நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 07, 2022

சிறு கதை


நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 21
  புதன்கிழமை

இன்றொரு சிறுகதை
-: மஹாராஜ மடாலயம் :-


டுண்டு டுடுண்.. டுடு டுண்..
டுண்டு டுடுண்..

டுண்டு டுடுண்.. டுடு டுண்..
டுண்டு டுடுண்..

" ஓங்கார ஜோதியளே
ரீங்கார சத்தியளே!.. "

சம்பங்கிப் பூக்களின் வாசத்துடன் சாம்பிராணியின் வாசமும் சேர்ந்து கமழ்ந்தது..

உடுக்கையின் சன்னமான உறுமல்.. 
அத்துடன் அடுத்து ஒன்றும் பேச முடியாதபடிக்குப் பொங்கி வருகின்ற அருள் பாட்டு..
 
உள் அறையும் முன்னிருந்த கூடமும் கனத்திருக்கு - 

உடுக்கையும் பாட்டும் உயிரை உருட்டிக் கொண்டிருந்தன..

வேப்பிலையுடன் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டிருந்த நிலை வாசலில் கருநீல வண்ணத்தில்  பெரிய திரைச் சீலை.. 

அதில்,
ஓம் சக்தி என்று தங்க ஜரிகை எழுத்துக்கள்..

இந்தப் பக்கத்தின் விசாலமான கூடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஜமக்காளத்தில் அமர்ந்திருந்தார்கள்..

அவரவர்க்கும் அவரவர் பிரச்னை.. என்றாலும் 
மனித இலக்கணத்தின் படி அறைக்குள் பேசப்படும் பிறத்தியார் விஷயத்தை கேட்காதது போலக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. 

உள்ளதை உள்ளபடி உடைத்துச் சொல்லுகின்ற பூசாரியார் இவர்.. பரம்பரை பாண்டித்யம்..

பூசை பத்ரகாளிக்கு என்று தான் பெயர்.. 

ஆனால்,
உடுக்கையை கையில் எடுத்து விட்டால் கருப்பசாமி வருவார்.. சுடலை மாடசாமி வருவார்.. முனீஸ்வரன் வருவார்.. மதுரை வீரன் வருவார்.. ஆஞ்சநேயர் கூட ஓரிரு முறை வந்திருக்கின்றார்.. 

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் காலையில் முதல் ஆளாக வந்து காத்திருப்பவருக்கு  பூசாரியார் எப்போது அருள் வாக்கு சொல்வார் என்பது அவருக்கே தெரியாது.. 

முன்பதிவு, வரிசை எண் என்று எதுவும் கிடையாது.. உள்ளிருந்து அழைப்பு யாருக்கு வருகின்றதோ அவருக்கே அருள் வாக்கு..

வாய்க்கா பிரச்னை..  ஆள் யாரப்பா.. உள்ள வாங்க!..

ஆட்டுக்குட்டிய பறி கொடுத்த ஆத்தா.. எழுந்து வாம்மா!..

- என்கிற மாதிரி தான் அழைப்பு வரும்.. 

நிஜத்தில் அந்தந்த பிரச்னைக்குத் தான் அவர்கள் வந்திருப்பார்கள்..

உள் மனதில் இருப்பது இவருக்கு எப்படித் தெரியும்?..

இந்த ஆச்சரியத்தினாலேயே இவர் இந்தப் பகுதியில் பிரசித்தம்.. 

மஹாராஜ மடாலயம் - என்ற இந்த பதினைஞ்சு ஏக்கர் நிலமும் அந்தக் காலத்தில் மன்னர் கொடுத்த மானியம்.. 

எத்தனையோ தலைமுறை ஆச்சு.. இன்னைக்கு இந்த இடத்தோட மதிப்பு ஏடாகூடம்.. 

அன்றைக்கு வெள்ளையனே பயந்து விலகிப் போன இந்த மடாலயத்தின் மீது இன்றைக்கு ஆசை வைத்திருப்பவர்கள் எத்தனை எத்தனையோ பேர்..  

வலை வீசி வருகின்ற அத்தனை பேருக்கும் ஒரே ஒரு பதில் தான்.. வாந்தி பேதி... 

ஒரே ஒரு பதில்.. ன்னு சொல்றீங்க.. இது ரெண்டும் தனித்தனி விஷயமாச்சே.. 

தனித்தனி விஷயந்தான்.. ஆனா, ரெண்டும் எதிராளிய ஒரே நேரத்துல போட்டுத் தாக்கும்.. ங்கறது தான் விசேஷம்!..

மடாலயத்தின் எல்லைக்குள் கால் வச்சதுமே - ரெண்டு பேரை கூத்தாண்டி சாமி கட்டிப் பிடிச்சுக்கும்.. கை காலை உதறிக்கிட்டு குதிப்பானுங்க..

இதைப் பார்க்கிற மற்ற ஆட்களுக்கு வேஷ்டி நனைந்து விடும்.. 

பிறகென்ன.. இந்தப் பூசாரியாரிடமே ஓடி வருவார்கள்.. 

இதுதாண்டா சமயம் : என்று பிரம்பால் நாலு சாத்து சாத்தி முகத்தில் வேப்பிலையால் அறைந்து விபூதியை அள்ளி அடித்து வேதாளம் கணக்காக வெளியே அனுப்பி வைப்பார்  பூசாரியார்..

இருந்தும் திருந்தாத ஜென்மங்கள் சில கடப்பாரையுடன் வந்து நிற்பதும் உண்டு..  

ஒரு சமயம் துடியான ஆள் ஒருத்தன் மேலிடத்திற்கு இது பற்றி ரகசியமாக  எழுதிப் போட்டு விட்டான்..  அவ்ளோ தான்..

அன்றைக்கே அவன் வீட்டு சமையல் அறைக்குள் பன்றிக் கூட்டம் புகுந்து அதகளம் செய்த வைபவமும் நடந்தேறியது..

ஆக, 
மடாலயத்துடன் உரசிப் பார்த்தவர்கள் ஒதுங்கிப் போகும் நிலைக்கு ஆளானார்கள்..

இது இப்படியிருக்க,
உள்ளிருந்து  அழைப்பு வந்தால் மட்டுமே அன்றைக்கு அருள் வாக்கு கிடைக்கும்.. இல்லையேல் அடுத்த கிழமை தான்..  

தனது முறை வர வேண்டும்.. தடை ஏதும் ஆகிவிடக் கூடாது.. - என்ற பதற்றம் அங்கே இருப்பவர்களிடம்..

மற்றொரு சமயம், பிரச்னையைச் சொல்லிக் கூப்பிடக் கூடாது என்று ஒருவன் தகராறு செய்தபோது

" என்னென்னமோ பேர் ஒனக்கு
எத்தனையோ சென்மத்துல
என்னான்னு கூப்பிடுவேன்..
ஏதுன்னு பேசிடுவேன்!.. "
-  என்று பாட்டு வந்தது..

" பாம்பாக சில காலம்
பன்னியின்னு பலகாலம்
நாயாகத் திரிஞ்சதெல்லாம்
நானுரைக்க லாகாதே..
இந்த ஒரு சென்மத்துல
ஏதுனக்கு நல்ல பேரு?..
அடுத்து வரும் சென்மத்துல..
.............."

" போதும் சாமீ போதும்.. நிப்பாட்டுங்க!.. "

அரண்டு போய் அலறினார்கள் அத்தனை பேரும்..

அதற்குப் பிறகு பெயருக்காக யாரும் காத்திருப்பதில்லை..

உள்ளிருந்து உடுக்கைச் சத்தம் நின்றது..

" அடுத்த பௌர்ணமிக்கு நீங்க மட்டும் வாங்க!. "

" என்னாது?.. பௌர்ணமி புதன் கிழமையா.. எதுவானாலும் சரி.. இங்க பூச உண்டு.. ஞாயிறு, செவ்வா, வெள்ளி  - அது தனி...

வாயில் வேப்பிலைக் கொத்துடன் இளம் பெண் ஒருத்தியை வெளியே அழைத்து வந்தனர் சிலர்..

இங்கே இருப்பவர்களிடம் பரபரப்பு.. 

" வீடு விட்டு வீடு விரட்டணும்.. ன்னு வந்திருக்கிறவங்க  வாங்க.. "

ஏக காலத்தில் இரண்டு பெண்கள் எழுந்தனர்.. இரண்டு பேருக்கும் மனதில் குழப்பம்..

" யாரைக் கூப்பிடுறார்?.. "

"  புள்ளையார் கோயில் தெரு.. "

உள்ளிருந்து விளக்கம் வந்ததும் ஒருவருக்கு
மகிழ்ச்சி.. மற்றவருக்கு ஏமாற்றம்..

" கும்புடறேன் சாமி.. "
 - என்றபடி பூசாரியாருக்கு எதிரில் இருந்த தாம்பாளத்தில் நூற்று ஒரு ரூபாய் தட்சணையுடன்
பூஜைப் பொருட்களை எடுத்து வைக்கவும்,

" ம்.. ஒரு முடிவோடத்தான் வந்து இருக்கறே!.."

அந்தப் பெண் விக்கித்து  இருக்கையில் பூசாரியார் தொடர்ந்தார்..

" பொன்னான ஒரு பொண்ண  
பூப் போல கொடுத்து விட்டு 
பூ முடிச்ச வீட்டுலய 
பூத்திருக்க விடலையே
மாதாவின் மடிப் பிள்ளை
மாப்பிள்ளையத் 
தான் பிரிச்சி.. "

- பூசாரியாரின் பாட்டு நின்றது..

" அவங்க வீட்ல இருந்து மருமகனப் பிரிச்சி உன் வீட்டுக்குள்ள தான் வச்சிருக்கே.. மாப்பிள்ளை  முன்னூறு மைலுக்கு அங்கிட்டு சம்பாத்யம்..  வர்றதும் போறதுமா இருக்கான்.. கையில புள்ளையும் இருக்கு.. "

" ஆமாங்க.. சாமி!.. " - தலையை ஆட்டிக் கொண்டது அந்த நடுத்தர வயது..

" மருமகன் உனக்குக் கட்டுப்பட்டு நிக்கிற மாதிரி மை போட்டு வச்சிருக்கே.. எல்லாம் சில்லறைப் பயலுங்க செஞ்சி கொடுத்த வேலை.. "

" நான்... "

பேச முயன்ற பெண்மணியை
பேசாதிருக்கக் கை காட்டினார் பூசாரியார்...

" இப்போ சம்பந்திங்க ரெண்டு பேரும் பெரியவன் வீட்டுக்கு ஓடிற மாதிரி வேலைப்பாடு வேணும் உனக்கு.. அதுக்காகத் தான் இங்கே வந்திருக்கே.. "

பேச்சு மூச்சு இல்லை அந்தப் பெண்மணியிடம்.. 

" உம்மருமகன் சம்பாத்தியம் பூராவும் மக வழியா உங்கிட்ட தான் வருது.. இருந்தும் உனக்கு நிம்மதி இல்லை.. இப்போ காசு வரும்.. பணம் வரும்.. இன்னும் கொஞ்ச நாள்..ல அந்தப் பெரியவங்களோட வயத்தெரிச்சலும் வருமே..  வாசல்.. ல வந்து நிக்குமே.. என்ன செய்யப் போறே?.. "

" உனக்கு உம் மக மேல பாசம் இருக்குற மாதிரி தானே அவங்களுக்கு அவங்க புள்ள மேல பாசம் இருக்கும்?.. அவங்க பேத்தி..ய பார்க்க வந்தாக் கூட நீ பார்க்க விடறதில்ல.. இந்தப் பாவத்துக்கு எல்லாம் யார் ஆளாகுறது?.. " 

சாம்பிராணித் தணலை விசிறி விட்டபடி தொடர்ந்து பேசினார் பூசாரியார்..

" எப்போ திருமாங்கல்யம் ஆனதோ அப்பவே அவங்க வீட்டு சொத்து ஆகிட்டா உம்மக... அவ மேல ஒனக்கு ஒரு உரிமையும் கிடையாது.. கால நேரம் சரி இல்லை.. ஒழுங்கு மரியாதையா உம் மகளை மாமனார் வீட்டுக்கு அனுப்பி வச்சுடு.. "

" நீ நெனைக்கிற மாதிரி எல்லாம் இங்கே செய்ய முடியாது.. உனக்கும் ரெண்டு பசங்க இருக்கானுங்க.. ரெண்டு மருமக வருவாளுங்க..  அதை மறந்துடாதே.. "

" இது சர்வ சக்தி பீடம்.. இங்கே நுழைஞ்சதுமே நீ செஞ்சு வச்சிருந்த மை வேலை எல்லாம் புகைஞ்சு போச்சு.. "

மெல்லப் புன்னகைத்தார் பூசாரியார்.. 

அதைத் தாங்க மாட்டாமல் அழுகை பீறிட்டது அந்தப் பெண்ணிடமிருந்து..

" இப்படி நாஞ்சொன்னா நீதி பேசறாரு.. நியாயம் பேசறாரு.. ம்பாங்க..  அடுத்தவன் சோத்தை தட்டி விடுறது நல்ல குடியானவன் செய்ற காரியம் இல்லை.. நீ நீதிய வாழ வச்சா அது உந்தல முறைய வாழ வைக்கும்.. மறந்துடாதே.. "

" என்னை மன்னிச்சிடுங்க சாமீ.. மகளும் மருமகனும்  நல்லா இருக்கணும்.. ன்னு நெனச்சு இப்படி செஞ்சுட்டேன்.. நாளைக்குக் காலைல முதல் வேலையா எம் மகளை கொண்டு போய் அவங்க வீட்ல  ஒப்படைச்சிடறேன்.. "

" இந்தா..  இந்த விபூதிய புள்ளைகளுக்குப் பூசி விடு.. இந்தக் காணிக்கைய நீயே எடுத்துக்கிட்டு போ!.. "

- என்றபடி அந்தப் பெண்ணின் நெற்றியில் திருநீறு பூசி விட்டார்..

திரையை விலக்கிக் கொண்டு அந்தப் பெண்மணி வெளியே வந்தபோது கூடத்தில் இருந்த  ஆட்களில் பாதிப்பேர் அவரவர் வீட்டுக்குப் போயிருந்தார்கள்..
***

18 கருத்துகள்:

 1. தப்பான விஷயத்துக்கு தாக்கல் கேட்க வந்தவர்களோ வீட்டுக்குப் போன அந்த பாதி பேர்?    நல்ல கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தப்பான விஷயத்துக்கு தாக்கல் கேட்க வந்தவர்களோ வீட்டுக்குப் போன அந்த பாதி பேர்.. //

   அதே.. அதே..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. என்னென்னமோ பேர் உனக்கு 
  எத்தனையோ சென்மத்துல 
  என்னான்னு கூப்பிடுவேன் 
  ஏதுன்னு பேசிடுவேன் 

  கதையில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன 

  பாம்பாக சிலகாலம் 
  பன்னியின்னு பலகாலம் ...
  ------------------------------
  ------------------------------
  இந்த சென்மத்துல 
  ஏதுனக்கு நல்ல பேரு? 

  குணத்தை வைத்துச் சொல்கிறாரோ.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குணமோ அப்படியான பிறவியோ.. அவருக்குத் தான் இது தெரியும்..

   மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 3. சொல்லுவோர், சொல்லும் இடத்தில் வைத்துச் சொன்னால் திருந்துவோர் திருந்துவார் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 4. கூடத்தில் இருந்த ஆட்களில் பாதிப்பேர்... ஹாஹாஹா..... உண்மையைச் சொல்லும் கதை. பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின்
   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

   நீக்கு
 5. அப்பெண்மணிக்கு இதே அறிவுரையை வேறு யாரேனும் சொல்லியிருந்தால் கண்டிப்பாகக் கேட்டிருக்கமாட்டார். பூசாரி, குறி என்று வரும் போது நடக்கிறது. நம்பிக்கை. நல்லதுக்கும் ஒரு பின்புலம் வேண்டியிருக்கிறது.

  கடைசி வரி சூப்பர். உள்ளே நடந்தது வெளியில் கேட்டிருக்கும் போல!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // அப்பெண்மணிக்கு இதே அறிவுரையை வேறு யாரேனும் சொல்லியிருந்தால் கண்டிப்பாகக் கேட்டிருக்கமாட்டார்..//

   உண்மை.. உண்மை..
   சாத்வீகமாக சில செய்திகளைப் புரிய வைக்க முடியாது..

   அன்பின் வருகையும்
   கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 6. பாட்டெல்லாம் உங்கள் வரிகள் தானே அண்ணா? நல்லாருக்கு

  கதை அருமை. முதலில் இடையில் சில புரியவில்லை. மீண்டும் வாசித்த போது புரிந்தது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பாட்டெல்லாம் உங்கள் வரிகள் தானே அண்ணா? நல்லாருக்கு.. //

   ஆமாம்.. நான் தான் எழுதினேன்..

   அன்பின் வருகையும்
   கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 7. கதை மிக அருமை. இப்படி பிரச்னம், குறி சொல்லுவதன் மூலமும் கூட நல்ல அறிவுரைகள் தரமுடியும் என்ற கருத்தைச் சொல்லும் விதமான கதை அருமை, சார்.

  பொதுவாகக் குறி சொல்லுதலில் இப்படிச் சொல்வதுண்டா தெரியவில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நேரில் கவனித்த
   ஒரு விஷயத்தை இங்கே சற்று விவரித்துச் சொல்லியிருக்கின்றேன்..

   ஒரு சில நல்லவர்கள் பிறருக்கு எதிராக எதுவும் செய்வது இல்லை..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி துளசிதரன்..

   நீக்கு
 8. காத்திருந்தவர்கள் பயந்து கொண்டு ஓடிவிட்டார்கள் போலும். இப்படி எல்லாமும் குறிகேட்க வருவாங்களா? என்ன மனிதர்கள்! தன் பெண்./மாப்பிள்ளை தன்னுடனேயே இருக்கணும். ஆனால் மருமகள்னால்? இந்த அம்மா என்னென்ன செய்திருக்குமோ? பிட்டுப்பிட்டு வைச்சுட்டாரே குறி சொல்பவர்! நல்லதொரு கதை. அல்ல நிகழ்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இப்படி எல்லாமும் குறி கேட்க வருவாங்களா? என்ன மனிதர்கள்!.. //

   மணிகண்டனுக்கே ஏவல செய்தவர்கள் வாழ்கின்ற ஊர் இது .

   நான் நேரில் கவனித்த
   ஒரு விஷயத்தை இங்கே சற்று விவரித்துச் சொல்லி இருக்கின்றேன்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றியக்கா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..