நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 14, 2024

கோடி பதிகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 29
புதன்கிழமை


கொட்டையூர்

சுவாமி
ஸ்ரீ கோடீஸ்வரர்
அம்பிகை 
ஸ்ரீ பந்தாடுநாயகி

ஆமணக்குச் செடியின் கீழாக கோடி லிங்கமாகப் பொலிந்ததனால் ஸ்வாமி கோடீஸ்வரர்...

ஆனந்த மயமாக பந்து ஆடிய கோலத்தில்  முனிவர்கள் தரிசனம் பெற்றமையால் 
ஸ்ரீ கந்துகக் கிரீடாம்பிகை.. பந்தாடு நாயகி... 

பந்தினை எற்றுகின்ற பாவனையில் இருக்கின்றாளாம் அம்பிகை..

அளவிலா விளையாட்டுடைய அம்பிகை உலகப் பந்தினை எற்றுவதும் சுழற்றுவதும் இனிமையே.. ஆனந்தமே..

திருக்கோயிலைத் தரிசித்த பிறகு
மேலும் விவரங்கள்


அப்பர் பெருமான் அருளிச்செய்த 
திருத்தாண்டகம்

தல புராணம் இரண்டு தலங்களுக்கு உரியதாகையால்
வலஞ்சுழியும் கொட்டையூரும் திருப்பதிகத்தில் பயின்று வருகின்றன.

ஆறாம் திருமுறை
திருப்பதிக எண் 73

கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.  1 

கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் தானே.  2 

செந்தா மரைப்போது அணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய் தயிர்தேன் ஆடி கண்டாய்
மந்தாரம்  உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.  3  

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கு ஏறூர்ந்தான் கண்டாய்
எண்திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவி ரிவாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்
கோடீச்சரத் துறையுங் கோமான் தானே.  4  

அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைகள் ஆறங்கம் ஆனான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.  5  

சண்டனைநல் அண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்சங் கரன்தான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனற் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.  6  

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.  7 

 விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியதள் உடையான் கண்டாய்
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.  8  

தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்றன் மகனசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட் டிருங்கலையும் ஆனான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழுபொற் கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.  9  

விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே..10 


 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. ​நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வாழ்க..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  3. கொட்டையூர்,வலம்சுழி பதிகம்பாடி தரிசித்தோம்.
    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  4. கொட்டையூர் கோவில் தரிசனம், வரலாறு பதிகம் சிறப்பு.
    பதிகத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றி.. நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..