நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

நல்வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 31, 2015

புகை எனும் பகை

இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!..


புகைப் பழக்கம் உள்ளவர்களால் சுற்றுச்சூழல் கெடுகின்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகைப்பழக்கத்தால் நுரையீரலில் புற்று நோய் ஏற்படுகின்றது என்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆண்டு - 1950.


புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பேர்களுள் - இந்தியாவில் இருந்து வருடந்தோறும் ஐந்து லட்சம் பேருக்கு மேல் பரலோகத்திற்குப் பயணமாகின்றார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புகைப்பவர்களிடமிருந்து தள்ளி நிற்பதை விட தூரமாகச் சென்று விடுவது நலம்..





சிகரெட் புகையில் அடர்ந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மிகக் கொடியது.

சிறு துளி நிகோடின் - ஒரு பூனையை முடித்து விடுகின்றது என்பது ஆய்வு..

சிகரெட் புகையினால் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றார்கள் .

என்றாலும் திருந்துவோரைக் காணோம்!..

புகைப்பவர்களின் நுரையீரல் கெட்டுப் போய் விடுகின்றது.

அதனால் சுவாச பிரச்னைகள் - மற்றவர்களுக்கும் பரவுகின்றது.

எனவே பச்சிளங்குழந்தைகளை அவர்களிடம் அனுமதிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.

புகையிலையினால் என்ன நன்மை என்பது தெரியவில்லை..

அது விளைவிக்கும் கேடுகள் பற்பல..


Final Stage
எதையும் அறியாமல் புகையின்பத்தில் (!?) ஆழ்ந்து தமக்குத் தாமே தீ மூட்டிக் கொள்வதால் -

தம்மைச் சேர்ந்தவர்களையும் பெருந்துன்பத்துக்கு ஆளாக்குகின்றனர்.

புகையிலையினுள் புதைந்திருக்கும் நிகோடின் புகைப்பவர்களைப் புதைத்து விடுகின்றது.

எரிந்து புகையும் சிகரெட் புகைப்பவனையும் எரித்து விடுகின்றது.

காசு கொடுத்து புகையிலைப் பொருட்களுடன் புற்று நோயையும் வாங்குவதில் படித்தவனும் படிக்காதவனும் சிறப்பிடம் பெறுகின்றனர்.

ஒவ்வொரு சிகரெட்டும் - புகைப்பவனின் வாழ்நாளில் 18 நிமிடங்களைக் குறைக்கின்றது என்பது கூடுதல் செய்தி..

புகைப்பவனை நவீன எரிமேடைக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறொரு நல்லதையும் - புகையிலை செய்வதில்லை..



மனிதனை அழிப்பதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டவை -
புகையிலை, பீடி, சுருட்டு, சிகரெட், பான்பராக், குட்கா - போன்றவை!..

எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் -
வாய், கன்னம், தொண்டை, நுரையீரல், கல்லீரல், உணவுக்குழாய்,
வயிறு, சிறுநீரகம் - என முழு உடலையும் சீரழித்து சிதைத்து -
சிதைக்கு அனுப்பி வைக்கும் வல்லமை பெற்றது - புகையிலை!..

சிகரெட் புகைப்பதனால் -
பக்கவாதம், ஒவ்வாமை, காசநோய், மலட்டுத் தன்மை, மாரடைப்பு - ஆகிய அதிரடிகள் நிச்சயம்!..

இவற்றுக்கும் மேலாக -

வாய், நுரையீரல்,சிறுநீரகம் - முதலான உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது உறுதி!..

புகைப்பவர்கள் பத்து பேரினுள் - இருவர் பெண்கள் என்கின்றது உலக சுகாதார நிறுவனம்!.. 

தற்காலத்தில் - ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைப்பிடிக்கத் தொடங்கியிருப்பது - குறிப்பிடத்தக்கது..


இத்தகைய புகையிலையின் தாயகம் - தென் அமெரிக்கா!..

இதன் காலம் கி.மு. 6000 என்கின்றார்கள்..

இந்த கொடூரத்தை - அங்கிருந்த பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றி - ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப் படுத்திய பெருமை -

இந்தியாவுக்குக் கடல் வழி கண்டு பிடிக்கின்றேன் என்று கிளம்பி - வழி தவறிப் போன கொலம்பஸுக்கு உரியது.

அந்தவகையில் கொலம்பஸ் செய்த கேடுகளுள் இதுவும் ஒன்று என்பர்.

நமது நாட்டில் இந்த புகையிலையை அறிமுகம் செய்தவர்கள் - ஐரோப்பியர்.

ஆயினும், அக்காலத்திலேயே - புகையிலையின் தீங்குகளை அறிந்திருந்தனர்.

அதனால் தான் - மற்ற நாடுகளிலும் பரப்பி விட்டார்கள் போலிருக்கின்றது!..


புகைப் பழக்கத்தை விட்டுத் தொலைப்பதற்கு உறுதுணையாக இருப்பது - உலர் திராட்சை.

அவ்வப்போது உலர் திராட்சையை சுவைப்பதனால் புகைக்க வேண்டும் என்ற உணர்வு கட்டுப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் - புகைப்பதால் இரத்தத்தில் கலக்கும் நிகோடினை - உலர்திராட்சை கரைத்து விடுகின்றது என்றும் கண்டறிந்திருக்கின்றனர்.

சேர்ந்தாரைக் கொல்லும் சினம்!..

சினத்திடம் சென்று சேர்ந்தாலும் சரி!.. 
சினம் வந்து சேர்ந்தாலும் சரி!..

அத்தகைய சினத்துடன் 
சரியாசனத்தில் அமர்ந்திருப்பது - புகை!..

புகை நல்வாழ்வுக்குப் பகை!..

நம் வாழ்வு நம் கையில்!..
வாழ்க நலம்!..
* * *

வெள்ளி, நவம்பர் 14, 2014

குறைவற்ற செல்வம்

காலங்களைக் கடந்து நிற்கும் உண்மையாக - நாம் - நம்முடைய பாரம்பர்ய உணவுப் பழக்கத்தையும் சிறுதானியங்களையும் தொலைத்து விட்டு நிற்பது புரிகின்றது.

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்த இனிய தருணங்கள் கூட, 

இப்போது வளரும் தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை.


பலவகையான சிறு தானியங்களையும் பழங்களையும் வரப்பிரசாதமாகப் பெற்றிருந்த நாம் அவற்றை விட்டு வெகு தொலைவிற்கு வந்து விட்டதாகத் தோன்றுகின்றது.

அவற்றின் முக்கியத்துவத்தையும் அவற்றில் நிறைந்திருந்த நன்மைகளையும் அநேகமாக மறந்தே விட்டோம்.

ரசாயனங்களுடன் செயற்கை நிறங்கள் கலந்த உணவுப் பொருட்களையும் பானங்களையும் பழச்சாறுகளையும் கண்டு மயங்கி அவற்றினூடாகச் சென்று அல்லலுக்கு ஆளாகி நிற்கின்றோம்..

மெதுவாக ஆளைக் கொல்லும் விஷத் தன்மையுடைய பொருட்கள் உணவு என்ற பெயரில் கூவிக் கூவி விற்கப்படுகின்றன.

நாமும் பாரம்பரியமிக்க உணவு வகைகளைப் புறக்கணித்து விட்டு - பன்னாட்டு நிறுவனங்களின் கூப்பாடுகளின் பின்னே ஓடுகின்றோம்..

உணவில் சமநிலையுடன் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆதாரமான அறுசுவை - அருஞ்சுவை என வகுத்து வாழ்ந்த நாம் அதனின்று தடுமாறினோம்.

உணவே மருந்து என வாழ்ந்த நமது கலாச்சாரம் மருந்தே உணவு என அடிபட்டுப் போனது.

விளைவு!?..

தனக்குப் பின்னால் அனைத்து நோய்களையும் அழைத்து வருவதான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் நம் நாடு நிறைந்திருக்கின்றதாம்.

நம் நாட்டை மட்டுமல்லாது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நோயினைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும் என,

இன்றைய தினம் - நவம்பர் 14 -

உலக நீரிழிவு நோய் தினம் என்று அனுசரிக்கப்படுகின்றது என்றால் அதன் தாக்கத்தினைப் பற்றி என்ன சொல்வது!?..


பொதுவாக நோய் என சொல்லப்பட்டாலும் -

நீரிழிவு என்பது நமது உடலில் கணையம் எனும் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் இன்சுலின் எனும் ஹார்மோனின் குறைபாடுதான்.

நாம் உண்ணும் உணவில் உள்ள குளுகோஸ்  எனும் சர்க்கரை ஜீரண உறுப்புகளால் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் செலுத்தப்படுகின்றது. அதற்குத் துணையாக கணையம் இன்சுலின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.

குளுகோஸ் தான் உணவின் மூலமாக நமது உடலுக்குக் கிடைக்கும் சக்தி.

குளுகோஸ் ரத்தத்தின் மூலமாக உடல் முழுதும் உள்ள லட்சக்கணக்கான செல்களைச் சென்றடைய வேண்டும்.

செல்களுக்குள் சர்க்கரை சென்றடைய உதவுவது இன்சுலின். செல்களுக்குள் சர்க்கரையை  ஏற்றுவதே இன்சுலினின் வேலை.

ஏதாவதொரு காரணத்தால் - ரத்தத்தில் கலந்திருக்கும் குளுகோஸ் எனும் சர்க்கரை செல்களுக்குள் செல்ல முடியாமல் -  வெளியிலேயே தங்கி விட்டால் - ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகின்றது.

இந்த நிலையே சர்க்கரை நோய் - நீரிழிவு - எனப்படுகின்றது.

இந்நிலை கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் குறைவதனாலும் இன்சுலின் தேவையான அளவு சுரந்தும் சரியாக செயல்படாமல் போவதனாலும் நேரக்கூடும்.

உண்ணும் உணவு -  உடலுக்கான சக்தியாக மாற முடியாததால்,

உணவு உட்கொண்டும் களைப்பும் தளர்ச்சியும் ஏற்படுகின்றது.
அதனால் - பலவித பின் விளைவுகள் உண்டாகின்றன.

இன்சுலின் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கின்றனர்.

உடலின் எடை கூடுதலாக இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்களும் பொதுவாக நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் தமது உடல் நிலையில் தனிக்கவனம் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

பல சமயங்களில் சர்க்கரை நோயின் அறிகுறிகள் முழுதும் சரியாகத் தெரியா விட்டாலும் -

அதிக பசியும் தாகமும் ஏற்படுவதுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகின்றது. வேகமாக எடை குறைவதுடன் கண்பார்வை குறைகின்றது.

நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. உடல் அதிக களைப்படைகின்றது. சாதாரணமாக ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு அதிக நாட்களாகின்றன.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் - சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், மாரடைப்பு என மீளாத்தூக்கத்தில் முற்றுப் பெற்று விடுகின்றது.

மீண்டும் கணையம் சீராக இயங்காதா?..
இந்த குறைபாட்டுக்கு மாற்றே இல்லையா?..

இருக்கின்றது!...

அது - சீரான உணவுப் பழக்கம்,  உடற்பயிற்சி மற்றும் நல்ல ஓய்வு!..

முந்தைய நாட்களில் எல்லாம் மக்களின் வாழ்க்கை முறையில் -

அரிசிச் சோற்றுடன் கேழ்வரகு, சோளம், கம்பு, வரகு, தினை - என பலவகையான சிறுதானியங்களும்,

வீட்டு கொல்லையிலும் தோட்டங்களிலும் இயற்கையாக விளைந்த - விளைவிக்கப்பட்ட காய்கறிகளும் பழங்களும் - இடம் பெற்றிருந்தன.

ஆனால் இன்றைக்கு கிராமங்களில் கூட வீட்டுத் தோட்டங்கள் கிடையாது.

மக்களின் வாழ்க்கை முறை மாறிப்போனதால் - சுரைக்காய், பூசனிக்காய், பறங்கிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், அவரைக்காய் - போன்றவை எல்லாம் அரிதாகி விட்டன.

வருடாந்திர பலன் அளிக்கும் மரங்கள் பலவும் பற்பல காரணங்களினால் வெட்டி வீழ்த்தப்பட்டன.

அப்படி வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களுள் முக்கியமானது நாவல் மரம்!..

அம்பிகை தவம் செய்த தலங்களுள் ஒன்று - திருஆனைக்கா!..
இத்தலத்தில் அம்பிகை தவம் மேற்கொள்ள நிழலாக இருந்தது - நாவல் மரம்!..

சுந்தர மூர்த்தி நாயனாரின் திருஅவதாரம் நிகழ்ந்த திருத்தலம் - திருநாவலூர்!.. நாவல் மரங்கள் சூழ்ந்திருந்ததனால் ஏற்பட்ட சிறப்பு பெயர்.


விநாயகப் பெருமானுக்கு உகந்த பழம் - நாவற் பழம்!..

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலாஅர பக்ஷிதம்
உமாஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..

ஜம்பு என சமஸ்க்ருதத்தில் குறிக்கப்படும் பழம் - நாவற் பழம்!..

ஆறுமுகப்பெருமான் - ஔவைப்பாட்டிக்கு அளித்த பழம்  - நாவற் பழம்!..

ஆடி ஆவணி மாதங்களில் கனிந்து உதிரும் பழம் - நாவற் பழம்!..

நமது நாட்டிற்கே நாவலந்தீவு என்று மற்றொரு பெயரும் உண்டு!..


இந்த நாவற்பழமே நீரிழிவு நோய்க்கு சக்தி வாய்ந்த மருந்து என்கின்றது சித்த மருத்துவம்.

அது மட்டுமல்ல -

நாவற்பழம் ரத்த சோகையைத் தீர்க்கின்றது. பித்தத்தைத் தணிக்கிறது. சிறுநீரகத்தையும் இதயத்தையும் சீராக்குகின்றது.

நமது நாட்டுக்கே உரியது நாவல் மரம்.

இதன் இலைகளும் பட்டைகளும் பழங்களும் விதைகளும் மருத்துவ குணங்களை உடையதாகக் குறிக்கப்படுகின்றன.

நாவல் பழம் கணையத்தை சீராக்கி பாதுகாக்கின்றது.

நாவல் பழச்சாற்றினை அருந்துவதால் மிக விரைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் அடிக்கடி நிகழும் சிறுநீர்ப் போக்கும் குறைகின்றது. நீரிழிவினால் ஏற்படும் அடங்காத தாகமும் தீர்க்கின்றது.

நாவற்பழம் ஆண்டு முழுதும் கிடைப்பதில்லை. ஆயினும் நாவற் பழம் கிடைக்கும் காலத்தில் அதனை முறையாக உண்டு மகிழ்ந்து - அதன் விதைகளைச் சேகரித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்வது நல்லது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உத்தேசித்து இரண்டு விதைகளை இடித்து ஒரு குவளை பால் அல்லது தண்ணீருடன் அருந்தினால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகின்றது.

நாவல் பழ விதையில் உள்ள ஜாம்போலைன் எனும் குளுகோசைட் உடலுக்குள் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறும் செயல்பாட்டினைத் தடுக்கின்றது - என லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது.

நாவல் கிடைக்கும் காலத்தில் நாவல் பழச்சாற்றினை முறையாக மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்தினால் மூன்று மாதத்திற்குள் நலம் பெறலாம்.

தவிரவும் - வாரம் ஒரு முறை பாகற்காய் சமைத்து உண்பதனாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகின்றது.

மனோதைரியம் இருந்தால் -

கையளவு பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு சதைப்பகுதியை இடித்து சாறெடுத்து அருந்தலாம்.

நம் உடலில் கணையத்தில் இருந்தே இன்சுலின் சுரக்கின்றது.

இன்சுலின் குறைவதால் - மாறுபாடு அடைவதால் - சர்க்கரை நோய் உண்டாகின்றது என்பது தெளிவு.

கணையமும் இன்சுலினும் துவர்ப்புச் சுவையின்பாற்பட்டது.

துவர்ப்பின் நிலை மாறுபாடு அடையும் போது இனிப்பு மிகுந்து விடுவதாக சித்த மருத்துவம் கூறுவதும் சிந்திக்கத்தக்கது.

சித்த மருத்துவம் - மதுமேகம் என சர்க்கரை நோயைக் குறிப்பிடுகின்றது.

சர்க்கரை நோய் தீர்வதற்கு ஆவாரம் பூவினை முதலிடத்தில் வைக்கின்றது.


பொன்னிறப்பூக்களுடன் - தமிழகம் எங்கும் சற்றே உலர்ந்த பகுதிகளில் மண்டிக் கிடக்கும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்தது ஆவாரை!..

சித்தர் பெருமக்கள் -

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ!..

- என்று சிறப்பித்துக் கூறுவதுடன் - ஆவாரம் பூவில் தங்கச்சத்து நிறைந்து
இருப்பதாகவும் குறிக்கின்றனர்.

இலை, பூ, காய், பட்டை, வேர் - என அனைத்துப் பாகங்களையும் மக்களுடைய நல்வாழ்க்கைக்கென அர்ப்பணிப்பது ஆவாரை!..

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த பலனளிப்பது - ஆவாரம்பூ!..


நல்ல சித்த மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் -

பத்து கிராம் ஆவாரம் பூவுடன் - மிளகு - 5, திப்பிலி - 3, சுக்கு சிறு துண்டு, சிற்றரத்தை சிறு துண்டு ஆகியவற்றை இடித்துப் பொடியாக்கி ஒரு குவளை நீரிலிட்டு நன்றாகக் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

உடல் நலம் படிப்படியாக மேம்படும். சோர்வு, மயக்கம் நீங்கி கண்பார்வை தெளிவு பெறும்.

மேலும் ஆவாரம் பூக்களை தேவையான நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்துப் பருகினாலும் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இதையெல்லாம் - பதிவிடக் காரணம்,

சீரான உணவுப் பழக்க வழக்கங்களை உடைய நானும் பாதிக்கப்பட்டேன்.

சில மாதங்களுக்கு முன் - மிக வேகமாக எடை குறைவு ஏற்பட்டது.

தீபாவளியுடன் ஊருக்குத் திரும்பியதும் வீட்டு விசேஷங்களை நல்லபடியாக நடத்தி விட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டேன்..

ரத்தத்தில் சர்க்கரை அதிகம்.. மிக அதிகம்!..

அதைத் தொடர்ந்து மேலும் ஒருவாரத்திற்கு விடுமுறையை நீட்டித்துள்ளேன். 

மருத்துவ ஆலோசனைகளின்படி வீட்டில் - எளிய சித்த மருத்துவ சிகிச்சை தொடர்கின்றது. 

எனக்குக் கிடைத்த விளக்கங்களில் ஆலோசனைகளில் ஓரளவை இங்கே பதிந்துள்ளேன்.

இருப்பினும் - 

தாங்களாகவே மருந்து வாங்கி உட்கொள்ளாமல் முறையான மருந்துகளை மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி எடுத்துக் கொள்வதே சிறந்தது.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!..
அதனையே இறைவனிடம் வேண்டுவோம்!..

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய் 
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து 
நீயும் என் நெஞ்சின் உள்ளே நிலவினாய் நிலாவி நிற்க 
நோயவை சாரும் ஆகில் நோக்கிநீ அருள் செய்வாயே!.. (4/76)
திருநாவுக்கரசர்.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *