நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2013

அம்மன் தரிசனம் - 04

காஞ்சி காமாட்சி!..

கண்களில் ததும்பி வழியும் அருட்புனல்.. திருக்கரங்களில் கிளியும் கரும்பும், பாசமும் அங்குசமும்!..


சக்தி தலங்களுள் முதன்மையானது.

நகரேஷு காஞ்சி எனச் சிறப்பிக்கப்பட்ட காஞ்சியின் நடுநாயக கற்பகம் - காமாட்சியே!..


காஞ்சியில் உள்ள சிவ ஆலயங்கள் எல்லாவற்றுக்கும் இவளே ஆதார சக்தி!..

திருக்கயிலாய மாமலையில் ஒரு அழகான மாலை நேரம்!.. 

அம்மையும் அப்பனும் மீண்டும் விளையாட ஆரம்பித்தனர். அன்னை மனம் கொண்ட சந்தோஷத்துடன் ஐயனின் விழிகளை - மலரினும் மெல்லிய தன் வளைக்கரங்களால் மூடினாள். அவ்வளவுதான்!..

அண்டபகிரண்டமும் இருண்டு போனது! (எல்லாம் ஒரு நாடகம்!)

விதிர்த்துப் போனாள் அன்னை!.. ஐயன் வழக்கம் போல - திருவாய் மலர்ந்தருளினார்.

அதன்படி ஐயன் அளந்த இரு நாழி நெல்லை மட்டும் எடுத்துக் கொண்டு பூவுலகு வந்தவள், கம்பையாற்றின் கரையில், மணலால் லிங்கம் வடித்து நாளொரு பொழுதாக நல்மலர்களைச் சூட்டி வணங்கி வழிபட்டாள்.  


அக்னி வளர்த்து - அதன் நடுவே ஒருமித்த சிந்தையளாய், அட்ச மாலையுடன்  தவம் மேற்கொண்டாள். அன்னையின் அடிக்கமலம் பட்டதால் அக்னியும் புனிதமாகிப் பொலிந்தது.


அன்னை அக்னியின் நடுவே தவம் இயற்றிய திருத்தலம் இன்றைக்கு மாங்காடு எனப்படுகின்றது.

ஐயன் அளந்த நெல்லினைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது இயற்றினாள். 

அம்பிகையைப் பிரிந்த பின் - ஐயனுக்கும் பொழுது போகவில்லை. 

எவ்வளவு நேரந்தான்,  பெருமானும் நந்தியும் - ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது!..

ஈசனின் முகத்தில் புன்னகை அரும்பியது. நந்தியம்பெருமான் திருமேனி சிலிர்த்துக் கொண்டார். 

அதுவரை காய்ந்து கிடந்த கம்பையாற்றில் வெள்ளப் பெருக்கு!...

''வெள்ளமெனப் பெருகுவது ஐயனின் அன்பு உள்ளம்!..'' -என்பதை உணர்ந்தனள் அன்னை. எனினும் சிவலிங்கத் திருமேனியினைக் காக்க வேண்டுமே!..


மிகக் கவலை கொண்டவளாக ஓடிச் சென்று - சிவலிங்கத் திருமேனியினை அப்படியே அணைத்துக் கொண்டாள்!.. 

பொங்கிப் பெருகி வந்த வெள்ளம் அம்பிகையை அணைத்துக் கொண்டது!..

அன்னையின் வளைத்தழும்புடன் திருமுலைத் தடங்களையும் - தன் திரு மேனியில் தாங்கிக் கொண்டு, ''..தேவி!..'' - என்றது சிவம். முகம் சிவக்க நாணம் கொண்டனள் சக்தி!..

அப்புறம் என்ன!.. அண்ட பகிரண்டம் எங்கும் மங்கல வாழ்த்தொலிகள் தான்!..

அதனால் தான் - எல்லா மங்களுக்கும் முதன்மையாய் அன்னை இங்கே விளங்குகின்றனள்.

காஞ்சி காமாட்சி! - 

இதுவே அன்னையின்  அருட்கோலங்களைக் குறிப்பனவற்றுள் - முதல் சொல்!..


பின்னொரு சமயம் - ஏதேதோ கவலைகளால் ஆட்கொள்ளப்பட்ட நான்முகன், மன அமைதி வேண்டி அன்னையைத் தரிசிக்கச் சென்றார். அங்கே - வலஞ் செய்து வணங்க வேண்டிய  காயத்ரி மண்டபத்தினுள் தவறுதலாகக் கால் பதித்ததன் விளைவாக நான்முகனுக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது.

அதற்குப் பிராயச்சித்தமாக - அன்னையைக் குறித்து கடுந்தவம் மேற் கொண்டார். பிரம்மனின் தவத்துக்கு இரங்கிய அம்பிகை ஸ்வர்ண மயமாகத் தரிசனம் தந்தாள். இதனால் மகிழ்ந்த நான்முகன் - அன்னையை ஸ்வர்ண பிம்பமாக வடித்து வழிபட்டு - பார்வை நலம் பெற்றார்.

அப்படி உருவான ஸ்வர்ண காமாட்சி தான் இன்று தஞ்சையில் கோயில் கொண்டிருப்பவள். பங்காரு காமாட்சி எனப்படும் இவள்  - தஞ்சை மக்களின் செல்லமகள்.

ஸ்ரீ காமாட்சி, தஞ்சாவூர்.
ஆதியில் காஞ்சியில் குடிகொண்டிருந்த ஸ்வர்ண காமாட்சி - அன்னியர் படையெடுப்பின் விளைவாக காஞ்சி மடத்தின் அன்பர்களுடன் அங்கிருந்து இடம் பெயர்ந்தாள். பொன்மயமான அவள் திருமுகத்தில் புனுகு சாற்றப் பட்டது.

திருமேனியின் நிறம் மாறிய அவளுக்கு  -  உடையார் பாளையம் ஜமீன் சில காலம் பிடித்திருந்தது. சூழ்நிலைகள் மாறிப் போக அங்கிருந்து, பயணித்து நாகூர்,  திருஆரூர் என சில காலம் தங்கினாள். அதுவும் பிடிக்காமல் போக - தஞ்சை சமஸ்தானத்தில் குடியேற விருப்பங் கொண்டாள்.

அப்போது தஞ்சையின் மன்னராக இருந்த பிரதாபசிம்மன் - அன்னைக்கும் அவளுடன் வந்த அடியார்களுக்கும் எல்லா பாதுகாப்பினையும் நல்கினான்.

மேலராஜவீதியில் ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலுக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கும் நடுவில் - அன்னையை எழுந்தருளச் செய்தான். அந்த இடம் அன்னைக்கு மிகவும் பிடித்து விட்டது. வாயு மூலையில் ஏற்கனவே குடி கொண்டிருந்த ஆஞ்சநேயர் அம்பிகைக்கு மெய்க்காவல் என்றானார்.  1745-1750 என்ற கால அளவில் - இது நிகழ்ந்தது.


அதன்பின் சாக்த வழிபாட்டில் ஈடுபாடுடைய மராட்டிய மன்னர்களுக்கு - இவளே எல்லாமும் ஆனாள். 1795 - க்குப் பிறகு  அரச குடும்பத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களை அன்னை சுமுகமாகத் தீர்த்து வைத்தனள். அகமகிழ்ந்த சரபோஜி மன்னர் ராஜகோபுரத்துடன் கூடிய திருக்கோயிலை எழுப்பினார். ''காமாட்சி அம்பா பாயி'' எனும் மன்னர் குல மாதரசி திருக்கோயிலுக்கு பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்த சான்றுகள் உள்ளன.

திருக்கோயிலின் அர்ச்சகராக இருந்த ஸ்ரீவிஸ்வநாத சாஸ்திரிகளின் மூத்த மகனான சியாமா சாஸ்திரிகள் (1762-1827) தந்தைக்குப் பின் அன்னையைப் பூஜிக்கும் பெரும்பேறு பெற்றார்.

அன்னையிடம் அளவிலாத பக்தி உடைய, சியாமா சாஸ்திரிகள் - சந்நிதியில் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்.


கண்களில் நீர் பெருகி வழிந்தோடும் நிலையில்  - அவர் தம் திருவாக்கினின்று கீர்த்தனைகள் உதித்தன.

அம்பிகையின் ஆசி ஸ்யாமா சாஸ்திரிகளுக்கு பரிபூரணமாகிய வேளையில் மாந்திரீகம், கணிதம், ஜோதிடக் கலைகள்  - சித்தியாகின. காமாட்சியின் கருணையினால் - சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரானார்.

நவராத்திரி நாட்களில் - ஸ்ரீஸ்யாமா சாஸ்திரிகள் அருளிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை - காமாட்சியின் சந்நிதியில் பாடி, இசைக் கலைஞர்கள் அவருக்கு வந்தனம் செய்கின்றனர்.

ஆறுகால பூஜைகள் முறையாக நிகழும் இத்திருக்கோயிலின் படியேறி வழிபட்டவர்க்கு குறையென்று ஏதும் இல்லை. அனைத்தையும் அன்னையே கவனித்துக் கொள்கின்றாள். 

இன்றும், கார்த்திகை மாதத்தில்  -  108, 1008 - சுற்று என, அவரவர் சக்திக்கு ஏற்றபடி நேர்ந்து கொண்டு அம்பிகையை வலம் வந்து வணங்குகின்றனர்.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வணங்கி - வலம் வரும்போது அவர்களுடன், அம்பிகை தானும் -  சின்னஞ்சிறு பெண்ணாகி  சிற்றாடை இடையுடுத்து, சீரடிகளில் ''சிலுசிலு'' என நூபுரங்கள் ஒலிக்க, வலம் வந்து மகிழ்கின்றாள் - என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் அன்னையைக் காண வேண்டுமா!.. வாருங்கள்!..

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதைத் தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜயஜய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!..

ஸ்வர்ண காமாட்சியை வலஞ்செய்து வணங்குங்கள்!.. 

கூடவந்து வழி காட்டுவாள்!.. 
கோடி கோடி வளங் கூட்டுவாள்!..

13 கருத்துகள்:

 1. அன்னை காமாக்ஷியைப்பற்றிய அருமையான பதிவு. படங்களும் அழகு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!..தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..

   நீக்கு
 2. காலை எழுந்ததும் அம்மன் தரிசனம். அருமை ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. எல்லாருக்கும் நலமே விளைய அன்னையை வேண்டிக் கொள்கிறேன்!..

   நீக்கு
 3. தஞ்சை மேல வீதி அனுமார் ஒரு காவலாக அன்னை காமாட்சிக்கு இருக்கிறாள் என்னும் செய்தி என்னை மெய்சிலிர்க்கச்செய்தது.

  தங்களது பதிகத்தை நான் என்னால் இயன்ற வரை பாடி இருக்கிறேன்.

  விரைவில் அதற்கான தொடர்பு தருகிறேன்.

  மிக்க நன்றி. வணக்கம்.
  விரைவில் தஞ்சை வரும்பொழுது உங்களை காண விருப்பம்.
  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. அன்புடையீர்!.. வணக்கம். தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்தேன். நான் தற்சமயம் இருப்பது குவைத் நாட்டில். வேலையின் காரணமாக இங்கே இருக்கின்றேன். தாயகம் திரும்புவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். என்றும் தங்களின் வாழ்த்துரைக்கும் அன்பினுக்கும் தக்கவனாக - எல்லாம் வல்ல சிவம் நல்லருள் புரிய வேண்டும்!..

  பதிலளிநீக்கு
 5. காமாக்ஷி அன்னையை பாட இன்று ஒரு வாய்ப்பு தந்த
  திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு நன்றி

  இங்கு தங்கள் பாடலை கேட்கலாம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதொரு பாடலைக் கேட்கச் செய்தமைக்கு மிக்க நன்றி!.. அருமை!..

   நீக்கு
 6. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வணங்கி - வலம் வரும்போது அவர்களுடன், அம்பிகை தானும் - சின்னஞ்சிறு பெண்ணாகி சிற்றாடை இடையுடுத்து, சீரடிகளில் ''சிலுசிலு'' என நூபுரங்கள் ஒலிக்க, வலம் வந்து மகிழ்கின்றாள் - என்பது குறிப்பிடத்தக்கது.

  அன்னையை தரிசிக்கவைத்த
  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி அம்மா!.. ஆயிரமாவது பதிவினை வெற்றிகரமாக பதிவிடும் தங்களுடைய பாரட்டுகள் என்னை மகிழ்விக்கின்றன!..

   நீக்கு
 7. அன்னையின் காஞ்சி to தஞ்சை கதையை கதைடை எடுத்தியம்பியை பாங்கு சிறப்பு, நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!.. தங்களின் வரவு நல்வரவாகுக!.. தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றிகள்!..

   நீக்கு
 8. ஐயா.. திரு. GMB அவர்களை வருக.. வருக.. என்று வரவேற்கின்றேன்!..

  பதிலளிநீக்கு