நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 03, 2023

மாரியம்மன் 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 17
மூன்றாம் ஞாயிறு


மாரியம்மன் கோயில்!..

அன்னை பேரருள் கொண்டு விளங்குவதால்  - தலத்தின் பெயரே மாறி விளங்குகின்றது..

தமிழகத்தில் புகழ்மிக்க திருக் கோயில்களுள் ஒன்று..

தஞ்சையின் கிழக்கே (ஐந்து கிமீ தொலைவில்) சமுத்திரம் எனும் ஏரிக்கரையின் கரையில்  அமைந்துள்ளது புன்னை நல்லூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயில்..

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி (1680) மாதந்தோறும் சமய புரத்திற்குச்  சென்று தரிசனம் செய்வதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்..

அப்படி ஒரு முறை சென்ற போது  மழையினால் தடங்கல் ஏற்பட்டதில் அர்த்தஜாம பூஜை முடிந்து விட்டது..

கோயில் நடையையும் அடைத்து விட்டனர். 

திருக்கோயிலில் அர்த்தஜாம பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்பட்டு விட்டால் அடுத்த நாள் உதயத்தில் தான் திறக்கப்பட வேண்டும் என்பது விதி. 

அதன்படி, மறுநாள் காலை தரிசிக்கலாம் என்று முடிவு செய்த மன்னர் -  அங்கேயே பரிவாரங்களுடன் தங்கி விட்டார்.

தூக்கத்தில் விளைந்த கனவில் - அம்மன் தோன்றினாள்..

" தலைநகர் தஞ்சைக்கு  கிழக்குத் திசையில் புன்னை வனத்தின் - புற்றுக்குள் மறைந்திருக்கின்றேன். என்னை அங்கேயே கண்டு கொள்!.. "
- என்று அறிவித்து மறைந்தாள்.. .  

தூக்கம் கலைந்து எழுந்த மன்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  

அன்னை கூறிய இடத்தினை மனதில் இருத்திக் கொண்டார்.. அதிகாலையில் சமயபுரத்தாளைத் தரிசித்த பின் உடனடியாக தலைநகர் திரும்பினார்.

வந்ததும் முதல் வேலையாக -  திறமையான ஆட்களுடன் தஞ்சைக்குக் கிழக்கே இருந்த வனாந்தரத்திற்குச் சென்றார். 

அன்னை கூறிய இடத்தினில் தேடச் செய்தார். அப்போது, 

குதிரையில் அமர்ந்திருந்த மன்னரின் முன்பாக -

அழகே வடிவான சிறுமி ஒருத்தி தலைவாரி பூச்சூடியவளாக, சர்வ அலங்கார பூஷிதையாக வந்து நின்றாள்..


" ..யாரம்மா நீ!. இந்தக் காட்டிற்குள் தன்னந்தனியளாக என்ன செய்கின்றாய்?.. '' - என்று மன்னன் கேட்க,

" என்னைத் தேடி நீ வந்தாய்!.. உன்னைத் தேடி நான் வந்திருக்கின்றேன்!.. " - என்றாள்.. 

மன்னனின் முகம் பார்த்து  புன்னகைத்தாள்..   

அந்த நொடியில் - வேம்பின் கீழிருந்த புற்றுக்குள் ஒளி வடிவமாக கலந்து விட்டாள். 

மன்னருக்கு புல்லரித்தது.  

''அன்னையே வந்து முகங்காட்டினாள்..'' - என, விழுந்து வணங்கி ஆனந்தக் கூத்தாடினார். 

புற்றின் மீது குடில் அமைக்கப்பட்டது. மஞ்சளும் மலர்களும் தூவப்பட்டன. 

அணையா தீபங்கள் ஏற்றப்பட்டன.. 

அன்னையின் தவநிலைக்கு இடையூறு ஏற்படாதபடி, மக்கள் வந்து வணங்கும் வண்ணம் அந்த புன்னை வனத்தினுள் பாதை அமைக்கப்பட்டது..

புற்றுருவாய் எழுந்த அன்னையைக் கண்டு கைதொழுத மக்கள் -   ''..மகமாயீ..'' - என்று பெருங்குரலெடுத்து அழைத்து மகிழ்ந்தனர். 

அவளை அண்டினோர் தம் அல்லல் எல்லாம் அழிந்ததனால் புன்னைவனம் - புன்னை நல்லூர் என்றானது. 

அச்சமயத்தில்  மகாஞானியும் சித்த புருஷரும்  அவதூதருமான  மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் 
காசியம்பதியில் இருந்து தஞ்சை மாநகருக்கு எழுந்தருளியிருந்தார். 

அவரைப் பணிந்து வணங்கிய மன்னன் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்க,   மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் புன்னை வனத்துக்கு விஜயம் செய்தார்.  

புற்றில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன்  அம்மனை ஆவாகணம்  செய்து முடித்தார். 

அந்தத் திருமேனி தான் தற்போது புன்னை நல்லூர் ஆலயத்தில் திகழ்வது!.. 


புண்ணியமே பூத்ததம்மா
புன்னை வனத்தில்
பொங்குநலம் எல்லாமும்
அன்னையிடத்தில்..
மண்ணளந்த நாயகியும்
புன்னை வனத்தில்
மங்கலங்கள் எல்லாமும்
இந்த இடத்தில்!..

ஓம் சக்தி ஓம்
**

இங்கிருந்து நான்கு கிமீ., தொலைவில் உள்ள ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் மேலப்பேட்டை பகுதியில் வயல்வெளிக்கு நடுவே அமைந்துள்ள 
ஸ்ரீ அபயாம்பிகா உடனுறை 
ஸ்ரீ க்ஷணமுக்தீஸ்வ ஸ்வாமிக்கு  நேற்று மாலை சம்வஸ்திர அபிஷேகமும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது..

மேல் விவரங்கள் பின்னொரு பதிவில் தருகின்றேன்..
ஸ்ரீ அபயாம்பிகா உடனுறை 
ஸ்ரீ க்ஷணமுக்தீஸ்வரா போற்றி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. இந்தக் கோவிலுக்கு நான் சென்று வந்திருக்கிறேன்... அன்னை அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் பற்றி அறிந்தேன். கும்பகோணத்தில் ஒரு வாரம் தங்கி அனைத்து ஆலயங்களையும் தரிசித்துவர வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஞ்சாவூரில் இருந்து ஐந்து கிமீ., தொலைவில் உள்ள கோயிலை கும்பகோணத்தில் தங்கிக் கொண்டு வந்து பார்க்க வேண்டுமா!!

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி நெல்லை..

   நீக்கு
  2. ஆமாம் துரை செல்வராஜு சார்... கும்பகோணத்தில் தங்கினால், நிறைய கோவில்கள் தரிசனம் செய்ய முடியும். அங்கிருந்துகொண்டு ஆட்டோ இல்லை காரில் பயணம் செய்தால் பல கோவில்களை தரிசனம் செய்யலாம் இல்லையா?

   நீக்கு
 3. புன்னை நல்லூர் ஆலயம் பற்றிய புராணக்கதையும் தகவல்களும் சிறப்பு. ஆலயம் பற்றி கேள்விப்பட்டதுண்டு வரலாறு இப்போது உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன் துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அம்மன் தல வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது.
  அவள் பாதம் பணிவோம்.

  பதிலளிநீக்கு
 5. புன்னை நல்லூர் மாரியம்மனை நிறைய தடவை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்து தரிசனம் செய்து இருக்கிறேன்.

  அன்னையின் வரலாறு அருமை.
  ஆவணி ஞாயிறு அந்த அம்மனை தரிசிக்க சிறந்தது.
  இன்று தரிசனம் செய்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. புன்னைநல்லூர் மாரியம்மன் பற்றிய அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..