நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 28
புதன்கிழமை
- சென்ற வாரப் பதிவில் -
எனவே இதன் (பச்சைப் பயிறு) சாகுபடியில் ரசாயனங்கள் சற்று கூடுதல்..
இப்படியிருக்க இதற்கு ஏன் இத்தனை கட்டுமானம்?..
அடுத்த பதிவில் சொல்கின்றேன்!..
- என்று சொல்லி இருந்தேன்..
இதோ மேல் விளக்கம்:
விதை நேர்த்தியுடன் விதைக்கப்பட்ட 45 நாட்களில் மேல் உரம் இடப்படுகின்றது..
பயிர் வளர்ந்து 60 - 65 நாட்களில் பூத்து காய் பிடித்து முதிர்ந்து காணப்படும்.
முதல் அறுவடைக்குப் பின்
அடுத்த 20 - 25 நாட்களில் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும்.
எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.
நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இணையத்தில் பெறப்பட்ட வேளாண் செய்திகள் மற்றும் படங்கள்
பச்சைப் பயிறு சாகுபடியில்
ரசாயன பராமரிப்பு உண்டு என்றாலும் - பச்சைப் பயிறு உலர் கனி வகையைச் சேர்ந்தது என்பதால்
நேரிடையாக ரசாயனத் தாக்கம் இல்லாமல்
சொர சொரப்பான மேல் கூடு கவசமாக் (புளியம் பழத்தைப் போல)
உள்ளிக்கும் தானியங்களைப்
பாதுகாக்கின்றது..
இந்தக் கவசம் இயற்கையின் வடிவமைப்பு.. கொடை..
எனவே, பச்சைப் பயறு ஆரோக்கியமானதாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றது...
இவ்வேளையில் மலரும் நினைவாக ஒரு செய்தி.
68, 69, 70 களில் நானும் எனது தங்கையும் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் பயறு எடுப்பதற்குச் செல்வோம்..
விடியற்காலையில் வீட்டிலேயே நீராகாரம் குடித்து விட்டுச் சென்றால் சூரியன் வருவதற்குள் திறமைக்கு ஏற்றவாறு முப்பது நாற்பது அடி தூரத்துக்கு பயத்தஞ் செடிகளைப் பிடுங்கியிருப்போம்..
இருகை அகலத்துக்கு
செடிகளைப் பிடுங்கிப் போட்டுக் கொண்டே நேராகச் செல்வது தான் வேலை.. முழு வயலும் முடிந்தவுடன் நாம் வந்த வழியில் கிடப்பவற்றை ஒன்றாகக் குவித்தால் அதில் ஐந்தில் ஒரு பங்கு கூலி கூடுதலாக இரண்டு ரூபாய் கிடைக்கும்.. சிலர் நாலு பங்கு வைப்பார்கள்..
மதியம் ஆகி விட்டது என்றால் மட்டையில் சோறு கிடைக்கும்..
எப்படியும் மதியம் ஒன்றரைக்குள் கரையேறி விடுவோம்...
அடுத்து கூலியுடன் கிடைத்த பயத்தஞ்செடிகளை வெயிலில் பரப்பி வைத்தால் சில நாட்களில் நன்றாக உலர்ந்து தானியங்கள் சேகரம் ஆகி விடும்...
தொடர்ந்து சில நாட்கள் பயத்தஞ்செடி அறுவடைக்குச் சென்றால் வீட்டுக்குத் தேவையான பயறு தற்சார்பாக வீட்டிற்குள்..
அன்றைய நாட்களில் தேநீரின் விலை ஆறு காசுகள் மட்டுமே..
இந்தப் பழங்கதை எதற்கு என்றால் 70 களில் பயத்தஞ்செடி அறுவடையை நினைவு கூர்வதற்கே..
இக்காலத்தில் ஒரு செடியில் இரண்டு முறை காய் பறிக்கப்படுகின்றது..
எல்லாம் அறிவியலின் பயன்!..
அவ்வளவு தானா!?..
வந்தது தான் வந்தீங்க.. எங்க பக்கத்து கீரை பருப்புக் கூட்டு பற்றி யும் தெரிஞ்சுக்கோங்க..
தஞ்சாவூர் கீரைக் கூட்டு
கீரைக் கூட்டு என்றும் சொல்வார்கள்..
தேவையான பொருட்கள் :
முளைக்கீரை இரண்டு கட்டு
பாசிப்பருப்பு 200 gr
தேங்காய் ஒருமூடி
சின்ன வெங்காயம் 7
வீட்டில் தயாரிக்கப்பட்ட
சாம்பார் தூள் ஒரு tsp
மஞ்சள் தூள் அரை tsp
கல் உப்பு தேவைக்கு
தாளிப்பதற்கு :
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கடுகு ஒரு tsp
சீரகம் ஒரு tsp
உளுத்தம் பருப்பு அரை tsp
நெய் ஒரு Tbsp
செய்முறை அனைவருக்கும் தெரியும் தானே!..
தெரியாதவர்களுக்கு மட்டும் அடுத்த திங்கள் பதிவில்!..
வாழ்க வளம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
செடியைப் பிடுங்கிப் போட்டு விட்டால் அப்புறம் எப்படி இரண்டாம் மகசூல்?
பதிலளிநீக்குகீரை செய்முறை தெரியும்தான். ஆனால் நாங்கள் 90 சதவிகிதம் வெங்காயம், பூண்டு இல்லாமல் செய்வோம்.
பதிலளிநீக்குபயறு பற்றிய விபரங்கள் அருமை.
பதிலளிநீக்குதஞ்சாவூர் கீரை கூட்டும் நன்று.