நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 17, 2018

மங்கல மார்கழி 02

ஓம்

தமிழமுதம்

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.. (011)

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 02

நன்றி - கேசவ் ஜி.. 
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடியே பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டுநாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!..
***

தோள்களில் கார்குழல் சரியச் சரிய
துணையாய் வருகின்ற தோழியரே!...
கேளுங்கள்...

பாற்கடலுள் துயிலாமல் துயிலுகின்ற
பரந்தாமனின் பாதாரவிந்தங்களை வந்தித்தும் சிந்தித்தும்
பாவை நோன்பு நோற்கும் நாம் 
செய்யக் கூடியவை என்னென்ன?...

செய்யக் கூடாத அவைகளை விலக்கி விட்டாலே
செய்யக்கூடியவை எல்லாம் புலனாகி விடும்!...

நெய்யும் பாலும் நேரியவை தான்..
ஆயினும் - ஆங்கொரு விரதம் ஏற்குங்கால்
அவை - எதிர்வினையாற்றக் கூடியவை..
எனவே - நமக்கு அவை உகந்தவை அல்ல...

விடியும் முன்பாகவே மூழ்கிக் குளித்து
முல்லை மலர் கொண்டு கார்குழல் முடித்து
கருமை கொண்டு விழியிமை திருத்தி...
அழகுக்கு அழகாய் அணி செய்துகொள்ளும்
அதையெல்லாம் நோன்பு முடித்தபின்
செய்து கொள்ளலாம்!...

எந்த வேலையிருந்தாலும் அதனூடாக
ஊர்க் கதைகளைப் பேசிக் களித்திருந்தோம்...
தேவையற்றவை - புறங்களாகிய பழங்கதைகள்..
அள்ளிப் புறத்தே புழுதியில் தள்ளிடுவோம்!...

இனிவரும் நாட்களில்
பசி என்று கேட்டு பதைத்து வருவோர்க்கும்
பசித்தும் வாய் திறவாது தவித்திருப்போர்க்கும்
இயன்றமட்டும் இன்முகம் காட்டி உதவிடுவோம்!...

இதுதான் உய்யும் வழியென்று உவந்து விட்டால்
இவ்வையகத்தில் நாமே வாழ்ந்தவர்களாவோம்!...

வையத்து வாழ்வீர்காள்!..
வாஞ்சை மிகக் கொண்டு
வையத்துள் வாழ்வீர்களே!...
***
தித்திக்கும் திருப்பாசுரம்..

திரு அரங்கம்

திரு அரங்கநாதன் 
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே.. (0873)
-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம்
கொன்றை..


தேவாரத்தில் சிறப்பித்துப் பேசப்படுவது...
ஈசனுக்கு உகந்த மலர் கொன்றை..

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!..
என - விளித்துத் துதிப்பவர் - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்...

பந்தநல்லூர், அச்சிறுப்பாக்கம் முதலான
தலங்களின் தல விருட்சம் - கொன்றை..

பொன் வண்ணக் கொத்துகளாக பார்ப்பவர்
மனதைக் கொள்ளைக் கொள்வது - கொன்றை..

கொன்றை மரத்தின் பட்டை வேர், பூக்கள் - எல்லாம்
மருத்துவ குணம் உடையவை...

கொன்றைப் பட்டையின் கஷாயம்
நாள்பட்ட காய்ச்சலைத் தணிக்க வல்லது...

பூக்களைக் கொதிக்க வைத்து வடிகட்டப்பட்ட நீர்
வயிற்று உப்புசத்தை மாற்றி வயிற்றை சுத்தம் செய்யக் கூடியது...

எனினும்,
தக்க மருத்துவரின் மேற்பார்வை அவசியம்... 
*** *** ***

சிவ தரிசனம்

திருப்பிரம்மபுரம் - சீர்காழி

ஸ்ரீ சட்டநாத ஸ்வாமி - சீர்காழி 
இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ப்ரஹன்நாயகி

தலவிருட்சம் - பாரிஜாதம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
இத்துடன் மேலும்
21 தீர்த்தங்கள் இங்குள்ளன..

ஹிரண்யனை அழித்த
ஸ்ரீநரசிங்கப்பெருமாளின்
உக்ரம் அகற்றப்பட்ட திருத்தலம்...

சிவபெருமான் மேற்கொண்ட திருக்கோலமே
ஸ்ரீ சட்டநாத மூர்த்தி..

ஞானசம்பந்தப் பெருமான்
திருஅவதாரம் செய்த திருத்தலம் - சீர்காழி...

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


தோடுடைய செவியன்விடை யேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரம் மேவிய பெம்மானிவ னன்றே.. (1/1) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 02


ஸ்ரீ வாஞ்சிநாதர் - திருவாஞ்சியம்
திருவாரூர் (மா) 
அருணன் இந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

19 கருத்துகள்:

 1. குட்மார்னிங். மார்கழி இரண்டாம் நாள் சிறப்புகளை அறிய வந்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. கொன்றை வேறு... கொன்றை வேந்தன் வேறு... சரியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   கொன்றை என்பது மலர்..
   கொன்றை வேந்தன் என்றால் -
   கொன்றை மலர்களைச் சூடிய ஈசன் - சிவபெருமான்!..

   நீக்கு
 3. பாசம் பரஞ்சோதியைக்காணோமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரஞ்சோதி - திருப்பள்ளி எழுச்சி முடித்து வருவார்..

   நீக்கு
 4. இரண்டாம் சிறப்பை அறிந்தேன் ஜி.
  வாழ்க நலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அற்புத விளக்கங்களுடன் பாவை பாசுரம் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 6. திருப்பாவை, திருவெம்பாவை கண்டேன், மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 8. அருமையான பதிவு.
  படங்கள் நல்ல தேர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 9. அழகான படங்களுடன் எளிய விளக்கங்களுடன் கூடிய பதிவு. அதிலும் கேஷவின் முதல் ஓவியம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 10. அழகான படங்கள், விளக்கங்கள் எல்லாமே சிறப்பு ஐயா/துரை அண்ணா..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..