நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 31, 2018

மங்கல மார்கழி 16

ஓம்  
தமிழமுதம் 

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன்
தகுதியால் வென்று விடல்.. (158)
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 16 
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய 
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.. 
***

எமக்கெல்லாம் நாயகனாக நிற்கும்
நந்தகோபனின் திருமாளிகையையும்

திருக்கொடியும் தோரணமுமாகிய
திருவாயிலையும்
காத்து நிற்கும் பேறு பெற்றவர்களே...

உங்களுக்கு
ஆய்ப்பாடியின் சிறுமியர்களாகிய
எங்களது அன்பு வணக்கங்கள்..

விடிந்தும் விடியாத
இந்தப் பொழுதில் இத்திருமாளிகையின்
திருவாயிலில் திரண்டு வந்திருக்கும்
எங்களைக் கண்டு ஆச்சர்யம் கொள்கிறீர்கள்..

மாயன் மணிவண்ணன் மரகதக் கண்ணன்
இன்றைக்கு இங்கே வந்து சேருமாறு
நேற்றே எங்களுக்கு உறுதியளித்தான்..

அதன்பொருட்டு
அவனிடமிருந்து பறையெனும் பேறு பெறுதற்கும்
தூயவனைத் துயிலெழுப்புதற்குமாக
நாங்கள் தூயோமாக வந்து நிற்கின்றோம்...

சொன்ன சொல்லை மாற்றாதவன்
சுந்தரரூபன்...ஆகையினால்
எங்கள் மீது அன்பு கொண்டு
தாழ்களை நீக்கி மணிக் கதவுகளைத்
திறந்து விடுவீர்களாக!.. 
***
தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீ ஹரசாப விமோசனப்பெருமாள் - கண்டியூர்  

நாடிலும் நின்னடியே நாடுவேன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு... (2169)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம் 

பவளமல்லி தேவலோகத்திலிருந்து
பூமிக்கு வந்த மலர் இது...


ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு மட்டுமல்லாது
சிவ வழிபாட்டிற்கும் உரியது - பவளமல்லி...

இதனுடைய மற்றொரு பெயர் தான் பாரிஜாதம்..

சாஸ்த்ர விதிகளின்படி மண்ணில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களைக் கொண்டு வழிபாடு செய்தல் கூடாது..

ஆனால்,
பவளமல்லி மட்டுமே விதிவிலக்கு..

மரத்தின் கீழாக உதிர்ந்து கிடக்கும்
பவளமல்லிப் பூக்களைச் சேகரித்து பூஜை செய்யலாம்...

இந்த மரத்தின் வேர்களை நிழலில் உலர்த்தி
இடித்து பல் துலக்கலாம்...
ஈறு தொடர்பான பிரச்னைகள் தீரும்...

மேலும்,
மரத்தின் பட்டைகளைக் கொதிக்க வைத்த
நீரைக் குடிப்பதனால் சிறுநீரகம் சுத்தமடைகின்றது...
நீரிழிவு நோயும் மட்டுப்படுகின்றது..

எனினும், தக்க மருத்துவருடைய
மேற்பார்வை அவசியம்...
***

சிவ தரிசனம்
திருக்கண்டியூர் வீரட்டம்இறைவன் - ஸ்ரீ ப்ரம்ம சிரக்கண்டேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை 

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - நந்தி தீர்த்தம், குடமுருட்டி ஆறு

ஈசனைப் போல தமக்கும் ஐந்து முகம் என
ஆணவம் கொண்டு நின்ற 
பிரம்மனின் ஐந்தாவது சிரம்
துணிக்கப்பட்ட திருத்தலம்...

ஈசனது வீரட்டத் திருத்தலங்களுள்
முதலாவது தலம் இது..ஈசனுக்கு வலப்புறமாக
தனிச்சந்நிதியில்
தேவி சரஸ்வதியுடன் நான்முகன்
புன்னகை ததும்ப வீற்றிருக்கும் அழகே அழகு...

மேற்கு நோக்கிய திருத்தலம்...

மாசி மாதத்தின் 13, 14, 15 ஆகிய
மூன்று நாட்களின் மாலை 5:30 மணியளவில்
கருவறைக்குள் சிவலிங்கத்தின் மீது
சூரிய ஒளி படர்வது கண்கொள்ளாக்காட்சி...

சில வருடங்களுக்கு முன்
அந்தவேளையில் தரிசனம் செய்துள்ளேன்..

அவ்வப்போது
நெடுஞ்சாலைத்துறையினர்
சாலையை உயர்த்துவதாலும்
மேற்கு நோக்கிய சாலையில்
மக்கள் ஆங்காங்கே
தடைகளை ஏற்படுத்துவதாலும்
சூரிய ஒளி கருவறைக்குள் படர்வதற்கு
இடையூறாகின்றது..

தஞ்சை - திருஐயாறு வழித்தடத்திலுள்ளது...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயங்குகின்றது..
ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

திருந்து தொண்டர்கள் செப்புமின்மிகச்
செல்வன்றன்னது திறமெலாங்
கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழ
கண்டியூருறை வீரட்டன்
இருந்து நால்வரோடு ஆல்நிழல்லறம்
உரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.. (3/38)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டியூர் எம்பெருமானங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரானல்ல வோஅடியேனை ஆட்கொண்டவனே.. (4/93) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 11 - 12


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
***

12 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா..

  கேஷவின் படம் செமையா இருக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. பாடல்கள், விளக்கம் எல்லாமே அருமை அண்ணா..

  இன்றைய பூ பவளமல்லி எனக்குப் பல நினைவுகளை எழுப்புது. சிறிய வயதில் வள்ளியூரில் இருந்தப்ப கோயிலில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து நிறைய கோர்த்து கோயிலுக்குக் கொடுத்ததுண்டு..அது போல கல்யாணம் ஆன முதல் சில வருடங்கள் சென்னையில் புகுந்த வீட்டில் பவளமல்லி உண்டு...அப்ப கோர்த்து வீட்டில் மாமனாருக்குக் கொடுப்பதுண்டு...பூசைக்கு...

  நல்ல அழகான பூ. ஆனால் தொட்டாலே சுருங்கிவிடும் மென்மையான பூ. ரொம்பக் கவனமாகக் கையாள வேண்டும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. பாரிஜாதம் என்ற பூவே உண்டே அண்ணா..

  இதை பாரிஜாதம் என்றும் சொல்லுகிறோம் தான். கீதா மதிவாணன் அவங்க கூட இப்ப சமீபத்திய மலர்கள் போஸ்ட்ல இந்தப் பூ பத்தி எழுதியிருந்தாங்க. பாரிஜாதப் பூ படமும் போட்டிருந்தாங்க. பாரிஜாதமும் நான் பார்த்திருக்கேன் பார்க்க அடுக்கு நந்தியாவட்டை போலவே இருக்கும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், பாரிஜாதம் வேறு, பவளமல்லி வேறு என்றுதான் நானும் நினைக்கிறேன். சிலர் பவளமல்லியையும் பாரிஜாதம் என்று குறிப்பிடுகிறார்கள்.

   நீக்கு
 4. வெங்கட்ஜி அப்புறம் கீதாக்கா கூட இதைப் பத்தி சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன்...அதாவது பாரிஜாதம் (பவளமல்லி அல்ல) பற்றி ...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. குறள் சிறப்பு. சில அலுவலகங்களில் மேல்நிலையில் இருப்போரைத் தெரிந்து வைத்திருப்பதைவிட, கிழ்நிலைப் பணியாளர்களைத் தெரிந்து வைத்திருத்தல் பயன் தரும். அந்த வகையில் என் தங்கைக்கு நான் மதுரையில் ஒரு பள்ளியில் சீட் வாங்கி கொடுத்தேன்!

  குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
 6. தஞ்சையில் மருத்துவக்கல்லூரிக் குடியிருப்பில் பவளமல்லி சேகரித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. மனத்திலிருந்து நுகர்கிறேன் அம்மலரின் மணத்தை.

  பதிலளிநீக்கு
 7. இன்றைய பாரிஜாதம் அருமை ஜி
  வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
 8. படங்களும் , பாடலும் மிக அருமை.
  பவளமல்லியை பார்த்ததும் என் அத்தையாரின் நினைவு தான் வரும்.
  கோவை போன போது வாசலில் கொட்டி கிடக்கும் பவளமல்லி பூக்கள் அத்தை இல்லை என்னை கோர்த்து மாலையாக்கி இறைவனுக்கு போட என்று சொன்னது.

  பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 9. பாரிஜாதம் வேறே, பவளமல்லி வேறே. எங்க அம்பத்தூர் வீட்டிலே இரண்டும் இருந்தது. அழகான கேஷவின் ஓவியத்தோடு கூடிய பாசுரத்துக்கு அருமையான விளக்கம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..