நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 04, 2025

வேம்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 20
செவ்வாய்க்கிழமை


ஹிந்து மக்களின் வழிபாட்டுடனும் பழக்க வழக்கங்களுடனும் பின்னிப் பிணைந்திருப்பது வேம்பு..

வேம்பு - பாரதத்தின்  மருத்துவ நுண்ணறிவு மற்றும் பண்பாட்டின் அடையாளமாகும்..


சக்தியின் வடிவமாக இன்றும் கிராமப் புறங்களில் வேப்பமரம் வழிபடப் படுகிறது...

அரச மரத்தின் அருகில்
வேப்ப மரம் தழைத்து விட்டால்
சிவசக்தியாகப் பாவித்து திருக்கல்யாண வைபவம் நடத்தி மகிழ்வது தொன்று தொட்டு வருகின்ற வழக்கமாகும்..

இயற்கையின் வரப் பிரசாதமான வேம்பின்
 அனைத்து பாகங்களும் பயன் உடையவை என்பது சித்த மருத்துவம்..
 
இதனாலேயே மனித குலத்தின் மருந்தகம் என்று வேப்ப மரம் சிறப்பிக்கப்படுகின்றது..

நம்மிடையே தற்போது நிலவும் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே - வேம்பு என ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டுவதும்  வழக்கமாக இருந்தது...

இப்போது கஷ்க்
முஷ்க் என்பதே பெயர் வடிவம்..

இன்றும் கிராமப் புறங்களில் வளைகாப்பு வைபவம் எனில் கர்ப்பிணிக்கு முதன் முதலில் அணிவிக்கப்படுவது வேப்பிலை இணுக்குகளால் ஆன வளையலே!..

மகப்பேறு ஆன பிறகும் ஒரு வருட காலத்திற்கு  தாயும் சேயுமாக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வேப்பிலை இணுக்குகளுடன் தான் அனுப்பி வைப்பர்.. 

 துஷ்ட தேவதைகளிடமிருந்து வேப்பிலை பாதுகாப்பு அளிப்பதாக அசைக்க முடியாத நம்பிக்கை..

வீட்டில் எவருக்காவது காய்ச்சல்,  கடும் பிணி என்றால் தலைவாசலில் கட்டி வைப்பது வேப்பிலைக் கொத்துகளையே...

நமது பாரம்பரியமான வேம்பு  மன நல மற்றும் பலவித 
உடல் நலப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்திருக்கின்றது..

இன்றைக்கும் வேம்பின் நற்குணங்களோடு அழகிகளுக்கான குளியல் சோப்பு, கழிவு நீரின் கிருமிகளிடமிருந்து குழந்தைகள் தப்பிப்பதற்காக வேம்பின்  மருத்துவ குணங்களோடு கூடிய சோப்பு என்றெல்லாம் விளம்பரங்கள் நமது வீட்டுக்குள் வந்து நமது பணத்தில் ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கின்றனவே..

வீட்டில் வேம்பு இருக்க வியாதிக்கு வழி இல்லை என்பார்கள்..

வேப்ப மர நிழலில் அமர்ந்திருந்தால் மனம் அமைதி பெறுகின்றது...
அமைதியுறும் நெஞ்சில் அருள் நிறைகின்றது.. 

வேம்பின் நிழலே கோயில் என்று சொல்லப்பட்டதன் மகத்துவம் இதுதான்.. 

வைத்தீஸ்வரன் கோயில் எனப்படும் புள்ளிருக்கு வேளூரில் வேம்பு தான் தல விருட்சம்..

வேம்பின் இலை, காய், வேர், சாறு என அனைத்தும் கிருமி நாசினி ஆனவை.. கிருமிகளை அழிக்கின்ற  தன்மை கொண்டவை..

வேப்பம் பூவை மென்று தின்பதால்  குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். 

வேப்ப இலைகளை மஞ்சளுடன்  அரைத்துத் தடவுவதால் காயங்கள் விரைவில் ஆறுகின்றன. 

வேப்ப எண்ணெயினால் தோல் அரிப்பு நீங்கும்.. முகப்பரு, அரிப்பு, சொரி,  மற்றும் பிற தோல் நோய்களை வேம்பு  தடுக்கின்றது..


வேப்பம் பூவை வெயிலில் காயவைத்து பொடியாக்கி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் , வாயுத் தொல்லை, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் நீங்கும் ..
வேப்பம் பூ பொடியினால்
பித்தமும் அதனால் ஏற்படுகின்ற வாந்தியும் மட்டுப்படுகின்றது..

கொதி நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் தலை வலி, காது வலி குறையும். 

வேப்பிலைச்சாறு  இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. வேப்பம் பூ ரத்தத்தை சுத்திகரித்து  உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்றது. 

வேம்பு கல்லீரலுக்கு  பாதுகாப்பாக இருக்கின்றது. 

வேப்பம் பூ ரசத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்களின் தொல்லை நீங்கும். 

பற்களின் கிருமிகளை அழிக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் வேப்பமரப் பட்டையின் பொடி சிறந்தது. 


வேப்ப மரப் பட்டையின் பொடி என்பதைக் கவனிக்கவும்.. வேப்பங்குச்சி எனப்படும் தளிர் அல்ல..

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று சொல்லி இருக்கின்றார்களே!.. - என்றால் அது வேல மரம்.. வேப்ப மரம் அல்ல..


வேப்ப எண்ணெயைத் தலையில் தடவிக் கொள்வதால் பொடுகு நீங்கும்..
முடி உதிர்தல் நிற்கும்..

புற்றுநோயின்
 செல்களை அழிப்பதிலும்   வேம்பு மகத்தானது  என்கின்றது பாரதத்தின் மருத்துவம்..

வேப்பிலை, வேப்பம் பூ ரசம், வேப்பெண்ணெய் இவற்றைத் தவிர்த்து ஏனைய கை வைத்திய முறைகளுக்கு தக்கதொரு சித்த மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம்..
அவசியம்!...

வேம்பினை வணங்கினாலே
மாரியம்மனை வணங்கியதாக அர்த்தம்..


ஊருக்கெல்லாம் கை கொடுக்கும்
உத்தமியின் வேப்பிலையாம்
பேருக்கெல்லாம் நலம் கொடுக்கும்
பெரியவளின் வேப்பிலையாம்

மண்ணில் நல்ல வேப்பிலையாம்
மாரியம்மன் மருத்துவமாம்
கண்ணில் நல்ல வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்

ஈரெட்டுப் பேறு தரும் 
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வாளெடுத்து நடந்து வரும்
நாயகியின் திருமருந்தாம்..

வேப்பிலையின் உள்ளிருக்கும் 
வித்தை தனை ஆரறிவார்
வேப்பிலையின் உள்ளிருக்கும் 
வித்தகியே தான் அறிவாள்

ஈங்கிதனைச் சொல்வதற்கு
எவராலே ஆகுமம்மா
ஈஸ்வரனும் ஈஸ்வரியும் 
தந்தாலே தானறிவார்...

ஆயா மனம் இரங்கு என்
ஆத்தா மனம் இரங்கு
வேண்டுதலில் மனம் இரங்கு
வேப்பிலையில் நீ இறங்கு..
**

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. ஆச்சர்யம், எங்கள் தளத்தில் வேப்பமரம் சிறுகதை.  இங்கு வேம்பின் பெருமை.

    பதிலளிநீக்கு
  2. வேப்பம்பூக்களையும், மணத்தக்காளி வத்தலையும் பொறித்து எடுத்து சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அலலது நெய்  விட்டு பிசைந்து சாப்பிடலாம்.  நன்றாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அம்மை போட்டவர்களுக்கு உடம்பில் அரிப்புக்கு இதமாய் சொறியக்கூடாது என்று மயிலிறகாய்  தடவிக்கொள்ள வேப்பங்கொழுந்துகளை நூலில் கட்டி கையில் தருவார்கள்.  அம்மை முடிந்து ஸ்நானம் செய்யும்போது நெருப்பில் வைக்காமல் வெயிலில் தண்ணீரை வைத்து சூடாக்கி அதில் வேப்பந்தழைகளை இட்டு குளிக்கச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வேப்ப மரத்தின் சிறப்புக்களை அருமையாக சொல்லியுள்ளீர்கள். சொல்லியிருக்கும் செய்திகள் அனைத்தும் உண்மை. எ. பியிலும் இப்போதுதான் அந்த வேப்பமரத்தின் கதை படித்து வந்தேன். சிறப்பாக எழுதியுள்ளார் அந்தக் கதையின் ஆசிரியர். இரு இடத்திலும் வேம்பின் தகவல்கள் அறிந்து மனதுக்குள் ஒரு பரவசம் உண்டானது.

    தாங்கள் இயற்றிய பாடல் அருமை. அன்னை அனைவரையும் நலமுடன் காத்தருள நானும் வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வேப்பங்கொழுந்தை எடுத்து உப்பிட்டு அரைத்து பதினைந்து நாட்களுக்கொருமுறை அல்லது மாதமொருமுறை காலை சாப்பிடக் கொடுப்பார் என் பாட்டி.

    பதிலளிநீக்கு
  6. என் அப்பாவை வேம்பு என்றும் கூப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..