நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 21, 2025

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
  பங்குனி 7
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
திருச்செந்தூர்


தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ... தனதான

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ... வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ... மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ... குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த .... அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 

மன்மதன் தனது கையிலுள்ள
 மலர்ப் பாணங்கள் ஐந்தினையும் எய்கின்றான்..

வானத்தில் நிலவானது
வெயிலைப் போலக் காய்கின்றது..

குளிர்ச்சியான வாடைக் காற்றும்  தீயைப் போல சுடுகின்றது ,

வீண்வம்பு பேசுபவர்கள் அவரவர் வசை மொழிகளைக் கூறுகின்றனர்..

குறவர்கள் வாழ்கின்ற குன்றில் இருக்கும் பேதைப் பெண்ணாகிய நான் அடைந்திருக்கும்
கொடும் துன்ப  மயக்கம் தீர்வதற்கு

 குளிர்ந்த மாலைப் பொழுதில்  நீ வந்து 
அணிந்திருக்கும் மலர் மாலையைத் தந்து

எனது குறை தீரும்படிக்கு என்னை அணுக மாட்டாயா?..

மான் கன்றினை உகந்து கரத்தினில் ஏந்துகின்ற
 சிவபெருமான்

மனம் மகிழ்ந்து உனது வழிபாட்டு முறைகளைத் தரப் பெற்றவனே..

கிரெளஞ்ச மலையானது பொடியினும் பொடியாகிப் போகவும் அலைகடல் கொந்தளித்து அடங்கவும் வடிவேலை வீசிய அதி தீரனே

உன்னை அறிவால் அறிந்து 
உன்னிரு தாள்களை வணங்குகின்ற

அடியார்களின் துன்பத்தைக் களைபவனே..

செம்பொன்னைப் போலப் பிரகாசிக்கின்ற அழகிய
மயிலின் மீது விருப்புடன் அமர்ந்து

 திருச்செந்தூரில் விளங்குகின்ற பெருமானே!..

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

2 கருத்துகள்:

  1. ஏதாவது பிரார்த்தனை செய்து கொண்டு இந்த ஸ்லோகத்தை தினம் ஐந்து முறை சொன்னால் பிரார்த்தனை நிறைவேறும் என்று நம்பிக்கை.  என் பாஸ் உட்பட அலுவலக நண்பர்களும் அடிக்கடி சொல்வது.

    பதிலளிநீக்கு
  2. திருப்புகழ் பாடி வணங்கினோம்.

    திருச்செந்தூர் முருகன் அனைவரையும் காக்கட்டும்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..