நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 02, 2022

துணைவன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 16
 புதன் கிழமை


இன்றைய பதிவிலுள்ள பாடல் திரைக்காக எழுதப்பட்டது தான்..

இருந்தாலும்,
இந்தப் பாடலைக் கேட்கும் போதே மெய் சிலிர்த்து விடும்.. கண்கள் கசிந்து
நெஞ்சம் நெகிழ்ந்திருக்கும்..

பாடலின் நிறைவில் நம்மையும் மீறிய ஏதோ ஒன்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும்.. 

1969 ல் வெளியான துணைவன் எனும் திரைப்படத்திற்காக -

ஒரே பொருளைக் குறித்து - மருதகாசி, கண்ணதாசன் எனும் பெரும் கவிஞர்கள் இருவர் எழுதிக் கொடுத்த பாடல் இது..

திரு K.V. மகாதேவன் அவர்களது இசையில்

T.M. சௌந்தரராஜன் P. சுசீலா பாடியிருக்கும் அருமையான பாடல் இது..

நாம் காணொளியில் காண்பது நடிப்பு தான்.. ஆனால், பாடலும் இசையும் நம்முள் ஏற்படுத்துவது வேறொரு நிலையை!..

மருதமலை முருகன்

முதல் பகுதி
திரு அ.மருதகாசி 
அவர்களது வரிகள்..

மருதமலை மீதிலே குடி கொண்டிருப்பவனே!..
மனதார நினைப்பவர்கள் எண்ணியதை முடிப்பவனே!..
வாயாரத் துதிப்பவர்கள் கேட்டதைக் கொடுப்பவனே!..
வந்தவர்க்கு அருள் புரியும் மருதமலை ஆண்டவனே!..

மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே..
மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே!..
பிள்ளை முகம் பாரு.. - முருகா பிறவிப் பிணி தீரு..
பிள்ளை முகம் பாரு.. - முருகா பிறவிப் பிணி தீரு..
மருத மலையானே நாங்கள் வணங்கும் பெருமானே!..

உன்னை ஒருபோதும் எண்ண மறவேனே
சென்னிமலை வாழும் பெருமானே!..
அன்னை தந்தையுடன் உன்னை சிவன் மலையில்
வந்து தொழுவோர்க்கு அருள்வோனே!..

வள்ளல் உனை நாடி வள்ளிமலை தேடி
வருவோர்க்கு இன்பம் தருவோனே!..
கள்ளம் அறியாத பிள்ளைப் பெருமானே
காங்கேய நல்லூர் வளர்வோனே!..

திருமுருகன்பூண்டியில் பரமனருள் வேண்டியே 
சிவலிங்கம் தனை வைத்துப் பூஜித்த குமரா!..

செஞ்சேரிமலை கண்டு நெஞ்சாரத் துதிப்போர்க்கு
அஞ்சாதே என அபயம் தருகின்ற அமரா!..

வருந்தி வரும் அடியவர்கள் படும் துயரம் தீர்த்தாள
குருந்தமலை மீதிலே கொஞ்சும் வேலே!..
வற்றாத கருணை மழை நற்றாய் எனப் பொழியும்
வட்டமலைத் தெய்வமே வெற்றி வேலே!..

அமரர் கூட்டம் ஆடவும் அசுரர் தோற்று ஓடவும்
சமர் புரிந்த குமரகோட்ட தவமணியே!..
அன்பன் ராமலிங்க வள்ளல் நெஞ்சில்
அருட்பாவின் வெள்ளம் பொங்கச் செய்த
கந்தகோட்ட தமிழ்க் கனியே!..
தஞ்சம் என்று வந்து உன்னைக்
கெஞ்சுகின்ற எங்கள் பிள்ளை
துன்பம் தீர்க்க வேண்டுமய்யா சுடரொளியே!..

வீறிட்டெழுந்த சூரன் போரிட்டழிய
திருப்போரூரில் வேல் விடுத்து நின்றவா!..
ஏறி வரும் மயிலின் பேரும் விளங்க
ஒரு ஊரை மயிலம் எனக் கொண்டவா!..

பக்தர்கள் சேரூர் பவவினை தீருர்
உத்தரமேரூர் உறைபவனே
எங்கும் இல்லாத விதத்தினிலே 
பொங்கும் திருமயிலாடியிலே
வடதிசை நோக்கி அமர்ந்தவனே..
மயிலை ஆடச் செய்தவனே!..

வருபவர் பிணி தீர்க்கும் வைத்தீஸ்வரன் பெற்ற 
முருகனே ஷண்முகா முத்துக் குமாரா!..
சரவணா எங்களின் சிறுவனைக் காப்பாற்று
சக்தி வேலாயுதா சூரசம்ஹாரா!..

திண்புயச் சூரனை வென்றதை முனிவர்க்கு எண்கண்ணிலே 
சொன்ன சுப்ரமண்யா!.
கந்தன்குடி வாழ்ந்திடும் கந்தனே
அன்பரின் கண்ணுக்கு விருந்தாக 
அமர்ந்த புண்யா!..

தக்க தருணத்திலே
பக்தரின பக்கம் துணை இருப்பாய்!..
சிக்கலைத் தீர்த்து வைப்பாய் ஜகம் 
புகழ் சிக்கல் சிங்காரவேலா!..

செட்டி மகன் என்னும் இறைவா
செந்தமிழின் தலைவா!..
எட்டிக்குடி தனிலே அகத்தியன் 
ஏற்ற குருவானவா!..

பழகு தமிழ் கொண்டு அருணகிரி 
அன்று திருப்புகழ் பாடிய வயலுரா!..

புலவன் நக்கீரன் புனைந்த முருகாற்றுப் 
படை போற்றும் விராலிமலை வீரா!..

கொன்றதும் சூரனைக் கோலமயிலாகவே
குன்றக்குடியில் கொண்ட குமரய்யா!..

கந்தையா எங்களின் 
கவலையைத் தீரய்யா!..
கழுகுமலையில் வாழும் வேலய்யா!..
கழுகுமலையில் வாழும் வேலய்யா!....

இரண்டாம் பகுதி:
கவியரசர் கண்ணதாசன் 
அவர்களது வரிகள்..

பர்வத ராஜகுமாரியின் மகனே
பாசத்தை உணர்ந்த பாலகனே!..
திருமலை முருகா மழலையின் நாவில்
ஒரு மொழி தருவாய் காவலனே!.

தக்கலை குமாரவேலா
ஒரு தாய் நிலை அறிந்த பாலா!..
மக்களைக் காத்திடும் சீலா
என் மகனைக் காத்திட  வா வா வா!..

வள்ளியூரிலே குடிகொண்ட 
வள்ளிமணாளா வழிகாட்டு!..
பிள்ளைக்கு உந்தன் அருள் காட்டு
பிணிகள் விலகிடத் தாலாட்டு!..

அலைந்து தவித்தோம் குமரய்யா
வடபழனிக்கு வந்தோம் முருகையா!..
நலம் பெற வேண்டும் மகனையா
நம்பிக்கை தருவாய் கந்தையா!..

தணியாத கோபம் 
தணிந்த இடம் வந்தும்
தனித்தனியாக இருப்பவனே!..
கனிந்த முகம் காட்டு 
கலங்கும் எமைத் தேற்று
தணிகைமலை மீது வசிப்பவனே!..

தந்தைக்கு ஓம் எனும் மந்திரப் பொருள் சொன்ன ஸ்வாமி மலை வாழும் குருநாதா!..
மைந்தன் துயர்தீர வந்த பிணி மாற
கந்தா கடம்பா வரமே தா!..

பூவுதிர் சோலையில் வள்ளியை மணந்து
பழமுதிர்சோலைக்கு வந்தவனே!..
காவல் தெய்வம் நீ என வந்தோம்
கை கொடுப்பாய் எங்கள் மன்னவனே!..

திருப்புகழ் பாடி திருவடி தேடி
தெண்டனிட்டோம் எங்கள் தென்னவனே!..
திருப்பரங்குன்றத்து நாயகனே
குறை தீர்த்து வைப்பாய் வடிவேலவனே!..
வேலவனே!.. வேலவனே!..
***

தலைவா சரணம்
துணைவா சரணம்
அலைவாய் அமரும்
அழகா சரணம்
அறுபடை வீட்டின்
அருளே சரணம்!..
***

16 கருத்துகள்:

  1. இந்தப் பாடலைக் கேட்டு எத்தனை காலம் ஆச்சு?  நினைவு படுத்தியதற்கு நன்றி.  பாடகர்கள் இருவர் குரலும் உணர்வு பூர்வமாக இருக்கும்.  படம் பார்த்திருப்பதால் காட்சியும் மனதில் நிற்பதால் உணர்வு பூர்வமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // படம் பார்த்திருப்பதால் காட்சியும் மனதில் நிற்பதால் உணர்வு பூர்வமாக இருக்கும்.//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஒரே பாடலில் இரண்டு கவிஞர்கள்...   நான் அறியாத செய்தி.  இரண்டு இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த படம் தெரியும்.  (ஐந்து இசை அமைப்பாளர்கள் கூட ஒரு படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்கள்)  இரண்டு கவிஞர்கள் ஒரே பாடலைப் பகிர்ந்திருக்கிறார்களா...   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒரே பாடலில் இரண்டு கவிஞர்கள்... நான் அறியாத செய்தி.//

      ஆகா.. தாங்கள் அறியாத செய்தியையும் தந்திருக்கின்றேன்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    2. இரண்டு எழுத்தாளர்கள் உண்டு, சுபா
      (சுரேஷ்-பாலகிருஷ்ணன்)

      ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்த திரைப்படம் ''கண்ணில் தெரியும் கதைகள்''

      நீக்கு
    3. அன்பின் வருகையும் மேலதிகச் செய்திகளும் மகிழ்ச்சி.. நன்றி ஜி

      நீக்கு
  3. பாடல் வரிகளைப் படித்துப் பாடலை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. பிறகு கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியும் இருக்கின்றதே..

      அன்பின் நெல்லை..
      வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. இரண்டு கவிஞர்கள் இணைந்து எழுதியது முதன் முறையாக கேள்விப்படுகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு த் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. நானும் முன்பு ஒரு பதிவில் துணைவன் பாடலை பகிர்ந்து இருக்கிறேன்.( சஷ்டி பதிவில்தான்)
    அத்தனை முருகன் கோவில்களும் இருக்கும்.
    எல்லோரும் மிகவும் நன்றாக நடித்து இருப்பார்கள்.

    பிடித்த பாடல். பகிர்வுக்கு நன்றி.

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அத்தனை முருகன் கோவில்களும் இருக்கும். மிகவும் நன்றாக நடித்து இருப்பார்கள்.//

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. காணொளி பார்த்தேன். அத்தனை முருகன் கோயிலையும் தரிசனம் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தனை முருகன் கோயிலையும் தரிசனம் செய்தேன்..

      அன்பின் வருகையும் ..
      கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..