நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளையம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளையம்மாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 14, 2013

வெள்ளையம்மாள்

தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையில் இருந்தவள் எங்கள் அன்புக்குரிய வெள்ளையம்மாள்.

 

திருக்கோயிலைத் தேடிவரும் அன்பர்களை முன்னின்று வரவேற்பவள் அவளே!...


தமிழகத்தின் திருக்கோயில் யானைகளில் வயதில் மூத்தவள் இவளே!..

முதுமையின் காரணமாக சிலகாலமாக உடல் நலம் குன்றியிருந்தாள்.  இந்த ஆண்டு நடைபெற்ற புத்துணர்வு முகாமுக்குக் கூட அவள் செல்லவில்லை.

அதுவே நமக்கு மிக்க வருத்தம்!.. அதுவும் பதிவிடப்பட்டது.. 

அந்தப் பதிவு - வெள்ளையம்மாள்

ஓய்வு எனும் பேரில் - 

பக்தர்களைக் கண்டு பரவசப்படுவதில் இருந்து சில வாரங்களுக்கு முன் விலக்கி வைக்கப்பட்டாள். 

அதுவே - பரிபூரண ஓய்வு கூட  - அவளுக்கு மன பாரமாக இருக்கலாம். 

உடல் நலம் குறைவாக இருந்த வெள்ளையம்மாள்  -

இன்று சிவகதி அடைந்தாள். 

இறைநிழலில் - இனி அவள் இன்புற்றிருப்பாளாக!..

நடிகர்திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அவர்களால், தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டவள் - வெள்ளையம்மாள்!..

திரு.சிவாஜிகணேசன் - வெள்ளையம்மாளுடன்
மாரியம்மன் கோயில் - யானையின் பராமரிப்பு பணிகளுக்கு வசதி குறைவாக இருந்த காரணத்தினால், ஸ்ரீபிரகதீஸ்வரர் திருக்கோயிலிலேயே - அவள் தங்கி விட்டாள். 

ஆயினும் திருக்கோயில் வைபவங்களில் அவள் கலந்து கொள்ளத் தவறியதே இல்லை.


தற்போது கூட புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா நடந்து வருகின்றது.  

என்ன நினைத்தாளோ.. 

எப்படித் துயறுற்றாளோ..

அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே - என்று மனம் கலங்கியிருப்பாளோ..

நாம் அறியோம்..

பேரானந்தப் பெருவெளியில் - நீங்காது நிலை பெற்று விட்டாள்!..

 

நம்முடன் நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்த அவள் என்ன சுகத்தைக் கண்டிருப்பாள்?.. 

பெரியகோவில் வாசலில் நின்றதே - பெரும் பேறு - என்று பூரித்திருப்பாளோ!..


கடைசியாக - ஒருமுறை அவள் முகத்தைக் காணக் கூட நமக்குக் கொடுத்து வைக்கவில்லை!.. 


இனி - பெரியகோயிலின் முன் முற்றம்  -  
வெள்ளையம்மாள் இன்றி பரந்து கிடக்கும்..

ஆயினும் எங்கள் மனம் - வெள்ளையம்மாளின் 
நினைவுகளால் நிறைந்தே இருக்கும்..

வெள்ளையம்மாளின் பெயர் 
என்றும் நிலைத்தே இருக்கும்!..

திங்கள், நவம்பர் 26, 2012

பெரியகோவில் யானை

தஞ்சை மண்டலத்தில் இருந்து மூன்று யானைகள் புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றன.

வயது முதிர்வு காரணமாக தஞ்சை பெரியகோவில் யானை செல்லவில்லை.



தமிழக கோவில்களில் உள்ள யானைகள் ஒவ்வொரு ஆண்டும் புத்துணர்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி ஜனவரி 12–ந்தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மண்டலத்தில் உள்ள திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில் யானை தர்மாம்பாள், மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோவில் யானை செங்கமலம், திருப்புகலூர் அருள்மிகு அக்னீஸ்வரசுவாமி திருக்கோவில் யானை சூலிகாம்பாள் ஆகிய மூன்று யானைகளும் நேற்று புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டு சென்றன.

இந்த மூன்று  யானைகளும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்பு இருந்து லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் திரு.இளங்கோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆனால் தஞ்சை பெரியகோவில் யானை வெள்ளையம்மாள் இந்த ஆண்டு புத்துணர்வு முகாமிற்கு செல்லவில்லை. காரணம் இந்த யானைக்கு 62 வயது ஆகிறது.

தமிழகத்தில் உள்ள யானைகளில் அதிக வயதுடையது வெள்ளையம்மாள் . இந்த யானைக்கு வயது முதிர்வு காரணமாகவும்  நகம் மற்றும்  மூட்டு பகுதியில் வீக்கம் காரணமாகவும், டாக்டர்களின் ஆலோசனைப்படி இந்த ஆண்டு புத்துணர்வு முகாமிற்கு செல்லவில்லை.

இந்த யானையை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யானையின் வயதினை கருத்தில் கொண்டு புத்துணர்வு முகாமில் மற்ற யானைகளுக்கு வழங்கப்படும் மூலிகை மருந்து வகைகளையும் மற்ற நிவாரணப் பயன்களையும்  தனி கவனத்துடன் வழங்கி தமிழகத்தின் மூத்த யானையான வெள்ளையம்மாளை தமிழக அரசு கெளரவப்படுத்த வேண்டும் என தஞ்சை வாழ் மக்களும் இறையன்பர்களும் விரும்புகின்றனர்.

நாமும் வெள்ளையம்மாள் விரைவில் உடல் நலம் பெற்று இன்னும் பல்லாண்டு  வாழ்ந்து எல்லாரையும் ஆசீர்வதிக்குமாறு எல்லாம் வல்ல பெருவுடையாரை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வெள்ளையம்மாள்!... வாழ்க பல்லாண்டு!...