நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 28, 2018

மங்கல மார்கழி 13

ஓம்  

தமிழமுதம் 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தழைத்து.. (125) 
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 13 




புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் 
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் 
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்நாளால் 
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்..
***

கீழ்வானில் விடிவெள்ளி உதித்ததென்று
வியாழம் உறங்கிப் போயிற்று...


நன்நாள் இதனில் முன்னெழுந்து வாராமல்
நீ இன்னும் உறக்கம் கலையாதிருப்பதென்ன!...

தாமரைக் குளத்தின் குளிர் நீரில்
குடைந்து ஆடிக் களிக்க வேண்டாமா!...

துயில் கலைந்து துள்ளிக் குதித்தெழுந்த
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களத்தினை
நோக்கிச் சென்றனரே..
ஏன் என்று தெரியுமா!...

அலகைப் பிளந்து மாயப் பறவையை அழித்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்து தொலைத்தவனும்
ஆகிய புண்ணியனைப் போற்றி வணங்கத்தான்!...

புள்ளினங்கள் எல்லாம் விழித்துக் கொண்டனவே...
நீ மட்டும் பள்ளிக் கிடந்துழல்வது ஏன்?..

பூம்பாவாய்... கனிவுடன் எம் வார்த்தைக் கேளாய்...
கள்ளம் தவிர்த்து எழுந்து நீ வாராய்!..
***

தித்திக்கும் திருப்பாசுரம்



அன்பாழி யானை அணுகென்னும் நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி ஏத்தென்னும் முன்பூழி
காணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ்.. (2153) 
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம் 

தும்பை


விநாயகப் பெருமானுக்கு உரிய பூக்களுள்
தும்பையும் ஒன்று...

நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் தாமாகவே வளரக்கூடியது...
நிறைந்த மருத்துவ குணங்களை உடையது...

வெண்மைக்கு எடுத்துக்காட்டு தும்பைப் பூ...

தும்பை மலர் வேட்டி கட்டி.. - என்றொரு சொல்லாடல்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படப் பாடல் ஒன்றில் வரும்..

தும்பையின் இலை பூக்களை சாதாரண உப்புடன் சேர்த்து அரைத்து
உடலில் பூசிக் குளித்தால் அரிப்பு நமைச்சல் தேமல்
இவை தொலைந்து போகும் என்பார்கள்...

எனினும்
சித்த வைத்தியர்களின் அறிவுரை மிக முக்கியம்...
*

சிவ தரிசனம்

திரு நல்லூர்


இறைவன்
ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ கல்யாணசுந்தரி, திரிபுரசுந்தரி 

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சப்த சாகர தீர்த்தம்..

ஒவ்வொரு நாளும் ஐந்து முறை
நிறம் மாறும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி...

அகத்திய மகரிஷிக்கு
கல்யாணத் திருக்கோலம் காட்டியருளிய 
திருத்தலம்...

கோச்செங்கட்சோழர் எழுப்பிய
மாடக்கோயில்களுள்
நல்லூர் திருக்கோயிலும் ஒன்று..

இத்தலத்தில்
திருநாவுக்கரசருக்கு
திருவடி தீட்சை நல்கியருளினான்
எம்பெருமான்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்
கும்பகோணத்திலிருந்தும் 
நல்லூருக்கு பேருந்துகள்
இயக்கப்படுகின்றன...


ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைகேற்றி ஆளென்று அடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.. (1/86) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே.. (6/14) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 05 - 06



மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்... 5

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்... 6

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
***

8 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    சிறுவயதில் படித்த குறள்கள் ஒவ்வொன்றாக நினைவு படுத்துகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த திருநல்லூர் தலம் சென்றிருக்கிறேன். அப்போதும் கல்யாணமாகாதேவி போகும் வழியில்தான் இங்கு(ம்) சென்றோம்.

    பதிலளிநீக்கு
  3. திருவெம்பாவை வரை அனைத்தும் படித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வழக்கம்போல் இன்றைய பகிர்வும் நன்று வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  5. அருமை... தும்பைப் பூப்போல மனம் இருக்க வேண்டும் என்பார்கள்...

    பதிலளிநீக்கு
  6. குறளமுதம், திருப்பாவை, திருவெம்பாவை அனைத்தும் அருமை. படங்கள்...தும்பைப்பூ சிறப்பு எல்லாமே.

    தும்பைப்பூ கோர்த்து பிள்ளையாருக்குப் போட்டதுண்டு சிறு வயதில்.

    வழக்கம் போல் அருமை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தும்பைப் பூ அம்பத்தூர் வீட்டில் இருந்தது. சங்குப்பூவும் உண்டு. தினம் பறித்து ஸ்வாமிக்குச் சார்த்துவோம். கேஷவின் படங்கள் எல்லாமே அருமையாக இருக்கின்றன. வரம் பெற்ற கரம். திருநல்லூர் சென்றதில்லை. பாசுரங்களும், பதிகங்களும் விளக்கங்களும் எப்போதும் போல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. தும்பை பூ நெய்வேலி நகரில் பார்த்தது. பிறகு பார்க்கக் கிடைத்தது இல்லை.

    தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..