நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 14, 2014

குறைவற்ற செல்வம்

காலங்களைக் கடந்து நிற்கும் உண்மையாக - நாம் - நம்முடைய பாரம்பர்ய உணவுப் பழக்கத்தையும் சிறுதானியங்களையும் தொலைத்து விட்டு நிற்பது புரிகின்றது.

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்த இனிய தருணங்கள் கூட, 

இப்போது வளரும் தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை.


பலவகையான சிறு தானியங்களையும் பழங்களையும் வரப்பிரசாதமாகப் பெற்றிருந்த நாம் அவற்றை விட்டு வெகு தொலைவிற்கு வந்து விட்டதாகத் தோன்றுகின்றது.

அவற்றின் முக்கியத்துவத்தையும் அவற்றில் நிறைந்திருந்த நன்மைகளையும் அநேகமாக மறந்தே விட்டோம்.

ரசாயனங்களுடன் செயற்கை நிறங்கள் கலந்த உணவுப் பொருட்களையும் பானங்களையும் பழச்சாறுகளையும் கண்டு மயங்கி அவற்றினூடாகச் சென்று அல்லலுக்கு ஆளாகி நிற்கின்றோம்..

மெதுவாக ஆளைக் கொல்லும் விஷத் தன்மையுடைய பொருட்கள் உணவு என்ற பெயரில் கூவிக் கூவி விற்கப்படுகின்றன.

நாமும் பாரம்பரியமிக்க உணவு வகைகளைப் புறக்கணித்து விட்டு - பன்னாட்டு நிறுவனங்களின் கூப்பாடுகளின் பின்னே ஓடுகின்றோம்..

உணவில் சமநிலையுடன் ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆதாரமான அறுசுவை - அருஞ்சுவை என வகுத்து வாழ்ந்த நாம் அதனின்று தடுமாறினோம்.

உணவே மருந்து என வாழ்ந்த நமது கலாச்சாரம் மருந்தே உணவு என அடிபட்டுப் போனது.

விளைவு!?..

தனக்குப் பின்னால் அனைத்து நோய்களையும் அழைத்து வருவதான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் நம் நாடு நிறைந்திருக்கின்றதாம்.

நம் நாட்டை மட்டுமல்லாது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நோயினைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும் என,

இன்றைய தினம் - நவம்பர் 14 -

உலக நீரிழிவு நோய் தினம் என்று அனுசரிக்கப்படுகின்றது என்றால் அதன் தாக்கத்தினைப் பற்றி என்ன சொல்வது!?..


பொதுவாக நோய் என சொல்லப்பட்டாலும் -

நீரிழிவு என்பது நமது உடலில் கணையம் எனும் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் இன்சுலின் எனும் ஹார்மோனின் குறைபாடுதான்.

நாம் உண்ணும் உணவில் உள்ள குளுகோஸ்  எனும் சர்க்கரை ஜீரண உறுப்புகளால் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் செலுத்தப்படுகின்றது. அதற்குத் துணையாக கணையம் இன்சுலின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.

குளுகோஸ் தான் உணவின் மூலமாக நமது உடலுக்குக் கிடைக்கும் சக்தி.

குளுகோஸ் ரத்தத்தின் மூலமாக உடல் முழுதும் உள்ள லட்சக்கணக்கான செல்களைச் சென்றடைய வேண்டும்.

செல்களுக்குள் சர்க்கரை சென்றடைய உதவுவது இன்சுலின். செல்களுக்குள் சர்க்கரையை  ஏற்றுவதே இன்சுலினின் வேலை.

ஏதாவதொரு காரணத்தால் - ரத்தத்தில் கலந்திருக்கும் குளுகோஸ் எனும் சர்க்கரை செல்களுக்குள் செல்ல முடியாமல் -  வெளியிலேயே தங்கி விட்டால் - ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகின்றது.

இந்த நிலையே சர்க்கரை நோய் - நீரிழிவு - எனப்படுகின்றது.

இந்நிலை கணையம் பாதிக்கப்பட்டு இன்சுலின் குறைவதனாலும் இன்சுலின் தேவையான அளவு சுரந்தும் சரியாக செயல்படாமல் போவதனாலும் நேரக்கூடும்.

உண்ணும் உணவு -  உடலுக்கான சக்தியாக மாற முடியாததால்,

உணவு உட்கொண்டும் களைப்பும் தளர்ச்சியும் ஏற்படுகின்றது.
அதனால் - பலவித பின் விளைவுகள் உண்டாகின்றன.

இன்சுலின் குறைபாடு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கின்றனர்.

உடலின் எடை கூடுதலாக இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்களும் பொதுவாக நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் தமது உடல் நிலையில் தனிக்கவனம் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

பல சமயங்களில் சர்க்கரை நோயின் அறிகுறிகள் முழுதும் சரியாகத் தெரியா விட்டாலும் -

அதிக பசியும் தாகமும் ஏற்படுவதுடன் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகின்றது. வேகமாக எடை குறைவதுடன் கண்பார்வை குறைகின்றது.

நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. உடல் அதிக களைப்படைகின்றது. சாதாரணமாக ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு அதிக நாட்களாகின்றன.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் - சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், மாரடைப்பு என மீளாத்தூக்கத்தில் முற்றுப் பெற்று விடுகின்றது.

மீண்டும் கணையம் சீராக இயங்காதா?..
இந்த குறைபாட்டுக்கு மாற்றே இல்லையா?..

இருக்கின்றது!...

அது - சீரான உணவுப் பழக்கம்,  உடற்பயிற்சி மற்றும் நல்ல ஓய்வு!..

முந்தைய நாட்களில் எல்லாம் மக்களின் வாழ்க்கை முறையில் -

அரிசிச் சோற்றுடன் கேழ்வரகு, சோளம், கம்பு, வரகு, தினை - என பலவகையான சிறுதானியங்களும்,

வீட்டு கொல்லையிலும் தோட்டங்களிலும் இயற்கையாக விளைந்த - விளைவிக்கப்பட்ட காய்கறிகளும் பழங்களும் - இடம் பெற்றிருந்தன.

ஆனால் இன்றைக்கு கிராமங்களில் கூட வீட்டுத் தோட்டங்கள் கிடையாது.

மக்களின் வாழ்க்கை முறை மாறிப்போனதால் - சுரைக்காய், பூசனிக்காய், பறங்கிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், அவரைக்காய் - போன்றவை எல்லாம் அரிதாகி விட்டன.

வருடாந்திர பலன் அளிக்கும் மரங்கள் பலவும் பற்பல காரணங்களினால் வெட்டி வீழ்த்தப்பட்டன.

அப்படி வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களுள் முக்கியமானது நாவல் மரம்!..

அம்பிகை தவம் செய்த தலங்களுள் ஒன்று - திருஆனைக்கா!..
இத்தலத்தில் அம்பிகை தவம் மேற்கொள்ள நிழலாக இருந்தது - நாவல் மரம்!..

சுந்தர மூர்த்தி நாயனாரின் திருஅவதாரம் நிகழ்ந்த திருத்தலம் - திருநாவலூர்!.. நாவல் மரங்கள் சூழ்ந்திருந்ததனால் ஏற்பட்ட சிறப்பு பெயர்.


விநாயகப் பெருமானுக்கு உகந்த பழம் - நாவற் பழம்!..

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலாஅர பக்ஷிதம்
உமாஸூதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..

ஜம்பு என சமஸ்க்ருதத்தில் குறிக்கப்படும் பழம் - நாவற் பழம்!..

ஆறுமுகப்பெருமான் - ஔவைப்பாட்டிக்கு அளித்த பழம்  - நாவற் பழம்!..

ஆடி ஆவணி மாதங்களில் கனிந்து உதிரும் பழம் - நாவற் பழம்!..

நமது நாட்டிற்கே நாவலந்தீவு என்று மற்றொரு பெயரும் உண்டு!..


இந்த நாவற்பழமே நீரிழிவு நோய்க்கு சக்தி வாய்ந்த மருந்து என்கின்றது சித்த மருத்துவம்.

அது மட்டுமல்ல -

நாவற்பழம் ரத்த சோகையைத் தீர்க்கின்றது. பித்தத்தைத் தணிக்கிறது. சிறுநீரகத்தையும் இதயத்தையும் சீராக்குகின்றது.

நமது நாட்டுக்கே உரியது நாவல் மரம்.

இதன் இலைகளும் பட்டைகளும் பழங்களும் விதைகளும் மருத்துவ குணங்களை உடையதாகக் குறிக்கப்படுகின்றன.

நாவல் பழம் கணையத்தை சீராக்கி பாதுகாக்கின்றது.

நாவல் பழச்சாற்றினை அருந்துவதால் மிக விரைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன் அடிக்கடி நிகழும் சிறுநீர்ப் போக்கும் குறைகின்றது. நீரிழிவினால் ஏற்படும் அடங்காத தாகமும் தீர்க்கின்றது.

நாவற்பழம் ஆண்டு முழுதும் கிடைப்பதில்லை. ஆயினும் நாவற் பழம் கிடைக்கும் காலத்தில் அதனை முறையாக உண்டு மகிழ்ந்து - அதன் விதைகளைச் சேகரித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்வது நல்லது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உத்தேசித்து இரண்டு விதைகளை இடித்து ஒரு குவளை பால் அல்லது தண்ணீருடன் அருந்தினால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகின்றது.

நாவல் பழ விதையில் உள்ள ஜாம்போலைன் எனும் குளுகோசைட் உடலுக்குள் ஸ்டார்ச் சர்க்கரையாக மாறும் செயல்பாட்டினைத் தடுக்கின்றது - என லக்னோவில் உள்ள நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது.

நாவல் கிடைக்கும் காலத்தில் நாவல் பழச்சாற்றினை முறையாக மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்தினால் மூன்று மாதத்திற்குள் நலம் பெறலாம்.

தவிரவும் - வாரம் ஒரு முறை பாகற்காய் சமைத்து உண்பதனாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகின்றது.

மனோதைரியம் இருந்தால் -

கையளவு பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு சதைப்பகுதியை இடித்து சாறெடுத்து அருந்தலாம்.

நம் உடலில் கணையத்தில் இருந்தே இன்சுலின் சுரக்கின்றது.

இன்சுலின் குறைவதால் - மாறுபாடு அடைவதால் - சர்க்கரை நோய் உண்டாகின்றது என்பது தெளிவு.

கணையமும் இன்சுலினும் துவர்ப்புச் சுவையின்பாற்பட்டது.

துவர்ப்பின் நிலை மாறுபாடு அடையும் போது இனிப்பு மிகுந்து விடுவதாக சித்த மருத்துவம் கூறுவதும் சிந்திக்கத்தக்கது.

சித்த மருத்துவம் - மதுமேகம் என சர்க்கரை நோயைக் குறிப்பிடுகின்றது.

சர்க்கரை நோய் தீர்வதற்கு ஆவாரம் பூவினை முதலிடத்தில் வைக்கின்றது.


பொன்னிறப்பூக்களுடன் - தமிழகம் எங்கும் சற்றே உலர்ந்த பகுதிகளில் மண்டிக் கிடக்கும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்தது ஆவாரை!..

சித்தர் பெருமக்கள் -

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ!..

- என்று சிறப்பித்துக் கூறுவதுடன் - ஆவாரம் பூவில் தங்கச்சத்து நிறைந்து
இருப்பதாகவும் குறிக்கின்றனர்.

இலை, பூ, காய், பட்டை, வேர் - என அனைத்துப் பாகங்களையும் மக்களுடைய நல்வாழ்க்கைக்கென அர்ப்பணிப்பது ஆவாரை!..

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த பலனளிப்பது - ஆவாரம்பூ!..


நல்ல சித்த மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் -

பத்து கிராம் ஆவாரம் பூவுடன் - மிளகு - 5, திப்பிலி - 3, சுக்கு சிறு துண்டு, சிற்றரத்தை சிறு துண்டு ஆகியவற்றை இடித்துப் பொடியாக்கி ஒரு குவளை நீரிலிட்டு நன்றாகக் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

உடல் நலம் படிப்படியாக மேம்படும். சோர்வு, மயக்கம் நீங்கி கண்பார்வை தெளிவு பெறும்.

மேலும் ஆவாரம் பூக்களை தேவையான நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்துப் பருகினாலும் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இதையெல்லாம் - பதிவிடக் காரணம்,

சீரான உணவுப் பழக்க வழக்கங்களை உடைய நானும் பாதிக்கப்பட்டேன்.

சில மாதங்களுக்கு முன் - மிக வேகமாக எடை குறைவு ஏற்பட்டது.

தீபாவளியுடன் ஊருக்குத் திரும்பியதும் வீட்டு விசேஷங்களை நல்லபடியாக நடத்தி விட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டேன்..

ரத்தத்தில் சர்க்கரை அதிகம்.. மிக அதிகம்!..

அதைத் தொடர்ந்து மேலும் ஒருவாரத்திற்கு விடுமுறையை நீட்டித்துள்ளேன். 

மருத்துவ ஆலோசனைகளின்படி வீட்டில் - எளிய சித்த மருத்துவ சிகிச்சை தொடர்கின்றது. 

எனக்குக் கிடைத்த விளக்கங்களில் ஆலோசனைகளில் ஓரளவை இங்கே பதிந்துள்ளேன்.

இருப்பினும் - 

தாங்களாகவே மருந்து வாங்கி உட்கொள்ளாமல் முறையான மருந்துகளை மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி எடுத்துக் கொள்வதே சிறந்தது.


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!..
அதனையே இறைவனிடம் வேண்டுவோம்!..

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய் 
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து 
நீயும் என் நெஞ்சின் உள்ளே நிலவினாய் நிலாவி நிற்க 
நோயவை சாரும் ஆகில் நோக்கிநீ அருள் செய்வாயே!.. (4/76)
திருநாவுக்கரசர்.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

28 கருத்துகள்:

 1. மிக பயனுள்ள பதிவு அய்யா! பலரும் குழந்தைகள் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நாள் இப்படி ஒரு தினத்தை இத்தனை விரிவாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் மகிழ்நிறை..
   தங்களின் அன்பான வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்..

   நீக்கு
 2. வணக்கம் ஐயா!

  சிறப்பான பல விடயங்களைத் தொகுத்துத் தந்தீர்கள். மிக அருமை!
  வேண்டியவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டி நல்ல வழிவகைகள்!
  பகிர்விற்கு நன்றி ஐயா!

  ஆனால்.. கூடவே இப்படித் திடுக்கிடும் விடயமொன்றை நீங்கள் கூறக் கேட்டு மனம் மிக வருந்தினேன் ஐயா!..:(

  ஆரம்ப நிலையாயின் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்பார்கள்!
  அங்கிருந்தே நலனைக் கவனித்துப் பின்னர் உங்கள் வேலைத்தள நாட்டிற்கு வருவது நல்லது!
  விரைவில் நலம் பெற்றிட வேண்டுகிறேன்!..

  வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   இது ஆரம்ப நிலை தான்.. கட்டுக்குள் கொண்டு வந்து விடுவேன்..

   தங்களின் வேண்டுதலுக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 3. நல்ல கட்டுரை.

  உடல்நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.
  தினம் இரண்டு வெண்டைக்காய் எடுத்துக் கொண்டு அதன் தலை பகுதி, காம்பு பகுதியை நீக்கிவிட்வேண்டும். , அதை இரண்டாய் கீறி ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு போட்டு மூடி வைத்து விட்டு காலையில்
  வெண்டைக்காயை எடுத்துப் போட்டு விட்டு அந்த நீரை சிறிது மிள்கு சேர்த்து குடித்தால் சர்க்கரை அளவு குறையும் என்று இன்று கூட சன் தொலைக்காட்சியில் சொன்னார் வைத்தியர்.

  நானும் தினம் ஒரு வெண்டைக்காய்! குறையும் சர்க்கரை உறுதியாய் என்று போஸ்ட் போட்டு இருக்கிறேன். படித்துப் பாருங்கள்.

  http://mathysblog.blogspot.com/2009/09/blog-post_13.html

  விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   தாங்கள் கூறியுள்ள ஆலோசனையை பின்பற்றுகின்றேன்..

   தங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 4. உங்கள் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் துரை சார். சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக மிக அவசியமானது . நீங்கள் சொல்வது போல் உடற்பயிற்சியும், நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கமுமே அதற்கு உதவும்.
  மிக அருமையானப் பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி..
   நிச்சயம் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவேன்..

   தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 5. பயனுள்ள பதிவு ஐயா
  தங்களின் உடல் நலத்தினை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கும் கனிவான கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ஐயா,.முந்தைய உணவு வகைகள் சிறந்ததாக இருக்கலாம் ஆனால் நீங்கள் குறிப்பிடும் நீரிழிவு நோய் காலம் காலமாய் இருப்பது. இப்போதும் பாரம்பரிய நோய் வரிசையில் முக்கிய இடம் பெற்றுள்ளதுநீண்ட நடைப் பழக்கமும் சரியான கவனிப்பும் இருந்தால் நோய் பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். அதிகம் பயம் வேண்டாம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தாங்கள் கூறுவது சரியே.. இது பாரம்பர்ய குறைபாடாக காலம் காலமாக இருப்பது. தாங்கள் கூறியபடி நடைப்பழக்கத்துடன் உடல் நலனில் கவனம் செலுத்துவேன்.. பயம் ஏதும் இல்லை.

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 8. சிறந்த உளநல வழிகாட்டல்
  பயனுள்ள பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 9. மிக பயனுள்ள பதிவு
  உடல் நலத்தை கவனிக்கவும் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

 10. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!..
  அதனையே இறைவனிடம் வேண்டுவோம்!..

  பயன் மிக்க பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 11. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
  அன்புடன்
  தங்களின் நண்பன்
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 12. அற்புதமான மிக ம் இக பயனுள்ள ஒரு இடுகை! ஐயா! னிறைய தகவல்கள்!

  நீரிழிவு நோய் என்பது நோய் அல்ல! அது ஒரு சிறு குறைபாடே! நம் உடலில் உள்ள ஒரு சிறு குறைபாடே! இன்சுலின்! நாம் அதைச் சரியான் உணவுடன், இயற்பயிற்சியுடன் சர்க்கரை அளவை தக்க அளவில் வைத்துக் கொண்டால் வேறு எந்த உறுப்பும் பாதிக்கப்படாம பார்த்துக் கொண்டாலே போதும் ஐயா! பயமில்லை. அதன் கிளைகளாகிய, பிபி, கொலஸ்ட்றால் போன்றவற்றை அளவில் வைத்துக் கொண்டாலே போதும். பயம் தேவை இல்லை ஐயா!

  தங்கள் உடல் நலத்தைப் பேணவும்! இறைவனையும் பிரார்த்தித்தால்! பஞ்சாய் பறந்துவிடும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   தாங்கள் கூறுவது போல இது ஒரு சிறு குறைபாடு தான்..
   சீரான உணவுப் பழக்கம் உடைய எனக்கு இதிலிருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 13. பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 14. ஒரே பதிவில் அதிகமான செய்திகள். அனைத்தும் பயனுள்ளவை. படிக்கும் அனைவரும் கடைபிடிக்கின்றோமா என்பது ஐயத்திற்குரியதே. இருப்பினும் சூழல் ஏற்படும்போது தாங்கள் கூறியவை மனதிற்கு வந்துவிடும். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு