நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 22, 2022

குறுக்குத் தெரு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 6
  செவ்வாய்க்கிழமை

இன்றொரு சிறுகதை
-: குறுக்குத் தெரு :-


குறுக்குத் தெருவில்  இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக ஓடிக் கொண்டிருப்பதே இந்த மூன்றுக்கும் வேலை..

என்றாலும் -
மொத்தம் நான்கு குட்டிகள்.. 

இவற்றின் மகாத்மியம்
என்னவென்றால் குட்டிகளை ஈன்று கொஞ்சிக் கொண்டிருந்த தாய் திடீரெனக் காணாமல் போய் விட்டது.. 

அதற்கு என்ன ஆயிற்றோ.. ஏது ஆயிற்றோ.. - என்று கவலைப்படுவதற்கு யாரும் இல்லாமல் போனார்கள்..

இங்கே இருப்பவர்கள் எல்லாரும் நவநாகரீகத்தில் பிறந்தவர்கள். சொந்த பந்தங்களை நெருங்க விடாமல் தன்னந் தனியாக இருப்பதே கௌரவம் என்னும் கோட்பாட்டை உடையவர்கள்..

அந்த வீடுகளும் பெரிய பெரிய கம்பிக் கதவுகளுடன் கூடியவை. இரவிலும் பகலிலும் அடைத்தே கிடப்பவை.. 

அப்படியான தெருவில்
அனாதைகளாய்த் திரிந்து கொண்டிருந்த குட்டிகளில் கறுப்புக்கு மட்டும் யோகம் அடித்தது..

கடைசி வீட்டுக்காரர்கள் தூக்கிச் சென்று கழுத்தில் பட்டை ஒன்றைக் கட்டி வீட்டின் உள்ளேயே வைத்துக் கொண்டார்கள். கறுப்பு அந்த வீட்டின் வளர்ப்பாகி விட்டது..

அது முதற்கொண்டு இந்த மூன்றும் ஒன்றுக்குள் ஒன்று என உறுதுணையாகி விட்டன. தம்முள் சண்டை இட்டுக் கொள்வதோ கடித்துக் கொள்வதோ இல்லை..

கூப்பிட்டு ஒரு கை சோறு வைப்பவர் என்று எவரும் இல்லை.. 

ஆனாலும்
ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வீடுகளுக்கு வெளியே
புலால் உணவின் மிச்சங்கள் நிறைய வந்து விழும். அன்றைக்கு மட்டுமே இதுகளுக்குக் கொண்டாட்டம்..

காரணம் அந்தப் பக்கத்தில் வசிப்பவர்கள் எல்லாருமே அரசுப் பணி, வங்கிப் பணி என்ற இயந்திரங்களுக்குள் இயந்திரங்களாக இருப்பவர்கள். காலையில் கிளம்பிப் போனால் சூரியன் இறங்கியதற்குப் பிறகே திரும்புவார்கள்..

ஒரு சில வீடுகளில் மட்டுமே இளஞ்சிறார்கள். வயதானவர்கள்..  

அவர்களும் இதுகளிடத்தில் இன்முகம் காட்ட மாட்டார்கள்..

ஆனால் இதுகளுக்கு மனிதர்களுடன் பழகுவதற்கு  ஆசை கிடந்து அடித்துக் கொள்ளும்..  

பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக காலையில்
 - டுடுட்..டுடுட்.. - என்ற சத்தத்துடன் ஆட்டோ வரும் போது இதுகளுக்கும் உற்சாகமாகி விடும்.. முன்னும் பின்னுமாக குதித்துக் கும்மாளம் குதூகலம்.. 

அந்த ஆட்டோக்காரன் கடுப்பாகி கீழே இறங்கி கல்லை எடுத்து எறிவான்... 

ஒருசமயம் குட்டியின் மீது கல் விழுந்ததில் பாவம் துடித்துப் போய் விட்டது.. அதிலிருந்து ஆட்டோ வரும் போது அதன் அருகில் சென்று குதிப்பது பிடிக்காமல் போயிற்று..

மாலை நேரங்களில் பெரியவர் சிலர் வெளியே நடை பழகும் போது அவர்களுக்குத் துணையாய் நடப்பதற்கு மனம் துடிக்கும்...

ஆனால் - 
அவர்களோ கையில் வைத்திருக்கும் தடியை ஓங்கியபடி  ' சூ' என்பார்கள்.. இதுகளுக்கு " சீ " என்றாகி விடும்...

ஒன்றும் பிடிபடாமல் அலுத்துப் போய் மண்டிக் கிடக்கும் புதர்களைப் பிறாண்டும் போது 
உள்ளேயிருந்து விஷ ஜந்துகள் கலைந்து ஓடும்.. 

உற்சாகத்துடன் துரத்திக் கொண்டு ஓடினால் ' புஸ் ' என்ற சத்தத்துடன்  தலையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் வகையறாக்கள் அதெல்லாம்.. அதற்குப் பிறகு ரெண்டு நாளைக்கு காய்ச்சல் தான்.. நடுக்கம் தான்..


இப்படியான நிகழ்வுகளுக்கு இடையே குட்டிகள் மூன்றும் பசங்களாகி விட்டன..  உடல் வாளிப்பாகி குரலும் மாறி விட்டது. மண்ணைப் பிறாண்டும் வேகமும் அதிகமாகி விட்டது..  இருந்த போதும் ஒன்றுக்கு ஒன்று ராசியாகவே இருந்தன..

அங்கிருக்கும் பிள்ளையார் கோயிலும் புங்க மரத்து நிழலும் தான் இருப்பிடம் என்றாகிய நிலையில், ஒருநாள் ஆட்கள் சிலர் வந்தார்கள்..

" தெரு நாய்களுக்கு தின்னக் கொடுத்தால்  தீராத பாவமும் தீருதாம்!.. " -  என்றபடி பிஸ்கட் போட்டார்கள்.. போய் விட்டார்கள்.. 

பிஸ்கட்கள் வாசமாகவும் புதுவித சுவையாகவும் இருந்தன..

சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்கள்.. பிஸ்கட் போட்டார்கள்.. போய் விட்டார்கள்.. 

மறுபடியும் எப்போது வருவார்கள் என்றிருந்தது பசங்களுக்கு..

அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை..  காற்றில் வந்த புலால் வாடை பசங்களுக்குக் கிளுகிளுப்பாக இருந்தது.. வாலைக் குழைத்தபடி  ஓடினார்கள்.. 

சொல்லி வைத்த மாதிரி இந்த வீட்டிலும் அந்த வீட்டிலும் அதற்கடுத்த வீட்டிலும் இலையோடு எலும்புகள் வாசலிலேயே இருந்தன.. சந்தோஷமாக உள்ளே நுழைந்ததும் வாசல் கம்பிக் கதவுகள் சடாரென அடைத்துக் கொள்ள சாம்பல் நிறத்தான் மட்டும் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தான்..

விழுந்த வேகத்தில் எழுந்து பிள்ளையார் கோயிலை நோக்கி ஓடினான். அங்கே பிஸ்கட் பாக்கெட்டுடன் சிலர். ஐந்தறிவு ஆனாலும் ஏதோ புரிந்தது. காதுகளை விறைப்பாக்கிக் கொண்டு  அவர்கள் மீது  பாய்ந்தான். கோபத்துடன் விழுந்து பிடுங்கினான்.. 

" ஆழ்ஃப்.. ஆழ்ஃப்.. ஆழ்ஃப்.. "

அவர்களோ கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசி எறிந்து விட்டு தலை தெறிக்க ஓடிப் போனார்கள் ..

" இனிமே பிஸ்கட்டும் வேண்டாம்.. எலும்புத் துண்டும் வேண்டாம்.. "

உடன் பிறப்புகளைப் பறி கொடுத்து விட்டு தப்பித்து வந்த சாம்பல் ஏக்கத்துடன் பிள்ளையாரை நிமிர்ந்து பார்த்தபோது - 

அங்கே - 
நாய்களைப் பிடித்து வைத்துக் கொண்ட வீடுகளில் பேசிக் கொண்டிருந்தார்கள்..

" நாய் இல்லாத வீடு.. ன்னு பார்த்து பட்டப் பகல்.. ல கை வச்சிருக்கானுங்க.. இனிமே இது இங்கே குலைச்சிக்கிட்டு கிடக்கும்.. தைரியமா இருக்கலாம்.. என்ன
இதைக் கொஞ்சம் நல்லா கவனிக்கணும்.. அவ்வளோ தான்!.. "

" போலீசுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டியது தானே இந்த மாதிரி திருடிட்டாங்கன்னு!... "

" ஏன்?. வருமானத்துக்கு 
மேல இத்தனை பணமும் பவுனும் வெள்ளியும் எப்படிடா வந்தது..ன்னு நோண்டி நொங்கு எடுக்கறதுக்கா?... "

சிறைப்பட்டு விட்ட ஜீவன் இதைக் கேட்டபடியே சிந்தித்துக் கொண்டிருந்தது..
***

22 கருத்துகள்:

  1. பரிதாப ஜீவன்கள்.  சுய நலர்களின் விருப்பத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.  ஒருவன் மட்டும் தனியனாகிப் போனது வருத்தம் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      விலங்குகள் என்றாலும் அவற்றுக்கும் பிணைப்பு உண்டு தானே..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. // முன்னும் பின்னுக்கும் குதித்து //

    ஆம், குட்டிகள் முன்னும் பின்னுமாய் குதித்து விளையாடுவதைப் பார்ப்பதே அழகு.  மனிதர்களிடம் நட்பு கொள்ள அவை ஓடி வருவதும் அழகு.  நான் முன்னர் எழுதிய முகநூல் பதிவொன்று நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குட்டிகள் முன்னும் பின்னுமாய் குதித்து விளையாடுவதைப் பார்ப்பதே அழகு.//

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. நாய்களுக்கும் சொந்தங்கள் எல்லாம் உண்டு எனவும் அவை ஒரு தெருவைத்தங்களுக்குள் பாகம் பிரிச்சுக்கும் எனவும் முன்னர் யாரோ எழுதிப் படிச்ச நினைவு. ஒரு நாய்க்குட்டி மட்டும் தனியாகப் போனது வருத்தம் தான். மற்றவற்றிற்கு ஏதோ இடம் கிடைத்ததே தவிர்க்க முடியாமல்! அவங்க வந்து பிஸ்கட் போடும்போதே புரிஞ்சது, நல்லதுக்கில்லைனு! ஒரு வழியா நாய்களுக்கும் புரிஞ்சதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாய்களுக்கும் சொந்தங்கள் எல்லாம் உண்டு எனவும் அவை ஒரு தெருவைத் தங்களுக்குள் பாகம் பிரிச்சுக்கும்.. //

      உண்மை தான்..
      நாய்கள் மட்டுமின்றி பிற விலங்குகளுக்கும் தனித்தன்மை உள்ளன..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. நாய்களுக்கும் சொந்தங்கள் எல்லாம் உண்டு எனவும் அவை ஒரு தெருவைத்தங்களுக்குள் பாகம் பிரிச்சுக்கும் எனவும் முன்னர் யாரோ எழுதிப் படிச்ச நினைவு. ஒரு நாய்க்குட்டி மட்டும் தனியாகப் போனது வருத்தம் தான். மற்றவற்றிற்கு ஏதோ இடம் கிடைத்ததே தவிர்க்க முடியாமல்! அவங்க வந்து பிஸ்கட் போடும்போதே புரிஞ்சது, நல்லதுக்கில்லைனு! ஒரு வழியா நாய்களுக்கும் புரிஞ்சதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றியக்கா..

      நீக்கு
  5. நாய்களைத் தூரத்திலிருந்து பார்ப்பதே போதும் என நினைப்பேன். அழகழகாக அவ்வப்போது கடூரமாக்க் குலைக்கும் வளர்ப்பு நாய்கள் எனக்கு அலர்ஜி. நான் நடக்கும்போதும் நாயை நடைக்குக் கூட்டி வருபவர்கள் ஜாக்கிரதையா இருப்பாங்க.

    நாய்க்குட்டிகள் மட்டுமல்ல எந்தக் குட்டிகளும் கள்ளம் மனதில் புகாத வயது வரை கொள்ளை அழகுதான். பார்த்து ரசிக்கமுடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாய்க்குட்டிகள் மட்டுமல்ல எந்தக் குட்டிகளும் கள்ளம் மனதில் புகாத வயது வரை கொள்ளை அழகுதான். பார்த்து ரசிக்கமுடியும்.. //

      உண்மை தான்.. வளர்த்தவரையே கடித்து வைக்கின்றன சில நாய்கள்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி..

      நீக்கு
  6. விலங்குகளின் உணர்வுகளை யார் நினைக்கின்றார்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய்கள் என்றாலே சிலருக்கு இளக்காரம் தான்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி ஜி..

      நீக்கு
    2. துரை அண்ணா நாய்கள் என்று மட்டுமில்லை கால்நடை மருத்துவர் என்றாலே கொஞ்சம் மட்டமாகத்தான் சமூகம் நினைக்கிறது. பல உறவுகள், சில நட்புகள் உட்பட. என் மகனுக்கு மதிப்பு குறைவுதான்.

      கீதா

      நீக்கு
    3. //கால்நடை மருத்துவர் என்றாலே கொஞ்சம் மட்டமாகத்தான் சமூகம் நினைக்கிறது...//

      அதைப் பெரிது படுத்த் வேண்டாம்... வாயில்லா ஜீவன்களின் வாழ்த்துகள் என்றும் உண்டு..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு நன்றி சகோ...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல உணர்ச்சி பூர்வமான கதை. விலங்குகள் என்றாலும் அதனுள்ளும் எழும் பாசங்களை பார்த்துள்ளேன். நாலு குட்டிகள் சேர்ந்து பிறந்து வளர்ந்து வரும் காலத்தில் , அதில் ஒரு குட்டி மட்டும் தனியானாகிப் போனது வருத்தமாக இருந்தது.

    இங்கும் நாங்கள் வந்த புதிதில் இப்படித்தான் நான்கு குட்டிகள் தெருவில் சண்டை போட்டபடியும், சந்தோஷத்துடனும் விளையாடியபடி இருந்தன. ஒரு மாதத்தில் ஒவ்வொன்றாக குறைந்து ஒன்று மட்டும் வளர்ந்து விட்டது போலும்... அதனுடனான மற்றதுகள் கண்களில் காணவேயில்லை. அந்த உண்மை சம்பவத்தை தங்கள் கதை இன்று இணைத்து விட்டது.கதை படித்தவுடன் மீண்டும் அந்த பழைய நினைவுகள் எனக்குள் வந்து போகின்றன. இப்படித்தான் அவைகளும் ஆங்காங்கே சிறைபட்டு போயினவோ என்னவோ...!!

    மிக அழகான தங்களுக்கே உரித்தான எழுத்து நடையில் ஒரு பாசம் மிகுந்த கதையை அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அந்த உண்மை சம்பவத்தை தங்கள் கதை இன்று இணைத்து விட்டது கதை.. //

      இது விளையாட்டாக எழுதப்பட்ட கதை.. இத்தனை வரவேற்பு ஆச்சர்யம்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. விரிவான கருத்திற்கு நன்றி

      நீக்கு
  8. விரட்டி ஒதுக்கிய நாயை தங்களுக்கு தேவை எனும் போது எடுத்து கொண்டார்கள்.
    எலும்பு துண்டை காட்டி பிடித்து வைத்து கொண்டார்களே!

    ஒன்று மட்டும் தனித்து விட பட்டது பாவம்தான்.
    கதை படித்து மனம் கனத்து விட்டது.


    நாயை பிடித்து வைத்து கொண்டவர்கள் பேசிய பேச்சு
    அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை சொல்கிறது.
    நாய்களிடம் அன்பு காட்டினால் வளர்ப்பவர்களிடம் மிகவும் பிரியமாக இருக்கும்.

    முன்பு தாய் நாய் வராமல் குட்டி நாய்களின் ஓலம் பற்றி கதை படித்தேன். எல்லோரும் கதவை அடைத்து கொள்வார்கள்.
    தேடி பார்க்க வேண்டும். சிறு கதை தொகுப்பில் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாயை பிடித்து வைத்து கொண்டவர்கள் பேசிய பேச்சு
      அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை சொல்கிறது...//

      அன்பின் வருகைக்கும் .கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. முதல் படமே மனதை அள்ளுகிறது.!!! துரை அண்ணா...

    அதுவரை அண்டவிடாதவர்கள் தங்கள் வீடில் திருடு போனவுடன் ரெண்டு எலும்புத் துண்டைப் போட்டு அமுக்கிப் போட்டுட்டாங்க பாருங்க....சுயநலத்தோடு வளர்க்கப்படும் அவை பாவம்...வெளியே தனித்து விடப்பட்டது பாவம்....

    இங்கும் பல குட்டிகள் திரிகின்றன. அதுவும் இப்போது காலமாயிற்றே...குடிசைகளில் வாழ்பவர்கள் அவற்றோடு வாழ்வதையும் பார்க்க முடிகிறது. தங்களுக்குக் கிடைப்பதில் அவற்றிற்கும் கொடுத்து வாழ்வதைக் காண முடிகிறது. அதுவும் பாசத்துடன். கட்டிடத் தொழிலாளிகள். இடம் மாறும் போது தங்களோடு அழைத்துச் சென்று விடுகிறார்கள். கொரோனா காலத்தில் கூட இடம் பெயர்ந்து நடந்தே சென்ற ஏழைகள் தங்களோடு அழைத்துச் சென்ற செல்லங்களை வண்டிகளில் ஏற்றவில்லை என்றால் தங்களுக்கும் வண்டி வேண்டாம் என்று நடந்தே சென்றதை செய்திகளில் வாசித்த நினைவும் வருகிறது.

    எல்லா விலங்குகளுக்கும் உணர்வுகள் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதுவரை அண்ட விடாதவர்கள் தங்கள் வீட்டில் திருடு போனவுடன் ரெண்டு எலும்புத் துண்டைப் போட்டு அமுக்கிப் போட்டுட்டாங்க பாருங்க..சுயநலத்தை.. //

      இது தான் கதையின் அடி நாதம்..

      அன்பின் வருகைக்கும் .கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..