நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 22, 2018

மங்கல மார்கழி 07

ஓம்

தமிழமுதம்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.. (067) 
-: :-

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 07



கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்தத் தயிரரவங் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..  
***

ஒளிமிகு திருவதனமுடையவளே என் தோழீ..
கதவைத் திறவாய்!..

விடிகின்ற பொழுதில் கருங்குருவிகள்
எல்லாம் விழித்து எழுந்து விட்டனவே...

ஆனைச்சாத்தன் எனப்படும்
அவை தம் இணையுடன் சேர்ந்து
பேசுகின்ற பேச்சுகளையெல்லாம் கேட்டு மகிழாமல்
பேய்த்தூக்கம் தூங்குகின்றனையே!..

மங்கலகரமான அணிமணிகளுடன்
திருமாங்கல்யமும் சேர்ந்து
கலகல.. என, ஒலி எழுப்ப
ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடையும் ஓசையும்
சேர்ந்து கொண்டு பெருஞ்சத்தமாக இருக்கிறதே..

அது கூட உனது செவிகளில்
விழவில்லையா!...

தயிரையும் வெண்ணெயையும்
கைகளால் அளாவுவதனால்
ஆய்ச்சியரின் கருங்கூந்தலும்
நறுங்கூந்தலாக மணம் வீசுகின்றதே...

அந்த சுகந்தத்தைக் கூட நீ உணரவில்லையா?..

எங்களுக்கு நாயகமாக தலைவியாக
இருக்க்வேண்டிய நீ இப்படிக் கிடக்கலாமா?...

நாராயணனைப் பாடாத நாவென்ன நாவோ..
என, அவனைப் பாடுகின்றோம்...

கேசவனைப் பேசாத பேச்சு என்ன பேச்சு?..
என, அவனையே பேசுகின்றோம்!..

இதையெல்லாம் காதாரக் கேட்டும்
கேளாதவள் போலக் கிடக்கும் உன்னை
என்னென்று சொல்வது?..

எழுந்திராய் தோழி.. எழுந்திரு!...  

***
தித்திக்கும் திருப்பாசுரம் 


ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி
வடுவூர் - திருஆரூர் (மா) 
மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையமுண்டு
ஆலின் இலைத்துயின்ற ஆழியான் கோலக்
கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீதீண்டப் பெற்று..(2100)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம்

பலா 
***
முக்கனிகளுள் இரண்டாவதாக விளங்குவது..
பற்பல நன்மைகளையும் சிறப்புகளையும்
தன்னகத்தே கொண்டது...

மா மரத்தைப் போலவே பலாவும்
பாரதத்துக்குரிய மரமாகும்...


இதனுடைய இலைகளைத் தைத்து 
அதில் உணவை இட்டு உண்பது
பழைய வழக்கங்களுள் ஒன்று...

மாங்கனியைப் போலவே
பலாக்கனியும் மங்கலச் சின்னங்களுள் ஒன்று...

முதிர்ந்த பலா மரத்திலிருந்தே
வீணைகள் உருவாக்கப்படுகின்றன..

பலாவின் காய் அதிகம் பயன்படுவதில்லை..
ஆனால் மூசு எனப்படும் பலாப் பிஞ்சு
துவர்ப்பு சுவையுடன் கூடியது..
குடல்புண்களை ஆற்றும் தன்மையுடையது..



கரடு முரடாக இருந்தாலும்
பலாப் பழத்தை விரும்பாதவர் எவருமில்லை.. எனினும்
இது பருவ காலத்தில் மட்டுமே கிடைப்பது...

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில்
சந்தையில் நிறைந்திருப்பவை..


பலாப்பழத்தில் சத்துக்கள் நிறைந்திருப்பதாக
ஆய்வுகள் கூறுகின்றன...

ஆயினும் பலாச்சுளையை அதிகமாக உண்டால்
வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு...




பலாக்கொட்டை அழுத்தமாக இருந்தாலும்
அதனை வேக வைத்தும் சுட்டும்
உண்பது நம்மவர்களின் வழக்கம்...

பலாக்கொட்டையைக் கொண்டு
பலவித குழம்புகளை வைக்கலாம்...

அது எலும்புக்கு உறுதியைக் கொடுக்கிறது...

பலா பழுத்து விட்டால் அதன் நறுமணமே
மனதை மயக்கும்...

இன்றைய நாட்களில்
சர்க்கரை குறைபாடுள்ளவர்கள்
பலாச்சுணை உண்ணக் கூடாது என்று
மேலை நாட்டு மருத்துவம் சொன்னாலும்
பலாவின் பிஞ்சும் முற்றிய கொட்டையும்
அவற்றின் துவர்ப்பினால்
ரத்தத்தின் சர்க்கரையை சமன் செய்கின்றன...

சிறப்புகள் பலவுடைய - பலா
திருக்குற்றாலத்தின் தலவிருட்சமாகும்...
*** *** ***

சிவ தரிசனம்
திரு ஆரூர்


இறைவன்
ஸ்ரீ வன்மீகநாதர், திருமூலட்டானன்
அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை, கமலாம்பிகை

தல விருட்சம் - பாதிரி
தீர்த்தம் - கமலாலயம்

ஆதியான திருத்தலம்...

இறைவா.. நீ என்றைக்கு இத்தலத்தில் எழுந்தருளினை!..
- என்று அப்பர் ஸ்வாமிகள் வியந்து போற்றுகின்றார்...

மூலவராகிய எம்பெருமான் புற்று வடிவினர்...
ஆகவே இத்திருத்தலம் பஞ்ச பூதங்களில் மண்ணின் பகுப்பு
என்றும் புகழ்ந்துரைப்பர்...

கமலாம்பிகை வீற்றிருக்கும் திருத்தலம்.. 
ஸ்ரீ சக்தி பீடங்களுள் ஒன்றாக
துதிக்கப்படுகின்றது...

ஸ்ரீ முசுகுந்த சக்ரவர்த்தி - தேவலோகத்திலிருந்து
கொணர்ந்த சப்த விடங்க மூர்த்தங்களுள்
இங்கே முதலாவது மூர்த்தி...
தேவேந்திரன் வழிபட்ட திருமேனி..

விடங்கப் பெருமானின் முன்பாக
நந்தியம்பெருமான் நின்ற வண்ணம்
சேவை சாதிக்கின்றார்..

இத்தலம் நித்ய ப்ரதோஷத் தலமாகும்...

நீதி நெறி தவறாத
மாமன்னன் மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்த தலம்... 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்..

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவாய் நின்ற நாளோ
கருவனாய் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான்மறி கைஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திரு ஆரூர்க் கோயிலாக் கொண்ட நாளே.. (6/34)

ஆரூரின் ஆழித்தேர்  
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப் பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப் பானைப்
பிழையெ லாந்தவிரப் பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி
ஆரூரனை மறக்கலு மாமே.. (7/59) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 07

திருக்கல்யாணமூர்த்தி - திருமணஞ்சேரி  
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
என்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

12 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா..

    இன்றைய நாள் உங்களுக்கு நன்மைகள் செய்திடும்! எங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் உண்டு! இறைவன் நல்லது செய்வான்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. தமிழமுதம் அருளமுதம் வழக்கம் போல் சிறப்பு..

    பலா வின் சிறப்புகளும் சிறப்பு.

    பழம், பிஞ்சு, கொட்டை எல்லாம் வைத்து பல ரெசிப்பிகள் செய்வதுண்டு...கொட்டையை வைத்துக் குழம்பு, பொரியல் கூட்டு சாம்பார் என்று பல...சுளைகளையும் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. குட்மார்னிங். தமிழமுதம் பருக வந்தேனே...

    பதிலளிநீக்கு
  4. இன்றைய பாசுரம் படித்ததும் ஏ ஆர் ரெஹ்மான் நினைவுக்கு வருவது எனது அஞ்ஞானம்!!! (கீசு கீசு என்று)

    பதிலளிநீக்கு
  5. பலாச்சுளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் (மாந்தம்?) ஏற்படும் என்று சொல்வார்கள். சிறிது நெய்யுடன் சேர்த்து சாப்பிடச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  6. பலாவைக் குறித்து நிறைவான விடயங்கள்.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  7. படங்களும், பாடல் விளக்கமும், பலா பற்றிய செய்தியும் அருமை.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. அழகிய படங்கள், சிறப்பான விளக்கங்கள். திரு ஆரூர் தியாகராஜரின் தரிசனம் கண்ணையும் மனதையும் நிறைத்தது. இவருக்கு சிவாசாரியார்கள் செய்யும் வழிபாடைக் காண நேர்ந்தது. சிதம்பரத்தோடு ஒப்பிடுகையில் இங்கே ஏமாற்றமே அளித்தது. வடுவூர் ராமர் செண்டாயுதத்தோடு காட்சி அளிக்கிறார். ஒரு கணம் மூன்று ராஜகோபாலர்களில் ஒருத்தரோ என்னும் நினைப்பு கண்ணை மறைத்தது.

    பதிலளிநீக்கு
  9. எல்லாப் பழங்களுமே உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது தான். ஆனால் சாப்பிட வேண்டிய சின்ன வயசில் சாப்பிடக் கொடுத்து வைக்கலை. பழம்னு பார்த்ததே கல்யாணம் ஆனப்புறமாத் தான்! :))) பலாப்பழம் ரொம்பப் பிடிக்கும்.ஆனால் தினமும் சாப்பிட முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  10. பலாவின் சிறப்பு உட்பட அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..