நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 27, 2018

மங்கல மார்கழி 12

ஓம்  

தமிழமுதம் 

தக்கார் தகவிலார் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.. (114) 
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 12 

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 
பனித் தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற 
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்..
***

மார்கழியின் பனித் துளிகள் எங்கள் தலை மீது வீழ்ந்து
தாரகைகளாக மின்னிக் கிடக்கின்றன...

அந்த சிலுசிலுப்பையும் கருத்தில் கொள்ளாது
 மாதவனைக் கேசவனை மனதுக்கு இனியவனை
பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றோம்...

நீயோ - ஏதொன்றும் அறியாதவளாய்
நித்திரையில் கிடக்கின்றாய்!..

தென்னிலங்கைக் கோமானின்
மணிமுடிகள் பத்தும்
இற்று வீழ எய்தவன் ஸ்ரீராமன்..

அத்திரம் எய்து நின்ற அண்ணலின்
அத்திறம் போற்றிப் பாட வேண்டாமா!...
அவனது அன்பினில் நாம் எல்லாரும்
கூட வேண்டாமா?..


இளங்கன்றின் குரலுக்கு இரங்கி
காரெருமை கனைத்துக் கொண்டிருக்கின்றது...

கறப்பார் இன்றிக் கனத்த மடியினின்று
பால் வழிந்தோடி தொழுவம் முழுதும்
சேறாகிக் கிடக்க
யாதொன்றையும் கவனியாது
ஈதென்ன பெருந்தூக்கம்!?..

அயலகத்தார் நகைப்புடன் பார்க்கின்றனரே!..
நங்காய்.. நற்செல்வனின் தங்காய்..
விரைந்தெழுந்து நீ வாராய்!... 

பால் நினைந்தூட்டும் காரெருமை
கன்று வந்து அணுகாமையினால்
பால் நிறைந்த மடியுடன்
கனைத்துத் தவிக்கின்றதே...

இதைப் போலத் தான்
கன்றுகளாகிய நாம் அவனைச் சென்று அடையாததால்
அந்தக் கார்முகில் வண்ணனும் கலங்கித் தவிப்பானோ!?...
***

தித்திக்கும் திருப்பாசுரம்  


ஸ்ரீ ராமஸ்வாமி - திருக்குடந்தை 
நன்றுபிணி மூப்புக் கையற்றி நான்கூழி
நின்று நிலமுழுதும் ஆண்டாலும் என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு.. (2152) 
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம் 

வெண் தாமரை
அன்னை கலைவாணிக்கு உரிய மலர்...
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் - என்பார் மகாகவி..

வெண் தாமரை என்ற உருவகம் நல்லோர் மனமாகும்..

செந்தாமரையைப் போலவே
வெண் தாமரை மலரும் மன இறுக்கத்தைத் தவிர்த்து
சிந்தையை ஒருமுகமாக வல்லது..

மிகுந்த மருத்துவப்
பயன்பாட்டினையும் உடையது..

மண்பானை நீரில் இரவு முழுவதும்
வெண் தாமரை இதழ்களைப் போட்டு வைத்து
அந்த நீரை குடித்து வந்தால் மூளை பலமடையும்
என்பது குறிப்பு...

 பொதுவாக தாமரை இதழ்க் கஷாயத்தினை
வாரம் இருமுறை குடித்து வந்தால்
இரத்த ஓட்டம் சீராகின்றது..
படபடப்பு நீங்குகின்றது.. 

இதயம் வலிமையடைவதுடன்
இரத்தம் தூய்மையாகின்றது...

முதிர்ந்த தாமரையின் விதைகள்
நரம்பு மண்டலத்திற்கு வலிமை சேர்ப்பவை..
***

சிவ தரிசனம்
திரு பட்டீஸ்வரம்


ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் - பட்டீஸ்வரம்..
இறைவன் - ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ ஞானாம்பிகை 

தல விருட்சம் - வன்னி
தீர்த்தம் - கோடி தீர்த்தம்

அம்பிகை தவம் புரிந்த தலங்களுள்
இதுவும் ஒன்று..காமதேனுவின் மகளான ட்டி
பால் சுரந்து வழிந்திட 
தொழுது வணங்கிய திருத்தலம்...

ஈசன் எம்பெருமான்
இத்தலத்தில் தான்
திருஞானசம்பந்தருக்கு
முத்துப்பந்தல் அருளினன்...

அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடான
சுவாமிமலையிலிருந்து தெற்காக
4 கி.மீ., தொலைவிலுள்ளது..

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி
பட்டீஸ்வரம்
 
மருவமுழ வதிரமழ பாடிமலி
மத்தவிழ வார்க்க அரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடை யினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை
அஞ்சவரு வெள்விடை யினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ளமுடை
யாரையடை யாவினைகளே.. (3/73) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 03 - 04முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்... 3

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்... 4

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
***

10 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா..

  கேஷவின் படமும் வெண் தாமரையும் செம அழகு..

  வாசித்துவிட்டு வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம். தக்கார் தகவிலார் குறள் பழைய பள்ளி நினைவுகள் வருகிறது!

  பதிலளிநீக்கு
 3. குடந்தை ராமசாமி கோவில் சமீபத்தில் சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 4. தாமரையின் மருத்துவப்பயன்பாடுகள் வியக்க வைக்கிறது. "வெள்ளைக்கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் (சூலமங்கலம் ராஜலக்ஷ்மி) பாடலும் வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள் (மதுரை மணி) பாடலும் நினைவுக்கு வருகின்றன.

  பதிலளிநீக்கு
 5. அடடே.. பட்டீஸ்வரம் கோவிலும் சென்று வந்தேனே அதே சுற்றில்...

  பதிலளிநீக்கு
 6. கேஷவின் ஓவியத்தைப் பார்த்த உடனே பச்சைமாமலை போல் மேன், பவளவாய், கமலச்செங்கண் பாசுரமே நினைவில் வருது.

  பதிலளிநீக்கு
 7. தாமரைத் தண்டினை வெண்டைக்காய் போல் நறுக்கிக் கறி சமைக்கலாம். வற்றல் போடலாம். தாமரைக்கிழங்கு வற்றல் மதுரையில் முன்னெல்லாம் நிறையக் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 8. திருப்பாவை, திருவெம்பாவை விளக்கங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. திருப்பாவை விளக்கம் அறிந்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 10. அருமை...

  ஆனால் தமிழமுதம் இதற்கு சரியாக பொருந்தாது...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..