நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 04, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 10

மகிஷி பெற்ற வாழ்வு.. 

அன்றைக்கு ப்ரம்மதேவனிடம் கேட்டு வாங்கிய வரம்
இன்றைக்கு எப்படி மலர்ந்திருக்கின்றது!..
- என்பதைக் காண்பதற்கு ஆவல் கொண்டவளாக -
மகிஷி வெளிப்பட்டாள்...

அவள் ஆவல் கொண்டவளாக வெளிப்பட்டாலும்
அவளது தோற்றம் உக்ரமாக இருந்தது...மகிஷியின் உக்ரத்தினைக் கண்டு அஞ்சிய தேவர்கள்
ஐயனுடன் இருந்தபோதும் அச்சமுற்றவர்களாக
 விலகி ஓடிப் போயினர்...

மகிஷிக்கு நிறையவே மகிழ்ச்சி..

இவன் தான் ஹரிஹர புத்திரனா!...
சிவஹரி சங்கமத்தில் உதித்த குமாரன் இவன் தானா!...
இப்படிப்பட்ட பிள்ளையின் கரங்களால் மடிவது என்றால் -
மீண்டும் மீண்டும் மகிஷியாகவே பிறக்கலாமே!...
இளங்குமரன் இவனது கைகளால் கடைத்தேறுவதும் சந்தோஷமே!...

ஒருவேளை - பெண் என்பதால் நம்மை மன்னித்து விட்டுவிட்டால்!?..
இல்லை.. இல்லை... அப்படியெல்லாம் விட்டு விடமாட்டான்...

நான் கேட்ட வரத்தால் தோன்றிய வள்ளல் ஆயிற்றே!...
என் இருளைத் தொலைக்கத் தோன்றிய தூண்டாமணி விளக்காயிற்றே!...

இவனுக்கு முன்பாக ஆயுதம் தாங்கி நிற்க என் மனம் விரும்பவில்லை..
என்றாலும் - ஆயுதமின்றி நின்ற பெண்ணை ஹரிஹரசுதன் வீழ்த்தினான்..
- என்ற சொல்லுக்கு இடமளித்து விடக்கூடாது!...

எனவே - இதோ.. எனது மந்த்ராயுதங்களை ஏந்துகின்றேன்!...

இப்படியாகத் தனக்குள் பேசிக்கொண்ட மகிஷி -
குரு சுக்ராச்சார்யாரை மானசீகமாக வணங்கினாள்...

தொலைவில் நின்று கொண்டிருந்த -
ஸ்ரீ ஹரிஹர புத்ரனையும் வணங்கிக் கொண்டாள்!...

தனது மேனி அழகினைத் துறந்து கோர ரூபங்கொண்டாள்...

அலைகடலென ஆர்ப்பரித்த வண்ணம் ஆக்ரோஷமாகப் பாய்ந்தாள்...


விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே விளங்கும்
பெருவெளியில் மூண்டது யுத்தம்...

மகிஷி - தன்மீது எறியும் ஆயுதங்களைத் தடுப்பதும்
அந்த நச்சு ஆயுதங்களை முற்றாக அழிப்பதுமாக
ஹரிஹரசுதனுக்கு எல்லாமே விளையாட்டாக இருந்தது...

அதேவேளையில் -
ஐயனின் கோதண்டத்திலிருந்து வெளிப்பட்ட பாணங்கள்
மகிஷியின் பாவவினைகளை முற்றாகக் களைந்து கொண்டிருந்தன...

ஹரிஹர சுதன் நிகழ்த்திய போரினைக் கண்டு -
தேவர்கள் ஆரவாரித்துக் கொண்டிருக்க -

போதும் இந்த விளையாட்டு!... - என,
ஈசன் அருளிய தண்டத்தால் மகிஷியின் தலையில் அடித்தான் - ஹரிஹரசுதன்..

தலையில் அடிபட்டால் சித்தம் கலங்கி விடும் என்பார்கள்..
ஆனால் - மகிஷிக்கோ - அதுவரை கலங்கியிருந்த சித்தம் தெளிவடைந்தது..

நிலை குலைந்து சரிந்த மகிஷியை -

அன்றைக்கு திரேதா யுகத்தில் -
துந்துபியின் எலும்புக்கூட்டினை -
ஸ்ரீராமசந்த்ரன் எற்றினாரே அதைப் போல -

தனது திருவடியினால் எற்றினான் - ஹரிஹரசுதன்..

பெருஞ்சத்தத்துடன் - அந்தரத்திலிருந்து
பூமியில் விழுந்தாள் - மகிஷி...

அவளது பூத சரீரத்தின் மீது - திருவடிகளைப் பதித்து
ஆனந்த நடனமிட்டான் - ஹரிஹரசுதன்..

அன்பு மகனின் ஆனந்த நடனத்தைக் கண்டு
பரமனுக்கும் அம்பிகைக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி...

அப்பாவைப் போலவே பிள்ளை.. என்று!...
அந்தப் பக்கமாகக் கட்டிக்கிடந்த காளை நினைத்துக் கொண்டது..


ஹரிஹரசுதனின் திருவடி ஸ்பரிசத்தால் -
பூத சரீரத்திலிருந்து வெளிப்பட்டு நின்றாள் - லீலா...

தனது பிழைகளுக்காக மனம் வருந்திய லீலா
தன்னை மன்னிக்க வேண்டி ஐயனைப் பணிந்து நின்றாள்...

தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டினாள்...

அவளது கோரிக்கைக்கு
பின்னொரு சமயம் பதிலுரைப்பதாகக் கூறிய - ஐயன்,
தனது அவதார நோக்கம் நிறைவேறும் வரை
அந்த வனத்திலேயே காத்திருக்குமாறு பணித்தார்....


மகிஷியின் வீழ்ச்சியைக் கண்டு - கொண்டாடிய
வானவர் கூட்டம் ஓடோடி வந்து ஹரிஹரசுதனின்
திருவடிக் கமலங்களில் வீழ்ந்து வணங்கியது...

ஐயனே போற்றி.. அப்பனே போற்றி..
எங்கள் அல்லல் எல்லாம் அகற்றிய
அருட்பெருஞ்சோதியே போற்றி!..

- பணிந்து வணங்கிய தேவேந்திரன்,

எம்பெருமானே!.. எம்மைப் பணி கொள்ளுமாறு அன்றைக்கே
தங்களிடன் விண்ணப்பம் செய்து கொண்டேன்!..
தேவரீர்.. இதுவரையிலும் கருணை கூரவில்லை...
எங்கள் பிழைகளைப் பெருமான் பொறுத்தருள வேண்டும்!..

ஐயனே... எங்கள் அப்பனே!...
எம்மை ஆண்டு கொண்டு அருள்க ஐயப்பனே!...

- என்று தொழுது நின்றான்..

தேவேந்திரா... எனது அவதார நோக்கம் ஒன்று உண்டு..
அது கூடிவரும் வேளையில் - உனது எண்ணம் நிச்சயம் நிறைவேறும்..

அதுவரையிலும் இங்கேயே
யோக நிலையில் யாம் எழுந்தருளி இருப்போம்!...

- என்று திருநோக்கம் செய்தருளினார்...


அந்த அளவில் - தேவ தச்சனாகிய மயன்
ஆனிப்பொன் கொண்டு உருவாக்கிய திருக்கோயிலில்
ஐயன் ஹரிஹரசுதன் எழுந்தருளினார்...

முப்பத்து முக்கோடித் தேவரும்
ஐயனின் திருநாமங்களைச் சொல்லி
பொற்றாமரைப் பூக்களால் பூஜித்துக் கொண்டிருக்க
தேவேந்திரனின் மனம் மட்டும் தனியே சிந்தித்தது....

ஐயனின் அவதார நோக்கம் என்னவாக இருக்கும்!?..
*** 

ஐயனின் திருஅவதார நோக்கம் தான் என்ன!...

அடுத்தடுத்த பதிவுகளில்
ஓரளவுக்கு உற்று உணர்வோம்!..

ஸ்ரீ ஹரிஹர சுதனே
சரணம்.. சரணம்...
ஃஃஃ 

9 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்.

  மகிஷியின் எண்ணங்களில் சிறிது நல்ல குணமும் தெரிகிறதே...

  பதிலளிநீக்கு
 2. மகிஷியை மறுபடியும் லீலாவாக்கிய ஐயனின் லீலை! ஐயப்பனின் அவதார நோக்கம் என்னவாக இருக்கும்?

  பதிலளிநீக்கு
 3. மஹிஷி வதம் முடிந்து ஐயன் அமர்ந்திருக்கும் கோலம் வெகு அழகு. இனி அவனின் அவதார நோக்கத்திற்குக் காத்திருக்கேன். மிக அருமையாக எழுதி வருகிறீர்கள். சுவையாகவும் விறுவிறுப்புடனும் எழுதுவதற்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. அப்பனைப் போல பிள்ளை// காளை நினைத்துக் கொண்டது என்று அண்ணா உங்களின் கதை சொல்லும் விதம் அருமை. அவதார நோக்கம் அறிய தொடர்கிறோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அப்பாவைப் போலவே பிள்ளை.. என்று!... அந்தப் பக்கமாகக் கட்டிக்கிடந்த காளை நினைத்துக் கொண்டது..//

   நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.

   நீக்கு
 5. மகிஷி வதம் பற்றி சிறப்பாக சொன்ன தொடர். அவதார நோக்கம் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. மகிஷியைப் பற்றி சொன்ன வார்த்தைகள் அருமை.
  சித்தம் தெளிவ்டைவது அருமை.
  அவதார நோக்கம் படிக்க ஆவல். தொடர்கிறேன்.
  படங்கள் எல்லாம் அழகு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..