நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சிற்றுண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிற்றுண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 21, 2025

நறுமணத் தேநீர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 8
திங்கட்கிழமை

இன்று தேநீர் பெரும்பாலான குடும்பங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது..


தேநீர் அருந்துவதில் பல்வேறு கருத்து கள் இருப்பினும்    விருந்தினர்க்காக 
வீட்டில் தேநீர் தயாரிப்பதும் உபசரிப்பதும் அன்பின் வெளிப்பாடு என்று ஆகி விட்டது..

வீட்டில் தேநீர் அருந்துவதை விட  வெளியில்  அருந்துவதையே வாழ்க்கை யாகக் கொண்டவர் பலர்..

அது கிடக்கட்டும்..

போகின்ற வழியெல்லாம் டீக்கடைகள்..  நூறு நூறு  கடைகளிலும் நூறு  விதமான ருசி..

ஒரே நிறுவனத்தின்  தேயிலைத் தூள் கூட கடைக்குக் கடை வேறு வேறு சுவையில் - இது தாண்டா தேநீர்!.. - என்று..

தேநீருக்குப் பெரிய வரலாறே இருக்கின்றது.. இருந்தாலும் - ரயில் நிலைய நடைமேடைகளில்
விற்கப்படுகின்ற தேநீரைப் பற்றி  சொல்லியாக வேண்டும்..

தமிழகத்து ரயில்வே சந்திப்புகளில் உணவின் தரம் எப்படியோ தெரியாது..

ஆனால் - அங்கே
தற்காலத்தில் 
 நடைமேடைகளில்
விற்கப்படுகின்ற தேநீர் தனித்துவமானது.. அதைப்பற்றி உயர்த்திப் பேசுவதற்கு ஏதும் இல்லை என்பதே பெரும் சிறப்பு..

சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஜங்ஷன் நான்காவது நடைமேடையில் வைத்து வடையும் டீயும் வாங்கிச்  சாப்பிட்ட பிறகு இனியொரு முறை
ரயில்வே ஜங்ஷனில் 
 இப்படியான தவறு செய்வதில்லை - என்ற மன உறுதியுடன் இருக்கின்றேன்..
 
சரி.. 
நமக்காக நல்ல தேநீர் அதுவும் நறுமணத் தேநீர்  தயாரிப்பது எப்படி?..

எல்லாருக்கும் தெரியும் என்றாலும் நமக்குப் பொழுது போக வேண்டுமே.. அதற்காகத் தான் இந்தப் பதிவு..

இதோ நறுமணத் தேநீருக்கான பொடி செய்முறைக் குறிப்பு :


சுக்கு 100 g
ஏலக்காய் 50 g
மிளகு 25 g
சுருள் பட்டை 25 g  (Cassia) 
கிராம்பு 25 g
பெருஞ்சீரகம் 25 g
புதினா இலைகள் 10
(சிறிய இலைகள் எனில் 15)

புதினா இலைகள் வெயிலில் சருகாகக் காய்ந்தால் மட்டுமே நல்லது.. 
அப்படி சருகாகக் காய்வதற்கு சூழல் இல்லை எனில் புதினாவை விட்டு விடலாம்..

ஆக, இதர பொருட்களை
வெயிலில் நன்றாக உலர வைத்து (மழைக் காலம் எனில் இளஞ்சூட்டில் ஒரு நிமிடம் வறுத்துக் கொள்வது நல்லது) மிக்ஸியில் மிருதுவாக அரைத்து உலர்ந்த கலனில் சேகரித்துக் கொள்ளவும்.. 

ஒரு லிட்டர் பாலில்  ஐந்து குவளை தேநீர் உத்தமம்.. 
ஆறு குவளை தேநீர் என்பது உயர்தரம்.. 

இது பாலுடன் நீரைக் கலக்காமல் தேநீர் தயாரிப்பதற்கான கணக்கீடு..

டீக்கடையின் கை வரிசைக்கெல்லாம் வேறு வேறு கணக்குகள்...

ஒரு கோப்பைத் தேநீர் என்பது சுமார் 150 /180 மிலி .

பாலில் முதல் கொதி வந்ததும்  (கோப்பை ஒன்றிற்கு என்ற கணக்கில்)
தரமான டீத் தூள் 2 கிராமும் மசாலாத் தூள் 2 கிராமும் தேவையான அளவு சீனியும் சேர்த்து இரண்டு நிமிடங்கள்  கொதிக்க விட்டு அதிலிருந்து நறுமணம் பரவியதும் வடிகட்டி எடுத்தால் ஆரோக்கியமான சுவையான நறுமணத் தேநீர்  தயார்... 

இனிப்புக்காக சீனியைத் தேடாமல் பாரம்பர்ய சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது..

இது தான் நமது கைப்பக்குவம்..  

இதில்  - வேறு சில மூலிகைகளை வேறு வேறு வேலைகளுக்காகச் சேர்க்கின்ற வழிமுறையும் இருக்கின்றது.. 

அது மனதிற்கும் உடம்பிற்கும்  நல்லதல்ல!..
**
நல்ல தேநீர் என்றென்றும
கிடைக்க வேண்டும்

முருகா முருகா
முருகா முருகா
***

திங்கள், ஏப்ரல் 07, 2025

மக்ரோணி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 24
திங்கட்கிழமை


மக்ரோணி டிலைட்
 
குவைத்தில் இருந்த போது எனக்கு மிகவும் பிடித்த உணவுகளில் இதுவும் ஒன்று..

அப்போதெல்லாம் விரதம் இல்லாத நாட்களில்
 மக்ரோணியுடன் புலால்  கலந்திருக்கும்.. 

இப்போது புலாலைத் துறந்தாயிற்று..

தேவையானவை: 
மன உறுதி மற்றும்..

ஓய்!.. சமையல் குறிப்புக்கு வாருங்காணும் !...

இதோ வந்துட்டேன்..
எப்பவும் டமாரம் அடிச்சே பழக்கம் ஆகிட்டது!...


மக்ரோணி டிலைட் தேவையானவை:

சிறிய / நடுத்தரமான  மக்ரோனி 200 grms
பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளி  2
சிவப்பு குடை மிளகாய் ஒன்று
பச்சைக் குடை மிளகாய் ஒன்று
வெங்காயக் குருத்து ஒன்று
வெண்ணெய் 2 tbsp
அல்லது
சோயா எண்ணெய் தேவைக்கு
உப்பு தேவையான அளவு


செய்முறை:

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாகவும்.  வெங்காயக் குருத்தை சன்னமாகவும் நறுக்கிக் கொள்ளவும்

பாத்திரம் ஒன்றில்  தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, மக்ரோனியைப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு,  வேக வைக்கவும். 

பிறகு தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளவும். 

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு, காய்ந்ததும், பூண்டு, வெங்காயம் போட்டு,  வதக்கவும். 

பிறகு தக்காளி  மசியும் வரை வதக்கவும். அத்துடன், உப்பு, சிவப்பு பச்சை குடை மிளகாய் சேர்க்கவும்.. 

அடுத்து, வேக வைத்த மக்ரோனியையும் சேர்த்து, வெண்ணெய் விட்டு நன்கு கிளறி இறக்கவும்...

Tomato ketchup வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது நல்லது..

பெரிய வெங்காயம் ஒன்று
தக்காளிப்பழம்  2
பூண்டு 4 பல்
அச்சு வெல்லம் பாதி
உப்பு சிறிதளவு

பெரிய வெங்காயம் 
பூண்டு  இவற்றை உரித்துக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.. 
தக்காளியைக் கழுவி நாலாக நறுக்கிக் கொள்ளவும்..

அனைத்தையும் போட்டு மிக்ஸியில் நன்கு அடித்து மக்ரோணி செய்யும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்...

எவ்வித ரசாயன கலப்பும் இல்லாதது.. வாணலியில் நெய் விட்டு இதனை சற்று காய்ச்சிக் கொண்டால் இன்னும் நல்லது.. அவ்வப்போது செய்து கொள்ள எளிதானது..
ஃ

அன்பின் சமையல்
ஆரோக்கிய சமையல்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், மார்ச் 24, 2025

சுழியன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 10
திங்கட்கிழமை


தஞ்சாவூர் சுழியன் 

தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு 200 கிராம்
அரிசி மாவு 200 கிராம்
கோதுமை மாவு 50 கி
பழுப்பு வெல்லம் 200 கிராம்
ஏலக்காய் 2
தேங்காய் அரை மூடி
கடலெண்ணெய் தேவைக்கு


செய்முறை:

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.. ஏலக்காயைத் தட்டிக் கொள்ளவும்..
பழுப்பு வெல்லத்தை சின்னச் சின்ன துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும்.. இதுவே இந்தச் சுழியனுக்குச் சுவை கூட்டுவது..

கடலைப் பருப்பை நன்றாக வேக வைத்து நீரை வடித்து விட்டு ஆறியதும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்..

இதனுடன்  தேங்காய்த் துருவல், உடைத்த பழுப்பு வெல்லம் ஏலக்காய்த் தூள்  சேர்த்து கிளறிக் கொள்ளவும்... 

இதை அப்படியே சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.. 
இதைப் பூரணம் என்பது வழக்கம்..

அரிசி மாவுடன்
கோதுமை மாவு சிட்டிகை உப்பு மஞ்சள் தூளும் கலந்து,  நீர் விட்டு தளர கரைத்துக் கொள்ளவும். 

இரும்பு வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்..
எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள  உருண்டைகளை  ஒவ்வொன்றாக கரைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து கவனத்துடன் எண்ணெயில் இட்டு வெந்ததும் எடுக்கவும்..

பாரம்பரிய சுழியனுக்கு - சுழியம், சுகியன் என்ற பெயர்களும் 
சற்றே மாறுபட்ட  செய்முறைகளும் இருக்கின்றன.. 

பூரணம் பிடித்த பின் அதை பழைய தோசை மாவில் தோய்த்து எடுப்பதும் உண்டு..

வழிபாட்டிற்கெனில் தனியாக கரைத்துக் கொள்வது நல்லது..

பாசிப்பருப்பைக் கொண்டு செய்வதும் வழக்கம்..

விநாயக வழிபாட்டில் இது முக்கியத்துவம் பெறுகிறது..

இது எங்களது கைப்பக்குவம்..

நமது நலம் நமது கையில்
**
ஓம்
சிவாய நம ஓம்
***

திங்கள், மார்ச் 17, 2025

முத்துச் சோள சாலட்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 3 
திங்கட்கிழமை


முத்துச் சோள சாலட்
(Corn Salad)

தேவையானவை :
பிஞ்சு சோளக் கதிர்கள்  2
தக்காளி 2
சின்ன வெங்காயம் 7
வீட்டுத் தயிர் 100 ml
வெண்ணெய் 50 gr
1 மிளகு 
2 சீரகத் தூள்
3 கல் உப்பு 
இவை மூன்றும் தேவைக்குத் தக்கபடி.. 


செய்முறை ;
பால் முத்துகள் என்று சொல்லப்படும் பிஞ்சு 
சோள முத்துக்களை கொதி நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து  வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்..


தக்காளியைக் கழுவி விட்டு சன்னமாக அரிந்து 
கொள்ளவும்..


தயிரை - நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொண்டு அதனுடன் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்..

இப்போது கொதிநீரில் போட்டு எடுத்த சோள முத்துக்களையும்
தக்காளி, வெண்ணெய், உப்புத் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் அனைத்தையும் தயிருடன் சேர்த்துக் கிளறி சில்லரில் சற்று நேரம்  வைத்திருந்து பயன்படுத்தவும்..

சத்து நிறைந்த உணவு..

வெங்காயத்திற்கு மாற்றாக வெங்காயக் குருத்துகளைக் கூட  - நறுக்கிச் சேர்த்துக் கொள்ளலாம்..

நான் குவைத்தில் இருந்த போது அவ்வப்போது செய்து கொள்வேன்.. 

இதில் தயிருக்குப் பதிலாக Milk Cream சேர்ப்பதும் உண்டு.. 

இதனுடன் எலுமிச்சம் பழச் சாறு, பச்ச மொளகா என்று சேர்த்துக் கொள்வது அவரவர் சொந்த விருப்பம்..

நமது நலம் நமது கையில்..
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், மார்ச் 10, 2025

கதம்ப அடை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 26
திங்கட்கிழமை


கதம்ப அடை

தேவையான பொருட்கள் :

சிறுதானியங்கள் வரகரிசி, குதிரைவாலி, சாமை, தினை – இவற்றில் ஏதாவது இரண்டு.. ஒவ்வொன்றும் 50 கி ஆக 100 கி

புழுங்கல் அரிசி பச்சைப் பயறு துவரம் பருப்பு
கடலைப் பருப்பு ஒவ்வொன்றும் 50 கி ஆக 200 கி

இஞ்சி சிறிய துண்டு
பூண்டு 7 பல்
மிளகு ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
வெங்காயக் குருத்து  3
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல்உப்பு தேவையான அளவு
மல்லித் தழை  சிறிதளவு
கடலெண்ணெய் தேவைக்கு

செய்முறை :

சிறுதானியங்களையும் அரிசி பருப்புகளையும் இரவு முழுவதும் ஊற வைக்கவும்...

காலையில் வடிகட்டி எடுத்து, அதில  இஞ்சி, மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அதிகம் தண்ணீர் விடாமல் சற்றே அழுத்தமாக  அரைத்துக் கொள்ளவும்..

இந்த மாவுடன் பூண்டு, வெங்காயக் குருத்து கறிவேப்பிலை மல்லித் தழையை பொடியாக
நறுக்கிக் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும்.. அதில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்..  இதற்கு தேங்காய்ச் சட்னி ஏற்றது..

இதோ கதம்ப அடை 

இது சற்று அழுத்தமாக இருக்கின்ற அடை....

விருப்பம் எனில்
அரைத்த மாவுடன்  வெதுவெதுப்பான நீர் கொஞ்சம் சேர்த்து தளர்வாக்கிக் கொண்டு கல்லில்  வார்த்து எடுத்தால் முறுமுறுப்பாக இருக்கும்..


கூடுதல் விருப்பம் எனில், 
அடை  வார்க்கும் கல்லில் சுத்தமான நெய் தடவிக் கொள்ளலாம்..

அன்பின் சமையல்
ஆனந்த சமையல்
**
ஓம் சிவாய நம ஓம்
***

திங்கள், மார்ச் 03, 2025

கடலை உருண்டை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 19
திங்கட்கிழமை


வழக்கத்தில் இருந்து மறைந்து. கொண்டிருக்கின்ற அருமையான தின்பண்டம் - கடலை உருண்டை...

இன்று நாம் -  நமது கைகளாலேயே
நமது வீட்டில்
எளிமையான வேர்க்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி என்று இந்தப் பதிவின் வழி பார்க்கலாம்..

வறுத்த வேர்க்கடலை அரை கிலோ (தோலை நீக்கி விடவும்)
 உருண்டை வெல்லம் கால் கிலோ  
ஏலக்காய் பொடி சிறிது

பளிச் என்றிருக்கும் வெல்லத்தை விட பழுப்பு நிற உருண்டை வெல்லம் நல்லது..

உருண்டை வெல்லத்தை உடைத்து சமச்சீராக தூளாக்கிக் கொள்ளவும்..

வறுத்த வேர்க்கடலையை 
சிற்றரவையில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்தெடுத்த மாவை சுத்தமான தாம்பாளத்தில் கொட்டி வெல்லத் தூளையும் சேர்த்து -
இத்துடன்  நாலு தேக்கரண்டி பசு நெய் விட்டுக் கிளறி உருண்டைகளாக உருட்டி சுத்தமான பாத்திரத்தில் வைத்திருந்து  பிள்ளைகளுக்குக்  கொடுக்கவும்..

அதெல்லாம் முடியாது. இப்போதே தின்றாக வேண்டும் என்று ஆவல் பிறந்தால் அரை மூடி தேங்காயைத் துருவி மாவில் போட்டுக் கிளறி தின்று விடலாம்..

அமிர்தத்திற்கு அமிர்தம்!..
ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!..

அரைக் கிலோ வேர்க் கடலைக்கு இருபது  உருண்டைகள் கிடைக்கும்..

வேர்க் கடலைக்குப் பதிலாக வரகரிசியை மிதமான சூட்டில் சிவக்க வறுத்து அரைத்து மாவாக்கியும் இதேபோல
செய்யலாம்..

தினை மாவிலும் செய்யலாம்..

நமது நலம் 
நமது கையில்..
ஃஃ

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், பிப்ரவரி 24, 2025

மசாலா போண்டா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 12
திங்கட்கிழமை

இன்று
 மசாலா போண்டா


தேவையானவை: 

உருளைக் கிழங்கு  500 gr
பெரிய வெங்காயம் 2
கடலை மாவு  250 gr
அரிசி மாவு  2 tbl sp
பெருங்காயத்தூள் கால் tbl sp
மிளகுத்தூள் ஒரு tbl sp
பட்டைத்தூள் ஒரு tbl sp
 கடலெண்ணெய் தேவையான அளவு
கல்உப்பு தேவைக்கு

செய்முறை:  

கிழங்கை நன்கு வேகவிட்டு தோலை நீக்கி, நன்றாக மசிக்கவும்.. 

வெங்காயத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..

அரிசி மாவு, கடலை மாவைச் சேர்த்து மிதமாகக் கரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். 

வெங்காயம், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், பெருங்காயத் தூள், உப்பு  சேர்த்து இரும்பு வாணலியில் வதக்கி -

மசித்து வைத்திருக்கும்  கிழங்கையும் சேர்த்து நன்றாகப்  பிசைந்து மீண்டும் இளம் சூட்டில் வதக்கிக் கொள்ளவும்..

கலவை ஆறியதும் 
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கடலை மாவில் தோய்த்து - வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் -  உருண்டைகளைப் போட்டு சிவக்க விட்டு அரி கரண்டியால் அரித்து எடுக்கவும்..


ஒவ்வொன்றும்
50 கிராம் அளவுக்கு
 உருட்டி எடுத்தால் 12 அல்லது 13 போண்டாக்கள் கிடைக்கலாம்.. 

வெதுவெதுப்பான சூட்டில் சாப்பிடும் போது துணைக்கு
தேங்காய் சட்னி நல்லது..

இந்த அளவில்
சமையல் வாரம் 
நிறைவடைகின்றது.

நமது நலம் 
நமது சமையல்..
**

ஓம் 
சிவாய நம ஓம்
**

சனி, பிப்ரவரி 22, 2025

உளுந்து வடை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 10
சனிக்கிழமை

இன்று
 உளுத்தம் பருப்பு வடை

தேவையானவை :

உளுத்தம் பருப்பு 200 gr
பாசிப் பருப்பு 100 gr
பச்சரிசி 50 gr
பெரிய வெங்காயம் ஒன்று
பூண்டு 5 பல்
தேங்காய் ஒருமூடி
மிளகு 9
சீரகம் சிறிது
கறிவேப்பிலை 5 இணுக்கு
கடலெண்ணெய் தேவைக்கு
கல்உப்பு தேவைக்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, பச்சரிசி மூன்றையும் சுத்தம் செய்து தனித் தனியே ஊற வைக்கவும்.

அனைத்தும் நன்றாக ஊறிய பிறகு  (தோல் நீக்காமல்)
வடிகட்டி எடுத்து மிளகு சீரகம் உப்பு சேர்த்து ) கொஞ்சமாக நீர் விட்டு,
வடைக்கு அரைப்பது போல - மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..

தேங்காயைத் துருவிக் கொண்டு  வெங்காயம் பூண்டு  சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..

கறிவேப்பிலையையும் உருவிக் கொள்ளவும்..

அரைத்த விழுதுடன்  தேங்காய் துருவல் வெங்காயம் பூண்டு
சேர்த்து கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளிப் போட்டு நன்கு பிசைந்து  உருண்டைகளாக உருட்டி -  உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.. 

உளுத்தம் பருப்பு வடை தயார். 

தோல் நீக்கப்படாத பயறும் உளுந்தும் உடலுக்கு மிகவும் நல்லவை.. 

தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் நிறைந்த உணவுகள் உளுந்தும் பயறும் என்பதை நினைவில்  கொள்வோம்..

சனி தோஷம் நீக்குவது உளுந்து.. ஸ்ரீ சனைச்சர ப்ரீதிக்கு உகந்தது உளுந்து.. இதனுடன் பாசிப்பருப்பும் சேர்ந்திருப்பது சிறப்பு..

நமது நலம் 
நமது கையில்..
**
ஓம் 
சிவாய நம ஓம்
**

வெள்ளி, பிப்ரவரி 21, 2025

நெய் அப்பம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 9
வெள்ளிக்கிழமை

இன்று
நெய் அப்பம்


ஸ்ரீ விநாயகருக்கான நிவேதனமாக திருப்புகழில் சொல்லப்படுவது..

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு செய்முறைகள் இந்த அப்பத்திற்கு..

தேவையானவை

பச்சரிசி மாவு ஒரு பங்கு
பழுப்புச் சர்க்கரை முக்கால் பங்கு 
கோதுமை மாவு  அரை பங்கு
ரவா கால் பங்கு
நெய் 2 Tbsp

எண்ணெய்  தேவைக்கு 
(உப்பு உங்கள் விருப்பம் )

செய்முறை

பச்சரிசியை மட்டும் நீரில் அலசி ஐந்து நிமிடம் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும்..

பச்சரிசி மாவு, கோதுமை மாவு, ரவா, சர்க்கரை, நெய் - 
அனைத்தையும்  
ஒன்றாகக் கலந்து வெதுவெதுப்பான நீரில் தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்..

வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் சற்று  அகலமான கரண்டியால் மாவை எடுத்து சூடான எண்ணெயில் கவனத்துடன்  ஊற்றவும். தொடர்ந்து மாவு ஊற்றுவதை  நிதானமாகச் செய்யவும்..

ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு - சொட சொடப்பு அடங்கியதும்
எடுக்கவும்..

குறிப்பு: 

பச்சரிசியை நாமே நம் வீட்டில் 
சுத்தம் செய்து -
மாவாக்கிக் கொள்வது சாலச்  சிறந்தது..

மாவு  கரைத்ததும் பத்து நிமிடங்களில் செய்து விடவும்.. மாவு புளித்து விடக் கூடாது.. 

நெய் அப்பம் - மங்கல மரபு..  செவ்வாய்
வெள்ளிக் கிழமைகளில் நிவேதனத்துக்கு ஏற்றது..

சில சமுதாய மரபில் கோயில்களில் நெய் அப்பம் எண்ணிக்கை கணக்கில் நேர்ந்து கொள்ளப்படுகின்றது..

நமது நலம்
நமது கையில்..
**
ஓம் 
சிவாய நம ஓம்
**

செவ்வாய், பிப்ரவரி 18, 2025

இட்லிப் பொடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 6
செவ்வாய்க்கிழமை

இன்றிலிருந்து
நமது தளத்தில்
சமையல் வாரம்


இட்லிப் பொடி..
(இட்லிக்கான பொடி)

அதுவும் - 
மிளகாய் சேர்க்காத
தஞ்சாவூர் இட்லிப் பொடி ..

வழக்கம் போல இந்த அற்புதத்தைச்
செய்றது எப்டி.. ன்னு  பார்க்கலாம் ...

இங்கேயே தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு வேற வேற கைமணம்.. ன்னு பேசிக் கொள்கின்றார்கள்..

தேவையான பொருட்கள் ...

முழு உளுந்து 500 gr
கடலைப் பருப்பு 250 gr 
புழுங்கல் அரிசி 100 gr  
மிளகு 50 gr
எள் 50 gr 
நல்லெண்ணெய் 50  ml
பால் பெருங்காயம் 50 gr  
பூண்டு 100 gr 
கறிவேப்பிலை 6 இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு 

சாத்தூர் மிளகாய்
குண்டூர் மிளகாய்
காஷ்மீர் மிளகாய் என்றெல்லாம் தேடி அலைந்து வாங்கி வறுத்துப் போட்டு - காசைக் கரியாக்க வேண்டாம்.. 

அவை தேவையுமில்லை

மேல் சொன்ன  பொருட்களைத் தேடி - பார்த்து வாங்குவது ஒரு கலை. 

அதே போல நேரடியாக
வாங்கிய பொருட்களை   வெயிலில் காய வைத்து எடுப்பதும்  ஒரு கலை..
 

செய்முறை:

1) வாணலியில் நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் காய வைத்து அதில் மிளகு  பெருங்காயத்தை தனித்தனியே வறுத்து எடுக்கவும்..

2)  கடலை பருப்பையும்  வறுத்து எடுக்கவும் ..

3) கருப்பு உளுந்தை சிவக்க வறுத்து பிறகு  எள்ளையும் கருகாமல் வறுத்து எடுக்கவும் ..

" கருப்பு உளுந்தை சிவக்க வறுத்து "

அதெப்படி என்றால் இருட்டுத் தோப்புக்குள் கருப்பு ஆட்டைத் தேடுகின்ற கதை தான்..

இதையெல்லாம் பதிவின் வழி அறிய இயலாது...

கைப்பக்குவத்தில் தான்  கற்றுக் கொள்ள வேண்டும்..

4 ) பூண்டை தோலோடு நசுக்கி  எண்ணெயில் போட்டு எடுத்துக் கொள்ளவும்..

5) புழுங்கல் அரிசியை சிவக்க வறுத்து எடுக்கவும்.. கறிவேப்பிலையையும் பொரித்துக் கொள்ளவும்..

6) கடைசியாக கல் உப்பை வெறும் சட்டியில் போட்டு சூடேற்றி எடுத்துக் கொள்ளவும் ..

8 ) வீட்டில் உள்ள சிற்றரவை இயந்திரம் தரமானது என்றால் அலைச்சல் மிச்சம்..

அனைத்து பொருட்களையும் வீட்டிலேயே சிற்றரவை இயந்திரத்தில் இட்டு பக்குவமாக அரைத்துக் கொள்ள வேண்டியது தான்..

9) அரைத்த  பொடியை நன்றாக ஆற வைத்து -  இறுக்கமான கலனில்  வைத்துக் கொள்வது நல்லது, அதிக நேரம் திறந்து வைத்திருந்தால் வாசம் போய் விடும்..

இந்த பக்குவத்தில் அரைப்பதே தஞ்சாவூர்  இட்லி பொடி ...


நல்லெண்ணெய் சேர்ந்திருப்பதால் மூன்று மாதங்களுக்குள் இதை பயன்படுத்தி விடுவது நல்லது..

எள் சேர்க்கப்பட்டிருப்பதால் நறுமணம்..

மிளகு ஆரோக்கியம்..

வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாத செய்முறை
..
***
தரமான சமையல்
தருமே மகிழ்ச்சி

நம்முடைய நலம்
நம்முடைய கையில்.
***

வியாழன், டிசம்பர் 05, 2024

வெங்காயச் சட்னி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 17
திங்கட்கிழமை


வதக்கிய வெங்காயச் சட்னி

பல்லாரி வெங்காயம் நல்லது என்றாலும்,

சாம்பார் 
வெங்காயம் மிக மிக  நல்லது..

தேவையானவை :
சாம்பார் வெங்காயம் 200 gr
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் சிறிது
தேங்காய் ஒருமூடி
கறிவேப்பிலை 3 இணுக்கு
கல் உப்பு தேவைக்கு

தாளிப்பதற்கு :
கடலை எண்ணெய்
பால் பெருங்காயத் தூள்
கடுகு - உளுத்தம் பருப்பு சிறிதளவு 
கறிவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை :
வெங்காயத்தைச் சுத்தம் செய்து நீளவாக்கில் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்.. 
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.. 

தேங்காய் மூடியில் பாதியளவு துருவிக் கொள்ளவும்..
கறிவேப்பிலையைக் கழுவி விட்டு உருவிக் கொள்ளவும்..

அகலமான வாணலியில்  எண்ணெய் விட்டு சூடானதும்  - அதில்  வெங்காயத்தை இட்டு வதக்கவும். அடுத்ததாக பச்சை மிளகாய்   கறிவேப்பிலை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.


வெங்காயம் கறிவேப்பிலை
சற்று வதங்கியதும்  தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். . 

வதக்கிய இந்த பொருட்களை சூடு தணிந்ததும்  மிக்ஸியில் இட்டு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு -
நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் 
எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து - வெங்காய விழுதில் கலந்து கொள்ளவும். 

வதக்கிய வெங்காயச் சட்னி தயார்.

வயிற்றில் உபாதை உடையவர்கள் பச்சை மிளகாயை ஒதுக்கி விட்டு சிறிதளவு இஞ்சியை 
சேர்த்துக் கொள்ளலாம்..

கார சாரம் தான் விருப்பம் எனில், விழுது அரைக்கின்ற போது வறுத்த உலர் மிளகாயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

நெசவாளிக்கு குரங்குக் குட்டி எதற்கு?. - என்றொரு பழமொழியும் இருக்கின்றது..
***
தரமான சமையல்
தருமே மகிழ்ச்சி

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

ஓம் சிவாய நம ஓம்
***

செவ்வாய், டிசம்பர் 03, 2024

வடை பஜ்ஜி


நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
கார்த்திகை 18
செவ்வாய்க்கிழமை


அன்றைக்கு -
இந்த ஊர்ப் பேருந்து நிலையத்தில் 
பேருந்திற்காக  காத்திருந்த போது அங்கிருக்கின்ற சிற்றுண்டிக் கடைகளில் மக்களின் பரபரப்பு...

" எனக்கு ரெண்டு வடை.. "

" எனக்கு மூனு போண்டா.. "

" வடைக்கு சட்னி இருக்கா?..  இல்லையா!.. "

காணாததைக் கண்ட மாதிரி மக்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தனர்..

கடைக்காரன்
வெள்ளை நிறத்தில் அழுக்குப் பிடித்த வாளியில் இருந்து குரூட் ஆயில் மாதிரியான ஒன்றை இருப்புச் சட்டியில் ஊற்றியதைக் கவனித்து விட்டு வெளியில் வந்து சாவகாசமாக விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வடை பஜ்ஜியை விட சுவையாக இருந்தன..

பதிவின் படங்களில் காணப்படும் வடை பஜ்ஜி போண்டா வகையறாக்களைப் பற்றி எவ்வித சந்தேகமும் வேண்டாம்..


உணவு விற்பனை செய்கின்ற பெரிய கடைகளில் 
காலை நேரத்தில்  வழுக்கு பிடித்த பெரிய வாணலியில் பனை எண்ணெயை (Palm oil) ஊற்றி முதலில்  ராசியான உளுந்த வடை..


பின்னர் அதே எண்ணெயில் பருப்பு வடை  பஜ்ஜி, போண்டா, சமோசா - என, இன்ன பிற வகையறாக்கள்..


இதெல்லாம் அடுத்தடுத்ததாக தயாரிக்கப்பட்டு பொது மக்களிடம் விற்கப்படுபவை என்பதை நினைவில் கொள்ளவும்.. 

வேறு சில கடைகளில் இதே என்ணெயில் அவித்த முட்டையைக் கடலை மாவு விழுதில் புரட்டி பொரித்து எடுக்கின்றனர்..

இப்படியானவர்களின் பார்வையில் முட்டை என்பது சைவ உணவு.. 
( இந்த காரணத்தால் தான்  - வெளியில் சாப்பிடுவதில் மிகக் கவனமாக இருக்கின்றேன்  நான் )

மேலும் சில கடைகளில் 
இதே எண்ணெயில் உருளைக் கிழங்கை  (சிப்ஸ் ) சீவித் தள்ளி பொரித்து அள்ளுகின்ற வைபவமும் உண்டு..

இத்தனைக்கும்  ஒரு சில கடைகளில் மட்டுமே எண்ணெய்யை அவ்வப்போது மாற்றுகின்றனர்.. 

பெரும்பாலான இடங்களில்
எண்ணெய் குறையக் குறைய கொதிக்கின்ற எண்ணெயுடன்  வேறு பழைய எண்ணெயைக் கலந்து கொள்வதே வழக்கம்..

ஒரு முறை கொதிநிலைக்கு வந்த எண்ணெயை மறுபடியும் சமையலுக்கு பயன்படுத்துவது உடலுக்குக் கேடு என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்... ஆனால் இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவது இல்லை..

இத்தோடு இந்த எண்ணெய் மகாத்மியம் முடிகின்றதா...  -  என்றால்,

இதற்குமேல் தான் ஆரம்பிக்கின்றது...

அடுத்த நாள் உருகிய களிம்பு மாதிரி காட்சி தருகின்ற - இந்த எண்ணெயைப் பலரும் காசு கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்..

எதற்காம்??..

வேறெதுக்கு!..
சாலையின் ஓரங்களை அலங்கரிக்கின்ற அதி விரைவு வறுவல் பொரியல் 
 கடைகளின் நித்திய பயன்பாட்டிற்குத்தான்..

விலையும் மலிவு.. பயனும் அதிகம்!!..

இப்படி இந்தக் களிம்பு எண்ணெய்யைக் கொண்டு வந்து - மெழுகு பதத்திற்கு வரும் வரை பாடாய்ப்படுத்தி - அதனோடு  புதிய எண்ணெயைக்  கலந்ததும் புலால் உணவுகளின் வழி ஆதாயம்  தொடங்குகின்றது..

தின்பவர்க்கோ ஆரோக்கியம்  குறைகின்றது..

அன்றைய மொத்த வருமானத்திற்கும் இந்த அழுக்கு எண்ணெய் தான் அடிப்படை..

மொளகாத் தூள் பட்டை கிராம்பு ஏலக்காய்  மசாலாவை அள்ளிப்  போட்டு களிம்பு எண்ணெயைக் கலந்து அடித்தால் திங்கிறவங்களுக்கு தலையும்  புரியாது.. காலும் புரியாது... ஏனென்றால் புலால் வகை உணவுகளின்  மகத்துவம் அப்படி!..

இப்படியான உணவுகளைக் குடும்பத்துடன் தின்று தீர்த்து -  திளைக்கின்றவர்கள் ஏராளம்...
ஏராளம்.

கெட்ட கொழுப்பு உட லில் சேர்வதற்கு இதுவே அடிப்படை.. 

நாம் நினைத்துக் கொண்டு இருப்போம்... கடைக்காரன் ரொம்பவும் நல்லவன்... சட்னி சாம்பார் எல்லாம் நாம கேக்காமலேயே தர்றான்!.. - என்று...

ரோட்டுக் கடை சமாச்சாரம் என்பது இன்றைய நாட்களில் யோசித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.. 

இதே போல ரோட்டோரத்தில் இரண்டும் கூடிய உணவகம் என்பது வேறொரு பயங்கரம்..

பணம் பண்ணுகின்ற விஷயத்தில் ஈவு இரக்கம் என்று எதுவும் இல்லை...

உணவு ஏவாரத்தில்
எல்லாருமே இப்படித் தான் - என்று சொல்வதற்கும் வழி இல்லை.. 

பெரும்பாலான உணவு ஏவாரிகள் இப்படித்தான்..

நமது ஊரில் உணவின் மீதான  விழிப்புணர்வு என்பது  அறவே இல்லை..

முன்னும் பின்னும்
எவ்வித விவரக் குறிப்புகளும் இன்றி சிறுதீனிப் பொட்டலங்கள் பேருந்து நிலையங்களில் பரவலாக விற்கப்படுவதே இதற்கு சாட்சி..

மேலும்,
இதை யாரும் கண்டு கொள்வதும்  இல்லை.. கருத்தில் கொள்வதும்  இல்லை..

இந்நிலையில் நாம் என்ன செய்வது?..

முற்றாக அவற்றில் இருந்து  ஒதுங்குவது..

அல்லது,

விழித்துக் கொண்டோர் எல்லாம்
பிழைத்துக் கொண்டார்...

-  என்ற பாடலை நினைத்துக் கொண்டே வடையை வாங்கித்  தின்பது!..
ஃஃ
நமது நலம் நமது கையில்..

வடை பஜ்ஜி இன்ன பிற 
கோஷ்டிகளிடம்  இருந்து காப்பாத்துங்க முருகா..

முருகா முருகா
***

வியாழன், நவம்பர் 28, 2024

கிழங்கு வறுவல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 13
வியாழக்கிழமை


குரு வாரத்தில் மஞ்சள் கலந்த உணவுகளால்
தோஷங்கள் தீர்கின்றன..

உருளைக்கிழங்கு மிளகு வறுவல் 
ஃ

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு  250 gr
மஞ்சள் தூள் அரை tsp
மிளகுத் தூள் ஒரு tsp
சீரகத் தூள் ஒரு tsp
சோள மாவு ஒரு Tbsp
வெண்ணெய் தேவைக்கு
கல் உப்பு தேவைக்கு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை :
உருளைக் கிழங்கைக் கழுவி -  தோல் நீக்கிக் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய துண்டுகளை இட்லி தட்டில் வைத்து அரை வேக்காட்டில் அவித்து  எடுக்கவும்.

சற்றே ஆறியதும் - 
இதனுடன் சோளமாவு,  மஞ்சள் தூள் மிளகுத் தூள்  
சீரகத் தூள் நுணுக்கிய உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் 
சிறிது தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெய் இட்டு மிதமான சூட்டில் காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து - பிசறி வைத்துள்ள  கிழங்குத் துண்டுகளைப் போட்டு பதமாக வதக்கி - நிறம் மாறி வெந்ததும் இறக்கி வைக்கவும்.. 

(ஏற்கனவே வெந்த கிழங்கு என்பதை நினைவில் கொள்ளவும்)..

தயிர் சாதத்திற்கு நல்ல துணை..

தோலில் ஒவ்வாமை உடையவர்கள் சோள மாவினைத் தவிர்த்து விடவும்..

கடுமையான மசாலாக்கள் எதுவும் இல்லாத கிழங்கு வறுவல்...

ஆரோக்கியமானது..
 ஃஃ

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

ஓம் சிவாய நம ஓம்
***