வீடு எனும் இடத்தில் இன்றும் உள்ளது.. 

எருமேலியின் மேற்கு பகுதியில் கிராத (வேடுவ) சாஸ்தா  விளங்குகின்றார்..  கிராத சாஸ்தாவை தியானித்து, அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்குவர்..

அதன் பின்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தட்சணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

பூங்காவனம் எனப்படும் கானகத்தினுள் நுழையும் 
முன்பு வாபரனை வணங்கி அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.. 

வாபரன் என்பவர்  மணிகண்டனுடன் கயிலாய மலையில் இருந்து வந்த சிவகணம்.. 

எருமேலியில்
இருந்த பழமையான வாபரன் கோட்டம் இப்போது இல்லை..
ஏதோ ஒரு கலவரத்தி ன் போது தகர்க்கப்பட்டு விட்டதாக சொல்கின்றார்கள்..  எனவே கோட்டைப் படியில் - பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே -
மஹா கணபதியையும் சிவ கணமாகிய வாபரனையும் -  மானசீகமாக வணங்கிக் கொண்டு வனத்துக்குள் செல்ல வேண்டும்..

பேரூர் தோடு:
பேரூர் வாய்க்கால். பெரியபாதையின் முதல் தாவளம் – தங்குமிடமும் இதுதான். 


இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

அந்தக் காலத்தில் இங்கே வெளிச்சப்பாடு எனும் அருளாடிகளின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரிய பாதைக்குள் நுழைய முடியும்.. அதெல்லாம
இப்போது இல்லை.. 

வெளிச்சப்பாடு விபூதி ப்ரசாதம் தந்தால் தான் மேற்கொண்டு யாத்திரையை தொடரலாம். அதுவன்றி அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டு விட்டால் வீட்டுக்குத் திரும்பி விட வேண்டியது தான். 

யாத்திரைக்கு அனுமதியில்லாதவர்கள் - அனுமதி பெற்றுக் கொண்ட ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடை பெற்றுக் கொள்ள வேண்டும் - என்பது தான் அப்போதைய நடைமுறை..

ஐயனின் ஆணைப்படி,
இப்படியான விரத மகிமைக்குக் கட்டுப்பட்டுத் தான்-
பூத கணங்களும், வன தேவதைகளும், துஷ்ட மிருகங்களும் –  பக்தரை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

காளை கட்டி:
காளைகட்டி ஆஸ்ரமம் என்று பெயர். பலரும் சிவபெருமான் காளையைக் கட்டி வைத்த இடம் என்று கூறுவர். ஆனால் அதுவல்ல உண்மை..

காளைகட்டி ஸ்ரீ சிவன்
இந்த இடத்தில் சிவ ஆலயம் உள்ளது. இவ்விடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேஸ்வரன்.  சாஸ்தாவின் கணங்களில் இவரும் ஒருவர்..

எனவே நந்தியம்பெருமானை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையை தொடர வேண்டும்.

அழுதை நதியும் மலையும்:
அலஸா என்ற நதியே இன்றைய அழுதை நதி.


பம்பையின் கிளை நதியான அழுதையில் குளித்து விட்டு அழுதை மலையைக் கடக்க வேண்டும்.

அழுதையில் மூழ்கும் போது சிறுகல் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்..

அழுதையில் குளித்து விட்டு இருமுடியை தலையில் ஏற்கும் முன்பு குருநாதரை வணங்கி தட்சணை கொடுத்து வணங்கிக் கொள்வார்கள். 

கல்லிடுங்குன்னு:
கல்லை இடும் குன்று.. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இது தான்..

அழுதை மலை ஏறி  மேட்டுப் பகுதியில் கல்லை இட வேண்டும். 

கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் இவ்விடத்தில் தான் மணிகண்டன் -
மகிஷியை பூமிக்குள் அழுத்தியதாக ஐதீகம்..

உடும்பாற - இஞ்சிப்பாற கோட்டை:
அழுதை மேட்டைக்  கடந்தால் உடும்பாறைக்கோட்டை .. 

இங்கு சிலர் இரவில் தங்குவது உண்டு. இங்கு ஸ்ரீ பூதநாதரின் சாந்நித்யம் நிலை பெற்றிருப்பதை நன்றாகவே உணர்ந்து கொள்ளமுடியும்..

பூத கணங்கள் சூழ  வ்யாக்ரபாதன் என்ற பெயரில் இங்கு அவர் திகழ்கின்றார். 

இரவில் பூதத்தானின் சங்கிலிச் சத்தம் கேட்கும். 

பூதநாதரை வணங்கி பானகம் நிவேத்யம் செய்து அனுமதி பெறுவது வழக்கம்.

சற்றே அருகில்  இஞ்சிப் பாறைக் கோட்டை. இங்கு சாந்நித்யம் கொண்டிருப்பவள் தேவி. 

முக்குழி:
அழுதாமலை இறக்கம் - அடிவாரம் தான் முக்குழி. இங்கு  பத்ரகாளியின் சாந்நித்யம். 

இங்கு தேவிக்கு குங்கும அர்ச்சனை நடத்துவர்..இங்கே சிறியதொரு மாரியம்மன் கோயில் இருக்கின்றது..

கரிவலந்தோடு:
முக்குழியின் அருகில் ஏற்றமும் இறக்கமும் இல்லாத இடம்.

கரி என்றால் யானை. யானைகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்ற இடம்.. 

யானைகள் தண்ணீர் அருந்துவதற்காகத் திரளுகின்ற பகுதி.. 

புது சேரி ஆற்றின் இந்தப் பகுதி சற்று ஓய்வெடுக்கும் இடம் மட்டுமே..

இங்கிருந்து புறப்பட்டால் கரிமலை அடிவாரம்.கடுமையான மலை ஏற்றத்துக்கு ஆயத்தமாகும் இடம் இது. 

முன்பெல்லாம்  இங்கே இரவில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை. இப்போது பலரும் அங்கே தாவளம் போடுகிறார்களாம்..

சிறிது நேரம்
கரிவலந்தோட்டில் தங்கி விட்டு -

கரிமலையில்
பயணத்தைத் தொடர்வோம்..

ஓம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
***

15 கருத்துகள்:

 1. பயணம் பற்றிய குறிப்புகள் அருமை, சுவாரஸ்யம். நான் மாலை போட்டதில்லை. ஆர்வம் இருந்தது. இயலாமல் வாய்ப்பில்லாமல் போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் பற்றிய குறிப்புகள் அருமை, சுவாரஸ்யம்.

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஸ்வாமி ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்லும் பயணம் குறித்த இந்தப்பதிவு இது வரை சபரிமலை கோவிலுக்கு செல்லாதவர்களுக்கும், பெண்களாகிய எங்களுக்கும் சுவாரஸ்யமான பதிவாக இருக்கிறது. கோவிலுக்கு செல்லும் வழிநடை பயணங்களை விரிவாக, விளக்கமாக சொன்ன விதம் அருமை. மேலும் தொடர்ந்து செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐயப்பஸ்வாமி அனைவரையும் தன்னருளால் காத்திட அவர் அடிபற்றி தொழுது பிரார்த்தித்துக் கொள்கிறேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வழிநடை பயணங்களை விரிவாக, விளக்கமாக சொன்ன விதம் அருமை. //

   அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   சரணம் ஐயப்பா..

   நீக்கு
 3. மிக அருமையான விளக்கம். எனக்குத் தெரிந்து பெருவழியில் தான் அனைவரும் செல்வார்கள். இப்போல்லாம் கிடைத்த வழியில் செல்கின்றனர். வண்டிப்பெரியாறு வழி மிகவும் சுருக்கமான வழி என்பார்கள். மிக விளக்கமாக ஒவ்வொன்றையும் அதனதன் காரண காரியங்களோடு விளக்கி இருக்கிறீர்கள். எங்க வீட்டில் என் கணவரும்/பையரும் சபரிமலை நாலைந்து முறை சென்றிருக்கின்றனர். பையர் இப்போ 2018 ஆம் ஆண்டில் கூட அம்பேரிக்காவில் இருந்து மாலை போட்டுக் கொண்டு விரதம் இருந்து இந்தியா வந்து இங்கே ஸ்ரீரங்கத்திலிருந்து சபரிமலை சென்று வந்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா நீங்க அப்ப சொல்லியிருந்தீங்க...நினைவிருக்கு

   கீதா

   நீக்கு
  2. //விரதம் இருந்து இந்தியா வந்து இங்கே ஸ்ரீரங்கத்திலிருந்து சபரிமலை சென்று வந்தார்.//

   முன்பு ஒரு பதிவில் இதை எழுதியிருக்கின்றீர்கள்

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ..

   சரணம் ஐயப்பா.

   நீக்கு
 4. படிப்படியாக விளக்கம் அருமை ஜி

  பதிலளிநீக்கு
 5. விளக்கம் சிறப்பு...

  சாமியே சரணம் ஐயப்பா...

  பதிலளிநீக்கு
 6. சபரிமலைப்பயண வழி வெகு சிறப்பு. ஒவ்வொரு இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது அருமை. கன்னி சாமிகள் எருமேலி கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் செய்துவிட்டுத்தான் மலையேற வேண்டும் என்று சொல்லிக் கேட்டதுண்டு. ஆமாம் பேட்டைத்துள்ளல் எருமேலியில் நடப்பது பற்றி எங்கள் வீட்டு ஆண்கள் சொல்லியிருக்கின்றனர்...வீடியோவும் காட்டியிருக்கின்றனர்.

  அருமையான விளக்கம். இப்போதெல்லாம் ராத்திரியும் போகிறார்கள். முன்பு சென்றதில்லை. வண்டியிலும் சென்று விடுவதாகத் தெரிகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..
   சரணம் ஐயப்பா.

   நீக்கு
 7. சபரிமலை ஐயப்பன் பயணம் நல்ல விளக்கங்களுடன் அருமையான கட்டுரை . சரணம் ஐயப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   சரணம் ஐயப்பா.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..