நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 09, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 15

கானகத்தில் காரணன்

காலத்தை உருவாக்கும் காரணன் - பரிபூரணன் -
தான் உருவாக்கிய - காலத்தின் கைகளுக்குள் -
தன்னையும் ஒப்படைத்தபடி  - கானகத்தினுள் நுழைந்த போது -

விண்ணும் மண்ணும் கை கூப்பி வணங்கி நின்றன.


ஐயனே.. ஒரு புலியின் பொருட்டுத்
தாங்கள் வனத்திற்குள் வர வேண்டுமா!..
பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும்  தாங்கள் -
திருவிழியால் நோக்கினாலும் போதுமே!..
தங்களின் திருவடியைத் தேடிவந்து  காத்துக்கிடக்குமே!..

- என்று பணிவுடன் கூறியவாறு
வனதேவதைகள்எதிர் வந்து வணங்கினர்...

வனதேவதைகளை வாழ்த்திய மணிகண்டன், - 

தர்மம் தழைப்பதற்குத் தான் -
தவம் மேற்கொள்ளும் வேளையில் -
தர்மத்தைக் காக்க வேண்டியதன் அவசியத்தை விவரித்து -
தர்மத்தை நாம் காப்பாற்றினால் - தர்மம் நம்மைக் காக்கும்!..
- என்ற வேத வாக்கினை எடுத்துரைத்தான்...

இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும்
ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருப்பதையும்,
அதைச் செவ்வனே செய்து தர்மத்தைக் காக்க வேண்டிய
கடமை இருப்பதையும் நினைவூட்டிய மணிகண்டன் -

தனக்கு விதிக்கப்பட்டிருப்பதை மனப்பூர்வமாக
செய்து முடித்திட துணை இருக்குமாறு
வனதேவதைகளை  கேட்டுக் கொண்டான்...

மணிகண்டனின்  வார்த்தைகளைக் கேட்டு
வனதேவதைகள் மனம் மகிழ்ந்தன...

பூமி ப்ரபஞ்சனே!.. போற்றி!..
பூலோக நாதனே!.. போற்றி!..

வனதேவதைகளை அவரவர் நிலைகளில் நிறுத்திய மணிகண்டன்
பூங்காவனம் எனப்பட்ட அந்தப் பகுதிக்கு
வாவரன் - எனும் சிவகணனை மெய்க்காவலாக நியமித்தான்..

பின்னாளில் தான் கடந்து வந்த பாதை -
பெருவழிப்பாதை என புகழப்படும் என்றும்
அதில் கடும் விரதத்தினை அனுசரித்து
லட்ச லட்சமாக பக்தர்கள் வருவர்.. - என்றும் அருளினான்... 

அப்போது -

கடும் விரதத்துடனும் ஆசாரஅனுஷ்டானங்களுடனும்
ஒருமித்த சிந்தையராக பெருமானைத் தரிசிப்பதற்கு
வரும் பக்தர்களுக்கு உற்ற துணையாக இருப்போம்!..
அவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் காப்போம்!..

- என்று வனதேவதைகள் வாக்களித்தன...

வனதேவதைகளை மீண்டும் வாழ்த்திய மணிகண்டன் -
தன் பயணத்தைத் தொடர்ந்தான்...

வனத்தினுள் ஆங்காங்கே தவமிருந்த
முனிவர்களும் யோகியரும் கந்தர்வரும்
பெருமானைக் கண்டதும் ஆவலுடன் திரண்டு வந்து
பணிந்து வணங்கி நின்றனர்...

ஜய விஜயீ பவ!.. 
- என, வாழ்த்தி தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்... 

அவர்களுடைய அன்பின் வாழ்த்தொலிகளில்
மனம் குளிர்ந்து நின்றான் மணிகண்டன்...


ஐயனே!.. நினது  திவ்யதரிசனம் பெறுவதற்கு
நாங்கள் என்ன தவம் செய்தோமோ!..
எங்களுக்கும் நல்லருள் பொழிய வேண்டுமென்று -
இங்ஙனம் ஒரு நாடகம் நடத்துகின்றாய் போலும்!..
நீ நடத்தும் நாடகத்தின் உட்பொருளை நாங்கள் அறியவும் கூடுமோ!?..

கொடுமைகள் நிறைந்ததாக விளங்கும்
இக் கலியுகத்தில் சாது ஜனங்களைக் கரையேற்ற வந்த
சத்யஸ்வரூபனே!..  எம்மை ஆட்கொண்டு அருள்வாயாக!..

ஹரிஹரசுதனே போற்றி!..
அனாத ரட்க்ஷகனே போற்றி!.. 

- என்று கூப்பிய கரங்களுடன் முனிவர்களும் யோகியரும் நின்றிருந்தனர்...

ஞானிகளும் உத்தமர்களும் ஆன தவசிரேஷ்டர்களே!..
தங்களது தவ வலிமையால் அன்றோ -
நாடும் மன்னனும் மக்களும் சிறப்படைகின்றனர்...
தங்களை எல்லாம் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி எய்துகின்றேன்!..

- என, மொழிந்து பெரியோர்களாகிய
அவர்களை அன்புடன் வணங்கினான் மணிகண்டன்...

ஆஹா!.. அற்புதம்!.. அற்புதம்!..
வழிவழியாய் வரும் வாத்ஸல்யம் அல்லவா
நின் திருவாய் மொழியில் ததும்புவது!..
மேல் என்றும் கீழ் என்றும் புரளும் பேதங்களை நீக்கி
மேன்மை அடையும் வழியைக் காட்டுதற்கு வந்திருக்கும்
ஸ்ரீதர்மசாஸ்தா எங்களிடம் காட்டும்
அன்பினால் பெருமை கொள்கின்றோம்!.. 

ஹரிஹரசுதனே!..
திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்து
எடுக்க முயன்ற  இராவணனுக்கு
நாளும் வாளும் தந்தருளிய 
ஈசனின் அன்பு மகனல்லவா நீ!..

அனாதரட்க்ஷகனே!.. திருமகள் அகலாது உறையும்
திருமார்பில் உதைத்த - பிருகு முனிவரின் கால் நோகுமே.. 
என, வருந்தி - அவருக்கு உபசாரம் செய்த
செல்வத் திருமாலின் செல்வனல்லவா நீ!..

உன்னிடத்தில் அன்பும் பண்பும்
பெருகி வழிவதற்கு - கேட்கவா வேண்டும்!...

ஆதியில் அவதார நோக்கம் கொண்டு
இளைய பெருமாளுடன் கானகம் புகுந்து
சபரியின் குடிலில் உலர்கனி உண்டருளிய
ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியை உன்னில் காண்கின்றோம்!..

வைகையின் கரை அடைக்க என்று வந்து -
வந்தியின் கரத்தினின்று உதிர்ந்த பிட்டு தனை உண்டு -
மாணிக்கம் விற்ற மதுரையில் மண் கொண்டு நடந்து
பிரம்படியும் கொண்ட சோமசுந்தரப் பெருமானை
உன்னில் காண்கின்றோம்!..

இருப்பினும் எங்களுக்கோர் ஆவல் உண்டு!..
அன்பின் செல்வமே!.. அருள் வடிவே!..
அதனைத் தயவு கூர்ந்து நிறைவேற்றித் தரவேண்டும்!..

முனிவர்களின் வார்த்தைகளைக் கேட்டதும் -
மணிகண்டனின் திருவிழிகள் வியப்பால் விரிந்தன...

அன்று நீ நடத்தியருளிய மகிஷி வதத்தினை -
இன்று நாங்கள் தரிசிக்கும் படியான
பாக்கியத்தினைத் தந்தருளவேண்டும்!..
- பணிவுடன் விண்ணப்பம் செய்து கொண்டனர்...

அதன்படியே - அவர்களுக்கு மகிஷி வதம் உணர்த்தப்பட்டது...


அப்போது அருவமாக வெளிப்பட்ட  லீலா -

ஸ்வாமி!.. என்னை அனுக்ரஹித்து அருள வேண்டும்!.. - என்றாள்...

கலியுக வரதனாக - பக்த ஜன பரிபாலகனாக -
தர்மத்தைக் காக்க வேண்டி பிரம்மச்சர்யம் பூண்டு
யாம் சபரி பீடத்தில் அமருங்காலத்தில் -
எனது இட பாகத்தில் மஞ்சமாதா என, விளங்கி -
எனைத் தேடி வரும் பக்தர்களின் மனோபீஷ்டங்களை
மங்கலகரமாக நிறைவேற்றித் தருவாயாக!.. 

ஐயன் மணிகண்டனின் அருள் வாக்கினைக் கேட்டதும்
லீலா - சுகந்த மணம் கொண்டு காற்றினில் கரைந்தாள்...

மகிஷி சம்ஹாரனே போற்றி!..
மதகஜ வாகனனே போற்றி!..

- என்று, துஷ்ட நிக்ரஹம் செய்தருளிய
தூயவனைத் தொழுது வணங்கினர் முனிவர்கள்...

அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட
மணிகண்டன் - மேலும் தொடர்ந்து நடந்தான்...


ஆங்காங்கே வன விலங்குகள் சர்வ சுதந்திரத்துடன்...
அன்பு மீதூற விளையாடிக் கொண்டும் -


ஆக்ரோஷத்துடன்  ஒன்றோடொன்று அடித்துப் புரண்டு கொண்டும் -
என்ன நடந்தாலும் சரி - தூக்கமே பெரிது என உறங்கிக் கொண்டும் -

உள் உணர்வினால் உணர்ந்து கொண்ட விலங்குகள்  ஓடிவந்து -
இயற்கையை ரசித்தவாறு நடந்து கொண்டிருந்த மணிகண்டனை
உரசியவாறு தங்கள் அன்பினை வெளிப்படுத்தி அவனுடன் நடந்தன...

அப்படி நடந்த விலங்குகள் தங்களின் வினைப்பயனையும் கடந்தன...

வழியில்  - 
சலசலக்கும் சிற்றோடையுடன் சற்றே
சமவெளியாக இருந்த இடத்தில் - அன்னை பகவதி காட்சியளித்தாள்...

மணிகண்டன் -  பகவதியை வழிபட்டு,
பந்தளத்தில் தன் அன்னைக்கு நலம் விளைய வேண்டிக் கொண்டான்...  அன்பு மகனை வாழ்த்திய அன்னை அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கூறினாள்...

புலியைத் தேடி வந்த புண்ணியன் -
மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியபோது -
எதிரே பிரம்மாண்டமாக விளங்கிய மலையைக் கண்டான்...
அதன் உச்சியில் மீண்டும் ஒளி வடிவாக அன்னை பகவதி தோன்றினாள்...


அன்னை பகவதியின் நல்லாசியினால் -
கடினமான மலை  ஏற்றம் இலகுவானது...

தோளில் கோதண்டமும் கரத்தினில் சிவதண்டமும்
ஏந்தியபடி நடந்த மணிகண்டனைச் சுற்றிலும் யானைக் கன்றுகள் தோழமையுடன் பிளிறி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின...

சற்றே - இறக்கத்தில், கங்கைக்கு நிகரான பம்பா நதி...
அதனுடன் கல்லாறு , காட்டாறு  ஆகியன கலக்கும் - திரிவேணி சங்கமம்...


கூட்டங்கூட்டமாக யானைகள் -
குழந்தை குட்டிகளுடன் நீரில் அளைந்து கொண்டிருந்தன...

பாப விநாசினி ஆகிய பம்பா நதியைக் கண்டதும்
கைகூப்பி வணங்கிய ஐயன் - மந்த்ரங்களை உச்சரித்தவாறு
பம்பா நதியில் நீராடி - சூரியனை நமஸ்கரித்து தீர்த்தம் கொடுத்தான்...

தனது தேரிலிருந்து இறங்கிய சூரியன்  -
சிவகுமரனைப் பணிந்து வணங்கி, தீர்த்தத்தினைப் பெற்றுக் கொண்டான்...

ஐயனே.. யான் செய்ய வேண்டுவது யாது?..

சூர்ய தேவனே!..
பின் வரும் நாட்களில் கடும் விரதம் ஏற்று
லட்சம் லட்சமாக  பக்தர்கள் இங்கு வர இருக்கின்றனர்...
புண்ய நதியாகிய பம்பையில் நீராடும் 
அடியவர்களுடைய தோஷங்களை -
குறிப்பாக பித்ரு தோஷத்தை நீக்கி அருள்வாயாக!..

உத்தரவு ஐயனே!..

பம்பையில் நீராடி முடித்த மணிகண்டன்
நித்ய பூஜைக்கென அமர்ந்தான்.

ஓம்!.. 
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்

ஓம் ஹரிஹர சுதனே
சரணம்!.. சரணம்!..
மணிகண்ட மகாப்ரவே சரணம்.. சரணம்..
ஃஃஃ 

7 கருத்துகள்:

 1. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஉ:) சாமத்திலேயே ஐயப்ப தரிசனம் கிடைக்கப் பெற்றேன் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. மணிகண்டனால் அடுத்து நடக்கப் போகும் நிகழ்வுக்குக் காத்திருக்கேன். வாவர் பற்றிய உண்மையையும் அறிந்தேன். மஹிஷி வதத்தை இங்கே மீண்டும் ரிஷிகளுக்கு உணர்த்தியதன் காரணம் என்ன?

  பதிலளிநீக்கு
 3. மணிகண்டன் கானக வரலாறு அருமை.
  முனிவர்களுக்கு மீண்டும் மஹிஷி வதத்தை சொல்லி அருபமாக வந்த லீலாவுக்கு
  (மஹிஷிக்கு) தன் இடபக்கம் கொடுத்து வரும் பக்தர்களுக்கு மங்கலங்களை அருள அருள்பாலிப்பது அருமை.
  மணிகண்டன் இருமுடி சுமந்து கானகம் நடந்து, பம்பையில் நீராடியது போலவே பக்தர்களும் பயணம் செய்வது தங்கள் தோஷங்க்களை நிவர்த்தி செய்து கொள்வது அருமை.
  சரணம் சரணம் ஐயப்பா!

  பதிலளிநீக்கு
 4. அருமை ஜி ஆவலுடன் தொடர்ந்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 5. மகிஷி வதம் மீண்டும்தான் இந்த சந்தர்ப்பத்தில் உணர்த்தப்பட்டது என்பதை இப்போதுதான் அறிகிறேன். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. மகிஷி வதம் முடிந்தது, வாவரன் பற்றியதும் அறிந்தோம். அடுத்து என்ன என்று அறிய தொடர்கிறோம்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..