நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 14, 2022

ஸ்ரீ காத்தாயி அம்மன் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 28
  புதன்கிழமை

ஸ்ரீ காத்தாயி அம்மன் கோயில் தரிசனம்..


கோயிலில் உள்ள முனீஸ்வரனின் ஏழு தோற்றங்கள் : 
குழந்தைமுனி, லாடமுனி,வேதமுனி, கருமுனிசெம்முனிமுத்துமுனிஜடாமுனி.

ஸ்ரீ குழந்தை முனி
ஸ்ரீ செம்முனி

ஸ்ரீ முத்துமுனி

ஸ்ரீ ஜடாமுனி

ஸ்ரீ கருமுனி

ஸ்ரீ வேதமுனி

ஸ்ரீ லாடமுனி


கோயிலில் உள்ள சப்த கன்னியர் பெயர்கள் :
தேவகன்னி, வனகன்னி, கந்தர்வகன்னி, ராஜகன்னி
பத்மகன்னி, சிந்தாமணிகன்னி, சுந்தரகன்னி..

கோயிலின் முன் மண்டபத்திலும் உள் திருச்சுற்றிலும் காணப்படும் சுதை சிற்பங்கள் :
கணபதி, ஆஞ்சனேயர், வால்மீகி, முடியாள் விஸ்வவதி, குசலவர் ஆரியர், முருகன், காளி  துர்கா மாரி, பச்சையம்மன், வேங்கையம்மன், பூங்குறத்தி, கருடன், லக்ஷ்மி நாராயணர்..


ஸ்ரீ சப்தகன்னியர

ஸ்ரீ காத்தவராயர்


ஸ்ரீ பத்ரகாளி

ஸ்ரீ சப்பாணி கருப்பர்

ஸ்ரீ மதுரை வீரன்
ஸ்ரீ பேச்சியம்மன்

ஸ்ரீ காடேறியம்மன்

ஸ்ரீ வீரனார்

ஸ்ரீ நாககன்னி

ஸ்ரீ பட்டவர்

அன்னைக்கு
எளியேன் தொடுத்த பாமாலை..
*

காத்திடுவாள் ஆத்தாள் காத்தாயி
கண்டபிணி ஓட்டிடுவாள் காற்றாகி..

கண்காட்டி நலம் புரிவாள் ஊற்றாகி
கண்நிறைந்து வாழ்த்திடுவாள் நாற்றாகி..

கணபதி முருகனுடன்
காரிருளை ஓட்டிடுவாள்
மாருதி தனைக் கொண்டு
மங்கலங்கள் சேர்த்திடுவாள்..

குசலவர் கருடனுடன்
குறைகளைத் தீர்த்திடுவாள்
திருமுடி விஸ்வவதி
தீவினையை மாற்றிடுவாள்..

வான்மீக முனிவருக்கும்
வரிசை தந்த தூயவளே
வந்தாரை வளமையுடன்
வாழ வைத்த தாயவளே..

பள்ளிகொண்ட மன்னனையே
அண்ணன் என்று கொண்டவளே
பத்ரகாளி என எழுந்து
வக்கிரத்தை அழித்தவளே
ஏழு முனி அருகிருக்க
வாழும் வகை தந்தவளே
கருப்பரும் உடனிருக்க
கலங்காமல் செய்தவளே

சப்தகன்னி மங்கலத்தில்
சந்தனமும் தந்தவளே..
வீர பத்ர வீரருடன்
விளையாடி நிற்பவளே..

அன்னையின் வாசலிலே
ஆதரவும் அருளும் உண்டு
ஆறாத துயர் தீர்க்க
அன்பான  மருந்தும் உண்டு..
கடுவழி காட்டுக்குள்ளே 
காவலுக்கு நாய்கள் உண்டு
காற்றாகப் பறந்து வர
ஆனையுடன் குதிரையுண்டு..

வேதனையில் தோள் கொடுக்க
வெற்றி வடிவேலும் உண்டு..
வெம்மையிலும் நலம் கொடுக்க
வேம்பரசு நிழலும் உண்டு..

தீர்த்தக் குளம் மூழ்கி வர
தீவினைகள் தீர்ப்பவளே
காத்தவ ராயரையும்
கருணைக்கு  வைத்தவளே

பேச்சியம்மன் பெருந் துணையில்
பிள்ளைகளைக் காப்பவளே
காடேறி கலங்காமல்
காத்தருள வைத்தவளே

பட்டவரும் பகை தீர்க்க
பட்சமுடன் வருபவளே
முன்னோடி வினை தீர்க்க
முன் நடந்து வருபவளே..

நல்லதொரு நாககன்னி
சின்ன விரல் மோதிரமாய்
உன்னிடத்தில் நயந்திருக்க
சீர் கொடுக்க வருபவளே..

காளி என கடுகி வந்து
தீவினையை மிதித்தவளே
துர்க்கை என மாரி என
பக்தர்களைக் காத்தவளே

பூங்குறத்தி உடனிருக்க
புல்லர்களை புரட்டிடுவாய்
வேங்கையம்மன் துணையிருக்க
வேதனையை மாற்றிடுவாய்
பச்சையம்மன் விழியாலே
பஞ்சம் பிணி தீர்த்திடுவாய்
பக்கத்திலே தானிருந்து
தங்க முகம் காட்டிடுவாய்

அற்றார்க்கும் அலந்தார்க்கும்
ஆதரவு காட்டிடுவாய்
கற்றார்க்கும் கனிந்தார்க்கும்
கைகொடுத்துக் காத்திடுவாய்
உற்றார்க்கும் உழைத்தார்க்கும்
உள்ளிருந்து வாழ்த்திடுவாய்
வற்றாத சுனையாக
வாழ்வு நலம் சேர்த்திவாய்

அஞ்சாத கொடுமைகளை
அக்கினியாய் அழித்திடுவாய்
ஆகாத பேய்களையே
ஆடவிட்டு விரட்டிடுவாய்..
நெஞ்சோடு குடியிருந்து
கோலவிளக் கேற்றிடுவாய்
அஞ்சாதே நான் உனக்கு
அன்னை என்று பேசிடுவாய்..

கண்களுக்குள் ஓடி வந்து
உன்னுருவம் காட்டிடம்மா.
இன்னல்களைத் தீர்த்து வைத்து
இன்முகத்தைக் காட்டிடம்மா..

நாயேனை ஆட்சி கொண்டு
நல்வாழ்வும் அளித்திடம்மா
நல்ல தமிழ் நான் பாட
நல்வரமும் கொடுத்திடம்மா..
அந்த வினை இந்த வினை
எந்த வினை ஆனாலும்
வந்த வழி ஓடிடவே
உந்தன் விழி காட்டிடம்மா..

கையிலொரு சிறுபிள்ளை
நானாக மாட்டேனா
கஷ்டங்களை தீர்த்து வைத்தால்
கை வணங்க மாட்டேனா..
செல்லும் வழி நலமாக
செல்வராசன் பாட்டெடுத்தேன்
நல்லமொழி மறவாமல்
நெஞ்சகத்தில் போற்றி வைத்தேன்..

அன்னை உந்தன் மனமிரங்க
அன்பு விளக்கேற்றி வைத்தேன்
எங்கள் குலம் காத்திருக்க
இன்னிசையில் பாடி வைத்தேன்..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
**
ஓம் சக்தி ஓம்
***

11 கருத்துகள்:

  1. படங்கள் பிரமாதம். செல்லம் சிலையா, நிஜமா? உங்கள் பாமாலை அருமை. இந்த வரிகளின் தொடக்கத்திலேயே ஒரு சீர்காழி கோவிந்தராஜன் பாடல் இருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லம் சிலை தான்..

      இப்பாமாலையின் முதல் வரியைக் கொண்டு சீர்காழி கோவிந்தராஜன் பாடல் ஒன்று இருக்கின்றது... மிகவும் நன்றாக இருக்கும் அந்தப் பாடல்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. மாரியம்மன் தாலாட்டை நினைவூட்டும் பாமாலை. முதலில் இருக்கும் செல்லம் நிஜமா? சிலையா? சிலை போல்தான் இருக்கு. அனைத்துப் படங்களும் அருமை. இவங்க எல்லோரையும் எங்க ஊர்க் காத்தாயி அம்மன் கோயிலிலும்பார்த்திருக்கேன். பரிவார தேவதைகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த செல்லம் சிற்பம் தான்...

      தஞ்சாவூரிலும் காத்தாயி அம்மன் கோயில் இருக்கின்றது.. கொஞ்சம் சிறிய கோயில்..

      அங்கும் இத்தனை பரிவாரங்களுடன் தான் அம்மன் வீற்றிருக்கின்றாள்..

      தங்கள் அன்பின் வருகையும் விவரமான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. மாரியம்மன் தாலாட்டை நினைவூட்டும் பாமாலை. முதலில் இருக்கும் செல்லம் நிஜமா? சிலையா? சிலை போல்தான் இருக்கு. அனைத்துப் படங்களும் அருமை. இவங்க எல்லோரையும் எங்க ஊர்க் காத்தாயி அம்மன் கோயிலிலும்பார்த்திருக்கேன். பரிவார தேவதைகள் அதிகம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அடேயப்பா..! எவ்வளவு தெய்வங்கள்.... அனைவரும் ஒரே கோவிலுக்குள் நிழலாக நின்று நம்மை காத்து வரும் பணிகளை செய்து வருவதை காண பக்தியுடன் மனதுக்கு மகிழ்வாகவும் உள்ளது. தங்களுக்கு இக்கோவிலைப் தரிசிக்கும் பாக்கியம் யதேச்சையாக கிடைத்தமைக்கும் மிகவும் மகிழ்வடைகிறேன்.

    அன்னையின் மேல் தாங்கள் இயற்றிய பாமலை வரிகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது. தங்கு தடையின்றி அன்னைக்கான கவிதையை தங்கள் சிந்தையில் ஒருங்கிணைத்து வரவழைத்த அந்த அன்னைக்கு என் பணிவான பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள். நீங்கள் அன்னையின் அருள் என்றும் கிடைக்கப் பெற்றவர். உங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்த அன்னைக்கு என் பணிவான பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள்.//

      நானும் வணங்குகின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் அன்பான கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  5. காத்திடுகாள் ஆத்தாள் காத்தாயி பாடல் நினைவுக்கு வருகிறது.
    பதிவும் படமுன் அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..