நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 11, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 17

தெய்வ மகன்

வள்ளல் மணிகண்டனைச் சுமந்தபடி  வனபூமியைக் கடந்தது - வன்புலி...

பொழுது புலர்கின்ற நேரம்... மெல்ல விழித்துக் கொண்டிருந்தது பந்தளம்...

புள்ளினங்கள் எல்லாம் - இன்னும் சற்று நேரத்தில் நிகழ இருக்கும்
அற்புதத்தினைக் காண்பதற்கு ஆவலுடன்  ஆரவாரித்துக் கொண்டிருந்த வேளையில் -

விடிந்தது பொழுது என வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் -
கானகப் புலியின் மீது கம்பீரமாக அமர்ந்தபடி பாலகன் ஒருவன்
வருவதைக் கண்டு அதிர்ச்சியில் அலறியவாறு - விக்கித்து விழுந்தனர்...


அலறல் சப்தம் கேட்டு  -
என்ன!?.. -  என்று அறிவதற்குத்
திரண்டு ஓடி வந்தவர்கள் திகைத்து நின்றனர்...

அஞ்சி நடுங்கினர் மக்கள்...
தாம் காண்பது மெய்யா.. பொய்யா.. என,
மதி மயங்கினர்... அவர்களால் நம்பவே முடியவில்லை...

வன்புலி வாகனனையும் அவனுடன் சேர்ந்து வந்த
புலிக் கூட்டத்தையும்  கண்ட பந்தளத்தின் மக்கள்  பதறித் துடித்தபடி  - பாய்ந்தோடிச் சென்று மூலை முடுக்குகளில் பதுங்கிக் கொண்டனர்...

இப்படியும் நடக்குமோ!.. - என அச்சத்தில் உறைந்து போயினர்...

அச்சம் தீர்க்க வந்த ஐயன் என்பதனை அவர்கள் உணர்ந்தார்களில்லை...


ஓரிருவர் சற்றே மனம் தெளிந்து - புலி மேல் வருபவர் -
நம்முடைய ராஜகுமாரன்....  மணிகண்டன்!..
- என அடையாளங்கண்டு கொண்டனர்...

வெம்புலி மேல் பவனி வரும் அம்புலியைக் கண்டு -
அதிசயித்த மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் பிறந்தது...

புலிவாகனனைச் சூழ்ந்தபடி
வானில் பலவிதமான பறவைகளுடன் -
பட்சி ராஜனும் வட்டமிட்டதைக் கண்ட மக்கள்  - 

இத்தனைப் புலிகள் கூட்டமாகப் போயும்
ஒரு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லையே...
இங்கே ஏதோ ஒரு தெய்வ காரியம் நடக்க இருக்கின்றது.. -
என்பதைப் புரிந்து கொண்டு  புலிக்கூட்டம் போன வழியை
நோக்கி கைகூப்பிக் கும்பிட்டனர்...

தெளிந்தோர் - மனதில்
ஆனந்தம் அலை அலையாய்ப் புரள - உன்மத்தராகினர்...

புலிக்கூட்டம் போன - வழிப் புழுதியில் விழுந்து புரண்டனர்...

அங்கே -  அரண்மனைக்குள்,
மகனின் நிலையினை அறிய இயலாத
மன்னர் சிவபூஜையில் அமர்ந்திருக்க,

அசடனான  - மந்திரி - அகமகிழ்ந்திருந்தான்..

மகாராணியார்.. மனம் களைக்கவேண்டாம்...
பந்தளத்தின் மணிமுடி தங்களின் மகனுக்குத்தான்!..

இந்த வார்த்தைகள்
அரசியின் காதுகளில் தித்தித்தன... மனம்  குதுகலித்தது...

அந்த நேரத்தில் - வெளியே எழுந்த  பெருத்த ஆரவாரம் -
அவர்களுடைய ஆனந்தத்தை அற்பமாக ஆக்கி
ஆசைக் கனவுகளைக் கலைத்துப் போட்டது...

ராஜ குமாரன்!..  ராஜ குமாரன்!..  புலிக்கூட்டத்தோடு வருகிறார்!..

திடுக்கிட்ட அனைவரும் 
கொட்டாரத்தின் வாசல் தேடி ஓடினர்...

புல்லர்தம் செருக்கு அழியும் வண்ணமாக -
புன்னகை பூத்திலங்கும் திருமுகத்துடன் 
உதித்தெழுந்த இளஞ்சூரியனைப் போல்
தேஜோமயமாக வந்து கொண்டிருந்தான் - மணிகண்டன்...

கூடவே - பெரிதும் சிறிதுமாக புலிகளும் குட்டிகளும் -
ஒன்றோடொன்று உரசிக் கொண்டு...

அந்தப் புலிகளின் உறுமல் சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே -
பொய்யுரைத்த ராஜ வைத்தியன் - தன் கையிலிருந்த
மூலிகைப் பெட்டித் தூக்கி எறிந்து விட்டு, தப்பியோடும் வழியறியாமல் அரண்மனைச் சுவரில் முட்டிக் கொண்டு மயங்கிக் கீழே விழுந்தான்.

கொழு கொழு என்றிருந்த புலி தன்னை உற்று நோக்கியபடி
வருவதைக் கண்டு வெலவெலத்த மந்திரி -
அப்போதே தன் குருதியெல்லாம் வற்றிப் போனதை உணர்ந்தான்.


மகனே... மணிகண்டா!...

மணிகண்டன் - புலி மீது ஆரோகணித்து வருவதைக்
கண்ட மாத்திரத்தில்,  பெருங்குரலெடுத்துக் கதறினாள் - அரசி..

அந்த அளவில் -
அரசியைப் பிணைத்திருந்த மாயச்சங்கிலிகள் இற்று விழுந்தன...

மன்னரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்...

என் செல்வமே... செயற்கரிய செய்தவனே!..
- என, இரு கரங்களையும் விரித்தபடி- நெருங்கினார்...

தந்தையே!.. - என்றபடி - புலியின் மீதிருந்து இறங்கினான் மணிகண்டன்.

மணிகண்டா.. என் மகனே!..
-  அழுத விழிகளுடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் - தாய்..

அம்மா!.. தங்களுக்காக புலியைக் கொண்டு வந்துள்ளேன்!.. அமைச்சரே.. வேண்டுமளவுக்கு பாலைக் கறந்து ராஜவைத்தியரிடம் கொடுங்கள்!.. புலியைக் கண்டு அஞ்ச வேண்டாம்... நான் அருகில் இருக்கின்றேன்!..

தாய்மை பெருக்கெடுக்க -
தன் குற்றத்தை உணர்ந்தவளாக கதறினாள் அரசி...

என்னை மன்னித்து விடு.. ஐயா!.. என்னை மன்னித்து விடு!..
என் அன்புச் செல்வமே!.. சுயநலத்தினால் கெட்டதடா என் புத்தி !...

வாராது வந்த மாமணியே!.. மணிகண்டா!.. - என,
வாரித் தழுவி வாஞ்சையுடன் சீராட்டிப் பாராட்டி வளர்த்த உன்னை - வகையற்றோர் சொல் கேட்டு வனம் அனுப்பி வைத்த வஞ்சகி ஆனேனே!..

அரசியின் கதறலைக் கேட்ட மன்னர் அதிர்ந்தார்...


என்ன!.. எல்லாம் வஞ்சனையா.. நாடகமா?..
நம் கண்மணிக்கு எதிராக இப்படியொரு சதித்திட்டமா!..
அவன் யாருக்கு என்ன கெடுதல் செய்தான் என்று
இத்தகைய சூழ்ச்சியைச் செய்தீர்கள்!?...

மணிகண்டன் மணிமுடி தரித்து அரியணையில் ஏறி விட்டால் -
அந்தஸ்தும் கௌரவமும் அவனுக்கே போகும்...
மதங்க வனத்தில் கிடைத்தவனுக்கு வாழ்வும்!..
உங்கள் வயிற்றில் பிறந்தவனுக்குத் தாழ்வும்!..
என்ற துர்போதனை என் குணத்தை அழித்தது ஸ்வாமி!..

அரசி வேதனையால் விம்மினாள்...

இத்தகைய துர்போதனை செய்தது யார்?..
கூடவே இருந்து குழி பறித்தது யார்?..
வீட்டுக்குள் விஷ வித்தை விதைத்தது யார்?...

விழிகள் எரிதணல் - எனச் சிவக்க - மன்னரின் கை உடைவாளைப் பற்றியது...

மன்னா.. நான்தான் அந்தப் பாதகத்தை விதைத்தேன்..
என்னை தங்கள் வாளால் தண்டித்து விடுங்கள்...
- மந்திரி நெடுஞ்சாண்கிடையாக மன்னரின் கால்களில் விழுந்தான்...

நீயா... உன்னை என் சகோதரன் போல அல்லவா நடத்தினேன்!..
உன் புத்தியும் இப்படி கெட்டுச் சீரழிந்ததே!.. தளபதி!..
இவனை இழுத்து அந்தப் புலிக் கூட்டத்தினுள் தள்ளி விடுங்கள்!..

வேண்டாம் தந்தையே!.. இவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்!..

மணிகண்டன் முன்னின்று தடுத்தான்...

மணிகண்டா.. பால்வடியும் உன்முகங்கண்டு மயங்கி -
கானகப் புலிகளும்  உன் பின்னால் வந்தனவே!..
அப்படியிருக்க - பன்னிரண்டு வருடங்கள்
ஒருவருடன் ஒருவராய் வளர்ந்தும் வாழ்ந்தும்
உன்னைக் கண்டு வஞ்சனை கொண்டனர் என்றால்!?..
- மன்னரின் மனம்  அடங்கவில்லை...

ஏன் என் கால்களில் விழுந்து கிடக்கின்றாய்?..
போ.. போய் மணிகண்டனின் கால்களில் விழு..
இனியாவது நல்ல புத்தி வரட்டும்!.. - அமைச்சரை  நோக்கி சீறினார்...


கதறிக் கண்ணீர் வடித்தபடி -
மணிகண்டனின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டான் மந்திரி...

என்னை நீங்கள் எது செய்தாலும் தகும்!..
உங்கள் மீது பூதப்பிரேத பிசாசங்களை ஏவி விட்ட பாவி நான்...
அது போதாது என்று தாங்கள் அருந்திய பாலில்
நாக விஷத்தைக் கலந்த கொடியவனும் நான் தான்...

அதிலெல்லாம் நீங்கள் தப்பி விட்டீர்கள்!...
அதனால் - புலிப்பால் வேண்டும் என்று
தங்களைக் காட்டுக்கு அனுப்பி வைத்த சண்டாளனும் நானே!..

இளவரசே!... தங்கள் மீது இத்தனை குரோதம் ஏன்?..
எனக்குத் தெரியவில்லை... மதிகெட்டு பாழாகிப் போனேன்...
தங்களின் கை வாளால் என்னைத் துண்டித்து விடுங்கள்...
அதுதான் நான் செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை!..

காலில் விழுந்தவனை - கைதூக்கி விட்டான் மணிகண்டன்...

உன்னுடைய குற்றங்கள் நீ சிந்திய கண்ணீரால் கரையட்டும்!..

தவறிழைப்பது மனிதமனம். அதை மன்னிப்பது தெய்வகுணம்..
மணிகண்டா!.  உன்னை மகனாகப் பெற்ற அந்தநாளை விட,
இன்றுதான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்!..

மன்னர்  - மணிகண்டனை மார்புறத் தழுவிக் கொண்டார்...

அரசியின் மனம் ஆறவில்லை...
இத்தனை பாதகத்துக்கும் துணை நின்றது - தனக்குத் தகுதியானது தானா - என்று சிந்திக்க சிந்திக்க - கண்ணீர் ஆறாகப் பெருகியபடி இருந்தது...

அதைக் கண்ட ஐயன் அன்னையின் கரங்களை ஆதுரமாகப் பற்றியவாறு -

தாயே!.. நடந்ததையெல்லாம்
கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள்...
இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்!..
இன்னும் ஆக வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன!..
- என்றான் கனிவுடன்...

ஆம் மகனே!.. இன்னும்  ஆக வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன!.. - அரசி மணிகண்டனின் முடிசூட்டு விழாவினை மனதில் கொண்டு பேசினாள்...

அதேவேளையில்,
மணிகண்டனுடன் வந்த புலிகளை சாந்தப்படுத்தி
அவற்றை திரும்பவும் காட்டுக்குள் அனுப்ப வேண்டுமே!..
என்ன செய்வது?.. - என்று மன்னர் யோசித்தார்...

தந்தையின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட மணிகண்டன்,

தேவேந்திரா!.. உனது உதவிக்கு மிக்க நன்றி!..
நீயும் மற்ற தேவர்களும் என்றென்றும்
மக்களுக்குத் துணையிருப்பீர்களாக!.. - என்று கூறியதும்

- புலிகள் எல்லாம் ஒருகணம் தேவ ஸ்வரூபம் காட்டி மறைந்தன...

இதைக் கண்ட அனைவரும் திடுக்கிட்டு நின்ற வேளையில் -
மணிகண்டன் ஜோதிஸ்வரூபனாக திவ்ய தரிசனம் தந்து நின்றான்...


ஆ!..ஆ!.. என்னே அற்புதம்!.. என்னே அற்புதம்!..
அல்லும் பகலும் அகத்தாமரையில் வைத்துப் பூஜிக்கும் ஹரனா!..
அல்லது கோமகன் வடிவம் கோவிந்த ஸ்வரூபம் என ஹரியா!..
ஐயனே.. தாங்கள் யார்!?.. தாங்கள் யார்!?...

என்னுள்ளத்தின் ஓர் ஓரத்தில் உண்மை சுடர் விட்டது..
இதனுள் ஏதோ தெய்வ அனுக்ரஹம் இருக்கின்றது என்று!..
இத்தனை புலிகளைத் தன்வயப்படுத்திக் கொணர்வது
என்பது சாமான்ய காரியமே அல்ல!..

ஆயினும்  நுட்பமாக உணர்ந்தேனில்லை... 
இனியும் தங்களை ஒளிக்காமல் தாங்கள் யாரென்பதை
எமக்கு உரைத்தருள வேண்டும்.. ஐயனே!..

மன்னர் கரங்கூப்பி நின்றார்...

தன் மடி தவழ்ந்து வளர்ந்த பிள்ளை -
தெய்வ வடிவு கொண்டு நிற்பதைக் கண்டு தாயின் மனம் தத்தளித்தது...

பாண்ட்யேச வம்ச திலகம் கேரளே கேளி விக்ரஹம் 
ஆர்தத்ராணபரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..
மணிகண்ட மகாப்ரவே சரணம்.. சரணம்..
ஃஃஃ 

5 கருத்துகள்:

 1. வில்லாளி வீரன், வீர மணிகண்டனுக்கு சரணம் ஐயப்பா!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஜி
  இப்பகுதி மிகவும் சிறப்பானநடை
  சாமியே சரணம் ஐயப்பா

  பதிலளிநீக்கு
 3. அன்பின் திருவுரு மணிகண்டன் , ஜோதிஸ்வரூபனாக காட்சி அளித்ததும் அவர்கள் கண்டு களித்ததும் அவர்களுக்கு கிடைத்த வரம். கொடுத்து வைத்தவர்கள்.
  ஓம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்.

  பதிலளிநீக்கு
 4. ஜோதியாய் காட்சி அளித்த வீரமணிகண்டன் சுவாமி ஐயப்பா சரணம் சரணம்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 5. அருமை. காட்சிகள் கண்முன்னே...

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..