நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 26, 2022

சித்திரைச் சதயம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று  செவ்வாய்க் கிழமை.. சித்திரை -13
சதய நட்சத்திரம்..

அப்பர் ஸ்வாமிகள் சிவ ஜோதியுள் கலந்த நாள்..

" என் கடன் பணி செய்து கிடப்பதே!. " - என்று நாளெல்லாம் ஊருக்கு வாழ்ந்த உத்தமர்..

ஊருக்கு உழைத்த
" உழவாரத் தொண்டர் " எனும் புகழினை உடைய உத்தமர்..

யாதும் சுவடு படாமல்!.. வாழ்ந்து இன்றும் நம்முடன் புகழுடம்புடன் வாழ்கின்ற புண்ணியர்..


மக்களின் பசிப்பிணி தீர்த்து ஞானசம்பந்தப் பெருமானுடன் நாளும் அறம் செய்த திருத் தொண்டர்..

வேறொரு சமயம் செய்த விரிவிலா அறிவினார்கள் 
 - அடைத்து வைத்த சிவாலயத்தைத் திறந்து விடும்படிக்கு மன்னனுக்கு எதிராக உண்ணாநோன்பு இருந்த புரட்சியாளர்..

" கோத்திரமும் குலமும் கொண்டு என்ன செய்வீர்?.. " என்று சாடிய பெருந் தகையாளர்..

இன்றைய பதிவில் ஸ்வாமிகளுடைய திருவடிகளை வணங்கி அவர் அருளிச் செய்த திரு ஐயாற்றுத் திருப்பதிகம்..


திருத்தலம் திருஐயாறு

இறைவன்
ஸ்ரீ ஐயாறப்பர்
அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 38


கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 1

பொடிதனைப் பூச வைத்தார்
பொங்கு வெண்ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணைத் தொழவும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 2

உடைதரு கீளும் வைத்தார்
உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 3

தொண்டர்கள் தொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலினாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்ட வானவர்கள் ஏத்தும்
ஐயன் ஐயாறனாரே.. 4

வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 5

சங்கணி குழையும் வைத்தார்
சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கமது ஓத வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 6

பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 7

ஏறுகந் தேற வைத்தார்
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார்
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 8

பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 9

இரப்பவர்க்கு ஈய வைத்தார்
ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாம்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயன் ஐயாறனாரே.. 10

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய  நம ஓம்
 திருச்சிற்றம்பலம்
***

15 கருத்துகள்:

 1. திரு ஐயாற்று திருப்பதிகம் படித்தேன்.  பயன்பெற்றேன்.  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   திருநாவுக்கரசர் வழி நடந்து வாழ்வில் உய்வடைவோம்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்களின் வாயிலாக
  இறைவன் ஸ்ரீ ஐயாறப்பரையும் அம்பிகை
  ஸ்ரீ அறம் வளர்த்த நாயகியையும் பக்தியுடன் சேவித்துக் கொண்டேன். சகோதரி கோமதி அரசு பதிவிலும், தங்கள் பதிவிலும் இன்று காலை எழுந்தவுடன் சிவதரிசனம் கிடைத்தப்பேறு பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

  திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகமும் பாடி மகிழ்ந்தேன். சிவனடியார்களின் பரிபூரண அருள் நமக்கு என்றும் கிடைத்திட திருநாவுக்கரசரை வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நாவுக்கரசர் காட்டிய வழியில் நடந்து நலம் பெறுவோம்.. ஈசன் அருள் என்றும் துணை நிற்கும்..

   நமது தளத்திலும் கருத்துப் பெட்டி அதுவாக தன்னை மாற்றிக் கொண்டது.
   குறிப்பேட்டில் தட்டச்சு செய்து இங்கே பதிவு செய்கின்றேன்..

   கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. நாவுக்கரசரின் திருப்பதிகம் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இதிலே தட்டச்சு செய்வதும் நன்றாகவே வருதே! போகட்டும்! நேற்றுப் பூராப் பிள்ளையாராகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று சிவபெருமான். இங்கேயும் பார்த்தாச்சு. அருமையான பதிகப் பகிர்வுக்கும் நாவுக்கரசர் பற்றிய தகவல்களுக்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ..

   நமது தளத்திலும் கருத்துப் பெட்டி அதுவாக தன்னை மாற்றிக் கொண்டது.
   குறிப்பேட்டில் தட்டச்சு செய்து இங்கே பதிவு செய்கின்றேன்..

   கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 5. அப்பர் தேவாரம் படித்தேன், அவரை வணங்கி கொண்டேன்.திரு ஐயாற்ப்பர், அறம்வளர்த்த நாயகி தரிசனம் கிடைத்து . அப்பர் சொன்னது போல இறைவனின் பாதங்களை சரண் அடைந்து அவர் பாத நிழலில் மன அமைதி அடைவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ..

   நமது தளத்திலும் கருத்துப் பெட்டி அதுவாக தன்னை மாற்றிக் கொண்டது.

   கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி.. நலம் வாழ்க..

   நீக்கு
 6. திருஐயாறு பற்றி முன்பு நீங்கள் வேறு தகவல்கள் பதிந்த நினைவு. இன்றும் அம்மை அப்பனையும் அப்பரையும் வணங்கிக் கொண்டேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   நீக்கு
 7. அப்பர் தேவாரம் வாசித்துக் கொண்டேன் ஆனால் இன்றுதான் வாசிக்க முடிந்தது துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நமது தளத்திலும் கருத்துப் பெட்டி அதுவாக தன்னை மாற்றிக் கொண்டது.
   குறிப்பேட்டில் தட்டச்சு செய்து இங்கே பதிவு செய்கின்றேன்..

   கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..