நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 17
சனிக்கிழமை
கரிவலந்தோட்டில்
சிறிது ஓய்வுக்குப் பின் இதோ கரிமலையில் பயணம் தொடங்குகின்றது..
கரிமலை:
யானைகளின் சரணாலயம் கரிமலை. கரிமலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் உள்ள கணபதி கல்லை வணங்கிக் கொள்வர். கரிமலையின் அதிஷ்டான தேவதை பகவதி..
அடிவாரத்திலேயே வன மஹாகாளியின் சாந்நித்யம்..
இங்கே தியானம் செய்பவர்களுக்கு வராஹி தரிசனம் கிடைக்கும்..
நெடிதுயர்ந்து நிற்கும் கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்டது. பக்தர்களின்விரத பலத்தை சோதிப்பது கரிமலை..
அவரவர் மனத்தின் உண்மைகளை வெளிக் கொணரும் இடமாகவும் இதைக் கருதுவர்..
![]() |
மலையில் மழை |
இது சத்திய பீடம். ஆதலால் அனாவசியமான பேச்சு வார்த்தையைத் தவிர்க்க வேண்டும்.
கரிமலையில் வைத்துச் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லும் சத்தியமாகும்.. இங்கே குருசாமிகளை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுதல் நலம்..
கரிமலை நாதனை வணங்கி அங்கிருக்கும் நாழிக் கிணற்று நீரைப் பருகி சற்றே இளைப்பாறி விட்டு கரிமலையில் இருந்து இறங்க வேண்டும்.
கரிமலையின் ஏற்றமும் இறக்கமும் அதுவரை மனம் திறந்து சரணம் சொல்லாதவரையும் சரணம் சொல்ல வைக்கும் வல்லமை உடையவை.
முறையாக விரதம் இருந்து கரிமலை ஏறி வருபவரிடம் பகவான் ஏதாவதொரு ரூபத்தில் வந்து துன்பத்தைத் துடைத்துச் செல்கிறான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.. அனுபவம்.
சிறியான வட்டம், வலியான வட்டம் – பம்பை:
பம்பை என்று இன்றைக்குச்
சொல்லப்படும் பகுதி உண்மையான பம்பையல்ல..
வண்டி வாகனங்கள் பெருகியதும் பிற்காலத்தில் உருவானதுதான் இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம் அமைந்துள்ள பம்பைப் பகுதி..
முந்தைய காலத்தில் வலியான வட்டத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியே பம்பை எனப்பட்டது..
கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை கருப்பசாமியின் சாந்நித்யம். இங்கே கருப்பசாமியை அழைத்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு.
கரிமலையின் அடிவாரம் தான் வலியானைவட்டம். இவ்விடத்தில் பம்பை தேவகங்கைக்கு சமமானது.
பகவானின் காலடி பட்ட இந்த புண்ணிய பூமிக்கு நிகராக வேறொன்றும் இல்லை என்பதே உண்மை..
ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் வருகைக்காக ரிஷிகள் தவமிருந்த இடம். இன்றும் மகான்களும், ஞானிகளும் கண்ணுக்குப் புலப்படாமல் தவம் செய்கின்ற இடம் தான் வலியான வட்டம்.
இதனால் தான் குருமார்கள் பலரும் இங்கே தங்கி பூஜை ஹோமங்கள், அன்னதானம், பம்பா சத்தி, பம்பா விளக்கு என, அனைத்தையும் செய்கின்றார்கள்..
இங்கு நடத்தப்படும் அன்னதானத்தில் ஐயப்பன் ஏதாவதொரு உருவத்தில் வந்து பங்கு கொள்கிறான் என்ற காரணத்தால், இங்கே செய்யப்படும் அன்னதானத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்.
இங்கே தங்குமிடத்துக்கு (விரி) யார் வந்தாலும் ஐயப்பனே வந்ததாகக் கருதி அன்னதானம் செய்வர்..
முன்பெல்லாம் 108 விரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் அடுப்புச் சாம்பலை சேகரித்து பிரசாதமாக கொண்டு வரும் வழக்கம் இருந்தது..
![]() |
பம்பா நதி |
இங்கே பம்பையில் தீர்த்தமாடி குருவுக்கு தட்சணை தந்து வணங்கி கட்டெடுத்துக் கொண்டு யாத்திரையை தொடர வேண்டும்.
![]() |
நீலிமலை |
பம்பையைக் கடந்தவுடன் முதல் மலையாகிய நீலிமலையில் நடந்து அப்பாச்சி மேடு எனும் இடத்தில் பூத கணங்களுக்காக மாவு உருண்டைகளையும் பொரி உருண்டைகளையும் வீசி விட்டு நடந்தால் சரங்குத்தி ஆலமரம்..
மணிகண்டன் தனது ஆயுதங்களை இங்கே களைந்ததாக ஐதீகம்.
எரிமேலியில் பெறப்பட்ட சரக்கோலை இங்கே விட்டு விடுவது சம்பிரதாயம்,
அங்கிருந்து எதிரில் நோக்கினால் சந்நிதான தரிசனம்..
சரங்குத்தி ஆலமரத்தில் சரத்தினைக் குத்தி விட்டு, விரதத்தின் குற்றம் குறைகளை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்..
சரங்குத்திக்கு எதிரில்
சபரி மூதாட்டி வாழ்ந்த இடமாகிய சபரி பீடம்..
இங்கே கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு நடந்தால் சிறிது தூரத்தில் சந்நிதானம்.
சந்நிதானத்தை நெருங்குகையில் பக்தி மேலிட்டு அடியார் கண்களில் நீர் வழியும்..
இதோ - ஐயன் ஐயப்ப ஸ்வாமியின் சத்யமான
பொற்படிகள்..
பக்தர்கள் உணர்வு பூர்வமாக
பதினெட்டாம் படிகளை நெருங்குவர்..
![]() |
சந்நிதானம் மேல்புறம் |
கடுத்த சாமியையும் கருப்ப சாமியையும் வணங்கி உத்தரவு பெற்று,
படித்தேங்காய் உடைத்து சத்யமான படிகளைத் தொட்டு வணங்கி ஏறுதல் வேண்டும்..
ஓம்
பூதாதிபாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
சந்நிதானத்தில் பகவானைத் தரிசனம் செய்து வணங்கி வலம் வருதல் வேண்டும்..
நெய்யபிஷேகம் முடித்த பின்னர், மாளிகைப் புரத்து அம்மனையும் மணி மண்டபத்தில் நவக்ரகங்களையும் நாகர்களையும் தரிசனம் செய்தல் வேண்டும்..
![]() |
கற்பூர ஆழி |
அபிஷேக நெய் பிரசாதம் பெற்று கொண்ட பின்னர் நெய் நிறைத்திருந்த தேங்காயை சரணகோஷத்துடன் கற்பூர ஆழியினுள் இடுதல் வேண்டும்..
சங்கராந்தியன்று மாலைப் பொழுதில் பந்தளத்தில் இருந்து தலைச்சுமையாகக் கொண்டு வரப்படும் ஆபரணங்கள் ஐயனுக்கு அணிவிக்கப்படும்...
அந்திப்பொழுதில்
மலை உச்சியில் ஜோதி தரிசனம் ஆகும்..
தரிசனம் கண்டபின்
குருவுக்கு காணிக்கை கொடுத்து அவர் கையால் பிரசாதம் பெற்றுக் கொண்டு இருமுடியைச் சுமந்தபடி கீழ் இறங்க வேண்டும்..
சந்நிதானத்தில் இருந்து புறப்படும் போது மனதிற்குள் எழும் கேள்வி -
ஐயப்பா!.. உன்னை மறுபடியும் எப்போது காண்பது?..
முத்திரை மாலையை எக்காரணம் கொண்டும் வழியில் கழற்றலாகாது. பிரசாதங்களை வீட்டில் கொண்டு வைத்து, தீபாராதனை செய்து, குருசாமியை மனதார வணங்கி மாலையைக் கழற்றி விட்டு பிரசாதங்களை தானும் தரித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் வழங்க வேண்டும்..
எனது குருசாமி சொல்லக் கேட்டது - முன்பெல்லாம் ஊரின் எல்லையில் இருந்து கொண்டு ஊருக்குள் தகவல் அனுப்புவார்களாம்.. வீடுகளில் தீண்டல் குற்றம் குறைகளை நீக்கி விட்டு மேள தாளத்துடன் ஊருக்குள் அழைத்துச் செல்வார்களாம்..
யாத்திரை விரதத்தில் கட்டுப்பாடுகள் மிகவும் முக்கியம். இதற்கான சடங்கு சம்ப்ரதாயங்களை
வகுத்துத் தந்தவர்
ஸ்ரீ அகத்திய மகரிஷி
என்பது வழிவழியான
நம்பிக்கை..
எனது குருசாமிகளிடம் இருந்து கற்றதையும் கேட்டதையும் மனதில் கொண்டு
இரண்டு வருடம் பெரிய பாதையிலும் இரண்டு முறை குமுளி - புல்மேட்டுப் பாதையிலும்
பலமுறை எருமேலி, நிலக்கல் - பம்பை வழியிலும் சென்று ஸ்வாமி தரிசனம் செய்திருக்கின்றேன்..
இதையெல்லாம் மனதில் கொண்டும்
மேலும்,
இன்றைய இணைய தளங்களில் பெரிய பாதை பற்றிய
கூடுதல் தகவல்களை இயன்றவரை தேடித் தொகுத்தும்
படங்களை இணைத்தும்
இந்தப் பதிவினை வழங்கியுள்ளேன்..
தகவல்களையும் படங்களையும் இணையத்தில் வைத்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
ஐயப்பன் பிழைகளைப் பொறுத்து அருள்வானாக!..
ஐயன் அருளுண்டு
என்றும் பயமில்லை
ஐயா சரணம் ஐயா..
ஐந்து மலைகளில் அமர்ந்தவனே எங்கள்
ஆதியே சரணம் ஐயா..
ஓம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...
***
சிறப்பான தொகுப்பு. கரிமலை பயண அனுபவங்கள் ஏதாவது இருந்தால் சொல்லலாமே... நிறைய இடங்களில் குருவுக்கு மறுபடி மறுபடி காணிக்கை என்கிற சம்ப்ரதாயம் வருகிறது.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம்..
நீக்குதாங்கள் கேட்டிருக்கும் விஷயம் மகத்தானது.. ஓரளவுக்காவது விவரமாகச் சொல்ல வேண்டும்.. சொல்வதற்கு முயற்சிக்கின்றேன்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
அழகான படங்கள் விபரங்கள் நன்று.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஅருமை...
பதிலளிநீக்குசாமியே சரணம் ஐயப்பா...
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குசாமியே சரணம் ஐயப்பா..
வழிநடை கரிமலை விவரங்கள் எல்லாம் அருமை துரை அண்ணா. நீங்களும் மூன்று பாதைகள் வழியாகச் சென்றிருப்பதாகச் சொல்லியிருக்கீங்க. அந்த அனுபவங்களை எழுதலாமே.
பதிலளிநீக்குகீதா
அது நடந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விட்டது...
பதிலளிநீக்குஆகட்டும்.. பார்க்கலாம்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
Geetha Sambasivam "வழிநடை 2” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
பதிலளிநீக்கு//பெருவழிப்பாதையின் வழி செல்வோர்களுக்கான விபரங்களை எல்லாம் அழகாய்த் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க. இந்த அடுப்புச் சாம்பலை எடுத்து வருவது எங்க வீட்டில் எடுத்து வந்திருக்காங்க. நினைவில் இருக்கு. அதே போல் இருமுடிகட்டிக்கொண்டு போகும்போதும் மனைவி பின் தொடரக்கூடாது என்பார்கள். முன்னெல்லாம் போல் இப்போவும் ரயில் நிலையத்தில் இருந்து கொண்டு தான் வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தார்கள். நாங்க ஆரத்தியெல்லாம் கரைச்சு வைச்சுட்டு வீட்டுப் பெரியவங்க போய்க் கூட்டி வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்றோம்.// என்ன இது நமக்குப் பதிலைக்காணோமேனு தேடிட்டு வந்து பார்த்தால் வழக்கமான ப்ளாகர் விளையாட்டு. என்னோட மெயில் பாக்சில் இருந்து பிடிச்சு இழுத்துட்டு வந்து போட்டிருக்கேன். இதுவாவது மறையாமல் இருக்கணும் பிள்ளையாரப்பா!
ஐயன் அருள் உண்டு என்றும் பயம் இல்லை..
நீக்குசற்றே சோர்வாக இருந்து விட்டேன் நேற்று.. கருத்து ஒளிந்திருந்ததைக் காணவில்லை..
பதிவுக்கு அக்கா வருகை தந்து மேலதிகச் செய்திகளைத் தந்திருப்பது மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
பம்பையில் தீர்த்தமாடி. தொடரும் ஐயப்ப தரிசனம் ஜோதி தரிசனம் கண்டு வணங்கி முடிவது சிறப்பு. ஐயப்பா சரணம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் ..
நீக்குமகிழ்ச்சி..நன்றி..
ஐயப்பா சரணம்..