நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 01, 2023

அமிர்த கடம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 17
புதன்கிழமை

இன்று நமது தளத்தில்
பத்தாண்டுகளுக்கு முன்பாக 
வெளியிடப்பட்ட பதிவு
மீண்டும் மலர்கின்றது..
 
ஆனந்தம் என்றால் அப்படியொரு ஆனந்தம் ... பேரானந்தம்!..

இருக்காதா பின்னே.. எத்தனை எத்தனை இன்னல்கள்!.. இடர்பாடுகள்!... 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும்  - தாம் கடந்து வந்த வழி நினைவுக்கு வந்தது.

நமது துயர் தீர மருந்து வேண்டும்.. அதற்கு
பாற்கடலைக் கடையலாமா!.. என்று ஆசைப்பட்டு - கடலைக் கடைந்த வேளையில் - 
அமிர்தத்துக்குப் பதிலாக திரண்டு வந்தது - ஆலகாலம்!..

அஞ்சி நடுங்கி,  ஓட்டம் பிடித்து - ஈசனே!.. - என்று - திருக்கயிலாயத்தில் அடைக்கலமாக,

சிவபெருமான்
நஞ்சினை ஒடுக்கி  அருள் புரிந்தார்..

அதன்பின், 
மறுபடியும் கடலைக் கலக்கியடித்து - இதோ.. இதோ.. கைகளில் கலசம்!..

அமிர்தம் நிறைந்த கலசம்!...

அசுரர்களும் தேவர்களும் பழைய வெட்டு குத்து விஷயங்களை மறந்து - வரலாற்றில் முதல் முறையாக - ஆனந்தத்துடன் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். 

இருப்பினும் எல்லோருடைய மனதிலும் நிழலாடிய ஒரே கேள்வி - ''..எப்போது பரிமாறப்படும் அமிர்தம்?...'' - என்பது தான்!...


ஸ்ரீமந்நாராயண மூர்த்தி சிந்தித்தார்..

பூவுலகில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார்..
 ''.. அங்கே ஒன்று கூடுங்கள்!..'' என, ஆணையிட்டார்..

அவ்வண்ணமே  - அனைவரும் ஒருங்கே கூடினர்..

மஹாவிஷ்ணு சுட்டிய அந்த இடத்தில் வில்வமரம் ஒன்று தழைத்திருந்தது. 

''..அமிர்த கடத்தினை வில்வ நிழலில் வைத்து விட்டு அனைவரும் நீராடி வாருங்கள்!..''

ஐயனின் விருப்பப்படி அங்கே ஆகாய கங்கை பொழிந்தது. அலுப்பு தீர நீராடிய  - அசுரரும் தேவரும் ஆவலுடன் ஓடி வந்தனர் அமுதத்தினை அருந்துவதற்கு!..

அங்கே - வில்வ மரத்தின் நிழலில் வைக்கப்பட்டிருந்த அமிர்த கலசம் காணாமல் போயிருந்தது!.. 

அதிர்ந்தான் தேவேந்திரன்..

ஆத்திரத்துடன் அவசர முடிவெடுத்தான் - 
''.. அசுரர்களின் வேலைதான் இது!..'' - என்று!..

தேவகுரு அவனை சாந்தப்படுத்தினார். 

''.. தேவேந்திரா!. சற்றே  சிந்தித்துப்பார்.. என்ன பிழை செய்தாய்..  உனக்கு ஏன் மீண்டும் மீண்டும் இப்படி சோதனை என்று!..''

''..ஒரு பிழையும் செய்தறியேனே!..'' - அரற்றினான் இந்திரன்.

''..கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் இந்திரனே!. உன் சிந்தைக்கு ஒன்றும் எட்ட வில்லையா?..  எல்லாம் வல்ல சிவபெருமான் அன்று நம் அனைவருக்கும் அறிவுரைத்ததென்ன?..''

''..என்ன!..'' - திருப்பி அதே கேள்வியைக் கேட்டான் இந்திரன்.

''..மூத்தோர் தம் வார்த்தை அமிர்தம் என்று தமிழில் ஒரு சொல் வழக்கு உண்டு. மூத்தோர் வார்த்தைகளை மதித்து மனதில் கொண்டால் இன்று இந்த அமிர்தத்துக்கு வேலையே இராது. அவற்றை நீ மனதில் கொள்ளாததால் வந்த வினை இது!..''-

தேவகுரு அமைதியாக அறிவுரை பகர்ந்தார்.

இந்திரன் தவித்தான்.. தடுமாறினான்..

''..குருவே!.. விளக்கமாகக் கூறுங்கள்!..'' - கண்கள் கலங்கின..


''..கஜமுகாசுரனை அழிப்பதற்காக - பரம்பொருள் கணபதியைப் படைத்தருளிய காலத்தில்  - அனைத்திற்கும் ஐங்கரனே மூல முதல்வன். அவனுக்கே முதல் வணக்கம் என்று கட்டளையிட்டார் அல்லவா!..''

திடுக்கிட்டான். ''..ஆமாம்!.. ஆமாம்!..'' - அவன் தலை கவிழ்ந்தது. செய்த பிழை புரிந்தது..

பாற்கடலைக் கடைவதற்கு முற்பட்டதில் இருந்து, முதற்பொருளாகிய மூஷிக வாகனனைக் கைகூப்பித் தொழாத மடைமையை எண்ணித் தன் தலையில் தானே அடித்துக் கொண்டான். 

''..அட.. ஆலகாலம் நம்மை அலைக்கழித்த வேளையில் கூட, ஐங்கரனை நினைக்க வில்லையே!.. திருக் கயிலாயமலை நோக்கி திகைத்து ஓடியபோது கூட பெருமானின் திருவடிகளைத் துதிக்கவில்லையே!... கணபதியின் கழல்களைத் தொழுது வணங்காத கடையனாகி விட்டேனே!... காட்சிக்கு எளியனான கருணா மூர்த்தியை அலட்சியம் செய்த அந்தகனாகி விட்டேனே!..''

உருகினான். உள்ளம் உடைந்து மருகினான்.

''..இப்போது என்ன செய்வது குருவே!. நீங்கள் தான் நல்வழி காட்ட வேண்டும்!.''

''..இனிமேலாவது சொல்வதை மறக்காமல் மனதில் வைத்துக் கொள்!.. அரும் பாடுபட்டு அடைந்த அமிர்தகலசம் எங்கே போயிற்று என யாராலும் அறிய இயலாது. இப்போது செய்யக்கூடியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்!... உன் சோகம் தீர்வதற்கு ஒரே வழி... உமா சுதனாகிய விக்னேஸ்வர மூர்த்தியின் திருப்பாதங்களைப் பணிந்து - பெருமானே... பிழை பொறுத்தருள்க! - என்று வேண்டிக் கொள்வது தான்!... அதற்கு மேல்,  மனம் இரங்கி அவர் காட்டும் வழி!..''

விநாயகப் பெருமானைப் பணிந்து வணங்கும்படி -  தேவகுரு பணித்ததும், அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டான் இந்திரன்..


கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலசார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாஸ காரணம்
நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்:

அனைவரும் மனமுருகி வேண்டி நின்றனர். சிரசில் குட்டிக் கொண்டனர். காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணமிட்டனர்.

''..தொலையாத் தொல்வினை தொலைய - துணையிருங்கள் ஸ்வாமி!..'' என்று கதறினர். 

அதற்கு மேல் அவர்களைச் சோதிக்க விரும்பாமல் - 
அருள் முகங்காட்டினார் ஆனந்த விநாயகர்!....

''..ஐயனே!.. பிழை பொறுத்தருளுங்கள் பெருமானே!.. கயிலாய மலையில் கருணையே வடிவாக - என் எதிரில் தாங்கள் வந்தும் கண் கெட்ட கசடனாக கை தொழ மறந்தேன்!.. பெருமானின் பிள்ளை என எண்ணித் துதிக்காமல் பெருமானைப் பிள்ளை என எண்ணி - இழிவுற்றேன்!.. இடருற்றேன்!..  அசடன் என்மேல் கருணை கொள்ளவும் இனிக் காரணம் உண்டோ... கணபதிக்கு?... கார்முகில் போலும் கருணையே வடிவான கணேசமூர்த்தியின் கழலடியைக் கைதொழாது கருத்தழிந்த பாவியை மன்னித்தருளுங்கள்!.. அனைவரின் பொருட்டு என்னை மன்னித்து அருளுங்கள்!..''

தேவேந்திரன் தன் கண்ணீரால் கணபதியின் பாதமலர்களை நீராட்டினான். 


ஐராவதம் வெண்கவரி எடுத்து விசிறியபடி - பெருமானைத் தன் மீது
தாங்கி வலம் வந்தது..

தேவர்களும் அசுரர்களும் பாரிஜாத மலர்களைத் தூவி ஐயனை வழிபட்டனர். 

பாதக  மலம் தொலைக்கும் ஐயனின் பாத கமலங்களில் அனைவரும் தலை வைத்து வணங்கினர். 

மனங்குளிர்ந்த விநாயகப்பெருமான் - 

''தேவேந்திரா!..  உன் கண்களை மறைத்த கர்வத்தை பங்கப்படுத்தவே அமிர்த கடத்தினை உன் கண்களுக்கு மறைத்து இப்படி நிகழ்த்தினோம்!. வேதனையை விடு!.. விழிகளால் நோக்கு!..'' - என்று திருவாய் மலர்ந்தருளினார்..

மனம் மகிழ்ந்த தேவேந்திரன் ஜய கோஷமிட்டான்..

''..கள்ளவாரணப் பெருமான்.. வாழ்க!..''

'' வாழ்க!.. வாழ்க!..''

களிப்புடன் - கள்ளவாரணப் பெருமான் - திருக்கரங் காட்டியருளிய திசையில்,  
வில்வத்தின் நிழலில் - ஆயிரங்கோடி சூர்யோதயம் போலப் பேரொளியுடன் தோன்றியது - 

லிங்கம்!... அமிர்தலிங்கம்!... 

அமிர்தம் நிறைந்த கடத்தைத் தானே, இவ்விடத்தில் வைத்தோம்!. அது இப்போது அமிர்த லிங்கமாகப் பொலிகின்றது என்றால்!....

உறவுக்கோல் நட்டு
உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன்நின்ற - மாமணிச் சோதியன் - சிவன் அல்லவோ!..

ஆஹா!.. என்னே பேறு பெற்றோம்!.. 

" ஆனந்த லிங்கமே போற்றி!.. அமிர்த லிங்கமே போற்றி!.. 
அமிர்த கடேசனே போற்றி!.. அருட்பெருஞ் சோதியனே போற்றி!.. போற்றி!.. " 

அசுரர்களும் தேவர்களும் எம்பெருமானின் முன் வீழ்ந்து வணங்கினர்.

அருட்பெருஞ் சோதியாய்ப் பொலிந்த - அந்த சிவலிங்கத்தினின்று அமிர்த கலசம் வெளிப்பட்டது!... 

''..சிவமே அனைத்தும்!..''  
- என்று அங்கே உணர்த்தப்பட்டது.

லிங்கத்தினின்று வெளிப்பட்ட அமிர்த கலசத்தினைத் தமது திருக்கரங்களினால் பெற்று எம்பெருமானின் முன்வைத்து - தம்முடைய திருமேனியில் திகழ்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து  - ஆராதித்தார் மஹாவிஷ்ணு!.. அப்போது - 

அமிர்த கலசத்தினின்று, ஆனந்தவல்லியாக - பூச்செண்டு ஒன்றினைத் திருக்கரத்தினில் ஏந்தியவளாக  - அம்பிகை தோன்றியருளினாள். 

ஆரவாரத்துடன் அனைவரும் மீண்டும் தொழுது வணங்கினர்.

''அம்மையப்பனே அமிர்தம்!..''  - என்று மீண்டும் உணர்த்தப்பட்டது.

ஐயனும் அம்பிகையும் அனைவரையும் வாழ்த்தினர். 

அவர்களைப் பணிந்து வணங்கிய நான்முகன், ''..பெருமானே!..  எல்லா உலகும் உய்யும் பொருட்டு, தேவரீர் - இங்கே வீற்றிருந்தருளல் வேண்டும்!.. தாம் அமிர்தகடேசர் எனவும் அம்பிகை அபிராமவல்லி எனவும் திருநாமங்கொள்ள வேண்டும். இத்தலமும் திருக்கடவூர் என வழங்கப்பட வேண்டும்!..'' - என, வேண்டிக் கொண்டார்.

அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்..


அமுதீசரும் அபிராம வல்லியும் அம்மையப்பனாக
ஒரு பாகம் அகலாத வண்ணம்  திருக்கோலக் காட்சி நல்கியருளினர்..

கள்ளவாரணப் பெருமானே போற்றி..
அமிர்தகட ஈசனே போற்றி.. 
அபிராமவல்லியே போற்றி போற்றி!..

திருக்கடவூர் திகழும் 
திருவிளக்கே போற்றி!.. போற்றி!..
***

9 கருத்துகள்:

  1. சிறந்த முறையில் எடுத்து உரைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. அபிராமவல்லியே போற்றி...
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  3. 'ஆதி முதல்வன்' விக்னேஸ்வரனை தொழுது தொடங்கும் காரியம் வெற்றிபெறும். என்பதை எடுத்துக் காட்டும் நிகழ்வு பகிர்வு.

    வணங்குவோம் இறை பாதம்.

    பதிலளிநீக்கு
  4. அமுதீசரும், அபிராமவல்லியும் அர்தநாரீஸ்வரராகக் காட்சி அருமை. விக்னம் இல்லாமல் நடத்த வேண்டும் விக்னேஸ்வரனைத் தொழுது காரியம் தொடங்க வேண்டும் என்பதைச் சொல்லும் புராணமும் இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன் துரை அண்ணா. அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அமிர்த கடம், கள்ள வாரணர் கதையை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள் திருக்கடவூரில் முதலில் அவர் தரிசனம் பெற்று பின்தான் சுவாமி, அம்மன் வழிபாடு. முழுமுதற் பொருளே போற்றி!
    அமிர்தகட ஈசனே போற்றி
    அபிராம வல்லி தாயே போற்றி

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதன் முதலில் எந்த ஒரு செயலை செய்தாலும், விக்னேஷ்வரரை வழிபட்ட பின்தான் அந்த செயலை தொடங்கி வேண்டுமென்பதை நிரூப்பிக்கும் கதை அருமை. படங்களும், பதிவும் நன்றாக உள்ளன

    முழு முதல் கடவுளான விக்னேஷ்வர பெருமானையும், அமிர்தகடேஸ்வரரையும், அன்னை அபிராமிவல்லியையும் தரிசித்து கொண்டேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. தும்பிக்கை நாதன் நம்பிக்கையின் நாயகன் அல்லவோ? அவன் கருணை எல்லையற்றது. இங்கேயும் வந்து அருள் புரிந்து விட்டான். மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். அருமையான நடை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..