நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 16, 2024

பாயசப் பெருமை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 30
திங்கட்கிழமை

இன்றொரு சமையல் குறிப்பு..


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டில் விளைந்து கொண்டிருக்கும் சிறு தானியம்..

இதன் பெருமைகள் யாவருக்கும் தெரிந்ததே..


தினைப் பாயசம்  

தேவையான பொருள்கள்:

தினையரிசி  200 கி
பாசிப்பருப்பு  50 கி
கருப்பட்டி  250 கி
ஏலக்காய்  3
பசும்பால் 400 மிலி
தேங்காய்த் துருவல் சிறிதளவு
முந்திரி  15
உலர் திராட்சை  20
பசு நெய்  50 மிலி

செய்முறை :
தினை, பாசிப்பருப்பு  இவற்றை  சுத்தம் செய்து சற்று சிவக்க வறுத்துக் கொள்ளவும்..

பாயசம் வைக்கும் முன்பாக  இரண்டீயும் சரிக்கு சரி தண்ணீரில் 15 நிமிடங்கள்
ஊற வைத்து பின் மிதமன சூட்டில் அடுப்பில் ஏற்றவும்..

வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை சற்றே சிவக்க வறுத்துக்  கொள்ளவும்.. 
( பொன்னிறமாக எப்படி டா வறுபடும் ?..)

ஏலக்காய்களை கல்லுரலில் இடித்துக் கொள்ளவும்..

பாலை மிதமான சூட்டில் வைத்து -
அரை வேக்காட்டில்  கொதிக்கின்ற தினையுடன்  சேர்த்துக் கிளறி விடவும்..

இடையில் கருப்பட்டியைத் தூளாக்கி - அளவான வெந்நீரில் கரைத்து வடிகட்டி தளதளத்துக் கொண்டிருக்கின்ற பாயசத்தில் ஊற்றி -

வறுத்து வைத்திருக்கின்ற முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு தளதளத்து வரும்போது
இறக்கவும்..

தினைப் பாயசம்  செய்வதற்கு இன்னும் பற்பல வழிகள்...

ஏதோ - நாமும் நமது வித்தையை இங்கு காட்டினோம் என்பதில் எனக்கொரு மகிழ்ச்சி..

கீழுள்ள காணொளியில் சொல்லப்படுவதைப் போல அப்பளத்துடன் தான்  தினைப் பாயசத்தைச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை..

இன்றைய அப்பளங்கள் இரசாயனக் கலவைகள் என்பதை மனதில் கொண்டால் சரி..
**

காணொளிக்கு நன்றி

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

இயற்கையே இறைவன்  
இறைவனே இயற்கை
***

ஞாயிறு, செப்டம்பர் 15, 2024

காளி தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 30
ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ விஜயாலய சோழர் - பல்லவர்களிடம் இருந்து சோழ மண்டலத்தை மீட்டு தஞ்சை மாநகரை 
மீண்டும் நிர்மாணித்த போது எட்டுத் திக்கிலும் ஸ்ரீ காளி  திருக்காட்சி நல்கியதாக நம்பிக்கை..

இன்று
தஞ்சை மாநகரில்  எட்டுக்கு மேற்பட்ட காளியம்மன் கோயில்கள் உள்ளன...

கால வெள்ளத்தில் பழைமையான
சிலகோயில்கள நகருக்குள் திகழ்கின்றன..

இவை ஸ்ரீ விஜயாலய சோழ மன்னருடன் தொடர்பு உடையவை..

கிழக்குத்திசை



ஸ்ரீ நிசும்பசூதனி, வடபத்ர காளியம்மன் - பூமாலை வைத்யநாதர் கோயில் - கீழவாசல்.

ஸ்ரீ உக்ர காளியம்மன்
குயவர் தெரு - கீழவாசல்.


ஸ்ரீ முத்து மாரியம்மன் - புன்னை நல்லூர்.. 

மராட்டியர் காலத்தில் புற்றின் உள்ளிருந்து வெளிப்பட்டவள்..
கோயிலின் உள்ளே ராஜகோபுரத்தின் தென்பால் ஸ்ரீ காளி அமர்ந்திருக்கின்றாள்..
அருகில் ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா தேவியருன் ஸ்ரீ ஐயனார்

தெற்குத்திசை


ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி
- தெற்கு ராஜவீதி..

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, 
ஸ்ரீ முனீஸ்வரர் கோயில்..
மாநகரின் தெற்கு எல்லையில் திசை தெய்வமாக..

ஆய்வுகளின்படி
பிற்காலத்திய கோயில்
என்கின்றனர்..

நடுநாயகமாக அரண்மனைக்குப் பின்புறத்தில் ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில்...

இக்கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்றாலும் கோயிலில் தஞ்சகன் தாரகன்  இருவருடன் அம்பிகை விளங்குகின்றாள்..

இவள் பெயரால் 
எல்லையம்மன் கோயில் வீதி  - என அமைந்திருக்கின்றது.. இது தஞ்சையின் பழைமையான கடைத்தெரு..

மேற்குத்திசை



ஸ்ரீ ஏகவீரி அம்மன் 
(ஏகௌரி அம்மன்)
- வல்லம்..

ஸ்ரீ பத்ரகாளியம்மன்,
ஸ்ரீ முனீஸ்வரன் கோயில்,
வஸ்தாத் சாவடி,
புதுக்கோட்டை சாலை.

ஸ்ரீ பத்ரகாளியம்மன் - மேல வாசல் / மேல அலங்கம்..



ஸ்ரீ கோடியம்மன்
ஸ்ரீ முனீஸ்வரன் கோயில்..
ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம் அருகில்,
மேலவெளி..

வடக்குத்திசை



ஸ்ரீ கோடியம்மன் - வெண்ணாற்றங்கரை..

இவளே தஞ்சையின் மூல ஸ்தானம்.. ஆதிநாயகி..


ஸ்ரீ பகளாமுகி காளியம்மன்
- ராஜகோபாலசுவாமி
கோயில், வடக்கு ராஜவீதி (கோட்டைக்கு உள்ளே)

ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் (என்கிற)
மகிஷாசுரமர்த்தினி  
- வடக்கு வாசல், சத்திரம் அருகில். (கோட்டைக்கு வெளியே)

ஸ்ரீ செல்வ காளியம்மன்
(செல்லியம்மன்)
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில், கரந்தை..
 
இங்கு குறிக்கப்படுள்ள கோயில்கள் அனைத்தையும் தரிசித்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி..

வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில்,
புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் , வல்லம் ஏகௌரியம்மன் மற்றும் புதுக்கோட்டை சாலை ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்களுக்கு மட்டுமே பேருந்தில் செல்ல முடியும்.. 

ஏனையவை நகரின் உட்புறத்தில் உள்ளவை.. இலகு வாகனம் அவசியம் தேவை..

வசதியும் வாய்ப்பும் கிடைக்கும் போது வந்து தரிசனம் செய்து மகிழுங்கள்.
**
ஓம் சக்தி ஓம் 
ஓம் சிவாய நம ஓம்
***

சனி, செப்டம்பர் 14, 2024

உறியடி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி  29
சனிக்கிழமை





தஞ்சை மேல ராஜவீதி ஸ்ரீ க்ருஷ்ணன் கோயிலில் ஸ்வாமி திருவீதி எழுந்தருள கோகுலாஷ்டமி    வழுக்கு மரம் உறியடி
உற்சவம் கடந்த வாரத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.. 

இன்றைய நாளில்
காட்சிப் பதிவாக  -

தஞ்சை நடுக்காவேரி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடத்தப்பெற்ற கோகுலாஷ்டமி  உறியடி உற்சவம்..

காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


உழந்தாள் நறுநெய்  ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால்  ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச  பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
      முகிழ்முலையீர் வந்து காணீரே.. 26

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல்  தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு  நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர்! வந்து காணீரே.. 30

வண்டு அமர் பூங்குழல்  ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற  கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர்! வந்து காணீரே.. 35
-:- பெரியாழ்வார் :-
 நன்றி
நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம் 
***

வெள்ளி, செப்டம்பர் 13, 2024

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 28
வெள்ளிக்கிழமை

தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் .. தனதான


பரிவுறு நாரற் றழல்மதி வீசச் 
சிலைபொரு காலுற் ... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் ... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் ... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற் ... றணைவாயே

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் 
தொடுகும ராமுத் ..  தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத் .. தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
 தனிமயி லேறித் ... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் ... பெருமாளே..
- அருணகிரிநாதர் :-


இரக்கமும்  அன்பும் 
இல்லாத நிலவு
நெருப்பைப் போல்  இருப்பதாலும்,

பொதிகை மலைத்
 தென்றல் அனலாக வீசுவதாலும்
குளிர்  சோலைக் குயில்  சோகத்துடன் கூவுவதாலும்,
குழல் ஒன்று தனியாய்  ஒலிப்பதாலும்,

மீன் போன்ற கண்கள் சோர்வடைய, 
தனிமையில் இருக்கும் இந்தப் பெண்  

தனியே கிடந்து  தளர்ச்சியுறாமல், 
ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ்வதற்கு,  
மார்பினில் ரத்ன  மாலையுடன் 
அருளே உருவாகத் 
திகழ்கின்ற  முருகப் பெருமானே, 
நீ வந்து அவளை  அணைவாயாக..


கிரெளஞ்ச மலையின் மீது வேலை ஏவி
அது பிளவுபட்டு
அழியும்படிக்குச் செய்த திருக்குமரனே..

இயல், இசை, நாடகம் என,  விளங்குகின்ற
 தமிழுக்குப் பெருமானே,

ஜோதி ஸ்வரூபனாகிய்
ஈசனுக்குப் பிள்ளையாகி,

திருமகள் வளர்கின்ற சேலம் எனும் 
பதியில் வீற்றிருப்பவனே..

போருக்கு எழுந்த 
ஏழுமலைகளும், சூரனும், 
அவனது சுற்றத்தாரும் மாண்டு 
அழிந்து போகும்படி

ஒப்பற்ற மயில் மீதமர்ந்து 
உலகை வலம் வந்தவனே..

புள்ளிகளுடன் கூடிய 
யானை முகம் கொண்ட கணேசப் பெருமானுக்கு
 இளையவனாகிய அற்புதம் மிகுந்த பெருமாளே...
*

முருகா  முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், செப்டம்பர் 12, 2024

குறுக்குத்துறை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 27
 வியாழக்கிழமை

 நன்றி விக்கி

குறுக்குத்துறை..

ஆவணி இரண்டாவது வாரம் வியாழக் கிழமை (29/8) பிற்பகல்..

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே  முருகன் கோயில் அமைந்துள்ள இடம்..

ஆற்றின் குறுக்காக  அமைந்திருப்பதால்  கோயிலுக்கு குறுக்குத் துறை முருகன் கோயில் என்று பெயர்..

முருகன்  சுயம்புவாக தோன்றிய இடம் என்பதால் , அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டுள்ளது..

300/400 வருடப் பழைமை பெருமைகளை உடையது இக்கோயில்..

 நன்றி விக்கி

 நன்றி விக்கி

கடும் மழைக் காலங்களில்  வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, உற்சவ மூர்த்திகள்  கரையிலிருக்கும் மேலக் கோயிலில்  வைத்து பாதுகாக்கப்படுகிறன..
வெள்ளம் வடிந்து கோயில் சுத்தம் செய்யப்பட்டதும்  உற்சவர் திருமேனிகளை மறுபடி கொண்டு வந்ததும்  வழிபாடுகள் தொடர்கின்றன..
நன்றி : ஆலயத் தகவல்கள்..

கீழுள்ள காட்சிகள் எளியேனின் கை வண்ணம்..



நெல்லையப்பர் கோயிலில் தரிசனம் செய்த பின் மதிய உணவு..  

சற்று முன்னதாகவே
குறுக்குத் துறைக்கு
 வந்து விட்டோம்..

தாமிர பரணியின் கரை ஓரமாக குப்பை மேடுகள்.. கட்டிடங்களின் இடிபாடுகள் என, அழகு ததும்பிக் கொண்டிருந்தது..






மழைக் காலங்களில் ஆர்ப்பரிக்கின்ற தாமிரையாள் சிலுசிலு எனத் தவழ்ந்து கொண்டிருந்தாள்..

குளிப்பதற்கு வாகாக இருக்கும் என்று நினைக்காததால் மாற்று துணி எடுத்து வராமல் வந்தோம்.. தாமிர பரணியின் அழகையும் அதில் குளிப்பவர்களையும்  கண்டபின் மனம் நெகிழ்ந்து விட்டது.. 

கைகளில் நீரை அள்ளி அர்க்கியம் கொடுத்து விட்டு மூன்று கை நீரை அருந்தி -
கட்டியிருந்த துணியுடன் மூழ்கிக் குளித்து மகிழ்ந்தோம்.. 

தாய் தாமிரையும் மகிழ்ந்திருப்பாள்..

பாவம் தீர்க்கும் பரணீ போற்றி..

பொதிகை மலை உச்சியிலே புறப்பட்டு
தாமிரபரணிக்குள் வீசுகின்ற தென்றல் ஈரத் துணிகளை விரைவாக உலர்த்தி விட்டது..


இதற்கு முன் தாமிரபரணி நதியில் பொதிகையின் பாபநாசத் துறையிலும் அகத்தியர் அருவியிலும்  சொரிமுத்து ஐயனார் துறையிலும் நீராடி இருக்கின்றோம்..  


மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது.. ஸ்ரீ வள்ளி தேவயானையுடன்  காட்சி அருள்கின்ற பெருமானைக் கண் குளிரத் தரிசனம் செய்து வணங்கினோம்..


 நன்றி விக்கி

கருவறையில்   வள்ளி, தெய்வானையுடன் நான்கு திருக்கரங்கள் கொண்டு நின்ற திருக் கோலத்தில் காட்சித் தருகிறார் ஸ்ரீ சுப்ரமண்யர்..

 .
கோயிலுக்குள் பெரும் பாறை ஒன்றில் பஞ்ச லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாக அம்பிகையுடன் திகழ்கின்றன..

திருச்செந்தூர் போலவே இங்கும் முருகப் பெருமான்,
 சிவ பூஜை செய்வதாக   திருக்குறிப்பு..






அற்புதமான அழகான திருக்கோயில்..

எல்லாரையும் காத்தருள்வாய் எம்பெருமானே என்ற வேண்டுதலுடன் விடைபெற்றுக் கொண்டோம்..

நதிக்கரையில் மத்வ பீடத்தினரின்  ஸ்ரீ ராகவேந்திரர் மடம்.. தரிசனம் செய்து விட்டு ஜங்ஷன் திரும்பி எளிய உணவு..

இப்போதைக்கு நெல்லை பயணப் படங்கள் தற்காலிகமாக நிறைவு பெறுகின்றன..

இரவு பத்தரை மணியளவில், நெல்லையில் இருந்து - கன்யாகுமரி காசி விரைவு ரயிலில் பயணித்து  விடியற்காலையில் நல்லபடியாக தஞ்சைக்கு வந்து சேர்ந்தோம்...

ஆவணியின் இரண்டாம் வாரத்தின் கிழமைகளை அனுசரித்து  இருக்கைகளைப் முன்பதிவு செய்ததில் இருந்து  பத்திரமாக வீடு திரும்பியது வரைக்கும் அனைத்தும் இறைவன் செயல்..

இறைவன் செயலே..



சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
   மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
      வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
         கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே.. 40  
-: கந்தர் அலங்காரம் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், செப்டம்பர் 11, 2024

நெல்லை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 26
புதன்கிழமை


திருநெல்வேலி..

தமிழகத்தின் புராதனமான நகரங்களுள் ஒன்று..  

பாண்டியர்களின்  ஆட்சியில் சிறப்புற்றிருந்த இந்நகரத்திற்காக வந்தேறிகள் தம்முள் அடித்துக் கொண்ட வரலாறுகளும் உள்ளன.. பின்னாட்களில் நாட்டில் சுதந்திர வேள்வியில் பங்கெடுத்துக் கொண்ட சீர்மிகு நகரம் ..

ஆவணி இரண்டாவது வாரம் வியாழக் கிழமை (29/8) 
காலைப் பொழுது..

நெல்லை ஜங்ஷனின் வாசலில் உள்ள கொடிமாடசாமி கோயிலில் வணங்கி விட்டு மாநகரின் மகுடமாக விளங்குகின்ற ஸ்ரீ காந்திமதி உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில் தரிசனம்..


திருக்கோயிலில் நந்தி மண்டபத்தைக் கடந்து படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது..

ஈசன் எம்பெருமானது சபைகள் ஐந்தினுள் நெல்லையப்பர் திருக்கோயில் தாமிர சபையாகும்..

29/8 அன்று திருவாதிரை ஆனதால் தாமிர சபையில் 
ஆனந்த நடராஜருக்கு
சிறப்பு வழிபாடுகள்... 

நடராஜ தரிசனம் செய்த பின்
எங்களுக்கும் பிரசாதங்கள் கிடைத்தன..

இரண்டாவது திருச்சுற்றில் தான் ஏழிசைத் தூண்கள் உள்ளன..

மூலஸ்தானத்தை அடுத்த சந்நிதியில் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள்..

நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் தனித்தனி கோயில்களில் விளங்குகின்றனர்.. 

இரண்டு கோயில்களையும் இணைக்கின்ற அற்புதமான அழகிய மண்டபத்தில் வழக்கம் போல வெளிச்சம் குறைவு...  

பார்வைக் குறைபாட்டினால் அங்குள்ள சிற்பங்களின் அழகினை அவதானிக்க முடியவில்லை.. 

இருந்தாலும்,
வயதாகிப் போன நேரத்தில் உனக்கு  அழகின் ரசிப்பு எல்லாம் தேவையா?..  என்று உங்களில்  யாராவது கேட்கலாம்..

பேசாமல் நகர்ந்து விடுவோம்!..

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிந்தராஜப் பெருமாள் - என,
மகிழ்வான தரிசனம்..  

நந்தி மண்டபத்திலும் கோசாலையின் அருகிலும் எடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் இன்றைய பதிவில்..








நாகலிங்க மொக்குகள்



வெளிப்பிரகார கணபதி சந்நிதியின் சிகரத்தில்..


அக்குலாம் அரையினர் திரையுலாம்
  முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய
  சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு
  வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி 
உறை செல்வர்தாமே..  3/92/7 
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***