நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 30, 2024

ஸ்ரீ வைத்ய நாதம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 16
செவ்வாய்க்கிழமை


இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்


அம்பிகை
ஸ்ரீ தையல்நாயகி


தீர்த்தம்
சித்தாமிர்தம்
தலவிருட்சம்
வேம்பு 

சம்பாதி, ஜடாயு, என்ற கழுகரசர் இருவரும் ரிக் வேதமும்  முருகப்பெருமானும், சூரியனும் அங்காரகனும் காமதேனுவும் வழிபட்ட  திருத்தலம்.. 

தண்டக வனத்தில் இருந்து சீதையை வஞ்சத்தால் இராவணன் கடத்திச் சென்ற போது கழுகு அரசனான ஜடாயு இடைமறித்து அவனைத் தாக்கினான்..

இராவணனின் எதிர்த் தாக்குதலுக்கு உள்ளாகிய ஜடாயு சந்திரஹாசம் எனும் வாளால் வெட்டப்பட்டு - தன் சிறகை இழந்து பூமியில் விழுந்தான்.. 

பெரிய பெருமாளும்  சிறிய பெருமாளும் சீதையைத் தேடிக் கொண்டு வந்தபோது அவர்களிடம் நடந்ததைச் சொல்லி விட்டு ஸ்ரீராமபிரானின் மடியில் உயிர் துறந்தான்..

ஜடாயுவிற்காக கண்ணீர் வடித்த ஸ்ரீராமபிரான் தம்பியுடன் சேர்ந்து ஜடாயுவிற்கு இங்கே தகன க்ரியைகளைச் செய்ததாக தலபுராணம்..   

சித்தாமிர்த திருக்குளத்தின் வடகரையில் (கோயிலின் உட்பிரகாரம்)   ஜடாயுவிற்கு தீ மூட்டப்பட்ட  குண்டம் உள்ளது.. 

மனித குலத்தை எல்லாப் பிணிகளில் இருந்தும் காப்பதற்காக இறைவன் இங்கு வீற்றிருப்பதால் - 
வைத்தீஸ்வரன்..
வைத்தியலிங்கம்..
வைத்தியநாதன்..


அம்பிகை ஸ்ரீ தையல் நாயகி. சர்வ ரோக நிவாரணி.. தைலப் பாத்திரத்துடனும்,  வில்வ மரத்தின் வேரடி மண்ணுடனும் ஐயனுடன் எழுந்தருளியிருக்கின்றாள்..

தல விருட்சமாக
கிருத யுகத்தில் கொன்றை.
திரேதா யுகத்தில் அரசு.
துவாபர யுகத்தில் வில்வம்.
கலி யுகத்தில் வேம்பு..

மேற்கு முகமான திருக்கோயில்..

தீர்த்தம் சித்தாமிர்தம்..
நடுவில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம்..
இந்தக் குளக்கரையில் கற்பக விநாயகர்..

கருவறைக்குப்  பின்னால் கிழக்குத் திருச்சுற்றில்  நவக்கிரகங்கள்.. இத்தலத்தில் இறைவனின் ஆணைப்படி - ஆளுக்கொரு திசை என்றில்லாமல்   வக்கிரமின்றி
பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.. அருகில் தன்வந்த்ரி.. ஐயனார்..

தெற்கு திருச்சுற்றில் அறுபத்து மூன்று நாயன்மார்கள்.. இங்குதான் ஜடாயு குண்டம்.. ஸ்ரீராம லக்ஷ்மணர் திருமேனிகள்..

நேர் எதிரில் தக்ஷிணாமூர்த்தி.. நேர் மேலாக மாடத்தில் ஸ்ரீ சட்டநாத ஸ்வாமி..

சூரனுடன் போர் புரிவதற்குக் கிளம்புமுன் தேவசேனாதிபதியாக முருகன் இங்கே அம்மை அப்பனை வணங்கியதாக ஐதீகம்..

இத் தலத்தில் முருகப்பெருமான்  - செல்வ முத்துகுமார ஸ்வாமி.. இவரது சந்நிதி மூலஸ்தான வாசலுக்கு இடப்புறம்.. உற்சவ மூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் அலங்காரத் திருக்கோலம்.. 

இங்கு இவர் செல்லப் பிள்ளை ஆனதால் நித்ய அனுஷ்டானங்கள் இவருக்குப் பிறகு தான் அப்பனுக்கும் அம்மைக்கும்..

கிழக்கு வாசலின் எதிரில் காவல் நாயகமாக ஸ்ரீ முனீஸ்வரன்..

கிழக்குக் கோபுரத்தின் அருகில் ஸ்ரீ பைரவர்
வெளிப் பிரகார வட புறத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் சந்நிதி.. கீழைக் கோபுரத்தின் அருகில் தண்டாயுதபாணி சந்நிதி..  வெளியில் ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி சந்நிதி..

எதிரில் கலி யுகத்தின் ஸ்தல விருட்சமாகிய வேம்பு..

தென்புறம் தனியாக அங்காரகனின் சந்நிதி..

மனுக்குலத்தின் 
நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்ப்பதற்குத் திருவுளம் கொண்டு இறைவன் அருள் பாலிக்கின்ற திருத்தலம் இது..

ஞானசம்பந்தப் பெருமானும் நாவுக்கரசரும் திருப்பதிகம் பாடிவழிபட்ட திருத்தலம்..


பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்  
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்  
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலைக் கொண்ட  
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான விவரங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. வைத்தீஸ்வரன் கோயில் குறித்த சிறப்பான தகவல்கள். உங்கள் தளம் வழி படிக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி வெங்கட்..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் பற்றிய நல்ல விவரிப்பு. இப்போது போய் வந்தோம். இதைப்படித்த பின் போயிருந்தால் கோவிலின் முழு வடிவமும் மனதினில் பதிந்திருக்கும். மற்றொரு சமயம் வாய்த்தால் நல்லது. கோபுரத்தை தரிசித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருடத்தில் இருமுறை இங்கு வந்து வணங்க வேண்டும் என்பார்கள்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி..

   நீக்கு
 4. தலச் சிறப்பு அருமை. ஜடாயு.... பல தலங்களுடனும் தொடர்புபடுத்திச் சொல்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே மன்னார்குடி பெருக வாழ்ந்தான் எனும் ஊருக்கு அருகிலுள்ள கழுகத்தூர் கோயிலும் ஜடாயுவுடன் தொடர்பு என்று சொல்லப் படுகின்றது..

   நெல்லை
   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 5. இன்று செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கு உரிய தலம்.
  வைத்தீஸ்வரன் கோவில் வரலாறும் கோவில் படங்களும் மனது நிறைவை தருகிறது. வைத்தீஸ்வரன் கோவில் பதிகத்தை பாடி இறைவனை வண்னகி கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாருக்கும் நலம் விளைய வேண்டும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 6. பாசுரம்பாடி வைத்தீஸ்வரனை வணங்கினோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..