நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 15, 2018

மார்கழியே வருக..

சைவமும் வைணவமும்
புண்ணிய பாரதத்தின் இருகண்கள்...


அவை வழங்கிய வாழ்வியல் நெறிகள் தான் எத்தனை எத்தனை!...

நீர்நிலைகளுக்கு அருகிலிருந்தே
நாகரிகம் தோன்றியது என்கின்றனர் - ஆய்வாளர்கள்..

அவர்களுக்கெல்லாம் முன்பே
ஐயன் வள்ளுவப்பெருந்தகை எடுத்துரைத்து விட்டார்!...

நீரின்றி அமையாது உலகு!.. - என்று...

உடலும் மனமும் ஒருசேரக் குளிர்வது நீரால் தான்!..

இரவுப் போதில் பல்வேறு எண்ணங்களால் 
கொதித்துக் கிடக்கும் உடலும் மனமும்
விடியலில் நீராடிக் குளிரட்டும்...
குன்றாத சுடராக ஒளிரட்டும் - என்று வகுத்தனர் ஆன்றோர்...

விடியற்காலைக் குளியல் ஆரோக்கியத்தின் முதற்படி...

அதிலும் மார்கழி மாதத்தின் விடியல்!...  


மாதங்களில் நான் மார்கழி!..
- என்றுரைக்கின்றான் - ஸ்ரீகிருஷ்ணன்..

அந்த அளவுக்கு மங்கலகரமானவை மார்கழியின் நாட்கள்..

மார்கழியின் முதல் விடியலிலிருந்து
தேவர்களுக்கு வைகறைப் பொழுது..

ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!..
தனுர் மாத வழிபாடுகள்!..  

தெருக்கள் தோறும் இல்லங்களின்
தலைவாசலில் எழில் மிகும் கோலங்கள்!.. 

வண்ண வண்ணப் பூக்கள்!.. சுடர் விடும் அகல் விளக்குகள்!..



மங்கலம் சிறக்க வேண்டும்!.. மனையறம் செழிக்க வேண்டும்!..
மதிநலம் விளைய வேண்டும்!... மண் பயனுற வேண்டும்!.. 

இவை யாவும் எங்கிருந்து தோன்றும் ?.. 

ஒளி படைத்த நல்ல மனங்களின் உள்ளிருந்து!.. 

அப்படி ஒரு ஒளி - அதுவும் பேரொளி - 
ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் - 
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய் வனத்தில் உதித்த 
கோதை நாச்சியார் தம் திருஉள்ளத்தில் தோன்றியது!..  

அதன் பெயர் தான் -  திருப்பாவை!..


வைணவத்திற்கு திருப்பாவை எனில்
சைவத்திற்கு திருவெம்பாவை!...

மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பனுவல் - திருவெம்பாவை ...

தம்மை இளங்கன்னியாகப் பாவித்துக் கொண்டு
தோழியரை அழைக்கின்றார் - புண்ணிய நீராடி
அண்ணாமலையானின் அடிக்கமலங்களைப் புகழ்வதற்கு!..

மங்கலகரமான மார்கழி முழுதும் நம்மை வழிப்படுத்துகின்றன -
திருப்பாவையும் திருவெம்பாவையும்!..

திருப்பாவையும் திருவெம்பாவையும்
பாடிக்களித்த பைந்தமிழ்ப் பனுவல்கள் என்பதை விட
நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறிகள்
என்றுரைப்பதே சாலச் சிறந்தது!....


திருப்பாவையும் திருவெம்பாவையும்
பல்வேறு நுட்பங்களைப் பேசுகின்றன...

பழந்தமிழர் வாழ்ந்த வாழ்க்கையைப்
படமாக - பாடமாகக் காட்டுகின்றன!...

தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த வரப்ரசாதங்கள் அவை...

செந்தமிழ்க் கன்னியின் அழகிற்கு அழகு செய்யும்
வைர வைடூரிய மாணிக்கப் பதக்கங்கள் அவை!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளும்
மாணிக்க வாசகப் பெருமானும் அழைக்கின்றனர் - 
மார்கழி நீராடலுக்கு!....

நீராடலினால் புறந்தூய்மை ஆகின்றது...
அகந்தூய்மை ஆவதற்கு அதுவே முதற்படி!

அந்த வகைக்கு
செந்தமிழ்த் தேன்மொழியாள் அழைக்கின்றாள்...
வாருங்கள் - அவளது துணையுடனே செல்வோம்..
மார்கழி நீராடல் எனும் மங்கல நீராடலுக்கு!..


மீண்டும் மார்கழியில்
திருப்பாவை திருவெம்பாவை, தேவாரம் - திருவாசகம்
ஆகிய தெய்வப் பனுவல்களின் திருப்பாடல் பதிவுகளை
வழங்குதற்குப் பேறு பெற்றேன்...

நாளை முதல் நமது தளத்தில்
ஏழாவது ஆண்டாக 
மார்கழிப் பதிவுகள் தொடர்கின்றன...

இவ்வேளையில்
தமிழ்கூறும் நன்னெஞ்சங்களின்
அன்பினை வேண்டி நிற்கின்றேன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!.. 
*** 

8 கருத்துகள்:

  1. மார்கழி குறித்த நல் விடயங்கள்.
    மார்கழி போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்புடன் தொடர வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. ஏழாம் ஆண்டுக்கு வாழ்த்துகள். உங்கள் திருப்பாவை விளக்கங்களுக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  4. ஏழாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.
    மார்கழி பதிவை தொடர்கிரேன்.
    ஆரம்ப பதிவு அருமை.
    படங்கள் அழகு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மார்கழியைப் போற்றுவோம்.

    ஏழாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. இப்போதுதான் இணையத்துக்கு வர முடிந்தது.

    இரு நாட்களுக்கு முன்பு, திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தரிசனத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு அம்பாள் சன்னிதியில் இருந்த அர்ச்சகர்,

    'சிவ' என்று சொல்லும்போது மூச்சுக்காற்றை வெளியில் விட்டு உள்ளிழுக்கிறோம் (சி-வெளியே, வ-உள்ளே). ஹரி என்று சொல்லும்போது மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிறோம். சிவன் கோவிலில் சிவனுக்கு வில்வம், அம்பாளுக்கு துளசி, விஷ்ணு கோவிலில் விஷ்ணுவுக்கு துளசி, தாயாருக்கு வில்வம், சிவன் கோவிலில் நந்தி, சிவன், அம்பாள் என்ற வரிசையிலும், விஷ்ணு கோவிலில் தாயார், பிறகு விஷ்ணு என்ற முறையிலும் வணங்குவார்கள் என்று விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் (நான் அங்கு முதலில் அம்பாள் சன்னிதி சேவித்துவிட்டு மஹாலிங்கர் சன்னிதிக்கு எப்படிப் போகணும் என்று கேட்டபோது அவரைச் சேவித்துவிட்டு இங்கு திரும்பவும் வாங்க என்று சொல்லி இதனை விளக்கினார்-திரும்பிவந்தபோது)

    அதைத்தான் உங்கள் இடுகை ஞாபகப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  7. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டதா! வாழ்த்துகள் ஐயா.

    வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  8. தொடர்ந்து பல தகவல்கள் இங்கு அறிய காத்திருக்கிறேன் ...

    தங்கள் திருப்பணி தொடர எனது வாழ்த்துக்களும்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..