நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 26, 2023

சுந்தரத் தமிழ் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 9
செவ்வாய்க்கிழமை

வானியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

இயற்பியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

உடலியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

உயிரியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

அவர்கள் வராதிருந்தால்?..

கூமுட்டைகளாக இருந்திருப்போம்!..

இப்படிச் சொல்கின்ற கூமுட்டைகளுக்குத் தெரியாது -

அவர்கள் எல்லாம் அங்கம் கழுவும் விதம் அறிவதற்கு முன்பே நம்மவர்கள் அண்டப் பிரபஞ்சத்தை அலசி ஆராய்ந்து வைத்திருந்ததை!..

இங்கே -
வழிப்போக்காகத் திரிந்திருந்த இறையடியார்கள் கூட எல்லா இயல்களிலும் வல்லவராகத் திகழ்ந்தனர் என்பது!..

 நன்றி விக்கி
தவளை, தேரை ஆகியன நீரிலும் நிலத்திலும் வாழ்வதால் இருவாழ்விகள் (Amphibian) என்று பெயர் பெறுகின்றன.. அவற்றின் உடலுக்குள் நுரையீரல் உருவாகும் வரை மீன்களைப் போல  செவுள்களால் சுவாசிப்பவை.. 
நீரில் நீந்துவதற்கு ஏதுவாக வாலினை உடையவை.. 

நுரையீரல் உருவானதும் செவுள்கள் மூடிக் கொள்ள வால் கழன்று விடும்.. இதன் பின் தவளை/தேரை நிலத்திலும்  வாழ்வதற்குத் தகுதி உடையதாகி விடும் - 

என்பது பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்தவை..

அவர்கள் வந்து சொல்லிக் கொடுத்ததான - 
இந்த வால் கழன்று விழும் விஷயம் - 

தேவாரத்தில் வாழ்வின் தத்துவ மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றது எனபது சிறப்பு..

இப்படி, இயற்கையை
இயற்கையாகக் கற்று நமக்கும் அறிவுறுத்துபவர் 
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

வாருங்கள் - சுந்தரத் தமிழைச் சுவைப்போம்..
**
-: திருப்பதிகத் திருப்பாடல் :- 
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
 நன்றி விக்கி
அவன் அரசன். பேரரசன்..

எதிர்ப்போர் எவரும் இன்றி இளஞ்சிங்கமாக ஆட்சிக் கட்டிலில் இருப்பவன்..

துணிவுடைய வீரர்களையும் துடிப்பான குதிரைகளையும்  மதங்கொண்ட யானைகளையும் உடைய பெரும் படையைக் கொண்டவன்..

நிகரற்ற வலிமையுடன் அவன் வென்றெடுத்த நாடுகள் பலப்பல.. அவனது கொடி பறக்காத திசைகள் இல்லை.. 

தொலை தூர தேசங்கள் எல்லாம் இந்த அரசனைக் கண்டு வியப்பும் அச்சமும்  கொண்டு கை கூப்பி வணங்குகின்றன..

இப்படியான பெரும் புகழ் கொண்டு கடல் சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆட்சி செய்தாலும் - இது நிலையற்றது.. 

மட நெஞ்சே!..

தேரையோடு வளர்ந்தாலும்  ஒருநாள் உதிர்ந்து விடும் வாலைப் போல - 

இந்தப் புகழ் எல்லாம் கடைநாளில் கழன்று விழுந்து விடும் - என்பதை நீ அறிவாயாக!..

ஆதலால், புறத்தே விளங்கும் புகழைப் பற்றிக் கவலை கொள்ளாதே!..

இந்த அரசனை விடவும் வணங்கத் தக்கவன் ஒருவன் உளன்..

அவன் -

நீர் பாயும் மடைகளில்  செங்கழுநீர்ப் பூக்கள் மலர்தலாலும்  ஆலைகளில் கரும்பை இட்டுப் பிழிதலாலும் சோலை மலர்கள் தேன் மணம் கமழ்வதாலும் பெருஞ்சிறப்பினை உடைய திருப்புறம்பயத்தில் வீற்றிருக்கும் சிவலோ கன்.. அந்த இறைவனே நாம் வணங்கத் தக்கவன். 

ஆதலின்,
எம்பெருமானை வணங்கச் செல்வோம்.. புறப்படுவாயாக!..
***
திருத்தலம்
திருப்புறம்பயம்


இறைவன்
ஸ்ரீ சாட்சி நாதர்


அம்பிகை
ஸ்ரீ கரும்பன்ன மொழியாள்

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம் 
ஸப்த சாகர தீர்த்தம் 

தல விருட்சம்
புன்னை

ஸ்ரீ சாட்சி நாதர்

படையெலாம் பகடார ஆளிலும்
பௌவஞ் சூழ்ந்து அரசாளிலும்
கடையெலாம் பிணைத் தேரை 
வால்கவலாது எழு மடநெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து
மருங்கெலாம் கரும்பு ஆடத் தேன்
புடையெலா மணம் நாறு சோலைப்
புறம்பயந்தொழப் போதுமே.. 7/35/6
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

 1. பாடலும், பாடலோடு சொல்லப்பட்டிருக்கும் விஷயமும் சிறப்பு.  சாட்சிநாதர், கரும்பன்ன மொழியாள் பற்றி முன்னரும் சொல்லி இருக்கிறீர்கள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் வர இருக்கின்றன..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 4. சுந்தரத் தமிழ் அருமை. பாடலும், விளக்கமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலம் வாழ்க..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. படிச்சுக் கருத்தும் சொன்னாப்போல் நினைவு. ஆனால் இல்லை. அருமையான பாடலைத் தக்க சம்யத்தில் எடுத்துச் சொல்லி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..