நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 19, 2018

மங்கல மார்கழி 04

ஓம் 

தமிழமுதம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.. (034) 
-: :-

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 04


ஆன்மிகம் அளித்த அறிவியல்!..

அந்நியன் நுழைந்து அறிவியல் பேசுதற்கு
பல நூறு ஆண்டுகள் முன்பாகவே
வண்ணத் தமிழ் கொண்டு
வான்மழையின் தத்துவத்தை
ஸ்ரீ ஆண்டாள் விவரிக்கும் திருப்பாடல்.. 

நன்றி - கேசவ் ஜி..
ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 
***

மார்கழி தான் மகிழ்ச்சி எனில்
அந்த மகிழ்ச்சி அதிகாலைப் பொழுதில்
அல்லி மலர்த் தடாகத்தில் ஆடிக் குளித்தலால்
நீராடிக் களித்தலால் விளைவது...

அந்த மகிழ்ச்சிக்கும் வித்து
மாதவனே நீயருளும் மாரி அல்லவோ!..

மாதவனே!.. நீ அருளும் மாரி - மழை..
என்பது சரிதான்.. ஆயினும்,

மாதவன் தான் மழை!..
என்பதைப் பலரும்
அறியாமல் இருக்கின்றார்கள்...

ஊழி முதல்வனே!...
உன் திருவதனம் மேலும் கரிய நிறம் எய்தும்படிக்கு
கடலுள் புகுந்து நீராவியாக மேலெழுந்து
கார் மேகத் திரள்களாகக் கூடி நிற்கின்றாய்...

இப்படித் திரண்டு நிற்கும் கார்மேகத் திரள்கள்
ஒன்றோடொன்று கூடிக் கலக்கும் போது
நின் கையிலுள்ள சுதர்சனத்தின் பேரொளி
ஆங்கே மின்னலெனத் தோன்றுகிறது...

அது மட்டுமா!...

கற்பூரம் நாறும் நினது செவ்விதழ்களுடன் உறவாடும்
பாஞ்சசந்நிய வலம்புரிச் சங்கின் பேரொலி
இடி என எழுந்து எட்டுத் திக்கும் அதிர்கின்றது...

ஒளியும் ஒலியும் ஒன்று கலக்க
நின் திருக்கரத்தினில் விளங்கும் சார்ங்கத்தின் நாணிலிருந்து
உந்தி வெளிப்பட்ட சரங்களைப் போல
ஆயிரங்களாய் லட்சங்களாய்
நீர்த் துளிகள் மழையென
மண்ணை நோக்கிப் பாய்கின்றன...

பாழியந்தோளுடை பத்மநாபனே
நீயே மழையாகி எங்களைப் பரிபாலிக்கின்றாய்!...

ஆயினும்
சமயங்களில் கஜா போன்று கடுங்காற்றுடன் கலந்து
எம்மைக் கஷ்டத்துக்குள்ளாக்குவதும் ஏனோ?...

கார்முகில் வண்ணனே.. கண்ணனே...

மாமழை தீங்கின்றிப் பெய்தல் வேண்டும்!...

அஃதன்றி
மழையினால் தீங்கு விளைந்தது எனில்
கண் கொண்டு பார்க்கவேண்டும் பெருமாளே..
கை கொடுத்துக் காக்கவேண்டும் திருமாலே!..

***
தித்திக்கும் திருப்பாசுரம்..
ஸ்ரீ வைகுந்த ஏகாதசி தரிசனம்


ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடேசப்பெருமாள்.,
தஞ்சாவூர்..  
பெற்றார் தளைகழலப் போந்தோர் குறளுருவாய்
செற்றார் படிகடந்த செங்கண்மால் நற்றா
மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி
நிரைமலர் கொண்டு ஏத்துவரால் நின்று.. (2101)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்
அரசு 
***

மரங்களனைத்திலும் நான் அரச மரம்!.. -
என்பது கண்ணனின் திருவாக்கு..


ராஜ விருக்ஷம் ஆனதால்
அரசு என்பது சொல்லாட்சி..

பாரதத்தின் புனித மரங்களுள் தலையானது...


தமிழகத்தைப் பொறுத்தவரை
அரசமரம் எனில் அதனுடன் ஒட்டி உறவாடும்
வேம்பினையும் அருகில் நீர்நிலை ஒன்றினையும் காணலாம்...

அத்துடன்
அரசின் நிழலில்
ஊருக்குப் பொதுவாக
ஐங்கர மூர்த்தியும் வீற்றிருப்பார்...

அரசும் வேம்பும் அருகில் ஒரு குளமும்
ஆரோக்கியத்தின் இருப்பிடம் ஆகும்...


இச்சூழலில் மிக அதிகமான அளவில்
ஓஸோன் நிறைந்திருப்பதாக உணரப்பட்டுள்ளது...

திருமணமாகி பிள்ளைப் பேறடையாத
தம்பதியர் அரச மரத்து நிழலில்
காலை மாலை இருவேளையும்
உலவி வந்தால் - அவர்தம் பிரச்னைகள் தீரும்
என்பது ஆன்றோர் வாக்கு...

அரசம்பழத்தின் விதைகளை
நிழலில் உலர்த்தி இடித்து
பாலுடன் காய்ச்சி அருந்தினால்
ஆண்களின் உயிரணுக்கள் பலப்படும் என்பர்..

எனினும்
தக்க மருத்துவரின் மேற்பார்வை அவசியம்...


ஆலமரத்தைப் போலவே அரச மரமும்
பறவைகளுக்கான சரணாலயம்...

சின்னச் சின்ன பழங்கள் எல்லாம்
பறவைகளுக்கு விருப்பமான உணவு...

யாக சமித்துகளில் முதலிடம் பெறுவது
அரச மரத்தின் சுள்ளிகள்...

திருஆவடுதுறை மற்றும்
தஞ்சையை அடுத்துள்ள பரிதியப்பர் கோயில்
ஆகிய தலங்களின் தலவிருட்சம் - அரசு..

தமிழகத்தில்
அரச மரம் சார்ந்த பெயர்களுடன்
ஊர்கள் திகழ்வதுவும் சிறப்பு..


அரச மரம் தான் - போதி விருட்சம் எனப்படுவது...

ராஜகுமாரனாகிய சித்தார்த்தன்
கௌதம புத்தன் என ஞானம் பெற்றது
அரச மரத்தின் நிழலில் தான்... 
*** *** ***

சிவ தரிசனம்
திருக்கடவூர்


ஸ்ரீ சிவானந்தவல்லி உடனாகிய ஸ்ரீ காலசம்ஹாரர் 
இறைவன் - ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ அபிராமவல்லி 

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி  
தலவிருட்சம் - பிஞ்சிலம் (ஜாதிமல்லி)
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந்தாரணம் ஓதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங்கொண்டு தொடர்ந்தடர்ந்து ஓடிவந்த
காலனைக் காய்ந்தபிரான் கடவூர் உறைஉத்தமனே..(4/107)

மேற்குறித்த திருப்பாடலில்
திருக்கடவூர் தல புராணத்தினை
அப்பர் ஸ்வாமிகள் சொல்லியருள்கின்றார்..


தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனந்தரும் நல்ல எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே...(069)
-: அபிராமி பட்டர் :- 
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 04


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

9 கருத்துகள்:

 1. குட்மார்னிங். உங்கள் தமிழுக்கு கேசவ் ஜியின் ஓவியங்கள் இன்னும் சிறப்பு சேர்க்கின்றது.

  கார்முகில் வண்ணனே... கண்ணனே கலங்குகின்றேன்... வரிகள் நினைவுக்கு வருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருத்தம் :

   காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்...

   நீக்கு
 2. இப்போது நான் இருக்கும் வீட்டை ஒட்டி இருபுறம் அரசமரமும் வேம்பும் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 3. கேஷவின் ஓவியங்களின் அழகைச் சொல்வதா? உங்கள் விளக்கங்களைச் சொல்வதா? ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. அரசமரத்தைப் பற்றிச் சொல்லி இருப்பதும் அழகு. சொல்லும்போதே சலசலவெனக் காற்றில் சப்தம் இடும் அரசமரங்களின் ஒலி காதில் விழுகின்றது. எளிமையான விளக்கங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அரசமரத்தின் பலன்களை விளக்கியது நன்று இன்றைய தலைமுறையினருக்கு அவசியமானதே...

  பதிலளிநீக்கு
 5. அரசமரம், வேப்பமரம், சலசலத்து செல்லும் நீரோடையோ, அல்லது குளமோ, ஆறோ ஏதாவது இருந்து விட்டால் போதும் . அதில் களித்து இருக்கும் பறவைகள் ஒலி, அரசு, வேம்பின் காற்று எல்லாம் கலந்த கலவையான காற்றில் வரும் மணம் . எல்லாம் இருந்து விட்டால் சொர்க்கம் தான்.


  படங்கள் எல்லாம் அழகு.

  ஸ்ரீ காலசமாரமூர்த்தியின் அம்மன் ஸ்ரீ பாலாம்பாள் என்று சொல்வார் அர்ச்சனை செய்யும் போது. குருக்கள் கொடுத்து இருக்கும் படத்திலும் அப்படித்தான் இருக்கிறது.ஸ்ரீ சிவானந்த வல்லி என்ர பெயரும் உண்டா? இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

  பதிவு அருமை.


  பதிலளிநீக்கு
 6. துரை அண்ணா....ஓவியமும், பாடல்களும் அதன் விளக்கங்களும் அருமை வழக்கம் போல்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. உங்களின் பாசுர விளக்கம் ஆஹா அற்புதம் ....


  பதிலளிநீக்கு
 8. ஓவியம் அழகு. பாசுரம் மற்றும் விளக்கம் சிறப்பு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..