நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 15, 2022

விரிவுரை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 29
 செவ்வாய்க்கிழமை

இன்றொரு சிறுகதை


விரிவுரை
-::-
நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஐப்பசி மாதம்..

சில நாள் மழையுடன் தீபாவளி வெடிச் சத்தமும் ஓய்ந்திருந்தது..

பச்சைப் பசேல் என்று வயல்கள் சூழ்ந்திருக்கும் அழகிய கிராமம்.. 

அந்த அழகுக்கு மேலும் அழகை ஊட்டுவதாக ஊருக்கு நடுவில் அறுமுக வேலவனின் திருக்கோயில்.. 

முருகனுக்குரிய எல்லா விசேஷங்களும் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்ற நிலையில் அப்போது சூர சங்காரம் பத்துநாள் விழாவாக நடந்து கொண்டிருந்தது..

காப்பு கட்டிக் கொண்டு சஷ்டி விரதம் இருப்போர் திருச்சுற்று பந்தலுக்குள் குழுமியிருக்க  வருவோர்க்கெல்லாம் அன்னதானம் வெளியில் நடந்து கொண்டிருந்தது..

திருவிழாவின் முதல்
ஆறு நாட்களுக்கு தொடர் இலக்கிய சொற்பொழிவு.. 

சாயரட்சை முடிந்ததும் பாலமுருகன் நாளொரு வாகனமாக திருப்புகழ் பாராயணத்துடன் கோயில் உள் வீதி எழுந்தருள்வான்..

வீதியுலா நிறைவானதும் இலக்கிய விரிவுரைக்காக 
பட்டணத்தில் இருந்து வந்திருக்கும் பேராசிரியர்  மேடையேறுவார்.. 

கந்த புராணத்தின் கவி நயம் பற்றிக் கசிந்துருகிப் பேசும் போது திருவிழாக் கூட்டமே திகைத்து நிற்கும்.. பேராசிரியரின் மனம் சிறகடித்துப் பறந்திருக்கும் - 

மக்களுக்குத் தீந்தமிழை தித்திக்கத் தித்திக்கத் தந்தோம் நாம்!.. - என்று!.. 

அன்றைய விரிவுரையானது வீரபாகு தூது  தொடங்கி சூரசங்காரத்துடன் இனிதே நிறைவடைந்திருந்தது... 

மாலை மரியாதையுடன்
தமது ஓய்விடத்திற்குத் திரும்பியிருந்தார் பேராசிரியர்.. அது கோயிலுக்கு அருகாமையில் இருக்கின்ற பள்ளிக் கூடத்தின் அறைகளில் ஒன்று.. 

இவர் தங்கிக் கொள்வதற்காக பரம்பரை அறங்காவலர் அவர்களது ஏற்பாடு.. இரவு உணவை உண்டாயிற்று.. தாம்பூலமும் தரித்தாயிற்று.. 

கொசுக்கள் இல்லை ஆயினும் உறங்குவதற்கான விசுப் பலகைகளைச் சுற்றிலும் கொசுவலை இடப்பட்டிருந்தது.
அறைக்குள் உலவிக் கொண்டிருந்த பேராசிரியர்  உறங்கலாம் என்று நினைத்த போது - வாசல் வழிநடையில் இருவர் பேசிக் கொள்வது திருநாள் இரைச்சலிலும் தெளிவாகக் கேட்டது.. 

" நல்ல இலக்கியமான பேச்சு மாமா.. "

" நீங்க தான் மெச்சிக்கணும் மாப்ளே!.. "

" ஏன்!.. உங்களுக்குப் பிடிக்கலையா?.."

" ஜனங்களுக்கே ஒன்னும் புரியலை... கூட்டம் கலைஞ்சு போனதா இல்லையா!.. "

" மாமா.. அவர் பெரிய படிப்பாளி.."

" இருக்கட்டுமே.. மாப்ளே!.. முருகனோட கதை சும்மா கேட்டுட்டுப் போறதுக்கு இல்லை... பால் குடமும் காவடியும் சக்கரப் பொங்கலும் காணிக்கை தான்.. ஆனா அதோட நீதி என்னா.. ன்னு தெரியுமா?... "

சிறிது மௌனம்..

என்னவென்று தெரிந்து கொள்ள பேராசிரியருக்கு ஆவலாயிற்று..

"  நாம சாப்பிடாம  இருந்தாக் கூட - நாலு பேருக்கு சாப்பிடக் கொடுக்குறது தான்  அன்ன தானம்.. அதுதான் அதுக்குத் தத்துவம்.. "

" இதுக்கு இப்படியும் அர்த்தம் இருக்குதா!.. " -  பேராசிரியருக்கு வியப்பு..

" தவசி..ன்னு போனவன் புத்தி தடுமாறக் கூடாது.. அப்படித் தடுமாறிப் போய் நேரங் கெட்ட நேரத்துல கூடுனதால தானே அடங்காத அசுரக் கூட்டம் பொறந்தது!..  கோபத்தால அழிஞ்சவனும் காமத்தால அழிஞ்சவனும் ரொம்பப் பேரு இந்தப் பூமியில.. இதத் தான் ஜனங்களுக்குப் புரிய வைக்க வேணும்.. "

" இதையெல்லாம் எங்கே மாமா படிச்சீங்க?.."

" எல்லாம் திண்ணப் பள்ளிக்கூடத்துல தான்!.."

' காஸ்யப முனிவர் மாயை ஆகிய மங்கையுடன் நேரம் கெட்ட நேரத்தில் கூடியதால் உற்பத்தியான சூரபத்மன் , தவமிருந்து வீரவேள்வி செய்து சிவ பெருமானிடம் இருந்து ஆயிரத்தெட்டு அண்டங்களையும்  நூற்றெட்டு யுகங்களுக்கு ஆள்வதற்கான வரத்தினைப் பெற்றான்!..' - என்று, சில நாட்களுக்கு முன் செய்த விரிவுரை பேராசிரியரின் நினைவுக்கு வந்தது..

வெளியில் பேச்சு தொடர்ந்தது..

" என்னத் தவிர வேற யாராலயும்  உனக்கு ஆபத்தோ அழிவோ கிடையாது.. ன்னு ஈசன் வரங்கொடுத்ததுக்கு அப்புறம்  அதை மறந்து போனான் சூர பதுமன்.. பாலமுருகனா வந்து நிக்கிறது சாட்சாத் ஈஸ்வரன் தான்... ன்னு ஒத்துக்காம அகம்பாவம் பிடிச்சுப் போனது அவனுக்கு.. அது தானே சூர பதுமனுக்கு கேடு காலம்!.. "

" பிறத்தியார் சொல்றதயும் கேக்கணும்.. எதிரில நிக்கிற யாரையும் சாமானியமா நெனக்கக் கூடாது.. முக்கியமா பழசு எதையும் மறக்கக் கூடாது.. இதையும் சேர்த்து, ஈஸ்வரன் கொடுத்த வரத்தையும் மறந்தானே.. தவமா தவமிருந்து சூரன் வாங்குன வரம் எல்லாம் அவன் அழியறதுக்கு.. ன்னு ஆகிப் போச்சே!.. இதையெல்லாம் எடுத்துச் சொல்லித் தான் ஜனங்க மனசுல நீதிய பதிய வைக்க வேணும்..  "

" அருமை அருமை.. மாமா!.. "

" அந்தப் பாட்டு அப்படி.. இந்தப் பாட்டு இப்படி.. ன்னு பேசிட்டுப் போறதுல யாருக்கு என்ன லாபம்?.. "

" அதானே!.. யாருக்கு என்ன லாபம்?.. "

" புராணத்துல அந்த அழகும் இந்த அழகும் சொல்லித் தான் இருக்காங்க!.. எதுக்கு.. ன்னு தெரியுமா?.. "

" எதுக்கு மாமா?.. " - மாப்பிள்ளையிடமிருந்து கேள்வி..

" பொண்ணுங்க அழகைக் கேட்டுட்டு கடந்து போறியா.. இல்லே.. அங்கேயே புரண்டு விழுந்து உருப்படாமப் போறியா.. ன்னு பார்க்கத் தான்!.."

" போற வழி எல்லாம் பொண்ணுங்க அழகு தான்.. பார்த்துக்கிட்டே  கடந்துடணும்... இல்லேன்னா கயிலாயம் போய்ச் சேர முடியாது!.. "

மறுபடியும் அதிர்ந்தார் பேராசிரியர்..

" பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்.. ன்னு பாடுவான்.. கேக்குறதுக்கு நல்லா இருக்கும்.. அதுக்கு எல்லாம் பேரு என்ன.. ன்னு கேளு!.. ஒன்னுந் தெரியாது.. "

" எனக்குங் கூடத் தெரியாதே!.. " - பேராசிரியர் திகைத்தார்..

" கதையில இருக்குற நீதிய எடுத்துச் சொல்றதுக்குத் தான படிப்பு.. அத விட்டுட்டு புராணத்துல மாங்கா இருக்கு.. தேங்கா இருக்கு.. ன்னு.. பேசினா கடல்ல பொழிஞ்ச மழை  தான்..  காட்ல தெரிஞ்ச நிலா தான்!.. போங்க மாப்ளே!.. "

சவுக்கால் அடிபட்டதைப் போல் இருந்தது பேராசிரியருக்கு..

இது நாள் வரைக்கும் தான் செய்த தவறு என்னவென்று  புரிந்தது..

நாளைக்குத் திருக்கல்யாண நிகழ்வில் - தேவ மகளையும் வேட மகளையும் பற்றிப் பேசுவதற்காக  பேராசிரியரின் நெஞ்சுக்குள் இருந்த குறிப்புகள் கலைந்தன..

அவருக்குள் இருந்த ஏதோ ஒன்று நொறுங்கிச் சிதறியது..

தன்னுள்ளிருந்த மாயையை சிதற அடித்த பெரியவரைப் பார்க்கலாம் என்று எண்ணிக் கதவைத் திறந்தார்.. 

அறையின் முன் வாசல் ஆள் இன்றிக் கிடந்தது.. 

அங்கே கலையரங்கில் கலகலப்பு.. 

" அரை மணி நேரம்  தாமதமாகி விட்டது.. அடியார் பெருமக்கள் மன்னிக்கவும்!.. " - என்ற முன்னறிவிப்புடன் வில்லிசை நிகழ்ச்சி தொடங்கியது..

" தந்தனத் தோம் என்று சொல்லியே.."

" ஆமா.. "

" வில்லினில் பாட .. "

"ஆமா.. "

" வந்தருள்வாய் கலைமகளே!..  "
**


வாழிய நலம்
***

20 கருத்துகள்:

  1. மறுநாள் முதல் பொருளுணர்ந்து உரையாற்றத் தொடங்கி இருப்பார் பேராசிரியர்..  உணர்ந்திருந்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நல்ல கதை... பிறருக்காகப் பேசுவதிலும் அர்த்தம் நெறி உபயோகமான செய்திகள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களின் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  3. மிக அருமையான கதை.
    பேராசிரியர் அவர்களுக்கு மாமா, மாப்பிள்ளை உரையாடல் மூலம் முருகன் உணர்த்திவிட்டார்.

    பல நூல்களை கற்றவரை விட எளிமையாக உணர்த்தி விட்டார் மாமா.

    //சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்//
    மாணிக்க வாசகர் சொல்வது போல பாட்டின் பொருளுணர்ந்து

    அதன் படி நடக்கலாம்.

    //கதவை திறந்து பார்த்தபோது பெரியவரை காணோம்
    என்ற வரிகள் முருகன் வந்ததை உணர்த்துகிறது.//

    மாயை அகன்றால் வருவான் வடிவேலன்.

    கதை சொல்லும் போது கதையின் நீதி மனதில் பதியும் படி பேசினால் போதும் . மக்களும் நீதியை மட்டும் உணர்ந்து கொண்டால் போதும்.
    வாழ்வு வளமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. வாசித்தேன். எழுதியவரை நேசித்தேன். அந்த நேசிப்பு குட்டி குட்டி செய்திகளாய் இவர் கதைகள் இருந்து விடாமல் விரிந்து பரந்து கிளை பரப்பினால் எவ்வளவு நிறைவாக இருக்கும் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா அவர்களுக்கு நல்வரவு..

      எல்லாம் தங்கள் நல்லாசிகள் தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்திற்கு
      நன்றி ஜி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  7. புராணக்கதைகளில் பொதிந்துள்ள நீதியை மக்கள் புரிந்து கொள்ளும்படி எப்படி எடுத்துச் சொல்லணும் என்பதைச் சொல்லாமல் சொல்லிய அந்த மாமாவாய் வந்தருளிய கந்தனுக்கு நன்றி. பலரும் இப்படித்தான் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொள்ளாமல் வெட்டி விவாதம் செய்கின்றனர். பதில் சொல்லுவதிலும் அதை அவங்க புரிந்து கொள்ளுவதிலும் தான் இருக்குக் கதை சொல்லும் திறமை. தம்பி துரைக்கு அது நிறையவே இருக்கு. வாழ்த்துகள்/பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. // புராணக்
    கதைகளில் பொதிந்துள்ள நீதியை மக்கள் புரிந்து கொள்ளும்படி..//

    அதுதானே முக்கியம்.. இன்றைய தேவையும் அது தானே..

    தங்கள் அன்பின் வருகையும்
    விரிவான கருத்தும் வாழ்த்தும் பாராட்டும் மகிழ்ச்சி..

    நன்றியக்கா..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை. சொற்பொழிவு களில் கதைச் சொல்லுபவர்கள் ஒரு கதையை நல்ல விளக்கமாக அதிலுள்ள நீதியையும் மக்களுக்கு விவரிக்க வேண்டுமென கந்தனே வந்து மறை பொருளாக நின்று உபதேசித்தார் என்னும் போது அந்த இடத்தில் மெய்சிலிர்க்கிறது.

    "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு அவ்வைப்பிராட்டியை" முருகா..! ஆவணம் என்ற பாறை என்னை தடுக்கி விழ வைத்து விட்டது " என்று மனமுருகி தொழச் செய்தவனும் அந்த கந்தனல்லவா?

    நல்ல நீதிக் கதை.. தங்கள் எழுத்தில் அழகாக மிளிர்கிறது. மாமனாக வந்து மாயையை விரட்டிய மாயோனின் மருகனை தினமும் எந்த ஒரு மாயைகளும் பீடிக்காமல் இருக்க நாமும் பணிவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // அதிலுள்ள நீதியையும் மக்களுக்கு விவரிக்க வேண்டுமென கந்தனே வந்து மறை பொருளாக நின்று உபதேசித்தார் என்னும் போது ..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    எந்த ஒரு கலக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டுமென நானும் தினமும் இறைவனை தொழுகிறேன். இன்று என்னை எங்கள் உறவின் இழப்பு ஒன்று கலங்கச் செய்து விட்டது அதனால்தான் மனம் கலங்கிய நிலையில் எந்த ஒரு பதிவுக்கும் வர இயலவில்லை இதுவும் ஒரு மாயைதான். மாயையை உணரும் பக்குவத்தை அந்த இறைவன் முழுதாக தந்தருள வேண்டும். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் வருந்துகிறேன்.. அமைதி பெறவும்..

      முருகன் திருவருள் முன் நின்று காக்கும்..

      நீக்கு

  11. வணக்கம்!

    என்னடா இது பேராசிரியருக்கு வந்த சோதனை! நல்ல காலம் காதுகொடுத்துக் கேட்டதால அடுத்தநாள் பிரசங்கம் ஓரளவு மக்களைச் சென்றடைந்திருக்கும்

    இடமறிந் தூட்டும் இனியசொல் அன்றி
    அடங்கொண்டு மாளா தறிவு?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சீராளன் ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..