நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 31, 2024

நாராயண நாராயண,


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 15
சனிக்கிழமை


கங்கயிற் புனித மாய  காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்  பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன்  கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே!.. 894


தாவியன் றுலக மெல்லாம்  தலைவிளாக் கொண்ட எந்தாய் 
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்றன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே!..905
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

 நன்றி
நாலாயிரத் திவ்யப்ரபந்தம்

ஓம் ஹரி ஓம் 
***

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஆவணி 14
  வெள்ளிக்கிழமை


தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ... தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ... பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ... குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ... தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ... றவனீயே..

விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ... புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ... முருகோனே

தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந் 
திருத்தணி மேவும் ... பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-


எனக்கென்று பொருள்  சேர்ப்பதற்காக நாளும் உழைத்து இளைத்து  ஓய்வின்றி  
எடுக்கின்ற பற்பல பிறவிகளுடன்

வெட்கமில்லாத பிறப்புச் சுழல்
ஓய்ந்திடும்படி உன்னைத் திருப்புகழால் பாடிப் புகழ்கின்றவர்களது
 இருப்பிடத்திற்குச் சென்று 
அவர்களது அறிவுரையைக் கேட்டு அதனை விட்டு விலகாது அதன்படி நடந்து

ஒளி மிகுந்த உனது திருவடியைத் தொழுகின்ற பேற்றினை நானும் பெறுவேனோ?..

தனது வில்லின் மீது நம்பிக்கையுடன் தவநிலையைக் கலைக்க என்று அன்றொருநாள்  வந்து அம்பு எய்த மன்மதன்

வெந்து விழும்படிச்
செய்தவராகிய  சிவ பெருமான் -

 ' நீயே பிரணவப் பொருளை 
உரைப்பாயாக.. ' - என்று கேட்க,

பிரம்மதேவனும் மகிழும்படிக்கு 
வேதத்தின் பொருளை உரைத்தவனே..

கோபத்துடன் சூரனை வீழ்த்தி 
வேலால் அவனது சரீரத்தைப் பிளந்த முருகனே..

தினைப்புனக்
குலக்கொடி வள்ளி நாயகியுடன்
 திருத்தணிகையில்
வீற்றிருக்கும் பெருமாளே!..


முருகா முருகா
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஆகஸ்ட் 29, 2024

உவரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 13
வியாழக்கிழமை


திருநாவுக்கரசர் 
அருளிச் செய்த திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 11
பொது

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே.. 1

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமசிவாயவே.. 2


விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமசிவாயவே.. 3

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமசிவாயவே.. 4

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமசிவாயவே.. 5

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்குவான் நலன்
குலமிலர் ஆகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமசிவாயவே.. 6

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமசிவாயவே.. 7

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே.. 8


முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசரண் ஆதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமசிவாயவே.. 9

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நம சிவாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே.. 10

திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

புதன், ஆகஸ்ட் 28, 2024

திருச்செந்தில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 12 
புதன் கிழமை

திங்கள் பிற்பகல் மூன்றரை மணியளவில் திருச்செந்தூர் சந்நிதி தரிசனம்..

செவ்வாயன்று
உவரியில் குல தெய்வத்தின் தரிசனம்.. 
இவ்வருடமும் திருவிழா நடத்தப் பெறவில்லை..

குடும்ப விசேஷமாக
அபிஷேக அலங்கார ஆராதனைகள்..
***

தலம்
திருச்செந்தூர்


தானத் தானன தானத் தானன 
தானத் தானன ... தந்ததான

சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும ... நந்தவேதா

தீதத் தேயவி ரோதத் தேகுண 
சீலத் தேமிக ... அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி ... கின்றமாயா

காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும ... தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ 
நீளக் காளபு ... யங்ககால

நீலக் ரீபக லாபத் தேர்விடு 
நீபச் சேவக ... செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ 
லோகத் தேதரு ... மங்கைபாலா

யோகத் தாறுப தேசத் தேசிக 
வூமைத் தேவர்கள் ... தம்பிரானே..
-: அருணகிரிநாதர் :-


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
   வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
      கைதான் இருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
         எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 22

பால் என்பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை வேல் என்கிலை கொற்ற மயூரம்  என்கிலை வெட்சித்தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.. 30
-: கந்தர் அலங்காரம் :-


காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.. 22

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
 -: கந்தர் அனுபூதி :-


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 27, 2024

திருச்செந்தூர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 11 
செவ்வாய்க்கிழமை

 திருச்செந்தூரில் தரிசனம்.. 

 செந்தில் நாதன் வழிகாட்டுகின்றான்...

 ஊருக்குத் திரும்பிய பிறகே திருச்செந்தூர் காட்சிகள்...

அதுவரையிலும் திருப்புகழ் கந்தர் அலங்காரம், அநுபூதிப் பாடல்களில் மகிழ்ந்திருங்கள்..




தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ... சந்தியாவோ..

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ... தம்பிரானே..
-: அருணகிரிநாதர் :-


சேல் பட்டழிந்தது செந்தூர் வயற் பொழில் தேங் கடம்பின்
   மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
      வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
         கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.. 40

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
   மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
      காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
         வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே..  62  
கந்தர் அலங்காரம்


கார்மா மிசை காலன் வரில் கலபத்
தேர்மா மிசை வந்தெ திர்ப் படுவாய்
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.. 10

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே.. 15

உதியா மரியா உணரா மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதி காவல சூர பயங்கரனே.. 18
-: கந்தர் அனுபூதி :-


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஆகஸ்ட் 26, 2024

கோகுலாஷ்டமி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கோகுலாஷ்டமி
ஆவணி 10
திங்கட்கிழமை

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
நல்வாழ்த்துகள்

இன்று 
கிருத்திகையும்
இணைந்தே வருகின்றது..

கூடுதல் சுவையாக
கிருஷ்ணாவதாரத்
திருப்புகழ்..

தலம்
குன்றக்குடி


தானான தனதான தானான தனதான
தானான தனதான .... தனதான

நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
     நாடோறு மதிகாயும் ... வெயிலாலும்

நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
     நாடாசை தருமோக ... வலையூடே

ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
     லேவாரும் விழிமாதர் ... துயரூடே

ஏகாம லழியாத மேலான பதமீதி
     லேகீயு னுடன்மேவ ... அருள்தாராய்..

தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
     தானேறி விளையாடு ... மொருபோதில்

தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோத ரன்முராரி ... மருகோனே

மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
     மாலாகி விளையாடு ... புயவீரா

வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
     மாயூர கிரிமேவு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்



முத்தும் மணியும்  வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத்  தலைப்பெய்தாற் போல்  எங்கும்
பத்து விரலும்  மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே
      ஒண்ணுதலீர் வந்து காணீரே.. 24




பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில்  வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
      காரிகையீர்! வந்து காணீரே.. 25




உழந்தாள் நறுநெய்  ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால்  ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச  பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
      முகிழ்முலையீர் வந்து காணீரே.. 26

மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத  தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள்  தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
      முகிழ்நகையீர் வந்து காணீரே.. 28

பெரியாழ்வார் திருப்பாசுரங்கள்

நன்றி
நாலாயிரத் திவ்ய பிரபந்தம்

வசுதேவ சுதம் தேவம்
கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம்
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஓம் ஹரி ஓம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2024

யோகமாயா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 9
ஞாயிற்றுக்கிழமை


ஸ்ரீ ஹரி பரந்தாமனின் விருப்பப்படி பசுக்களால் சூழ்ப்பட்டிருக்கும் நந்தகோபனின் மகவாக நந்தினி என்று, தானே தற்பரையாய் யசோதா தேவியின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டு உதிரச் சேற்றில் விளையாடிக் கிடந்தவள் யோக மாயா.. 

யசோதைக்கு யாதவப் பெண்கள் எவரும் பேறு காலம் பார்த்ததாக எவ்விதக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

கம்சனின் சிறைக் கதவுகள் திறந்து கொள்ள கூடைக்குள் வைத்து குழந்தையைச் சுமந்து வந்த வசுதேவர் இவளையே வாரியெடுத்துச் சென்று தேவகியின் அருகில் கிடத்தினார்..

கம்சன் அறிந்து கொள்ளட்டும் என - யாழைப் பழித்த மென் மொழியாள் விசும்பிக் குரல் எழுப்ப கொடியவன் ஓடோடி வந்தான்.. 

குழந்தை என்றும் பாராமல் கடுங்கோபத்துடன் கால்களைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி - 
வசுதேவ தேவகியர் கெஞ்சிக் கதறியதையும் கேட்காமல் -
எதிர் புறச் சுவற்றில் வீசியடித்தான்.. 


அந்த அளவில் பதினாறு திருக்கரங்களுடன் ஆங்காரமாக வெளிப்பட்ட தேவி, 
" அடே மூடனே... உன்னை அழிப்பதற்கே என்று அனந்தன்  கோகுலத்தில் பிறந்து விட்டான்..  என்னை நீ தூக்கியது அடித்துக் கொல்வதற்குத் தான் என்றாலும் எனது கால்களைப் பிடித்துத் தூக்கினாய்.. அதனால் உன்னை உயிருடன் விட்டுவிட்டுச் செல்கின்றேன்!.. " - என மொழிந்து மறைந்தாள்..

அண்ணன் தங்கை இருவருமே சங்கு சக்ரதாரிகள்.. 

அவன் ஷ்யாமளன்.. க்ருஷ்ணன்.
இவள் ஷ்யாமளி.. க்ருஷ்ணை.
அவன் மாயன்.. இவள் மாயை.
அவன் கோவிந்தன்... இவள் கோவிந்தரூபிணி..

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.. (3) 558

தேவர்கள் அனைவரும் வந்திருந்து எனக்கு திருமணம் நிச்சயித்த போது - 
கூறைப் புடவையை உடுத்திக் கொள்ளச் செய்தவள் அந்தரி.. அவளே எனக்கு மணமிகு மாலையைச்  சூட்டினாள்.. - என்று தான் கண்ட கனவினை ஆண்டாள் குறிப்பிடுகின்றாள்.. 

அந்தரி என்று குறிப்பது
ஷ்யாமளை ஆகிய துர்கா தேவியைத் தான்..


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 66


ஸ்ரீ விஷ்ணுதுர்கா 
வேதாரண்யம்

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே..
-: அபிராமி அந்தாதி :-
**

நாளை 
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

 ஓம் சக்தி ஓம் 
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

சனி, ஆகஸ்ட் 24, 2024

சரணம் சரணம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 8
சனிக்கிழமை


தாயே தந்தை என்றும்  தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன்  நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ்  விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே..1028

மானேய் கண் மடவார்  மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ்  திருவேங்கட மா மலை
என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1029

குலம் தான் எத்தனையும்  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம் தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1031

தெரியேன் பாலகனாய்  பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின்  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரிசேர் பூம்பொழில் சூழ்  கனமா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன்  அடியேனை ஆட் கொண்டருளே.. 1034
-: திருமங்கையாழ்வார் :-

நன்றி
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்

ஓம் நமோ வேங்கடேசாய 
***

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2024

திருப்பரங்குன்றம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 7  
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: திருப்பரங்குன்றம் :-


தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந் தந்தன ... தந்ததான


பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் 
தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் ... வஞ்சமாதர்

புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் 
முருக்குவண் செந்துவர் .. தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந் தங்கையில் ... அன்புமேவும்

அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன் 
அருட்பதம் பங்கயம் ... அன்புறாதோ

மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர் விதித்தெணுங் கும்பிடு ... கந்தவேளே

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு 
மிசைக்கிடுஞ் செந்தமிழ் ... அங்கவாயா

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு திறற்செழுஞ் சந்தகில் ... துன்றிநீடு

தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை திருப்பரங் குன்றுறை ... தம்பிரானே..
-: அருணகிரிநாதர் :-


மலை போன்ற தனங்களுடன்
பொருள் தனைக் கவர்ந்து 
அதனால் பிணக்கம் கொள்கின்ற 
வஞ்சனையுடைய பெண்கள்

மேகம் போலச் சுருண்டுள்ள
கூந்தல் அழகியதாய் மணம் கமழ்வதாய் 
கருமணற் கூட்டம் போல விளங்கி, முருக்கின் இதழ் போன்ற
வளம் மிக்க செம்பவள இதழ்களால் போகத்தைத் தந்து, விஷம் போன்ற மோகத்தை ஊட்டுகின்றவர்கள்..

எதிர்வாதம் செய்து செங்கயல் போன்ற கண்கள் மேலும்  சிவக்கும்படி பொருள் மீது ஆசை வைக்கின்ற

 பொது மகளிரிடத்தில் நான் உழன்று,  திரிந்து உடலும் மனமும் தளர்வதால் என்ன தான் பயன்?.. 

உனது திருவடித் தாமரைகளில் என் மனம் அன்பு கொள்ளாதோ?..

பிறவியைத் தருகின்ற நான்முகப் பிரமனும் 
மலர்க் கண்களை உடைய திருமாலவனும் சிவ பெருமானும்
முறைப்படி எப்போதும் வணங்குகின்ற கந்தவேளே.. 

மிகுத்து வந்த சமணர்கள் பெருங் கழுவில் 
ஏறும்படி வைத்த, செந்தமிழ்த் திருஞானசம்பந்தனே..

குளிர்ந்திருக்கின்ற சண்பகக் காட்டில் 
நறுமணத்துடன்  சந்தனமும் அகிலும் 
நெருங்கி வளர்ந்துள்ள
தினைப்புனத்தில்

வள்ளி எனும் பசுங்கொடியைத் தழுவி
 திருப்பரங்குன்றில்
வீற்றிருக்கின்ற பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா..
*
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஆகஸ்ட் 22, 2024

திட்டை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வியாழக்கிழமை

திரு தென்குடித்திட்டை
திட்டை
தேவகுரு வழிபட்ட தலம்


இறைவன்
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
ஸ்ரீ பசுபதீஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ சுகந்தகுந்தளாம்பிகை
ஸ்ரீ மங்களாம்பிகை

தீர்த்தம் சக்கர தீர்த்தம்
தலவிருட்சம் முல்லை 

பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது சீர்காழி தில்லை மற்றும் திட்டை முதலான தலங்கள் பாதிக்கப்படாது இருந்தன என்பது ஐதீகம்.

வசிஷ்ட மகரிஷி காமதேனு வழிபட்ட திருத்தலம்..


தேவகுரு ஆகிய பிரகஸ்பதி வணங்கி நலம் பெற்ற தலம்..

ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் மீது, சூரியனின் கதிர்கள் பரவுகின்றன.

மூலஸ்தானத்தில் பிரம்மரந்திர சந்திர காந்தக் கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு  ஒரு துளி நீராக சிவலிங்கத்தின்  மீது விழுகின்றது.. 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நேரில் இதனைக் கண்டிருக்கின்றேன்..

கோயில் முழுதும் கருங்கற் திருப்பணி..

தஞ்சை மாநகர் வெண்ணாற்றங்கரை பள்ளியக்கிரஹாரத்தில் இருந்து வட கிழக்காக
திருக்கருகாவூர் சாலையில் 6 கி.மீ. தூரத்தில் திட்டை  திருத்தலம் அமைந்துள்ளது..

முந்தைய பதிவு இணைப்பு..

திருஞானசம்பந்தப் பெருமான்
அருளிச்செய்த
மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 35

முன்னைநான் மறையவை
  முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ
  நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி
  வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல்
  தென்குடித் திட்டையே.  1 

மகரமா டுங்கொடி
  மன்மத வேள்தனை
நிகரலா காநெருப்
  பெழவிழித் தானிடம்
பகரபா ணித்தலம்
  பன்மக ரத்தோடுஞ்
சிகரமா ளிகைதொகுந்
  தென்குடித் திட்டையே.  2  

கருவினா லன்றியே
  கருவெலா மாயவன்
உருவினா லன்றியே
  உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும்
  பாடலோ டாடலுந்
திருவினான் மிகுபுகழ்த்
  தென்குடித் திட்டையே.  3  

உண்ணிலா வாவியா
  யோங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா
  வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக்
  கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந்
  தென்குடித் திட்டையே.  4  

வருந்திவா னோர்கள்வந்
  தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க்
  கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப்
  பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில்
  தென்குடித் திட்டையே.  5  

ஊறினார் ஓசையுள்
  ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங்
  குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்
  தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந்
  தென்குடித் திட்டையே.  6 

கானலைக் கும்மவன்
  கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத்
  தேவுவைத் தானிடந்
தானலைத் தெள்ளமூர்
  தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல்
  தென்குடித் திட்டையே.  7  

மாலொடும் பொருதிறல்
  வாளரக் கன்நெரிந்
தோலிடும் படிவிர
  லொன்றுவைத் தானிடங்
காலொடுங் கனகமூக்
  குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல்
  தென்குடித் திட்டையே.  8  

நாரணன் தன்னொடு
  நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி
  காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ
  சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த்
  தென்குடித் திட்டையே.  9 

குண்டிகைக் கையுடைக்
  குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும்
  பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில்
  தண்டலைக் கொண்டலார்
தெண்திரைத் தண்புனல்
  தென்குடித் திட்டையே.  10  

தேனலார் சோலைசூழ்
  தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில்
  சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம்
  பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க்
  கில்லையாம் பாவமே.. 11

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***




புதன், ஆகஸ்ட் 21, 2024

சத்தியாக்கிரகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 5
புதன்கிழமை

இலட்சக் கணக்கான மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடத் தூண்டிய போராட்டம் ஒன்று உண்டெனில் அது தான் உப்பு சத்தியாகிரகம்..

காலகாலமாக இயற்கை அன்னையின் மடியில் வாழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்குப் பேரிடியாக இறங்கியது தான் வெள்ளையர் அரசு விதித்த உப்பு வரி..


1930 ஜனவரி 30 அன்று அன்றைய காங்கிரஸ் அறிவித்த முழு விடுதலை என்ற  பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கை உப்பு சத்தியாகிரகம்..

அறவழியில் போராடிய நூற்றுக்கணக்கான  மக்களை  காவலர்கள் கண்மூடித் தனமாக அடித்து நொறுக்கி சிறைப்படுத்தி  அரசாங்கத்தை  எதிர்த்தால் இது தான் கதி என்று மற்றவர்கள் அச்சம் கொள்ளும்படிச் செய்தது இப்போது தான்..

ஆங்கிலேய அரசின்
இந்த நடவடிக்கையே இந்திய சுதந்திர வேள்விக்கான தீயை  மூட்டியது..

1882 ல்  ஆங்கிலேயர் இயற்றிய உப்புச் சட்டம் இந்தியாவில் உப்பு உற்பத்திக்கும் உப்பு சேகரிப்பிற்கும்
ஒட்டுமொத்த உரிமையை அவர்களுக்கே கொடுத்தது..

இதன்படி,
1882 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசாங்கமே உப்பைத் தயாரித்து விற்க ஆரம்பித்தது.  தனிநபர்கள் உப்பினை விற்கக்கூடாது, உப்பினை அரசாங்கத்திடமிருந்து தான் வாங்க வேண்டும் என்று கடுமையான சட்டங்கள்  இயற்றப்பட்டன..

பற்பல நிலைகளில் ஆலோசித்த பின் துளியளவும்  வன்முறை  கூடாது என்ற கடும் நிபந்தனையுடன் - 1930
மார்ச் 12 ல் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காலை 6:30 மணியளவில் தண்டி கடற்கரையை நோக்கி பாத யாத்திரையை காந்திஜி தொடங்கினார்.. உடனிருந்தவர்கள் 72 தொண்டர்கள் மட்டுமே.. 

தண்டியைச் சென்றடைந்த போது ஒரு லடசம் பேருக்கு மேல் காந்திஜியுடன் அணிவகுத்திருந்தனர்..

கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தது இந்தத் தருணத்தில் தான்..


1930 ஏப்ரல் 5, மாலை ஐந்து மணியளவில் தண்டி கடற்கரையின் உப்பளத்தில் இருந்து கையளவு உப்பினை அள்ளிக் காட்டினார் காந்திஜி..
(ஏப்ரல் 6 அதிகாலை என்றும் சில தரவுகள்)


1930 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில்  கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 90, 000 பேர்.. அரசின் தாக்குதலால்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.

அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி - சத்தியாகிரகம் நடத்தியதன் விளைவாக 1930 மே 5 அன்று காந்திஜி சிறை பிடிக்கப்பட்டார்..

ஆங்கில அரசின் பிரதிநிதி
இர்வின் பிரபு காந்திஜியை விடுவித்ததுடன் உப்பு வரியையும் நீக்குவதற்கு ஒப்புக் கொள்ள -  
1931 ஜனவரி 26  அன்று உப்புச் சத்தியாகிரகம்  முடித்துக் கொள்ளப்பட்டது.

காந்திஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகம் அவரையும் இந்தியாவின் பிரச்னை களையும் உலக அளவில் கொண்டு சென்றது.. பின்னாளில் தென் ஆப்பிரிக்காவின் மார்டின் லூதர் கிங் சத்தியாக்கிரக தத்துவத்தினையே மேற்கொண்டார்..


காந்திஜியின் உப்பு சத்தியாக்கிரகத்தின் தொடர்ச்சியாக தமிழகத்தில் வேதாரண்யம் அகஸ்தியம் பள்ளியில் உப்பு எடுக்கின்ற அறப்பணியில் மக்கள் ஈடுபட்டனர்..

1930 ஏப்ரல் 13 அன்று 
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது..

திருச்சிராப்பள்ளியில் இருந்து கல்லணை திருக்காட்டுப்பள்ளி திருவையாறு தஞ்சாவூர் நீடாமங்கலம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்திற்கு வந்து உப்பெடுத்து சிறைப்பட்டனர்..

இப்போராட்டத்திற்குத் தலைமை வகித்தவர் ஸ்ரீமான் ராஜாஜி அவர்கள்.. வேதாரண்யத்தில் முன்னெடுத்து நடத்தியவர்  சர்தார் வேதரத்தினம் பிள்ளை..

இதனால் ஆறு மாத சிறை வாசம் சத்தியாக்கிரகிகளுக்கு ..


ராஜாஜி அவர்கள் உப்பு அள்ளிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது..

இந்த இடத்திற்கு எளியேன் சென்றிருக்கின்றேன்..

கல்லணையைக் கடந்து வந்து கொண்டிருந்த  உப்பு சத்தியாக்கிரகத் தொண்டர்களுக்கு நீரோ உணவோ வழங்கக் கூடாது என்று அப்போதைய தஞ்சை ஆங்கிலேய நிர்வாகத்தின் கடுமையான உத்தரவு... 

அப்படி இருந்தும் இரவோடு இரவாக  பழங்களையும்  கட்டு சாத வகைகளையும்  கூடைகளில் வைத்து மரக்கிளைகளில் கட்டித் தொங்க விட்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள்.. 

தஞ்சையில் சத்தியாக்கிரகத் தொண்டர்களுக்கு உணவு அளித்த வீட்டின் வாசலில் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது..

உப்பைப் பற்றி பதிவு எழுதியதும் உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றியும் எழுதியிருக்கலாம் என்பது அன்பின் ஸ்ரீராம் அவர்கள் கருத்து.. 

உப்பு  பற்றிய பதிவின் போதே இதைத் திட்டமிட்டு இருந்தேன்.. நடைமுறை சிக்கல்கள் சிலவற்றால் தாமதம் ஆகி விட்டது... மன்னிக்கவும்..

வாழ்க பாரதம்...

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***