நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 07, 2013

பெருநாள் பிறை

இஸ்லாம் 

எனும் அரபிச்சொல் சரணடைதல், கட்டுப்படுதல் - எனப் பொருள்படும்.


இச்சொல் - அமைதி எனும் மூலச்சொல்லில் இருந்து பிறந்தது.

இதற்குரிய சரியான, பொருத்தமான பொருள் - 

இறை நாட்டத்தின்பால் தன்னை முழுமையாக அர்ப்பணித்தல் என்பதே!..

இஸ்லாம், இறைவனை - ''அல்லாஹ்'' - எனக் குறிக்கின்றது. 

''அல்லாஹ்'' எனும் ஏக இறைவன் மட்டுமே - அனைத்துக்கும்  மேலான ஒருவன்.  அதிபதி. படைப்பாளன். பேரண்டம் முழுவதையும் தனது நிர்வாகக் குடையின் கீழ் வைத்திருப்பவன். எந்நிலையிலும் எது ஒன்றிற்கும் ஈடாக முடியாதவன். அது போல, அவனுக்கு ஈடாக எது ஒன்றும் இல்லாதவன். இணை துணையற்றவன் - என- பறை சாற்றுகின்றது.

அத்தகைய இறைவனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்ட இறுதி இறைவாக்கு - 

''திருக் குர்ஆன்''.

நன்றி - நல்லூர் ஹமீது

இதுவே - ஒவ்வொரு முஸ்லிமுடைய நம்பிக்கை மற்றும் வாழ்வியல் நடைமுறையின் தோற்றுவாயாக அமைந்திருக்கின்றது. நல்ல சமுதாயம் உருவாகிடவும் மனித ஒழுங்குகள் சீர்பெறவும் சமநிலை பொருளாதாரம் நிலவவும் தெளிவான வழிமுறைகளைக் காட்டுகின்றது.

இதற்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களுக்கு பின்பற்றத்தக்க, சிறந்த வழி முறையாக அமைந்தது - இஸ்லாத்தின் இறுதித் தூதரராகிய.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை. 

முஸ்லிம்களுக்கு முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை நம்புவதும் அதனைப் பின்பற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே!


இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மொழிந்தவற்றுள் - சில!..

அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் உண்பவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்!..

பிறரைத் தாக்கி வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். மாறாகக் கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வலிமையாளன்!..

தான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவன் உன்மையான இறை நம்பிக்கையாளன் ஆக முடியாது.

இறைவன் உடலமைப்பையும் தோற்றத்தையும் கொண்டு உங்களைக் கணிப்பதில்லை. அவன் - உங்களுடைய உள்ளத்தையும் செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான்.

ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வரையறுக்கும்  - இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, புனிதப்பயணம் - எனும் ஐந்தனுள்,

நோன்பு - புனித ரமலான் மாதத்தின் முதல் பிறையினைக் கண்ட நாளில்  - இருந்து,  சூரிய உதயத்திற்கு முன்னர் ஆரம்பித்து அந்தி சாயும் வரை கடைப் பிடிக்கப்படுகின்றது. நோன்பு ஏற்பவர்கள் நோன்பின் போது உண்ணுதல், பருகுதல் ஆகியவற்றிலிருந்தும் உடலுறவிலிருந்தும் விலகி நிற்கின்றார்கள்.

நன்றி - நல்லூர் ஹமீது

குழந்தைகளின் ஏழாவது வயதில் இருந்து நோன்பு  கடமையாக்கப்பட்டிருந்த போதும், பயணத்தில் இருப்போர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நோயுற்றோர், முதியோர் - இந்தக் கடமையிலிருந்தும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளனர். எனினும் அவர்கள், விடுபட்ட நோன்பினை வருடத்தின் பிற நாட்களில் பூர்த்தி செய்தாக வேண்டும்.

ரமலான் மாதத்தின் முதல் பிறை கண்டு தொடங்கிய நோன்பு ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை கண்டு  நிறைவேறி - பெருநாளாக மலர்கின்றது.

நோன்பு - உடலுக்கு நலம் வழங்குகின்ற சிறந்த மருந்தாகவும் தம்மை உளத் தூய்மை கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளும் சிறந்த வழிமுறை ஆகவும் அமைந்திருக்கின்றது.

மேலும்  - தமது உடைமைகளில் இருந்து விதிமுறைப்படி குறிப்பிட்ட அளவை தேவையுடையோர்க்கும் வறியோர்க்கும் தந்து உதவுவது - ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. இத்தகைய தர்மங்கள் ரகசியமாக நிறைவேற்றப்பட வேண்டியது சிறப்பு.

நன்றி - நல்லூர் ஹமீது

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மொழிகின்றார்கள்.

உன்னுடைய சகோதரனைப் பார்த்து புன்னகை பூப்பதும் ஒரு தர்மமே!

 - வழங்குவதற்கு ஒருவரிடம் எதுவும் இல்லையென்றால்?..

ஏழைகளுக்கும் தேவையுடையோர்க்கும் உதவி புரியட்டும்!

- அவரால் அதையும் செய்ய இயலாவிட்டால்?..

நன்மை புரியும்படி பிறரைத் தூண்டவேண்டும்!.. 

- அதைச்  செய்யவும்  அவரால் இயலாவிட்டால்?..

தீயவற்றைப் புரிவதிலிருந்து,  அவர் தம்மைத் தடுத்துக் கொள்ளட்டும். அதுவும் ஒரு தர்மமே!..


ஒரு சிறு கால அளவில்  - இன்ன பிற - உலகியல் தேவைகளில் இருந்து தன்னை விலக்கி வைத்து, அதன் மூலம் பசி பட்டினியால் வாடும் வறியோரின் நிலையைத் தானும் உணர்ந்து -

உண்மையான முன்னேற்றம் எனும் ஆன்மிக வாழ்வினைத் தொடரும் முஸ்லிம் நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் - என் அன்பின் இனிய,

''பெருநாள் வாழ்த்துக்கள்!..''

அல்லாஹ் நல்லோருக்கு நற்செய்தி கூறுவோராகவும் 
தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் 
தன் தூதர்களை அனுப்பி வைத்தான் - 
(2.213) திருக்குரான்.

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும் , 
அறத்தை நிலை நிறுத்தவும் - 
நான் யுகந்தோறும் பிறக்கின்றேன் - 
(4:8) பகவத் கீதை.

''..ஏகன் அநேகன் இறைவன் அடி வெல்க!..''

(இந்தப் பதிவு, இறையுணர்வின் அடிப்படையில் - Islam Presentation Committee, Kuwait - வழங்கிய வெளியீடுகளின் துணை கொண்டு வடிவமைக்கப்பட்டது)

8 கருத்துகள்:

 1. மதங்கள் வேறுபட்டாலும் பரம்பொருள் ஒன்றே.

  எல்லா மதங்களுமே மனிதர்களை நல்வழிப்ப்டுத்தவே முயற்சிக்கின்றன + போதிக்கின்றன.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. இந்து மதத்தின் அருமை பெருமைகளை மட்டுமே அறிந்தவர் என்று எண்ணினேன், இஸ்லாமியத்திலும் கரை கண்டவர் தாங்கள் என்பதை அறிந்து கொண்டேன். நன்றி

  பதிலளிநீக்கு
 3. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. எல்லா சமயங்களும் அடிப்படையில் அன்பு எனும் நூல் கொண்டு தான் தொகுக்கப்பட்டுள்ளன. நல்ல விஷயங்கள் எங்கும் நிறைந்துள்ளன. மீண்டும் நன்றி!..

  பதிலளிநீக்கு
 4. எல்லா மதங்களும் சொல்வது ஒன்றே தான்
  அன்பைத்தான் போதிக்கின்றன.

  அதை அழகாய் விளக்கிவிட்டீர்கள் இந்தப் பதிவை எழுதியதன் வாயிலாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. அன்பு தான் அனைத்துக்கும் ஆதாரம்!..அதைப் புரிந்து கொண்டால் இல்லை சேதாரம்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..

   நீக்கு
 5. நோன்பு - உடலுக்கு நலம் வழங்குகின்ற சிறந்த மருந்தாகவும் தம்மை உளத் தூய்மை கொண்டவர்களாக மாற்றிக் கொள்ளும் சிறந்த வழிமுறை ஆகவும் அமைந்திருக்கின்றது.

  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 6. அன்புடையீர்!..தங்களின் அன்பான பாராட்டுகள் கண்டு மகிழ்கின்றேன்! நன்றி..

  பதிலளிநீக்கு