நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 16, 2022

விளக்கவுரை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 30 
 புதன்கிழமை


பன்னிரு கரத்தாய் போற்றி!..

எம்பெருமான் முருகனைக் கொண்டாடும் புகழுரைகளில் இதுவும் ஒன்று..

ஆயுதங்களை ஏந்துபவை தான் எனினும், அடியவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளுடன் வாரித் தருவனவும் பன்னிரு திருக்கரங்களே!.. - என்பது சான்றோர் திருவாக்கு..

அறுமுக வேலன் பன்னிரு திருக்கரங்களை உடையவன் என்று கொண்டாடுகின்றோம்..

பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் என்பது புகழ் பெற்ற சொற்றொடர்..

ஆனால், முருகனின் பன்னிரண்டு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் காணப்படுவதில்லை..

வலக்கீழ்க் கரம் அபயம் அளித்தும் இடக்கீழ்க் கரம் அனைத்தும் அளித்தும் திகழ்வன. ஏனைய திருக் கரங்களில் தலத்திற்கும் கோலத்திற்கும் ஏற்றவாறு ஆயுதங்கள் விளங்குகின்றன..

முருகனின் ஆயுதங்கள் என -  பன்னிரண்டுக்கும் மேலானவை காட்டப்படுகின்றன.. அவற்றுள் - ஜபமாலை, கமண்டலம், கொடி, தாமரை, மணி, பாசம் - என்பனவும் வருகின்றன.. 

அவை ஆயுதங்கள் அல்ல.. வேறு சில உச்சாடன பிரயோகங்களுக்கு உரியவை..

வேல், கொடி, பாசம், அங்குசம், வாள், கேடயம், கத்தி, ஏக சூலம், இருதலைச் சூலம், கதை, வஜ்ரம், கரும்பு, மலர், வில், அம்பு, சங்கு, சக்கரம்,
தண்டம், உலக்கை - இவற்றுள் தலத்துக்கு ஏற்றவாறு பத்து மட்டுமே முருகனின் திருக்கரங்களில் அமைந்திருக்கும்..

உலக்கை என்பதை நாமறிவோம்.. 
இங்கே சொல்லப்படுவது குற்றுலக்கை.. இதுவே வடிவங்களில் மாறுபட்டு மாத்தடி  என்றும் சுக்குமாந்தடி என்றும் குறுந்தடி என்றும் சொல்லப் படுகின்றது..

கந்தகுரு கவசத்தில் மாத்தடி என்ற வார்த்தைப் பிரயோகம் இருக்கும்..

தண்டு எனும் தண்டம் முருகனுடைய சிறப்புகளில் ஒன்று.. தேக்கு, கருங்காலி மரங்களில் இருந்து சீராகக் கடைந்தெடுக்கப்படுவது தண்டாயுதம்..

தண்டாயுதத்தின் உச்சியில் கிளி ஒன்று இருக்கக் காணலாம்.. அந்தக் கிளி தான் ஸ்ரீ அருணகிரிநாதர் என்பர் ஆன்றோர்..

கோழிக்கொடி - கோழிச் சின்னமாகவும் விளங்கும்..

நான்கு திருக்கரங்களுடன் முருகன் தரிசனம் தரும்போது பின்னிரு கரங்களில்  இருதலைச் சூலம் எனும் சக்தி ஆயுதமும்
வஜ்ரமும் காணக் கிடைக்கின்றன.. 

பதிவின் முதலில் உள்ள படத்தை நோக்கினால் வலப்புறம் இருதலைச் சூலம். இடப்புறம் வஜ்ரம்..

பழநியிலும் சுவாமி மலையிலும் வலப்புறத்தில் திகழ்வது தண்டாயுதமே..


சுவாமிமலையில் பரமகுருவின் வலப் புறத்தில் அணி செய்வது வஜ்ரவேல். இதுவே குலிசாயுதம் என்பர்..

செஞ்சேரி எனும் தென்சேரி
திருத்தலத்தில் வலக் கீழ்க்கரத்தில் நாகத்தையும் இடமேல் கரத்தில் சேவலையும் கொண்டிருக்கின்றான்.

இரண்டு திருக் கரங்களுடன்
திருச்செங்கோட்டு வேலவன்..
வலக்கையில் வேல் இடக்கையில் சேவல் ஏந்திய திருக்கோலம்..

பொதுவாக சக்தி வேலையும் சேவற் கொடியையும் முருகனருகில் சாற்றுவதே மரபு..

கரும்பும் மலரம்புகளும் பாவனையே.. அவற்றைத் தாங்கியுள்ள சிற்ப வடிவங்கள் மிக மிக அரிது..

செந்தில் முருகனின் கரங்களில் சிவமணி மாலையையும் தாமரையையும் காணலாம்..

சங்கு சக்ரதர ஷண்முகன்

அழகாபுத்தூர் ஸ்ரீ படிக்காசு வைத்த நாதர் ஆலயத்தில்
முருகப்பெருமான் சங்கு சக்கரம் தாங்கி அருள்கின்றான்..

எட்டிக்குடி முருகனின் கையில் குறுந்தடி (மாத்தடி) திகழ்கின்றது..

திரு ஐயாறு

திரு ஐயாறு பஞ்ச நதீஸ்வரர் கோயிலில் முருகப்பெருமானின் வலக்கையில் அம்பும் இடக்கரத்தில் வில்லும் விளங்குகின்றன..

இதைப் போலவே திருப்பூந்துருத்தி கோயிலில் மண்டபத் தூண் ஒன்றில் வில்லேந்தி விளங்கும் கோலம்..

தஞ்சை கோயிலிலும் இப்படியான சிறு சிற்பம் உள்ளது..

 முருகன் - சாயாவனம்

சாயாவனம் எனப்படும  திருச்சாய்க்காட்டில் முருகப்பெருமான் வில்லேந்திய திருக் கோலத்தில் விளங்குகின்றான்..

தாமரை மலர் ஏந்திய முருகனை ஆவூர் பசுபதீஸ்வரத்திலும்  
திருக்கரத்தில் மாம்பழத்துடன் திகழும் வேலனை திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்திலும் தரிசிக்கலாம்..

கோடியக்கரை ஸ்ரீ குழகர் கோயிலில் ஒரு திருமுகமும் ஆறு கரங்களுமாகத் திகழும் முருகனின் திருக்கரத்தில் அமிர்த கலசம் விளங்குகின்றது..

இதெல்லாவற்றையும் நீ கண்டாயா?... 
- என்று கேட்டால் -

தஞ்சை, திரு ஐயாறு, திருப்பூந்துருத்தி, பழனி, சுவாமிமலை - இங்கெல்லாம் நேரில் கண்டிருக்கின்றேன்.. 

மற்றவை எல்லாம் சிறு வயதில் இருந்து கேள்வியுற்ற செய்திகள் தான்..

அத்துடன்,
பன்னிரு கையனின் பலவிதமான சித்திரங்களையும் கவனித்திருக்கின்றேன்.. 

அதற்கு மேல்  தற்போது  இணையத்திலும் காண்கின்றேன்.. 

திவ்ய தேசங்களில் திருக்கோலத்தினை  எடுத்துரைத்து பெருமாளை தரிசிக்கச் செய்வது போல சிவாலயங்களில் செய்வதில்லை என்பது ஒரு குறை.. 

இருப்பினும் ஒருசில சிவாச்சாரியார்கள் திருக்கோயிலில் விசேஷமான திருக்கோலம் இருப்பின் விவரித்துச் சொல்வதையும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்..

கோயில் தல வரலாறுகள் சிலவற்றில் மட்டுமே முருகனின் வடிவழகைத் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்..

தெய்வீக ஓவியர்களான
ஸ்ரீ சிற்பி, ஸ்ரீ கொண்டைய ராஜூ சுப்பையா, ஸ்ரீ முருக கனி, ஸ்ரீ ராமலிங்கம் - ஆகியோரது  சித்திரங்கள் கண்ணுக்கும் மனதிற்கும் விருந்து.. 

வாரியார் ஸ்வாமிகள்  உபந்நியாசங்களில் நிறைய கூறுவார்.. 

வேலும் கொடியும் முருகப் பெருமானின் திருச்செவி மடலுக்கு உயர்ந்ததாக இருத்தலாகாது - என்று..

வள்ளி நாச்சியாரின் திருக்கரத்தில் தாமரையும் தேவகுஞ்சரியின் திருக்கரத்தில் நீலோத்பலமும் அமைதலே சிறப்பு  என்றும் விளக்குவார் ஸ்வாமிகள்..

இப்படி சரியாக அமைந்த  சித்திரங்களை இப்போது
காண்பது அரிது.. 

இருபது வருடங்களுக்கு முன்பு
சுவாமிமலை சிற்பக் கூடத்தின் நண்பர் சொன்னார் -  முருகனின் திருமேனி தண்டத்துடன் தான் வடிக்கப்படும்.. வேல் தனியாக சாற்றுமுறை - என்று..

சிற்ப சாஸ்திர நூல்களில் தோற்றப் பொலிவு நுணுக்கங்கள் தெளிவாக சொல்லப் பட்டிருக்கும்.. 

இனி அவற்றைத் தேடிக் கொண்டு எங்கே செல்வது?..

ஆனாலும்,
தற்போது  விருப்பத்திற்கு ஏற்ப சிற்பங்களை வடித்துக் கொள்ளலாம். அதற்கு 
வியாக்கியானமும் சொல்லிக் கொள்ளலாம்.. 

உதாரணத்துக்கு, 
விநாயகரும் ஆஞ்சநேயரும் அர்த்த சரீரமாக விளங்குவது.. ஒரே திருமேனியில் தச அவதார அம்சங்களுடன் விளங்கும் பெருமாள், 
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மடியில் பாலா திரிபுர சுந்தரியை அமர வைப்பது - இன்னும் பலப்பல..

இங்கு சொல்லப்பட்டவை சிறிதளவே... வெவ்வேறு கோலங்கள் அநந்தம்..

தேடுங்கள் முருகனை..
தென்படுவான் கண் முன்னே...

நேற்று நமது தளத்தில் வெளியிடப்பட்ட விரிவுரை எனும் கதையில் -

" பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்.. ன்னு பாடுவான்.. கேக்குறதுக்கு நல்லா இருக்கும்.. அதுக்கு எல்லாம் பேரு என்ன.. ன்னு கேளு!.. ஒன்னுந் தெரியாது.. "

- என்ற வரிகளுக்கான பொதுவான பதில் தான் இந்தப் பதிவு..
*

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணில் இருக்கும் மாமணியே போற்றி!..
-: கந்த புராணம் :-

முருகா சரணம்
சரணம் சரணம்..
***

14 கருத்துகள்:

  1. அழகான ,சுவாரஸ்யமான விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. இவ்வளவு நுணுக்கமாக கடவுளர் திருவுருவங்களை எனக்குப் பார்க்க வாய்த்ததில்லை, தோன்றியதுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடுங்கள்..
      தென்படுவான் முருகன்..

      எல்லாவற்றுக்கும் இறையருள் தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. சாயவன முருகபெருமானை மறக்கவே முடியாது வில்லேந்திய முருகன் மிக அழகான தோற்றம்.

    அருமையான விளக்கம் .தேடுவோம் முருகனை
    தேடுகின்ற கண்களுக்கு காட்சி கொடுப்பான் முருகன் அருமை.
    முருகா சரணம், கந்தா சரணம். தேடினோம் உன்னை நாடினோம் உன்னை .உனை பாடும் பணி ஒன்று போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முருகா சரணம்,
      கந்தா சரணம். தேடினோம் உன்னை
      நாடினோம். //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. மிகத் தெளிவான விளக்கம். வில்லேந்திய முருகனைப் பற்றிக் கேள்வி ஞானம் தான். பார்க்கக் கிடைக்கலை. இங்கே தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வில்லேந்திய முருகனைப் பற்றிக் கேள்வி ஞானம் தான். இங்கே தரிசித்துக் கொண்டேன்.//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா ..

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அருமை. முருகனின் கையிலிருக்கும் ஆயுதங்கள் பற்றிய விளக்கமான பதிவு படிக்கப் படிக்க மிக நன்றாக உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் இருக்கும் முருகப்பெருமானின் கையிலிருக்கும் ஆயுதங்களை சொல்லியிருப்பது சிறப்பாக உள்ளது. வில்லேந்திய முருகனையும், பல ஆயுதங்களை கொண்டிருக்கும் முருகனையும் படங்களின் வாயிலாக தரிசித்து கொண்டேன்.அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த மாதிரி எழுத தங்களால்தான் முடியும். முருகனருள் உங்களுடன் பரிபூரணமாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முருகனின் கையிலிருக்கும் ஆயுதங்கள் பற்றிய விளக்கமான பதிவு படிக்கப் படிக்க மிக நன்றாக உள்ளது.. //

      தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..