நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 30, 2022

வருக.. வருக..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தேவாரத் திருப்பதிகங்கள்
ஞானக் கடல் எனும் சிறப்பினை உடையவை..
திருஞான சம்பந்தர்,
திருநாவுக்கரசர்,
சுந்தரர் ஆகிய
அருளாளர்களால் அருளப் பெற்றவை..

இவற்றுள் பொதிந்திருக்கும்
முத்துகள் அநேகம்..

ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
திருப்பதிகம் ஒன்றில் விளங்கும்
அருட்பாடல் ஒன்று இன்றைய பதிவில்..
*
இப்பாடலில்
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின்
வராக அவதாரத்தினை
கண்முன் நிறுத்துகின்றார்
ஞானசம்பந்தர்..


நீதியும் நேர்மையும்
நிலைத்து விளங்கிட
 நிலமகள் கேள்வனும்
நீர்மலி வேணியனும்
வந்தருள் செய்திட
வேண்டிக் கொள்வோம்..
*

திருத்தலம் - சிவபுரம்

முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 21
ஏழாவது திருப்பாடல்

கதமிகு கருஉரு வொடுஉகிர்
இடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுகன் அமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழில் அரி வழிபட அருள்செய்த
பதமுடை யவன்அமர் சிவபுர
நினைபவர் நிலவுவர் படியிலே.1.021.7
-: திருஞானசம்பந்தர் :-

மேற்கண்ட திருப் பாடலுக்கு தருமபுர ஆதீனத்தின் பதிப்பில் உள்ள உரை:
திருமால் வராக அவதாரத்தில் சினம் மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.
***
மேற்கண்ட கருத்தினை எளியேன் என்னளவில் இங்கே தந்திருக்கின்றேன்..


கரிய உருவத்துடன்
மிகுந்த சினமும் மதமும் கொண்ட - வராக மூர்த்தியாக திருமால் தோன்றிய போது (வராகத்தின்) நீண்ட முகத்தில் விளங்கிய வளைந்த பிறை போன்ற எயிறுகளின் முனையில் நிலமகள் இதமாக அமர்ந்து விளங்கினாள்..

கணகண - எனும் ஒலியுடன் வட திசையில் விளங்கும் மேருமலையை தன்னகத்தே உடைய நிலமகளை -

கூரிய நகங்கள் விளங்கும் தனது கரங்களினால் காத்தருளி - அண்டத்தின் கண் நிலை நிறுத்தினார்..

அத்தகைய அழகிய திருமால் வழிபட்ட போது, அவர்க்கு அருள் புரிந்த வண்ணம் சிவபுரத்தில் அமர்ந்து விளங்கும்  சிவபெருமானின் திருவடிகளை நினைவில் கொண்டு வணங்குபவர் உலகிற் புகழோடு விளங்குவர்..
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. நல்ல பாடல், நல்ல விளக்கம்.

  அண்டத்துக்கு வெளியே நின்று பூமியைத் தாங்குவது எளிதா?  அண்டம் உருவானபோதே அவர் இருந்தார் என்றால் எங்கிருந்தார் போன்றவை சிக்கலான ஆன்மீக, விஞ்ஞான கேள்விகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..
   அண்டம் உரு ஆவதற்கு முன்பே இருந்தார் என்பது இஷ்டப்பட்ட அவரவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது.. பகவான் தான் சாட்சி நாதன்.. ஆனால் அவனுக்கு ஒரு சாட்சி இல்லை.. விஞ்ஞானம் வந்து நுழைந்து ஆய்வறிக்கை கேட்டால் கொடுக்க இயலாது..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான பாடல். நல்ல விளக்கப் பகிர்வு. மனதில் கேள்விகளை உருவாக்கும் திரு அவதாரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   கேள்விகளை உருவாக்குபவனும் அவனே.. அவற்றுக்கு விடையாக வருபவனும் அவனே.. மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  படங்களும், பதிவும் அருமை. திருஞான சம்பந்தரின் தேவார பாடலும், அதற்குரிய விளக்கங்களும் அருமை. பாடலுக்கு தங்களது பொருந்தி வருகிற விளக்கமும் நன்றாக உள்ளது. உலகமும், உலகில் வாழ் அனைத்து மக்களும், மற்ற ஜீவராசிகளும் நலமாக வாழ என்றும் ஒன்றாகவே உள்ள ஹரிஹரனை அனைவரும் நமஸ்கரிப்போம். அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டி பக்தியுடன் பிரார்த்தித்துக் கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. ஆதீனத்தின் பதிப்பில் பெரியோர் கூறியுள்ள கருத்துக்களை ஒட்டியே எனது கருத்தினை எழுதினேன்.. ஹரி ஹரனாகிய பரம்பொருள் எல்லாரையும் காத்தருளட்டும்.. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. நம்பிக்கையும் சிறப்பு...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு
 5. பதிவும் படங்களும், பாடல்களின் விளக்க்மும் அருமை.
  நீங்கள் எழுதிய பாடலின் விளக்கமும் அருமை.

  பதிலளிநீக்கு
 6. பாடலும் விளக்கமும் மிகவும் நன்று. நல்லதே நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..